Tuesday, April 22, 2025
முகப்புகட்சிகள்காங்கிரஸ்காவிரி: உச்சநீதிமன்றத்தின் ரத்தக் கொதிப்பு!

காவிரி: உச்சநீதிமன்றத்தின் ரத்தக் கொதிப்பு!

-

செய்தி -79

காவிரி

காவிரி பிரச்சினை தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அதில் காவிரி நதி நீர் ஆணையத்தை கூட்டுவதில் மத்திய அரசு அலட்சியப் போக்கை கடைபிடிப்பதாகக் கூறி உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசு வழக்கறிசர் ஹரேண் ராவேல் பேசும் போது கூட்டம் கூறித்து வசதியான தேதியை தெரிவிக்குமாறு மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியும் பதில் வரவில்லை என்று தெரிவித்தார். தமிழக அரசோ கடிதம் எழுதிய கையோடு மத்திய அரசு மறந்து விட்டதாகவும், கூட்டத்தை கூட்ட எந்த முயற்சியையும் எடுக்க வில்லை என்றும் தெரிவித்தது.

இதையடுத்து பேசிய நீதிபதிகள், “கர்நாடக அரசின் பதில் மனுவின் 39-வது பக்கத்தில் கடுமையான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன (“டூத்லெஸ் சிஆர்ஏ’ – அதிகாரமில்லா ஆணையம்). அதைக்கூட பிரதமர் அலுவலகம் படிக்கவில்லையா? கடந்த விசாரணையின்போதே மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து நாங்கள் (நீதிமன்றம்) கவலை தெரிவித்திருந்தோம். அதன் பின்பும் அலட்சியமாக இருக்கிறது மத்திய அரசு. இந்தப் போக்கு எங்களின் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது; பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. நீர்வளத் துறை அமைச்சகத்தின் உதவிச் செயலர், துணைச் செயலர், ஆணையர் போன்ற அதிகாரிகள் இந்த விவகாரத்தில் விளக்கம் அளிக்கிறார்கள். ஆனால், பிரதமர் அலுவலக அதிகாரிகளுக்கு என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை. இந்த விவகாரத்தில் உயர் பதவியில் இருப்பவர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர். அதனால், மேலும், கண்டிக்க நா எழவில்லை” என்று கூறினர். (தினமணி)

எப்படியோ இம்மாத இறுதியில் காவிரி ஆணையத்தின் கூட்டம் கூட்டப்படலாம் என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் பவன்குமார் பன்சல் தெரிவித்திருக்கிறார்.

காவிரி பிரச்சினை தொடர்பாக நடுவர் மன்றம், உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை கர்நாடக அரசு இதுவரை மதித்ததே இல்லை. ஒவ்வொரு ஆண்டும் அளிக்க வேண்டிய தண்ணீரை உரிய நேரத்தில் தராததோடு அப்படி தர முடியாது என்று சொல்வது தங்களது உரிமை என்றும் கூறிவருகிறது. கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பொழிந்து அணைகள் நிரம்பிய நிலையில் மட்டுமே காவிரி நீர் தமிழகத்தை தொடுகிறது.

காவிரியில் தமிழகத்திற்கு உரிய பங்களை தரவேண்டும் என்று நீதிமன்றங்கள் பிறப்பித்த உத்திரவை மத்திய அரசு இதுவரை அமல்படுத்தவே இல்லை. தாம் பிறப்பித்த உத்திரவுகள் செல்லாக் காசாக மதிக்கபடுகிறது என்பது தெரிந்த உச்சநீதிமன்றமும் அதை சட்டை செய்யவில்லை.

அதன்படி அரசியல் சட்டத்தின் ஆட்சி கர்நாடக மாநிலத்தில் நடக்கவில்லை. எனில் அதற்காக கடுமையான நடவடிக்கையை எடுக்காமல் உச்சநீதிமன்றமும், மத்திய அரசும் பாராமுகமாக செயல்படுவது ஏன்? ஆகவே உச்சநீதிமன்றத்தின் இந்த தீடீர் ரத்தக்கொதிப்பிற்கு எந்த தகுதியுமில்லை. தரமுமில்லை.

காங்கிரசு, பாரதிய ஜனதா என்று இரண்டு தேசியக் கட்சிகளும் கர்நாடக மாநிலத்தை மாறி மாறி ஆள்கின்றன. அந்த வகையிலும் மத்திய அரசு கர்நாடகாவிற்கு ஆதரவாகவே செயல்படுகின்றது. இதை உரிய முறையில் எதிர்கொண்டு நீதி, நிர்வாக முறையில் சண்டை போடுவதற்கு தமிழக அரசு, அரசியல் கட்சிகளுக்கு துப்பில்லை.

எனவே உச்சநீதிமன்றம் கர்நாடகவின் கடுமையான வார்த்தைகளை மனுக்களில் மட்டும் தேடாமல் அதனுடைய செயல்பாட்டிலும் பார்க்க வேண்டும். நீதிமன்ற அவமதிப்பு என்ற முறையிலும் கர்நாடக அரசை தண்டிக்க வேண்டும். உத்திரவுகளை அமல்படுத்த மறுக்கும் கர்நாடக மாநில அரசிற்கு மத்திய அரசின் உதவி, சலுகைகளை நிறுத்த வேண்டும். இதையெல்லாம் விடுத்து வெறுமனே ரத்தக்கொதிப்பு என்று மட்டும் வார்த்தைகளில் கடுமை காட்டி எந்தப் பயனுமில்லை.

ஆனால் இந்த நிர்ப்பந்தம் அவர்களுக்கு தானாகவே வராது. அதை தமிழக மக்கள் போராட்டம் மட்டுமே கொண்டு வரும்.

______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்: