Monday, April 21, 2025
முகப்புசெய்திகைக்கூலி டைம்ஸ் ஆப் இந்தியா! ஆர்ப்பாட்டம்!!

கைக்கூலி டைம்ஸ் ஆப் இந்தியா! ஆர்ப்பாட்டம்!!

-

செய்தி -80

முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கு எதிரான மாருதி தொழிலாளர்களின் போராட்டத்தை ஆதரித்து புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தமிழகம் முழுவதும் சுவரொட்டிகளை ஒட்டியிருந்தது. இந்த சுவரொட்டிகள் தமிழக தொழிலாளர்கள் மத்தியில் உற்சாகமான வரவேற்பை பெற்றது. அந்த சுவரொட்டிகள் ஓசூர் பகுதியிலும் பரவலாக ஒட்டப்பட்டிருந்தன.

ஓசூரில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளை படம் எடுத்துக் கொண்ட டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் அதிலிருந்த வாசகங்கங்களை எல்லாம் திரித்து பு.ஜ.தொ.மு வை பயங்கரவாத சங்கமாக சித்தரித்து ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது. அந்த செய்தியை தொடர்ந்து பு.ஜ.தொ.மு வை தடை செய்ய வேண்டும் என்று முதலாளிகள் ஜெயலலிதாவிடம் அளித்த கோரிக்கையையும் வெளியிட்டிருந்தது. இந்தியாவிலேயே இந்த செய்தியை வெளியிட்ட ஒரே குப்பை இந்த டைம்ஸ் ஆப் இந்தியா மட்டும் தான்.

டைம்ஸ் ஆப் இந்தியா எவ்வளவு கேவலமான குப்பை என்பதை இந்து பத்திரிகையின் ஊரகப்பிரிவு ஆசிரியர் சாய்நாத் கடந்த மே மாதம் 10 ம் தேதி இந்துவில் எழுதியுள்ள கட்டுரையில் அம்பலப்படுத்தியுள்ளார். கம்பெனிகளிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு பி.டி பருத்தியை ஆதரித்து எழுதிய யோக்கிய சிகாமணி தான் இந்த டைம்ஸ் ஆப் இந்தியா.

அந்த பத்திரிகை தான் பு.ஜ.தொ.மு வை பயங்கரவாத சங்கம் என்றும், தடை செய்ய வேண்டும் என்கிற முதலாளிகளின் அறிக்கையையும் வெளியிடுகிறது. டைம்ஸ் ஆப் இந்தியாவின் இந்த கைக்கூலித்தனத்தை கண்டித்து பு.ஜ.தொ.மு கடந்த 9.8.12 அன்று ஓசூர் ராம் நகர் அண்ணாசிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.

ndlf-toi

ஆர்ப்பாட்டத்திற்கு பு.ஜ.தொ.மு மாவட்டத் துணைத்தலைவர் தோழர் சின்னசாமி தலைமை தாங்கினார்.  மாவட்ட செயலாளர் தோழர் வரதன் சிறப்புரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் பு.ஜ.தொ.மு நிர்வாகிகள், உறுப்பினர்கள், பிற சங்கத்தை சேர்ந்த தொழிலாளர்கள், பெண்கள், பொதுமக்கள் என திரளானோர் கலந்துக்கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் ஆவேசத்துடன் கண்டன முழக்கமிட்டனர்.

சிறப்புரையாற்றிய தோழர் வரதன், மாருதி தொழிலாளர்களின் போராட்டத்தை ஆதரித்து ’புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி’ ஒட்டிய சுவரொட்டி வாசகங்களை திரித்தும், அவதூறு செய்தும் ஒரு வன்மமான அவதூறு செய்தியை வெளியிட்டிருக்கிறது டைம்ஸ் ஆப் இந்தியா. 1000 கி.மீட்டருக்கு அப்பால் உள்ள மாருதியில் நடைபெற்ற வன்முறையை தமிழகத்திலிருக்கும் இந்த சங்கம் வாழ்த்தி வரவேற்றுக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது.  இது போன்ற அமைப்புகள் வளர்ந்தால் தமிழகமே லாக்கவுட் தேசமாகிவிடும், தொழில்துறையின் அமைதியே கெட்டுவிடும் என்றெல்லாம் எழுதியுள்ளது என்று கூறியவர்,

இந்த பத்திரிக்கை ஏன் இவ்வாறு அவதூறாக எழுதுகிறது ? தனது எஜமானர்களான முதலாளிகளை காப்பாற்றுவதற்காகவும், அவர்களின் வன்முறைகளை மூடிமறைப்பதற்காகவும் தான் இப்படி எழுதுகிறது. மேலும் இது ஒரு மக்கள் விரோத, தேசவிரோத, ஏகாதிபத்திய ஊதுகுழல் பத்திரிக்கை என்பதையும் பல்வேறு ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தினார். இந்த நாட்டின் விவசாயிகள், தொழிலாளர்கள், இளைஞர்கள்,பெண்கள் என்று பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் மீது முதலாளிகளால் கட்டவிழத்துவிடப்படும் பயங்கரவாதத்தாக்குதல்களை பு.ஜ.தொ.மு அம்பலப்படுத்துவதால் தான் இந்த கைக்கூலி பத்திரிகை அவதூறு செய்கிறது.

எனவே உழைக்கும் மக்களும், ஜனநாயக சக்திகளும் உள்நாட்டு வெளிநாட்டு முதலாளிகளுக்கும், ஏகாதிபத்தியங்களும் கைக்கூலி வேலை செய்து வரும் இந்த டைம்ஸ் ஆப் இந்தியாவை புறக்கணிக்க வேண்டும். காணும் இடங்களில் எல்லாம் அம்பலப்படுத்தி முறியடிக்க வேண்டும் என்று கூறி தனது உரையை முடித்தார்.

இறுதியில் கமாஸ் வெக்ட்ரா ஆலையின் கிளைச் சங்கத் தலைவர் தோழர் செந்தில் நன்றியுரையாற்றினார். ஆர்ப்பாட்டம் தொழிலாளர்கள், வியாபாரிகளிடமும், பொதுமக்களிடமும் நல்ல வரவேற்பையும், ஆதரவையும் பெற்றது.

______________________________________________________

தகவல் பு.ஜ.தொ.மு ஓசூர்

______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்: