Monday, April 21, 2025
முகப்புகட்சிகள்அ.தி.மு.கதிருச்சி அரசு மருத்துவமனை எப்படி இருக்கிறது?

திருச்சி அரசு மருத்துவமனை எப்படி இருக்கிறது?

-

செய்தி -81

சென்னை திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் தாய்சேய் நல அரசு மருத்துவமனையில் 26-ம் தேதி பிறந்த குழந்தையை எலி கடித்து முகம் சிதைந்ததன் எதிரொலியாக அடிமை மந்திரிசபை, தொப்பை அதிகாரிகள், மற்றும் கொடநாடு பட்டத்து ராணி தலைமையில் ஆலோசனை நடத்தி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 100 ஆண்டு (கேலி) பேசும் அரிய முடிவை எடுத்துள்ளனர்.

GH-ல் உள்ள எலிகளை ஒழிப்பது, குப்பைகளை தற்காலிகமாக அப்புறப்படுத்துவது, முக்கியமாக சாலையோர உணவகங்களை அப்புறப்படுத்தி அவர்களின் வயிற்றில் அடிப்பது, இதை துரித வேகத்தில் நிறைவேற்ற வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் 7000 எலி வளைகள் கண்டு பிடிக்கப்பட்டது, 550 எலிகள், 1 பாம்பு, 12 நாய், 1¼ பூனை அப்புறப்படுத்தப்பட்டன. (புள்ளிவிபர உபயம் தினமலர்)

அம்மாவின் கடைக்கண் பார்வை திருச்சி அரசு மருத்துவமனையிலும் மாற்றத்தை கொண்டு வந்திருக்கும் என்கிற நம்பிக்கையில் திருச்சி மாவட்ட பெண்கள் விடுதலை முன்னணி சார்பில் ஆய்வில் இறங்கினோம்.

பிரசவ வார்டு, பெண்கள் பயன்படுத்தும் கழிவறை உள்ளே நுழைய முடியாத அளவு நாறிப் போயுள்ளது.

தினசரி பிறக்கும் குழந்தைகளை விட பல கோடி கோடி மடங்கு கிருமிகள் பிறப்பு அதிகமாக உள்ளது.

கழிவறை அருகிலேயே பிரசவ வார்டு, அதில் நிறைமாத கர்ப்பிணி, வயதானோர், தாங்க முடியாத துயரத்திலும் மூக்கைப் பிடித்துக் கொண்டு தட்டுத் தடுமாறி கழிவறைக்கு போவது பார்க்கவே கொடுமையாக இருந்தது. இதுவும் இல்லன்னா, தனியார் ஆஸ்பத்திரிக்கு போயி ஆயிரக்கணக்கில் கொட்ட வேண்டி வரும், நம்ம தலையெழுத்துன்னு போக வேண்டியது தான் என புலம்புகின்றனர்.   மக்களின் வறுமை நிலை இந்த சீர்கேடுகளை சகித்துக் கொள்ள நிர்ப்பந்திக்கிறது.

கிருமி ஒழிப்பு அறை என்று இருந்தாலும், கிருமி உற்பத்தி அறை என்று பொருள் கொள்ளும்படி உள்ளது.

குழந்தை பிறந்த வார்டில் எலியை தேடும் போது அதன் புகலிடத்தை பெண்கள் காட்டினார். நர்சுகள், வாட்ச்மேன் நம்மை விரட்டி திட்டி தீர்க்கிறாங்க, அந்த வெறுப்பை எல்லாம் இங்கவரும் எலிகளிடம் காட்டி திட்டி விரட்டுகிறோம் என குமுறினர். எலிகளை அடித்து கொல்லவும் பயம், டாக்டர்கள் திட்டு வாங்களோன்னு தயங்கி மிரண்டு நிற்கின்றனர்.             ஆனால் நர்சுகள், மருத்துவர்கள், காவலாளிகள் எலியைப் போலத்தான் உழைக்கும் மக்களை கருதுகின்றனர்.

கலைஞர் அரசோ, ஜெயா அரசோ காப்பீட்டு திட்டம் எனும் பெயரில் தமது பங்குக்கு தனியார் மருத்துவமனைகளை வாழ வைக்க மக்களின் பணத்தை வாரி இறைக்குது, ஆனால் லட்சக்கணக்கான மக்கள் நம்பி இருக்கும் அரசு மருத்துவமனைகளுக்கு நிதி ஒதுக்கி சுகாதார சீர்கேடுகளை ஒழிப்பது, சுத்தத்தை பேணுவது, ஆட்களை அதிகளவில் சேர்ப்பது என்பதை செய்யவில்லை.

அரசு மருத்துவமனையில் உள்ள இலவசக் கழிப்பிடத்தை பயன்படுத்துபவர்கள் அதே ஆஸ்பத்திரியில் உள்ள கட்டணக் கழிப்பிடம் சுத்தமாக இருப்பதாக கூறுகின்றனர். அதே சுத்தத்தை இலவசத்தில் செய்ய முடியாமல் போனது ஏன்? சுத்தம், சுகாதாரம் என்பது மருத்துவமனைகளில் இருந்து மக்கள் கற்றுக் கொள்ள வேண்டியவையாக இருக்க வேண்டும். ஆனால் நமது அரசும், அதிகாரிகளும். காறிதுப்பும் அளவுக்கு வைத்துள்ளார்.

10-மாதம் குழந்தையை சுமந்து பெற்றெடுத்து மறுபிறவியாக வரும் பெண்கள் ஆபரேசன் செய்யப்பட்டு 3 நாளைக்கு எந்திரிக்க முடியாமல் உள்ள சூழ்நிலையில் பிஞ்ச நிலையில் தொற்று நோய் பரப்பும் பாயில் படுக்க வைக்கப்படுகின்றனர். படுக்கையில் உட்கார்ந்தால் தான் அவர்களுக்கு இதமாக இருக்கும் என்பது கூட அங்கே கனவாகத்தான் உள்ளது. அரசு மருத்துவர்கள் தினமும் ஒரு முறை பார்வையிட்டு விட்டு தனி கிளீனிக்கில் மீத நேரத்தை செலவிட்டு கல்லா கட்டுகின்றனர். பயிற்சி மருத்துவர்கள், செவிலியர்களை கசக்கிப்பிழிந்து வேலை வாங்குகின்றனர்.

அடிப்படை கருவிகளான இங்க்பேட்டர் உள்ளிட்ட பல்வேறு கருவிகள் போதிய அளவில் இல்லை. இருக்கின்ற கருவிகளும் ஒவ்வொரு முறை பயன்படுத்தும் போதும் ஆட்டியோ, குலுக்கியோ, உதறியோ செய்தால் தான் இயங்கும் நிலை, இவ்வளவு கொடுமைகள் தீர இன்னும் எத்தனை காலம் காத்திருக்க வேண்டுமோ தெரியவில்லை.

தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவக்கல்வி இயக்கத்தில் உள்ள 63 மருத்துவமனைகள், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 31 மாவட்ட தலைமை மருத்துவமனைகள், 154 வட்ட மருத்துவமனைகள், 76 வட்டமில்லாத மருத்துவமனை. 10 நடமாடும் பிரிவு, 7 பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை, 2 காசநோய் மருத்துவமனை 7 தொழுநோய் மருத்துவமனையும், 1612 ஆரம்ப சுகாதார நிலையம், 8706 துணை சுகாதார நிலையம். 385 நடமாடும் மருத்துவமனை ஆகியவை இயங்கி வருகிறது.

இவற்றிற்கு 5569 கோடி நிதி ஒதுக்கி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இத்தொகையை அரசும், அதிகாரிகளும் தின்று செரித்தது போக மீதி என்ன செலவு செய்திருப்பார்கள், பின்னொரு காலத்தில் யாராவது சுயசரிதை எழுதினால் தான் உண்மை தெரியும்.

தனியார்மயம், தாராளமயம், உருவாக்கிய ஆக்கிரமிப்புதான் அரசு சேவையை ஊற்றி மூடும் அயோக்கியத்தனமாகும். இத்தகைய கொடுமையை ஒழிக்க எலியை ஒழிப்பது தீர்வல்ல! பஸ்ஸில் ஒட்டையில் விழுந்த சுருதி இறப்புக்கு காரணம், ஓட்டை அல்ல? கும்பகோணம் பள்ளி குழந்தைகள் கருகியதற்கு காரணம்-மேற்கூரையல்ல, அரசு மருத்துவமனையில் குழந்தையை எலி கடித்ததற்கு காரணம்-எலிகள் அல்ல.  தனியார்மயம், தாராளமயம் என்ற கொலைகார பெருச்சாளிகளை விரட்டும் வரை மக்களுக்கு விடிவு இல்லை.

_________________________________________________________

செய்தி : பெண்கள் விடுதலை முன்னணி ,திருச்சி.

__________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

___________________________________