Monday, April 21, 2025
முகப்புகட்சிகள்அ.தி.மு.ககூடங்குளம்:பாசிச ஜெ அரசின் கொலைவெறித் தாக்குதலை கண்டிக்கிறோம்!

கூடங்குளம்:பாசிச ஜெ அரசின் கொலைவெறித் தாக்குதலை கண்டிக்கிறோம்!

-

கூடங்குளம்-இடிந்தகரை-போராட்டம்-14

கூடங்குளம் மக்கள் போராட்டத்தின் மீதான பாசிச ஜெ அரசின் கொலைவெறித் தாக்குதலை கண்டிக்கிறோம்!

போராடும் மக்களுக்குத் தோள் கொடுப்போம்!

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இம்மாத இறுதியில் மின் உற்பத்தி தொடங்கும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. கூடவே அணு உலையில் யுரேனியம் எரிபொருளை நிரப்ப சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது. உள்ளூர் மக்களின் தொடர்ச்சியான எதிர்ப்பையும் மீறி இந்த அனுமதியை அரசுகளும் நீதிமன்றங்களும் வழங்கியிருக்கின்றன. இந்நிலையில் மக்கள் அணுமின்நிலையத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்தனர்.

அதன்படி குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டு ஆயிரக்கணக்கில் மக்கள் இடிந்தகரையிலிருந்து கூடங்குளம் அணுமின்நிலையத்திற்கு கடற்கரை வழியாக நேற்று சென்றனர். அவர்களை தடுத்து நிறுத்த போலீஸ் அதிகாரிகளும், மாவட்ட ஆட்சியரும் நயவஞ்சகமான சட்ட மொழியில் பேசி முயன்றனர். இதற்கு தோதாக நீண்ட நாட்களாக 144 தடையுத்திரவையும் பிறப்பித்திருந்தனர். 5000த்திற்கும் மேற்பட்ட போலீசாரும் குவிக்கப்பட்டிருந்தனர்.

நேற்றிரவு முழுவதும் கடற்கரையில் வெட்டவெளியில் தங்கிய மக்கள் இன்றும் தமது போராட்டத்தை தொடர்ந்தனர். மக்களை போக்கு காட்டிவிட்டு அலையவிடும் தந்திரத்தை போலீசு தொடர்ந்து மேற்கொண்டது. இறுதியில் கண்ணீர் குண்டுகளை வீசி தடியடி நடத்தியிருக்கிறது தமிழக போலீசு. கையில் கிடைத்தவர்களை கொடூரமாக தாக்கி கைதும் செய்திருக்கிறது. கடலுக்குள் ஓடிய மக்களை மீண்டும் கரை திரும்பாத வண்ணம் அரண் அமைத்து வேட்டை நாயைப் போல காத்திருக்கிறது போலீசு.

இடிந்தகரைக்கு உள்ளேயும் போலீசு படை நுழைந்து, போராட்டக்காரர்களின் பந்தலைக் கைப்பற்றியிருக்கிறது. தேவாலயத்துக்கு உள்ளேயும் நுழைந்திருக்கிறது. ஊரைக் கைப்பற்றிய ஆக்கிரமிப்பு படை போல ஊர் முழுவதையும் போலீசு ஆக்கிரமித்திருக்கிறது. பலர் படகுகளில் கடலுக்குள் செல்கிறார்கள். பெண்கள் குழந்தைகள் திசைக்கொருவராக சிதறியிருக்கின்றனர். யாருக்கு என்ன நேர்ந்த்தென்று தெரியவில்லை.

அணு உலைக்கு எதிராகப் போராடிவரும் இடிந்தகரை மக்கள் மீது பாசிச ஜெயலலிதா அரசு தொடுத்திருக்கும் இந்த நயவஞ்சகமான, கொடிய தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம்.

இத்தாக்குதலைக் கண்டித்து தமிழகம் முழுவதும் எமது அமைப்புகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகின்றன.

இடிந்தகரை கூடங்குளம் வட்டாரத்தில் போடப்பட்டிருக்கும் 144 தடை உத்தரவையும் அங்கே குவிக்கப்பட்டுள்ள போலீசு படைகளையும் உடனே திரும்ப பெறவேண்டும்.

அணு உலை பாதுகாப்பு என்ற பெயரில் மக்களின் சிவில் உரிமைகளைப் பறிப்பதை நிறுத்த வேண்டும்.

கூடங்குளம் அணு உலையில் எரிபொருள் நிரப்புவதை உடனே நிறுத்தவேண்டும்.

மக்களுக்கும் உயிரினங்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பெரு நாசம் விளைவிக்கும் அணு உலைகள் இழுத்து மூடப்படவேண்டும். என்று கோருகிறோம்.

ஒரு பட்டாசு தொழிற்சாலையில் கூட மக்களின் உயிருக்கு உத்திரவாதம் வழங்க வக்கில்லாத அரசுக்கு, அணு உலையின் பாதுகாப்புக்கு உத்திரவாதம் தருவதாகப் பேசுவதற்கே அருகதை கிடையாது. காற்றாலை, சூரிய ஒளி உள்ளிட்ட மாற்று மின் தயாரிப்பு முறைகள் உலகமெங்கும் பரவிவரும் இக்காலத்தில் இந்தியாவின் மீது அணு உலைகள் திணிக்கப்படுவதற்கு காரணம், ஏகாதிபத்திய பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளை இலாப நோக்கமும், இந்திய அரசின் இராணுவ நோக்கமுமே தவிர வேறில்லை.

அணு உலைக்கு ஆதரவாக கூறப்படும் பித்தலாட்டமான வாதங்களை மக்கள் நிராகரிக்க வேண்டுமென்றும், கூடங்குளம் இடிந்தகரை மக்களின் போராட்டத்துக்கு ஆதரவாக துணை நிற்கவேண்டும் என்றும் மக்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

இவண்,

அ.முகுந்தன்,

ஒருங்கிணைப்பாளர், போராட்டக்குழு.

ம.க.இ.க, பு.மா.இ.மு, வி.வி.மு, பு.ஜ.தொ.மு, பெ.வி.மு.