Wednesday, April 16, 2025
முகப்புகட்சிகள்காங்கிரஸ்கழிப்பறை நாடாளுமன்றத்தை வரைந்த கார்ட்டூனிஸ்ட் திரிவேதி கைது!

கழிப்பறை நாடாளுமன்றத்தை வரைந்த கார்ட்டூனிஸ்ட் திரிவேதி கைது!

-

டந்த சனியன்று அசீம் திரிவேதி (25) என்ற கான்பூரைச் சேர்ந்த கார்ட்டூனிஸ்டை, அவர் வரைந்த இரண்டு கார்ட்டூன்கள் மக்களின் நம்பிக்கையை புண்படுத்துவதாக கூறி மும்பை பந்த்ரா போலீசார் கைது செய்துள்ளனர். அம்பேத்கரின் வழித்தோன்றல்கள் எனச் சொல்லிக் கொள்ளும் இந்திய குடியரசுக்கட்சியின் வழக்கறிஞர் அமித் கட்டாரநேயா கொடுத்த புகாரின் பேரில் தான் நடவடிக்கை எடுத்தோம் எனத் தப்பிக்கிறார், தாக்கரேக்களால் மிரட்டப்படும் மகாராஷ்டிர காங்கிரசு கட்சியை சேர்ந்த உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாடீல். காங்கிரசு இக்கைதை ஆதரிக்கவில்லை என்று சொன்னாலும், செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரியும், செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சர் அம்பிகா சோனியும் கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் தேசிய சின்னங்களை அவமதிப்பதை அனுமதிக்க முடியாது என்கிறார்கள். அப்படி என்ன சொல்லி விட்டார் அசீம் திரிவேதி?

இரண்டு கார்ட்டூன்கள். ஒன்றில் இந்திய பாராளுமன்றத்தை வெஸ்டர்ன் டாய்லட்டின் உட்காரும் பகுதியாக காட்டி அதற்கு தேசிய கழிப்பிடம் என தலைப்பிட்டிருந்தார். மற்றொன்றில் தேசிய சின்னமான சாரநாத் சிங்கங்களை, தந்திரம் மிக்க எச்சில் வடிக்கும் ஓநாய்களாக மாற்றி, வாய்மையே வெல்லும் என்ற அதன் வாசகத்தை ஊழலே வெல்லும் என மாற்றியிருந்தார். அன்னா ஹசாரே இயக்கத்தில் கடந்த டிசம்பரில் மும்பையில் நடத்திய கூட்டத்தில் தனது கார்ட்டூன்களை காட்சிப்படுத்தியும், விநியோகித்தும் இருக்கிறார். இத்துடன் தனது இணைய பக்கத்திலும் இதனை பகிர்ந்து கொண்டுள்ளார். டிசம்பர் 27 ஆம் தேதியே இவர்மீது புகார் தரப்பட்டது.

தற்போது அவர் மீது தேச துரோக வழக்காக 124 ஏ (அவதூறு) மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் 66 ஏ செக்ஷன் மற்றும் 1971 ஆம் ஆண்டு தேசிய சின்ன அவமதிப்பு தடுப்புச் சட்டம் ஆகியன பாய்ந்துள்ளது. மூன்றாண்டு முதல் ஆயுள் வரை தண்டனை விதிக்கலாமாம். கைது செய்யப்பட்டுள்ள அவரை 15 நாட்களுக்கு நீதிமன்ற விசாரணைக்காக காவலில் வைக்க நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது. இக்கைதினை பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவின் தற்போதைய தலைவரான நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ கடுமையாக கண்டித்துள்ளார்.

உடனடியாக அவர்மீது அரசு கை வைக்கவில்லை. ஹசாரே குழுவினர் தானாக உதிர்ந்து உலரும் வரை அரசு காத்திருந்தது. மம்தா பற்றி வரையப்பட்ட கார்ட்டூனுக்காக மே மாதம் பேராசிரியர் கைதாகிறார். தமிழகத்தில் கொடநாட்டில் ஓய்வெடுக்கிறார் அல்லிராணி எனச் சொன்ன காரணத்துக்காக தலைவர்கள் மீது வழக்கு, அதை எடுத்துப்போட்ட பத்திரிகைகள் மீது வழக்கு என கருத்துரிமை மீது அடுக்கடுக்காக இங்கே மாநில அரசு போர் தொடுக்கிறது. இதன் ஒரு அங்கமாக அசீம் திரிவேதியின் கார்ட்டூன்களையும் தட்டிவைக்க நினைத்த மராட்டிய அரசு கருத்துரிமைக்கு எதிராக தனது பாசிச நடவடிக்கையை துவங்கி விட்டது. மற்றபடி ஹசாரே குழுவினர் சொல்வது போல இது ஊழலுக்கெதிரான இந்தியா அமைப்பில் அவர் ஈடுபட்டதற்காக எடுக்கப்படும் நடவடிக்கை அல்ல. சர்வதேச விருது ஒன்று பெறுவதற்காக வெளிநாடு செல்ல இருந்த நேரத்தில் கைது செய்யப்பட்டுள்ள இவரை, எம்எப் உசேனை பாடாய் படுத்திய சங்கபரிவாரங்கள் ஆதரிப்பதாக நடிக்கின்றன.

தான் காந்தியை பின்பற்றுபவன் என்று சொல்கிறார் அசீம். நான் செய்தது தேசத்திற்கு எதிரானதல்ல என்றும், தனது கருத்துப்படங்கள் தேசத்திற்கும், அம்பேத்கருக்கும் எதிராக புரிந்துகொள்ளப்படுவதை தான் எதிர்ப்பதாகவும் குறிப்பிடும் அவர், தன் மீது போடப்பட்டுள்ள வழக்கை விலக்கினால்தான் வெளியே வருவேன் எனக் கூறி ஜாமீன் கோர மறுத்துவிட்டார். அவரை மன்னிப்பு கேட்க கோருகிறது சரத்பவாரின் தேசியவாத காங்கிரசு. மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் ஜெய்ஸ்வாலிடம் தனது தம்பியை விடுதலைசெய்யக் கோரி மனுக் கொடுக்கிறார் அசீமின் சகோதரன். என் மகன் எதுவும் தெரியாதவன். அவனது தாத்தா சுதந்திரப் போராட்ட வீரர். எங்களது பாரம்பரியமே தேசப்பற்றுள்ளது என கெஞ்சுகிறார் அவரது தந்தை.

தற்போது ஜனநாயக சக்திகளும், அறிவுஜீவிகளும் இதைக் கண்டித்து பேசுகிறார்கள். அசீம் திரிவேதியும் தனது இணைய தளத்திற்கு அரசு தடைவிதித்த போது கருத்துரிமைக்கான போராட்டத்தை இணைய தளம் வழியாக மாத்திரம் தான் துவங்கினார். இப்போது தனது கைது தேசத்தை உலுக்கும் என சிறையில் இருந்தபடி எழுதிய கடிதத்தில் நம்பிக்கை தெரிவிக்கிறார். தன்மீது போடப்பட்ட அவதூறு வழக்கை எதிர்கொள்ளவே திணறுகிறது தி ஹிந்து.

மும்பை பத்திரிகையாளர் மன்றம் கண்டன அறிக்கை மாத்திரம் வெளியிட்டுள்ளது. தமிழகத்திலும் சில பத்திரிகைகளில் மாத்திரம் இச்செய்தி வந்தாலும், எந்த பத்திரிகையாளனும் வீதிக்கு வரவில்லை. பாசிசம் அரியணை ஏறுகிறது. ஜனநாயகத்தையே முடை நாற்றமெடுக்கும் வண்ணம் மாற்றிய பாராளுமன்றத்தை பொருத்தமாகத்தான் வரைந்தார் திரிவேதி. நால்முகச் சின்னங்கள் இந்திய உழைக்கும் மக்களை குதறும் ஓநாய்களாக மாறி ஆண்டுகள் பல ஆகிறது. இந்த உண்மையை எடுத்துரைத்தால் கைது என்றால் நாம் இதை ஆயிரம் முறை செய்வோம், என்ன செய்வார்கள் பார்க்கலாம்!

_______________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்: