Monday, April 21, 2025
முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்ஏர் இந்தியாவின் டிரீம் லைனர்: யாருக்கு ஆதாயம்?

ஏர் இந்தியாவின் டிரீம் லைனர்: யாருக்கு ஆதாயம்?

-

டிரீம்-லைனர்
போயிங் டிரீம் லைனர் (படம் நன்றி www.thenhindu.com)

ர் இந்தியா நிறுவனம் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஆர்டர் செய்திருந்த போயிங் 787 டிரீம் லைனர் விமானத்தின் முதல் டெலிவரி டில்லி வந்து சேர்ந்தது.

27 விமானங்களை வாங்குவதற்காக ஏர் இந்தியா செலவழிக்கும் மொத்த தொகை $4 பில்லியன் (ரூ 22,000 கோடி). 5 ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாவைச் சேர்ந்த ஏர்பஸ்ஸூடனான போட்டியில் பின்தங்கியிருந்த அமெரிக்காவின் போயிங் நிறுவனத்துக்கு புத்துயிர் கொடுப்பதற்காக இந்திய அரசு பெரிய மனது வைத்து 27 விமானங்களுக்கான ஆர்டரை கொடுத்திருந்தது. நியாய விலையில் உணவு பொருட்கள் வினியோகித்தல், பெட்ரோல் மானியம் போன்ற பிற செலவுகள் ஆயிரம் பாமர மக்களுக்கு இருந்தாலும் மேன் மக்கள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு விமானப் பயணம் செய்வதை வசதியானதாக்குவதற்காக தொலைநோக்குடன் அந்த முடிவை எடுத்திருந்தது இந்திய அரசாங்கம்.

போயிங் நிறுவனத்தின் வசதிக்கும் தேவைக்கும் ஏற்றபடி விமானங்கள் உற்பத்தி செய்யப்பட்டு இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

செப்டம்பர் 2008-ல் வந்திருக்க வேண்டிய முதல் விமானம் வடிவமைப்பு, உற்பத்தி பிரச்சனைகளால் தாமதம் ஏற்பட்டு நான்கு ஆண்டுகள் தாமதமாக வந்து சேர்ந்திருக்கின்றது. போயிங் ஏற்கனவே தயாரித்து நிறுத்தியிருக்கும் இன்னும் இரண்டு விமானங்கள் அடுத்த சில வாரங்களில் வந்து சேரும். போயிங் நிறுவனத்தின் திட்டப்படி மார்ச் 2013க்குள் மொத்தம் 8 விமானங்கள் ஏர்இந்தியாவுக்கு அனுப்பப்பட்டு விடும்.

இந்த விமானங்களால் ஏர் இந்தியாவுக்கு என்ன பலன் என்று தோன்றினால்,  ‘இந்த அழகான டிரீம்லைனர் விமானங்களின் மூலம் ஏர்இந்தியாவின் இமேஜ் மாறி விடும்’ என்கிறார் போயிங் நிறுவனத்தின் ஆசியா பசிபிக் பகுதி தலைவர் தினேஷ் கேஸ்கர். ஏர் இந்தியாவின் இமேஜ் டேமேஜாகியிருப்பதால் மன உளைச்சலுக்கு உள்ளாகியிருக்கும் மேட்டுக்குடியினருக்கு அது நிச்சயம் ஆறுதலை கொடுக்கும்.

போயிங், ஏர்பஸ் நிறுவனங்கள் உயிர் பிழைத்தலுக்கு இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு விமானம் விற்பதைத்தான் நம்பியிருக்கின்றன. ‘கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவில்தான் விமான பயணத் துறை வேகமாக வளர்ந்திருக்கிறது’ என்கிறார் கேஸ்கர்.  உலக அளவில் இந்தியாவும் ஒரு பொருளாதார வல்லரசுதான் என்பதை நிலைநாட்ட போயிங், ஏர்பஸ் மட்டுமின்றி இன்னும் பல வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் ஆர்டர்கள் கொடுப்பதற்கு இந்திய அரசு அயராமல் உழைக்கிறது.

787 விமானத்தின் நவீன வசதிகளில் விமானத்துக்கு உள்ளே போடப்படும் வெளிச்சத்தை பயணிகளின் மூடுக்கு தகுந்தவாறு மாற்றும் தொழில் நுட்பம்,  பயணிகள் கண்டு களிக்க பெரிய எல்சிடி திரையுடனான தொலைக்காட்சி பெட்டிகளும் அடங்கும்.

இத்தகைய நவீன தொழில் நுட்பம் இந்தியாவுக்கு கிடைத்திருப்பதை நினைத்து யாருக்கு மகிழ்ச்சி?

ஜோலார் பேட்டையிலிருந்து சென்னைக்கு தினமும் வந்து போகும் மக்கள், பீகாரிலிருந்தும் வடகிழக்கு மாநிலங்களிலிருந்தும் நாட்டின் பிற மாநிலங்களுக்கு முன் பதிவு இல்லாத ரயில் பெட்டிகளில் படை எடுக்கும் தொழிலாளர்கள் போன்றவர்களின் பயணங்கள் நரக வேதனையாக இருக்கும் போது ஏர் இந்தியா எனும் மேட்டுக்குடி இந்தியர்களுக்காக நட்டத்தில் நடத்தப்படும் நிறுனவத்துக்கு மக்கள் பணம் அள்ளி வீசப்படுகிறது.

இதையும் படிக்கலாம்

_________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்