Sunday, April 20, 2025
முகப்புசமூகம்அறிவியல்-தொழில்நுட்பம்ஆர்கானிக் உணவு: சதிக்கு பலியாகும் நடுத்தர வர்க்கம்!

ஆர்கானிக் உணவு: சதிக்கு பலியாகும் நடுத்தர வர்க்கம்!

-

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மருத்துவக் கட்டணம்,செலவுகளுடன், ”புதிது புதிதாக” நோய்களும் வந்து நடுத்தர வர்க்கத்தினரை பீதிக்குள்ளாக்குகின்றன. இந்தசூழலில் இவர்கள் தமது உடல் நலன்,சுகாதாரமான, சத்தான உணவு பற்றி அதிக அக்கறை கொள்ளத் துவங்கியுள்ளதோடு, இயற்கை வேளாண் உணவு பொருட்கள் சத்தானவை, சுகாதாரமானவை,வேதி-நச்சுக்கள் இல்லாதவை என்று நம்புகின்றனர்.

படிக்க

ஆர்கானிக்ஆனால், ஸ்டன்ஃபொர்டு பல்கலைக்கழகத்தின் சமீபத்திய  ஆய்வு விளம்பரம் செய்யப்படுவது போல Organic உணவுப் பொருட்களில்,  வழக்கமான முறையில் பயிரிடப்படும் பொருட்களை விட அதிக சத்தும், விட்டமின்களும் இல்லை என்றும் இயற்கை வேளான் உணவுப் பெருட்கள் என்று விற்கப்படுபவை ரசாயான உரங்கள், பூச்சிக் கொல்லிகளை முற்றிலும் பயன்படுத்தாதவை அல்ல, மாறாக குறைவாக பயன்படுத்தப்பட்டவையே என்றும் சொல்கிறது.

கார்ப்பரேட் கம்பெனிகள் நமது மரபுவழி விவசாயத்தை அழித்ததோடு, ரசாயன உரம், பூச்சிமருந்து ஆகியவற்றால் இந்த மண்ணையே விசமாக்கி வைத்திருக்கின்றன. இன்று கார்ப்பரேட் கம்பெனிகள் நமது விளை பொருட்கள் வேதி-நச்சுக்களால் மாசு பட்டிருப்பதாகவும், அதனால் சுத்தமான, வேதி பொருட்களை பயன்படுத்தாத இயற்கை வேளாண் பெருட்களை சந்தைப்படுத்தி கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றன. பல கம்பெனிகள் கார்ப்பரேட் விவசாய பண்ணைகளையும் அமைத்திருக்கின்றன.

பசுமை புரட்சி என்ற பெயரில் பாரம்பரிய விவசாயத்தை பன்னாட்டு கம்பெனிகளுடன் கைகோர்த்து அழித்த அதே அரசு, இந்த ஆர்கானிக் உணவு பெருட்களுக்கும் விதிமுறைகளை நிர்ணயித்திருக்கிறது. உலகின் (இந்தியா உட்பட) பல நாடுகளிலும் அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள ஆர்கானிக் உணவுப் பொருட்களுக்கான விதிமுறைகள் எவற்றிலும் ரசாயான உரங்கள், பூச்சிக்கொல்லிகளை முற்றிலும் பயன்படுத்தக்கூடாது என்று சொல்லப்படவில்லை.

உணவுப் பொருட்களின் மீதான அரசின் கண்காணிப்பும் கட்டுப்பாடுகளும் குறிப்பிடத்தகுந்த அளவுக்கு நுகர்வோர் விழிப்புணர்வும் மிகுந்த மேற்குலகில் வேண்டுமானால் அரசின் கட்டுப்பாடுகள் குறைந்தபட்சமேனும் பின்பற்றப்படலாம் – அல்லது அவ்வாறு ஒரு பாவனை காட்டப்படலாம். இந்தியாவில் எந்த ஒரு சட்டத்தையும், விதிமுறையையும் கழிவறை காகிதமாகக்கூட மதிக்காத கார்ப்பரேட் கம்பெனிகள் ஆர்கானிக் உணவுப்பொருட்கள் உற்பத்தியில் மட்டும் விதிமுறைகளை பின்பற்றுவார்கள் என்று நம்புவது எவ்வளவு முட்டாள் தனம்?

நடுத்தரவர்க்கத்தின் பயத்தையும் நம்பிக்கையையும் தனது லாப வேட்டைக்கு  பயன்படுத்திக் கொள்ள பல இயற்கை வேளான் உணவுப்  பெருட்களுக்கான  (Organic Food) சங்கிலி  தொடர் கடைகள் சென்னையில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன. தொடர்ச்சியாக பல பன்னாட்டு கம்பெனிகள் இந்திய நடுத்தர  வர்க்கத்தைக் குறிவைத்து களமிறங்க உள்ளன. இந்த வகைகடைகளில்  இயற்கை முறையில் பயிரிடப்பட்டகாய்கறிகள், தானியங்கள் மட்டுமல்லாது,  இறைச்சி,முட்டைகளும் கிடைக்கும்.  சாதாரண உணவுப் பொருட்களுக்கும் இவற்றுக்கும் பாரிய அளவிளான வேறுபாடுகள் இல்லை, ஆனால் விலையோ பலமடங்கு அதிகம்.

ஆர்கானிக்
படம் நன்றி இந்து நாளிதழ்

சென்னையில்,கடந்த மாதம் இயற்கை வேளான்மைஉணவுப் பெருட்களுக்கான ‘உணவு திருவிழா’பாதுகாப்பான உணவிற்கான கூட்டமைப்பினால் (Safe Food Alliance) கொண்டாடப்பட்டுள்ளது. இதில் கலந்துகொண்டோர் பாதுகாப்பான உணவை உட்கொள்வது என்பது ஒவ்வொரு நுகர்வோருடைய உரிமை என்றும் இதற்கு அரசு ஆவண செய்யவேண்டும் என்று யார் பாரம்பரிய விவசாயத்தை அழித்தார்களோ அவர்களிடமே கோரிக்கை வைக்கிறார்கள்.

நாளொன்றுக்கு ரூ.28 க்கும் குறைவான வருமானமுள்ளோர் அதிகம் வாழும் நாட்டில், ஒருவேளை உணவே பலருக்கு கிடைக்காத நாட்டில் தனக்கு மட்டும் சத்தான, சுகாதாரமான உணவு வேண்டும், என்று கோருவது நியாயமா?

இதே ’கனவான்கள்’ நாடு முழுவதும் ரசாயன உயிர்கொல்லி மருந்துகளுக்கு எதிராக நடந்துவரும் எந்த போராட்டத்திலும், உதாரணமாக எண்டோசல்பானுக்கு எதிரான போராடம், பி.டி. கத்திரிகாய்க்கு எதிரான போராட்டம் என எந்த போராட்டத்திலும் கலந்து கொண்டதில்லை. தங்களது சொந்த கோரிக்கையான சத்தான, சுகாதாரமான உணவு என்பதற்கும் இத்தகைய போராட்டங்களுக்கும் இடையிலான தொடர்பை ’மறந்தும் கூட’ யோசிப்பதில்லை.இதே உயர் நடுத்தர வர்க்கம், இப்படி வீட்டில் வேதி நச்சுக்கள் இல்லாத உணவை சமைக்க தேடி கொண்டே, பிசா ஹட், மெக்டோனல், கேஎப்சி, சரவணபவன், தல்ப்பாகட்டு, அஞ்சப்பர் என நாக்கின் சுவைகாக சில ஆயிரங்களை சிதறடிக்கவும் தயங்குவதில்லை.

இந்தியாவே மேற்குலகின் குப்பைத்தொட்டியாக மாறி வரும் சூழலில் பல்வேறு மேற்கத்திய நாடுகள் தமது அணுக்கழிவுகள் உள்ளிட்ட கழிவுகளை நமது கடல் எல்லையிலும் நாட்டினுள்ளும் கொட்டி வருகிறார்கள். இந்த விஷத் தொட்டியிலிருந்து அமிர்தம் வேண்டும் என்று கேட்கும் காரியவாதம் ஒருபக்கமென்றால், மறுபக்கம் பன்னாட்டு கம்பெனிகளின் லாபவேட்டைக்கு இரையாதல் என்று செயல்படும் இந்த அறியாமை சுயநலவாதிகள் இருக்கும் வரை, சாத்தியமான ”எல்லா” வழிகளிலும் கார்ப்பரேட் கொள்ளைகள் தொடரத்தான் செய்யும்.

_______________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்: