Wednesday, April 16, 2025
முகப்புசமூகம்சாதி – மதம்தலித் பெண்ணை வன்புணர்ச்சி செய்த கும்பல்! தந்தை தற்கொலை!

தலித் பெண்ணை வன்புணர்ச்சி செய்த கும்பல்! தந்தை தற்கொலை!

-

வன்புணர்ச்சி

ரியாணா மாநிலத்தின் ஹிஸ்ஸார் மாவட்டத்தில் உள்ளது தப்ரா கிராமம். இந்த ஊரைச் சேர்ந்த 16 வயது தலித் பெண் செப்டம்பர் 9ஆம் தேதி அருகாமை ஊருக்கு உறவினர்களை பார்க்கச் சென்றிருக்கிறாள். அப்போது 12 பேர் அடங்கிய பொறுக்கிக் கும்பல் ஒன்று அந்த பெண்ணை கடத்தி கும்பலாய் வன்புணர்ச்சி செய்திருக்கிறது. அவர்கள் அனைவரும் இளைஞர்கள். எட்டு பேர் வன்புணர்ச்சி செய்தபோது அக்கும்பலைச் சேர்ந்த நால்வர் பாதுகாப்பாக நின்றதோடு செல்பேசியிலும் பதிவு செய்திருக்கின்றனர். பிறகு அதை பரப்பவும் செய்திருக்கின்றனர். இதன்பிறகே அந்த பேதைப்பெண் நடந்ததை பெற்றோரிடம் கூறுகிறாள்.

இதைக் கேள்விப்பட்ட போது அந்த இளம் பெண்ணின் தந்தை போலிசில் புகார் தருகிறார். ஆனால் அந்த புகார் ஏற்கப்படவில்லை என்பதால் முனமுடைந்து தற்கொலை செய்துவிட்டார். வன்புணர்ச்சி செய்த கும்பலில் பெரும்பான்மையினர் ஜாட் ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்களும், ஏனையவர்கள் யாதவர் முதலான இதர ஆதிக்க சாதிகளைச் சேர்ந்தவர்களாகவும் இருக்கிறார்கள். ஜாட் ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கும் ஹரியாணா மாநிலத்தில் இந்தக் குற்றவாளிகளை தண்டிக்க முடியாது என்று அந்த தந்தை தற்கொலை செய்து கொண்டிருக்கலாம்.

பிறகு தப்ரா கிராமத்தைச் சேர்ந்த தலித் மக்கள் தற்கொலை செய்து கொண்ட தந்தையின் உடலை பெறாமல் ஹிஸ்ஸார் நகரத்தில் போராடி வந்தார்கள். ஐந்து நாட்களுக்குப் பிறகு போலீஸ் ஒருவரைக் கைது செய்தும் ஏனையோரை விரைவில் கைது செய்வதாக உறுதி மொழி அளித்ததும் போராட்டத்தை கைவிட்டுவிட்டு உடலை பெற்றுக் கொண்டனர், மக்கள்.

தற்போது சீது என்ற பொறுக்கி மட்டும் கைது செய்யப்பட்டிருக்கிறான். அவன் அளித்த தகவல் படி ஏனைய பொறுக்கிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சாதி வேறுபாடு கடந்து எல்லா பிரிவு மக்களும் அந்த பொறுக்கிகளை கைது செய்ய உதவுவதாக போலீஸ் கண்காணிப்பாளர் சதீஷ் பாலன் தெரிவித்துள்ளார். பிறகு மாநில அரசு வழக்கம் போல நிதி நிவாரணத்தை அளிப்பதாக அறிவித்துள்ளது.

இவையெல்லாம் போராடும் தலித் மக்களின் வாயை அடைத்து விடலாம் என்று அரசும், போலீசும் கருதுகிறது. ஜாட் ஆதிக்க சாதிவெறியின் பின்னணியில் நடந்திருக்கும் இந்த வன்புணர்ச்சி கொடுமையை தனிப்பட்ட கிரிமினல் நடவடிக்கையாக மட்டும் கருதுவதால் ஜாட் சாதிவெறியின் கௌரவத்திற்கு தீங்கு வராது என்றும் போலீசு செயல்படுகிறது.

ஆனால் தனது தற்கொலையின் மூலம் அந்த தலித் இளம்பெண்ணின் தந்தை இவர்கள் மீது காறி உமிழ்ந்திருக்கிறார். அவரது தியாகம் அந்தக் கிராமத்தின் எளிய மக்களை போராடும்படி மாற்றியுள்ளது. பார்ப்பனியத்தின் சமூகக் கொடுமைகள் கொடிகட்டிப் பறக்கும் ஹரியானா மாநிலத்தில் இத்தகைய குற்றங்கள் அவ்வப்போது நடக்கிறது. அரசும், நீதி, நிர்வாக அமைப்புகளும் இந்தக் குற்றவாளிகளை தண்டிக்காது என்பதோடு, தப்பி விடுவதற்கும் காரணமாக இருக்கின்றனர்.

சாதி வேறுபாடுகளைக் கடந்து உழைக்கும் மக்கள் ஒன்றாக சேர்ந்து போராடும்போதுதான் இத்தகைய கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.