
மகாராஷ்டிர மாநிலத்தின் துணை முதல்வராக இருக்கும் அஜீத் பவார் மீது 1999-2009 காலகட்டத்தில் அவர் நீர்வளத்துறை அமைச்சராக இருந்தபோது செய்த ஊழல், முறைகேடு பற்றி கடந்த மே மாதமே அத்துறையின் தலைமைப் பொறியாளரான விஜய் பாந்த்ரே 15 பக்க ஆவணக்கடிதம் ஒன்றை அரசுக்கு அனுப்பினார்.
சரத் பவாரின் அண்ணன் மகனான அஜீத் பவாருக்கும், அவரது மகளான சுப்ரியா கலேவுக்குமான தேசியவாத காங்கிரசின் அதிகாரப் போட்டியில் தற்போது அஜீத் பவார் தனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் பிரிதிவ்ராஜ் சவுகானிடம் அளித்துள்ளார். நேற்று மும்பையில் நடந்த அக்கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் கூட்டத்தில் அவரது ராஜினாமாவை திரும்ப பெற வலியுறுத்தப்பட்டுள்ளது. “நான் குற்றமற்றவன், மக்களிடம் போகிறேன், அவர்கள் தீர்மானிப்பார்கள்” என ஏதோ தப்பே செய்யாதவன் போல நெஞ்சை நிமிர்த்தி கூறுகிறார் அஜீத் பவார்.
2009இல் அவர் நீர்வளத்துறை அமைச்சராக இருந்தபோது ரூ.20,000 கோடி மதிப்பிலான 38 நீர்ப்பாசன திட்டங்களுக்கு ஓரிரு நாட்களில் முறைகேடாக அனுமதி தந்தார் என்ற குற்றச்சாட்டை பாந்த்ரே தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். நீர்ப்பாசன வசதி கடந்த பத்தாண்டுகளில் 0.1 சதவீதம்தான் மாநிலத்தில் வளர்ச்சி பெற்றுள்ளது. தீட்டப்பட்ட நீர்ப்பாசன திட்டங்களில் 99 சதவீதம் பயனற்றது. இதனால் ஏற்பட்ட இழப்பு மட்டும் ரூ.15,000 கோடி இருக்கும். பருத்தி விவசாயிகள் அதிகமாக தற்கொலை செய்து கொள்ளும் விதர்பா பகுதியில் மட்டும் இப்படி ஏற்பட்ட இழப்பு ரூ.4400 கோடிகள். மொத்தமாக ரூ.20,000 கோடி வரை இழப்பு இருக்கும் என்கிறார் பாந்த்ரே.
இதற்கிடையில் ஜன் மஞ்ச் என்ற தன்னார்வ அமைப்பு நாக்பூர் உயர்நீதி மன்ற கிளையில் விதர்பா பகுதியில் நிறைவேற்றப்பட்ட கோசிஹர்ட் நீர்ப்பாசன திட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட அதீத செலவு பற்றி விசாரிக்க வலியுறுத்தி கடந்த ஆகஸ்டில் மனுச் செய்தது. அதில் அனுமதிக்கப்பட்ட 38 திட்டங்களில் விதர்பா நீர்ப்பாசன வளர்ச்சி கழகம் திட்டமிட்ட ரூ.25,050.06 கோடியிலிருந்து 26,722.33 கோடியாக செலவு உயர்ந்தது. இதில் 30 திட்டங்களுக்கு வெறும் நான்கு நாட்களில் அனுமதி தரப்பட்டுள்ளது. செலவை ஆறு முதல் 33 மடங்கு உயர்த்திக் கொள்ளவும் அனுமதி தரப்பட்டுள்ளது.
12 திட்டங்களுக்கு திட்ட முன்வரைவையே இரு மடங்குக்கும் மேல் உயர்த்திக் கொள்ளவும் அனுமதி தரப்பட்டுள்ளது. சந்திரபூர் மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள ஹ்யூமன் நதி திட்டத்திற்கு முன்வரைவுத் தொகை ரூ.3,36,774 மட்டும்தான். ஆனால் ஜூன் 2009 இல் இதற்கு திருத்தப்பட்ட தொகை மட்டும் ரூ.1016.486 கோடிகள். ஏறக்குறைய 29 மடங்கு அதிகம். அதே நாளில்தான் பல பத்து திட்டங்களுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது.
இப்படி பல புகார்கள் எழவே அரசு மார்ச் 2010 இல் நந்தகுமார் வத்நார்- ஐக் கொண்டு விசாரணை கமிசன் அமைத்தது. அது 2006-07,2008-09 மற்றும் 2009-10 நிதியாண்டுகளில் நடந்த முறைகேடுகளை மாத்திரம் விசாரிக்கும். இரு பகுதிகளாக வெளிவந்த அக்கமிட்டியின் அறிக்கையின் ஒரு பகுதி கோசிகர்ட் திட்டம் பற்றியது. 1982 இல் இதற்கு திட்டமிட்ட தொகை ரூ.372 கோடி. படிப்படியாக உயர்த்தியதில் பிப். 2008 இல் திட்ட மதிப்பு ரூ.7777.85 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் வேலைகளில் கோசிகார்ட் இடதுபக்க கால்வாயின் வேலைகள் குறைபாடாக இருப்பதாக சிஏஜி குறிப்பிட்டுள்ளது.
பிரதமர் சிறப்பு நிவாரண நிதியிலிருந்து திட்டமிடப்பட்டுள்ள 27 இல் 12 இன்னும் துவங்கப்படவே இல்லை. இதெல்லாம் விவசாயிகள் மீது கடும் நெருக்கடியை தோற்றுவித்துள்ளது. தரமற்ற சில அணைக்கட்டுகளுக்கு நீதிமன்றமும், அரசும் கட்ட தடை விதிப்பது ஒரு புறம் நடந்தாலும், அந்த ஒப்பந்ததாரருக்கே மீண்டும் அணை கட்ட வாய்ப்பையும் அதே அரசு தருகிறது. பாந்த்ரே சொல்வது போல நீர்வளத்துறையில் பவாரின் உறவினர்களது தலையீடு மிக அதிகமாகவே இருந்துள்ளது.
ஒரு பக்கம் பன்னாட்டு விதைக் கம்பெனிகள், விவசாயத்தில் குத்தகை பயிர் செய்தல் என்றால் இன்னொரு பக்கம் ஒட்டுச்சீட்டு அரசியல்வாதிகளின் ஊழல். விதர்பா பகுதி விவசாயிகளின் சாவில் விளையாடிய பவாரின் குலக்கொழுந்து தன்னை யோக்கியனாக்க நடத்தியுள்ள ராஜினாமா நாடகத்தின் பின்னே இத்தனை பெரிய கொள்ளை நடந்திருக்கிறது. இவற்றை நீதிமன்றம் தண்டிக்காது. மக்கள் மன்றத்தில் தான் கணக்கு தீர்க்கப்பட வேண்டும்.