Sunday, April 20, 2025
முகப்புஉலகம்ஐரோப்பாதீப்பிடிக்கும் ஸ்பெயின்: நாடாளுமன்ற முற்றுகையில் மக்கள்!

தீப்பிடிக்கும் ஸ்பெயின்: நாடாளுமன்ற முற்றுகையில் மக்கள்!

-

ஸ்பெயின்-முற்றுகைந்த அமைப்பில் ஏமாந்தது போதும், மக்களே வாருங்கள், அழுகிப் போன ஜனநாயகமற்ற இந்த அமைப்பை கலைப்போம். மக்களுக்கான உண்மையான ஜனநாயக அமைப்பை உருவாக்குவோம். இன்றைய அமைப்பின் சின்னமான  ஸ்பெயின் காங்கிரசை (நாடாளுமன்றத்தை) முற்றுகையிடுவோம்” என்ற அறைகூவலோடு ஆயிரக்கணக்கான உழைக்கும் மக்கள் ஸ்பெயின் நாட்டு நாடாளுமன்றத்தின் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

“அவமானம்”, “பதவி விலகு” என்ற முழக்கங்களோடு செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 25-ம் தேதி) மாட்ரிடில் இருக்கும் பிளாசா டி நெப்டியூனோவில் குவிந்த போராட்டக்காரர்களை தலைக் கவசம் அணிந்த கலவர போலீஸ் தாக்கி விரட்ட முயற்சித்தனர். 14 பேர் காயமடைந்தனர், 14 பேர் கைது செய்யப்பட்டனர் என்று போலீஸ் தெரிவித்தது.

பெரும்பகுதியினர் மைதானத்தில் உட்கார்ந்து கொண்டு கலைந்து போக மறுத்தனர். போலீஸ் தாக்குதலுக்கு பல மணி நேரத்துக்குப் பிறகும் நூற்றுக் கணக்கான போராட்டக்காரர்கள் மைதானத்தில் உட்கார்ந்திருந்தனர். அவர்களை ஆயுதக் காவல் படையினர் சூழ்ந்திருக்கின்றனர்.

கடந்த ஒன்பது மாதங்களில் ஸ்பெயின் நாட்டு பிரதம மந்திரி மரியனோ ரஜோய் தலைமையிலான அரசு சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்துவதாக சொல்லி மக்களுக்கான அடிப்படை வசதிகள் பலவற்றை ரத்து செய்திருக்கிறது. வேலை இல்லாதோரின் எணணிக்கை 25 சதவீதம் ஆக உயர்ந்திருக்கிறது. பல குடும்பங்கள் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

சென்ற சனிக்கிழமை (செப்டம்பர் 22-ம் தேதி) 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள், “அவர்கள் நாட்டை பாழாக்கிக் கொண்டிருக்கிறார்கள், நாம் போய் தடுத்து நிறுத்துவோம்” என்ற முழக்கத்துடன் மாட்ரிடில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தினார்கள். நாட்டின் பிரதான தொழிற்சங்கங்களும் 150க்கும் மேற்பட்ட மற்ற அமைப்புகளும் இணைந்து ஏற்படுத்தியிருக்கும் ‘சமூக ஒன்றியம்’ என்ற அமைப்பு அந்த ஆர்ப்பாட்டங்களை ஒருங்கிணைத்தது.

அதைத் தொடர்ந்து “நமக்கு பயன் தராமல் இருக்கும் ஸ்பெயின் நாடாளுமன்றத்தை ஆக்கிரமிப்பதுடன் அதை கலைத்து புதிய ஜனநாயக நாடாளுமன்றத்தை நிறுவுவோம்” என்ற அறைகூவலுடன் நாடாளுமன்ற முற்றுகை போராட்டம் ஆரம்பித்திருக்கிறது.

ஏழை உழைக்கும் மக்கள் பொருளாதார நெருக்கடியின் விளைவுகளை தாங்கும் போது வங்கிகளுக்கு வரிப்பணத்தில் நிவாரணம் வழங்கப்படுவதை எதிர்த்து “இது ஒரு பகல் கொள்ளை” என்று ஆர்ப்பாட்டத்தின் போது மக்கள் முழக்கமிட்டனர்.

“ஜனநாயகத்தை அவர்கள் மக்களிடமிருந்து திருடி விட்டார்கள், எங்கள் சுதந்திரத்தையும் உரிமைகளையும் இழந்து விட்டோம்” என்கிறார் வடமேற்கு நகரான காஸ்டில்/லியோனிலிருந்து  வந்திருக்கும் 53 வயதான சோல்டாட் நூன்ஸ் என்ற வணிகர்.

தெற்கு நகரமான கிரானடாவிலிருந்து 50 பேருடன் இரவு முழுவதும் பயணித்து வந்திருக்கும் 40 வயதான கார்மன் ரிவேரோ, “நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு சபை உருவாக்கப்பட வேண்டும். அனைத்திலும் மக்கள் நேரடியாக முடிவெடுக்கும் உரிமை வேண்டும்” என்றார்.

27 வயதான ஏடர் லோரன்ஸ் என்ற வேலையில்லா மென்பொருள் பட்டதாரி, “பெரிய நிறுவனங்களின் நலன்களையும், சந்தையின் தேவைகளையும் மட்டுமே அரசியல்வாதிகள் கவனிக்கிறார்கள்” என்றார்.

ஸ்பெயின் நாடாளுமன்ற ஆக்கிரமிப்பு அறிக்கையின் சுருக்கம்:

“இப்பொழுதுள்ள ஸ்பெயின் நாடாளுமன்றம் மக்கள் விரோதமானது, ஜனநாயகமற்றது, அரசின் உறுப்புகள் அனைத்தும் அழுகிப் போய் விட்டன. சபைகள், பொருளாதார அமைப்புகள், சட்டம், நீதிமன்றம் என அனைத்தையும் கலைத்துவிட்டு, பரந்து பட்ட மக்களின் ஆதரவு பெற்ற சபைகள் மூலம் சட்டம் இயற்றப்பட வேண்டும். ஓட்டுப் பொறுக்கி கட்சிகளை மொத்தமாக ஒழிக்க வேண்டும்.”

“மக்களை ஏமாற்றும் இந்த ஓட்டுக் கட்சிகளையும் அவர்கள இத்த்னை நாள் ஆதரித்த முதலாளிகளையும் ஸ்பெயின் பொருளாதாரத்தை அழித்தவர்களாக நாம் தண்டிக்க வேண்டும்.”

“இதற்கு ஒரே வழி இப்பொழுது இருக்கும் அரசு முதலில் ராஜினாமா செய்ய வேண்டும். பின்பு மக்கள் புதிய அரசியலமைப்பு சட்டத்தை  உருவாக்குவார்கள்.”

“நாடாளுமன்றத்தை முற்றுகை இடுவோம்.”

படிக்க

பின்னணி விபரங்கள்

வீடியோக்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க