Tuesday, April 22, 2025
முகப்புபோலி ஜனநாயகம்இராணுவம்வல்லரசு கனவு - ஆயுதங்களுக்கு ஸ்பான்சர் யார்?

வல்லரசு கனவு – ஆயுதங்களுக்கு ஸ்பான்சர் யார்?

-

சென்ற வாரத்தில் அடுத்தடுத்து மூன்று நாட்களுக்குள் இரண்டு ‘அக்னி’ கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை ஒரிசாவின் பாலாசூரில் இந்திய பாதுகாப்பு ஆய்வு மற்றும் அபிவிருத்தி நிறுவனம்(DRDO) சோதனை செய்திருக்கிறது. ஒவ்வொரு முறை இத்தகைய ஏவுகணை சோதனைகள் நிகழ்த்தப்படும் போதும், அது சுயசார்பு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டது என்றும், சோதனை வெற்றி பெற்றது என்றும் ஆரவாரத்துடன் அறிவிக்கப்படுகிறத்து, வல்லரசுக் கனவில் மிதக்கும் இந்தியர்களும் மகிழ்ச்சியில் திளைக்கின்றனர்.

இந்திய அரசு ஒருபுறம் தாராளமய, உலகமய கொள்கைகளை அமல்படுத்திக் கொண்டு மறுபுறம் தொழில்நுட்பத்தில் சுயசார்பு என்று மார்தட்டிக்கொள்வது கேலிக்கூத்து என்பது ஒருபுறமிருக்க, கூறிக்கொள்வது போல இந்திய இராணுவத்தின் தொழில்நுட்பங்கள் சுயசார்பானவையா? இந்திய பாதுகாப்பு ஆய்வு நிறுவனங்கள் பீற்றிகொள்வது போல எந்த சாதனத்தையும் உருவாக்குவதில்லை. தொழில்நுட்ப வடிவமைப்புகள் (Designs) பன்னாட்டு கம்பெனிகளாயிருந்தால் அப்படியே வாங்கப்படும், இந்திய கம்பெனிகளாக இருந்தால், தேவைக்கு ஏற்ப  வடிவமைப்பு அதாவது ஆமையின் கூட்டை முயலுக்கு பொருத்துவது போல செய்து வாங்கப்படும். இப்படி பன்னாட்டு மற்றும் உள்நாட்டு கம்பெனிகளிடம் இருந்து வாங்கப்படும் சாதனங்களை ஒருக்கினைப்பது தான் இவர்கள் பீற்றிக்கொள்ளும் சுயசார்பு தொழில் நுட்பத்தின் தரமும் திறனும்.

வெல்லெஸ்லி பிரபு (Lord Wellesley) 18-ம் நூற்றாண்டின் இறுதியில் பலமிக்க சாம்ராஜ்ஜியங்கள் மறைந்து பலவீனமான சிற்றரசுகளாக இருந்த இந்திய துணைக்கண்டத்தில் சிற்றரசர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதாகக் கூறி அவர்களுடன் உடன்பாடு செய்துகொண்டு ஆங்கிலேயரின் படையை அந்த நாட்டில் நிறுத்தி வைக்கும் “துணைப்படை உடன்படிக்கை (subsidiary alliance)” என்னும் முறையை கொண்டுவந்தான். அதன் மூலமும் அரசியல் சதிகளாலும் அம்மன்னர்களை அடிமையாகி, பின்னர் முழு இந்தியாவையும் காலனியாக்கி கொண்டது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம்.

இந்திய அரசு அமெரிக்கவுடன் இறுதிப் பயன்பாட்டை கண்காணித்தல் என்ற பெயரில் அமெரிக்க வெளியுறவு மற்றும் பாதுகாப்பு கொள்கைகள், நலன்களுக்கு இந்தியாவை அடிபணிய வைக்கும் நோக்கத்திலான உட்சரத்துகள் கொண்ட இராணுவ ஒப்பந்தத்தை எந்தவித எதிர்ப்புமில்லாமல் கையெழுத்திட்டுள்ளது. அடுத்ததாக, அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதின் மூலம் அமெரிக்க செனட்டால் (Senate) முன்மொழியப்பட்ட “ஹைட் சட்டத்தையும்(Hyde Act)” ஏற்றுக்கொண்டுள்ளது. இதன் படி இந்தியா அமெரிக்காவின் ஒரு சமஸ்தானமாக (Princely Sate) இணைக்கபட்டிருக்கிறது. இந்த ஒப்பந்தங்களுக்கும், வெல்லெஸ்லியின் துணைப்படைக்கும் வேறுபாடு உள்ளதெனில், அது 18-ம் நூற்றாண்டு, இது 21-ம் நூற்றாண்டு. இப்படி இந்திய அரசும், அதன் இராணுவமும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடிமைகளாக இருக்கும் போது அது எப்படிப்பட்ட சுயசார்பு தொழில்நுட்பத்தையும் ஆயுதத்தையும் வைத்திருந்தால் தான் என்ன?

ஆனால், ஏவுகணை சோதனை வெற்றி பெற்றது என்று செய்திகள் வெளியிடும் நாளிதழ்கள், தங்கள் பங்குக்கு, இந்திய வல்லரசு கனவை கிளறவிட தயங்குவதில்லை. உதாரணமாக, இந்த ஏவுகணை அணு ஆயுதத்தை தாங்கிசெல்லும் திறன் படைத்தது என்பதில் ஆரம்பித்து அது தாக்கும் திறன்(தூரம்) என்பது வரை பலவற்றை வியந்தோதுகின்றன. இதில் ஏவுகணையின் தாக்கும் திறனைக் குறிக்க கிழக்கே பீஜிங், சாங்காய் நகரங்களையும், மேற்கே டெஹ்ரான் நகரத்தையும் குறிப்பிடுவது தற்செயல் அல்ல. தெற்காசிய பகுதியில் சீனாவும், மத்திய கிழக்கில் ஈரானும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு பெரும் தலைவலியாக இருப்பதும், இந்த பிராந்தியத்தில் விசுவாசமுள்ள அடியாள் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு தேவைப்படுவதும், இந்திய ஆளும் கும்பலின் பிராந்திய மேலாதிக்க நலனும் தான் வல்லரசு கனவு மற்றும் ஆயுத குவிப்பிற்கு அடிப்படை.

இது ஒருபுறமென்றால், இராணுவத்தைப் போலவே, இந்த ஆய்வு நிறுவனங்களின் அனைத்து செயல்பாடுகளும், ஊழல்களும் பாதுபாப்பு, இரகசியம் என்று மூடுதிரையிட்டு மறைத்து வைக்கப்பட்டுள்ளன.  சமீபத்திய நாறியது ’டெட்ரா வாகன’ ஊழல். இது மலிந்துகிடக்கும் ஊழல்களில் ஒன்று மட்டுமே. இந்நிலையில், ’அக்னி’, கண்டம் விட்டும் கண்டம் தாக்கும், அணு ஆயுதந்தாங்கிச் செல்லும் சுயசார்பு தொழில்நுட்பம், என்ற எல்லாமுமே விளக்குமாத்துக்கு பட்டுகுஞ்சமன்றி வேறில்லை.

படிக்க