Saturday, April 19, 2025
முகப்புஉலகம்ஐரோப்பாகிரீஸ்: மானியக் குறைப்புக்கு எதிராக மக்கள் போர்!

கிரீஸ்: மானியக் குறைப்புக்கு எதிராக மக்கள் போர்!

-

கிரீஸ்கிரீஸ் அரசின் 2013-ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் $10 பில்லியன் (சுமார் ரூ 55,000 கோடி) மதிப்பிலான செலவு குறைப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றில் நான்கில் ஒரு பகுதி அரசு அதிகாரிகளின் சம்பளங்களையும் மக்கள் நல பணிகளுக்கான செலவுகளையும் குறைப்பது மூலம் சாதிக்கப்படும். மருத்துவம், பாதுகாப்பு, உள்ளாட்சி அமைப்புகள் இவற்றுக்கான நிதி ஒதுக்கீட்டை வெட்டுவதன் மூலம் செலவு குறைப்பில் 15 சதவீதம் செயல்படுத்தப்படும்.

இந்த வரைவு வரவு செலவு திட்டத்தை வெளிநாட்டு கடன்காரர்களான ஐஎம்எப், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி கொண்ட மூவரணி  ஏற்றுக் கொண்ட பிறகுதான் அது கிரீஸ் நாட்டு நாடாளுமன்ற ஒப்புதலுக்கு அனுப்பப்படும். ‘அரசு அதிகாரிகளை வேலையை விட்டு அனுப்புவது போன்ற இன்னும் பல செலவு குறைப்புகளை செய்ய வேண்டும்’ என்று வலியுறுத்தி இந்த மூவரணி கிரீஸ் அமைச்சர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. கிரீஸ் நாட்டை ஆள்வது பன்னாட்டு நிதி அமைப்புகள்தான் என்பது வெளிப்படையாக அம்பலப்பட்டு நிற்கிறது.

இந்த பேச்சு வார்த்தைகள் நடக்கும் தொழிலாளர் அமைச்சகத்தின் முன்பு கூடியிருந்த மக்கள் “செலவு குறைப்புகளை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்று  முழக்கமிட்டனர். “வங்கிகளுக்கு 200 பில்லியன் நிவாரணத் தொகை வழங்குகிறார்கள். ஆனால் மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவம், சிகிச்சை, சலுகைகளை ரத்து செய்கிறார்கள்” என்ற பேனரை ஒருவர் பிடித்திருந்தார்.

தொழிலாளர் யூனியன்கள்  கடந்த புதன் கிழமை (செப்டம்பர் 26-ம் தேதி) நடத்திய 24 மணி நேர பொது வேலை நிறுத்தத்தின் போது, பொது போக்குவரத்தும் அரசு அலுவலகங்களின் பணிகளும் முடக்கப்பட்டன. கப்பல்கள் கரையில் நிறுத்தப்பட்டன, கடைகள் மூடப்பட்டன, சுற்றுலாத் தலங்கள்  செயல்படவில்லை, மருத்துவமனைகள் அவசர சேவைகளை மட்டும் வழங்கின.

ஏதென்சிலும், 65 நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. ஏதென்சில் மக்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டனர். அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், வங்கி ஊழியர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கான மக்கள் நகர மையத்தில் கூடினார்கள். போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களை கலைத்தனர்.

“குறைந்த விலையில் நாட்டை விலைக்கு வாங்க முயற்சிக்கிறார்கள் அயல் நாட்டு கடன்காரர்கள்” என்றார் கண்ணீர் புகையிலிருந்து பாதுகாத்துக் கொள்ள அணிந்திருந்த முகமூடியை கழற்றி விட்டு பேசிய அன்னா அபான்டி என்ற 50 வயது பள்ளி ஆசிரியை.

பொருளாதார நெருக்கடி ஆரம்பித்த பிறகு அவரது சம்பளத்தில் மூன்றில் ஒரு பகுதி வெட்டப்பட்டிருக்கிறது. ஏதென்சிலிருந்து 40 மைல் தொலைவில் இருக்கும் ஹால்கிடா என்ற நகரிலிருந்து சக ஊழியர்களுடன் போராட்டத்தில் கலந்து கொள்ள வந்திருக்கிறார்.

கிரீஸ் பொருளாதாரம் கடந்த ஐந்து ஆண்டுகளாக சுருங்கி வருகிறது. இந்த ஆண்டு 6.5 சதவீதமும் 2013ல் 3.8 சதவீதமும் சுருங்கும் என்று அரசின் நிதி நிலை அறிக்கை மதிப்பிடுகிறது. வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை 23.5 சதவீதத்திலிருந்து 24.7 சதவீதமாக உயரும். 55 சதவீதம் இளைஞர்கள் வேலை இல்லா திண்டாட்டத்தில் சிக்கியுள்ளனர்.

‘இந்தியாவில் வறுமை ஒழிய வேண்டும் என்றால் நாட்டின் பொருளாதாரம் ஆண்டுக்கு 8 சதவீதம் வளர வேண்டும்’ என்கிறார் மன்மோகன் சிங். பழங்குடியினரிடமிருந்தும் விவசாயிகளிடமிருந்தும் வாழ்வாதாரங்களை பறித்து அன்னிய முதலீடுகளை சார்ந்து சாதிக்கும் வளர்ச்சியின் மூலம் என்ன கிடைக்கும் என்பதை கிரீஸ், ஸ்பெயின் போன்ற வளர்ந்த நாட்டு மக்களின் அனுபவங்கள் எடுத்துக் காட்டுகின்றன.

நாட்டின் இறையாண்மை பன்னாட்டு நிதி நிறுவனங்களிடம் வெளிப்படையாக அடகு வைக்கப்படும். நாட்டில் வேலை இல்லா திண்டாட்டம் தலை விரித்து ஆடும். நலிவுற்ற பிரிவினருக்கும் முதியவர்களுக்கும் நலப்பணிகள் நிறுத்தப்படும். மக்கள் குப்பைத் தொட்டிகளில் உணவு தேடும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.

இதுதான் மன்மோகச் சிங்கும், ப சிதம்பரமும் காட்டும் வளர்ச்சிப் பாதையின் இறுதியில் காத்திருக்கும் சொர்க்கம்.

படிக்க