
ஒன்பது ஆண்டுகளுக்குப் பின்னர், கடந்த செப்.19-ஆம் தேதியன்று டெல்லியில் பிரதமர் தலைமையில் நடந்த காவிரி நதி நீர் ஆணையத்தின் கூட்டத்தில், செப். 21 முதல் அக்.15 வரை தினமும் வினாடிக்கு 9000 கன அடி வீதம் கர்நாடக அரசு காவிரி நீரைத் திறந்துவிட வேண்டும் என்ற பிரதமரின் உத்தரவை ஏற்க மறுத்து, ஒரு துளி தண்ணீர்கூடத் தமிழகத்துக்குத் தரமாட்டோம் என்று கொக்கரித்து, அக்கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செதார், கர்நாடக முதல்வர். இதையடுத்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செத மனுவை விசாரித்த நீதிபதிகள், காவிரி நதிநீர் ஆணையத்துக்கு கர்நாடகம் கட்டுப்பட மறுப்பது கண்டனத்துக்குரியது என்றும், தீர்மானித்தபடி அக்.15 வரை தண்ணீரைத் தமிழகத்துக்குத் தரவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர். இதையும் ஏற்க மறுத்து ஆர்ப்பாட்டங்களையும் சாலை மறியலையும் நடத்தும் கர்நாடக ஓட்டுக்கட்சிகளும் அமைப்புகளும், அக்.6 அன்று முழு அடைப்புப் போராட்டத்தை அறிவித்துள்ளன.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தடையாணை பெறவதென தீர்மானித்துள்ள கர்நாடக அரசு, உச்ச நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாவிட்டால், கர்நாடக அரசின் மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதில் பிரச்சினையாகும் என்பதால், செப்.29 இரவு முதலாக வினாடிக்கு 5000 கன அடி அளவுக்குத் தண்ணீரை இப்போது திறந்து விடுகிறது. உச்ச நீதிமன்ற உத்தரவை மதிப்பது போல நாடகமாடும் தந்திரம்தான் இது. உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக கர்நாடக அரசின் மனு, அதன் மீதான விசாரணை என்று மீண்டும் இழுத்தடிக்கப்பட்டு, தமிழகத்தின் காவிரி நீர்ப்பாசன மாவட்டங்களின் விவசாயமும் விவசாயிகளும் மீண்டும் நாசமாக்கப்படும் அபாயம் நீடிக்கிறது.
தமிழகத்தின் இந்தத் துயர நிலைக்கு பிரதமரின் தலைமையிலான காவிரி நதிநீர் ஆணையத்தின் உத்தரவுகளையோ, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளையோ, எதையுமே மதிக்காமல் அடாவடித்தனம் செயும் கர்நாடகம் மட்டுமே காரணமில்லை. இவற்றை நடைமுறைப்படுத்த மறுக்கும் கர்நாடக அரசை நிர்ப்பந்திக்கவும், மீறினால் தண்டிக்கவும் அதிகாரம் கொண்ட மைய அரசின் ஒருதலைப்பட்சமான வஞ்சகமும் துரோகமும் நழுவிக் கொள்ளும் போக்கும்தான் முக்கிய காரணமாகும்.
தனது உத்தரவுப்படி பஞ்சாயத்துத் தேர்தலைகளை நடத்த மறுக்கும் மாநிலங்களுக்கு நிதியளிக்க முடியாது என்று மைய அரசு மிரட்டுகிறது. தனது பரிந்துரையின்படி பாடத் திட்டங்களில் சுற்றுச்சூழல் கல்வியைப் பாடத் திட்டமாக்கவில்லை என்பதற்காக மாநிலங்களின் தலைமைச் செயலர்களை வரவழைத்து மன்னிப்புக் கோரும்படி உச்ச நீதிமன்றம் நிர்ப்பந்தித்தது. ஆனால், காவிரி நீர்ப் பிரச்சினையில் இத்தகைய உறுதியை மைய அரசோ, உச்ச நீதிமன்றமோ காட்டாதது ஏன்? காவிரி நீரைப் பெற்றுத் தருவதில் நழுவும் போக்கும் நயவஞ்சகமும் காட்டும் மைய அரசு, தங்கள் வாழ்வுரிமை பலியாக்கப்படுவதை எதிர்த்து மக்கள் போராடிவரும் கூடங்குளம் அணுஉலைத் திட்டத்தை அமலாக்குவதற்கு மட்டும் பாசிச வெறியாட்டம் போடுவது ஏன்?
காவிரி, ஈழம், தமிழக மீனவர் சுட்டுக் கொல்லப்படுவது, முல்லைப் பெரியாறு – எனத் தமிழகம் வஞ்சிக்கப்படுவது தொடர்கதையாகிக் கொண்டிருக்கிறது. இருப்பினும், தமிழகத்தில் பருவமழை பொத்து, காவிரியில் நீருமில்லாத நெருக்கடியான இத்தருணத்தில், மைய அரசை முடுக்கி அதனை நிர்பந்திக்க எந்த நடவடிக்கையுமின்றிக் கிடக்கிறது ஜெயா அரசு. சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு விவகாரத்தில் மம்தாவைப் போல மைய அரசை மிரட்ட மாட்டோம் என்று கூறும் கருணாநிதி, காவிரி விவகாரத்தில் மைய அரசை மிரட்டவும் நிர்ப்பந்திக்கவும் வாப்புள்ள போதிலும் அடக்கிவாசிக்கிறார்.
தங்கள் மாநில நலன்களுக்கு எதிரான மைய அரசின் கொள்கைகளையும் திட்டங்களையும் கர்நாடகம் மட்டுமின்றி, பஞ்சாப், கேரளம் முதலான மாநிலங்களின் அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் ஒன்றுபட்டு அடாவடியாகப் போராடி முறியடிக்கின்றன. ஆனால் காவிரி, முல்லைப் பெரியாறு முதலான தமிழகத்தின் நியாயவுரிமைக்கான கோரிக்கைகளுக்காகக்கூடத் தமிழக அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் ஒன்று திரள்வதில்லை. பிரச்சினை வரும்போது மட்டும் அடையாள எதிர்ப்பு காட்டுவதும், பிழைப்புவாத வாச்சவடால் அடிப்பதும், பின்னர் மைய அரசு பிரிவினைவாத முத்திரை குத்தி நடவடிக்கை எடுத்துவிடுமோ என்று அஞ்சி சமரசமாகவும் நடந்து கொள்கின்றன.
நியாயமான மாநில உரிமைக்காகவும் தேசிய இன உரிமைக்காகவும் நடத்தப்படும் போராட்டங்களைப் பிரிவினைவாத முத்திரை குத்தி ஒடுக்குவதுதான் இந்திய தேசியத்தையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாக்கும் வழி என்பதுதான் பா.ஜ.க., காங்கிரசு மற்றும் போலி கம்யூனிஸ்டுகளின் கொள்கை. நதிநீர்ப் பங்கீடு மற்றும் எல்லைப் பிரச்சினைகள் போன்ற மாநிலங்களுக்கிடையிலான தகராறுகளில் நியாய- அநியாயங்களைப் பரிசீலித்து நிலைப்பாடு எடுப்பதற்குப் பதிலாக, ஓட்டுப் பொறுக்குவதற்காக மாநிலவெறி, இனவெறியைத் தூண்டுவதே இந்த தேசியக் கட்சிகளது மாநிலப் பிரிவுகளின் நடைமுறையாக உள்ளது. ஆனால் ஒருமைப்பாடு என்பது ஒருவழிப்பாதையல்ல.
இந்நிலையில், காவிரியில் தமிழகத்தின் நியாயவுரிமையை நிலைநாட்டத் தனது அதிகாரத்தைப் பயன்படுத்த மறுத்து நழுவிக்கொள்ளும் மைய அரசு, தமிழகத்தில் வரிவசூல் செவது உட்பட எந்தவொரு அதிகாரத்தையும் செலுத்துவதற்கு தமிழக மக்கள் அனுமதிக்க மறுத்து, மைய அரசின் அதிகார அமைப்புகள் செயல்படாத வண்ணம் தொடர் முற்றுகைப் போராட்டங்களை நடத்தி நிர்பந்திக்க வேண்டும். அதன் பிறகும் தமிழகத்தின் உரிமைகள் மறுக்கப்படுமானால், நெவேலி மின்சாரம், நரிமணம் எண்ணெ போன்றவற்றை மைய அரசுக்குக் கொடுப்பதைத் தடுத்தும், வரி கொடுக்க மறுத்தும், பெருந்திரள் மக்களின் போர்க்குணமிக்க போரட்டங்களை முன்னெடுத்துச் செல்வதைத் தவிர வேறுவழியில்லை. சட்டபூர்வ – நியாயமான தீர்வை மைய அரசு செயல்படுத்த மறுத்து நழுவும் போது, தவிர்க்கவியலாமல் முரண்பாடு முற்றுவதால், நாமும் தவிர்க்கவியலாமல் இத்தகைய நடவடிக்கைகளையும் போராட்டங்களையும் நடத்துமாறு நிர்பந்திக்கப்படுகிறோம். ஆனால், எல்லா பிரச்சினைகளுக்கும், எப்போதும் பிற இனத்தவருடன் முரண்பட்டுப் பகைமையுடன் போராட வேண்டும் என்பதாகத் தமிழினக் குழுக்கள் நடந்து கொள்கின்றன. தமிழகத்தின் நியாயவுரிமை தொடர்ந்து மறுக்கப்பட்டு முரண்பாடு முற்றுவதாலேயே தமிழக மக்கள் இத்தகைய நிலை எடுக்கவேண்டியது தவிர்க்கவியலாததாகிறது.
____________________________________________
– புதிய ஜனநாயகம், அக்டோபர் – 2012
__________________________________________________