Wednesday, April 16, 2025
முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்இரண்டு கார்ப்பரேட் கொள்ளைகள் - இருவேறு அணுகுமுறைகள்!

இரண்டு கார்ப்பரேட் கொள்ளைகள் – இருவேறு அணுகுமுறைகள்!

-

ஸ்பெக்ட்ரம் ஊழல் – நிலக்கரி ஊழல் !

இரண்டு கார்ப்பரேட் கொள்ளைகள் – இருவேறு அணுகுமுறைகள் !

நிலக்கரி-ஊழல்-3நிலக்கரி வயல்கள் ஒதுக்கீடு, மீப்பெரும் அனல் மின்நிலையத் திட்டங்களை நிறுவி இயக்குவது, டெல்லியிலுள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தைப் பராமரித்து இயக்குவதில் அரசு – தனியார் கூட்டு ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்ட விதம் ஆகிய மூன்றிலும் நடைபெற்றுள்ள கார்ப்பரேட் கொள்ளையால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு குறித்து இந்திய அரசின் தலைமை தணிக்கைத் துறை அதிகாரி அளித்திருந்த அறிக்கைகள் கடந்த ஆகஸ்டு மாத இறுதியில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டன.  தலைமைத் தணிக்கைத் துறை அதிகாரி தந்துள்ள அறிக்கைகளின்படி, 2004-2009 – ஆம் ஆண்டுகளில் பல்வேறு தனியார் நிறுவனங்களுக்கு நிலக்கரி வயல்களை ஒதுக்கீடு செய்ததில் நடந்துள்ள முறைகேடுகளால் அரசுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு 1.86 இலட்சம் கோடி ரூபாய்; மகாராஷ்டிரா மாநிலத்தில் சித்ராங்கி எனுமிடத்தில் மீப்பெரும் அனல் மின்நிலையத்தை நிறுவி இயக்குவதற்காக அனில் அம்பானிக்குக் காட்டப்பட்டுள்ள முறைகேடான சலுகையால், அம்பானி என்ற தனியொரு முதலாளிக்குக் கிடைக்கவுள்ள நிகர இலாபம் 11,852 கோடி ரூபாய்; டெல்லி சர்வதேச விமான நிலையத்தைப் பராமரித்து இயக்குவதற்காக ஜி.எம்.ஆர். குழுமத்திற்கு அளிக்கப்பட்டுள்ள சலுகைகளால், அடுத்த 60 ஆண்டுகளில் அந்நிறுவனத்திற்குக் கிடைக்கவுள்ள வருவாய் 1,63,557 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இவை மூன்றில், ‘தேசிய’ப் பத்திரிகைகளும் பா.ஜ.க.வும் நிலக்கரி வயல்கள் ஒதுக்கீட்டில் நடந்துள்ள முறைகேடுகள் பற்றி மட்டும்தான் கூச்சல் போட்டு வருகின்றன; மற்ற இரண்டு கார்ப்பரேட் கொள்ளைகள் பற்றி எந்தவொரு எதிர்க்கட்சியும் தேசியப் பத்திரிகைகளும் வாயே திறக்கவில்லை.  நிலக்கரி வயல் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்த விதமும், ஊழலும் 2 ஜி ஒதுக்கீட்டில் நடந்த ஊழலைக் காட்டிலும் சதித்தனம் நிறைந்தது, பிரம்மாண்டமானது என்ற போதிலும், நிலக்கிரி ஊழல் ‘தேசிய’வாதிகளால் அடக்கியே வாசிக்கப்படுகிறது; அல்லது கண்டுகொள்ளாமல் விடப்படுகிறது.

2 ஜி ஊழல் வழக்கில் தி.மு.க. வையும், அக்கட்சியைச் சேர்ந்த ராஜாவையும் போட்டுப் பார்க்க பெரும் முனைப்புக் காட்டிவரும் சுப்பிரமணிய சுவாமியும்; 2 ஜி ஊழலை மையப்படுத்திப் பிரச்சாரம் செய்து ஆட்சியைக் கைப்பற்றியுள்ள அ.தி.மு.க. தலைவி ஜெயலலிதாவும் நிலக்கரி வயல் ஒதுக்கீடு முறைகேடு பற்றி இதுவரை ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை; ராஜாவையும் தி.மு.க.வையும் பக்கம் பக்கமாக எழுதி அம்பலப்படுத்திய ஜூனியர் விகடன், குமுதம் ரிப்போர்டர் உள்ளிட்ட தமிழக கிசுகிசு ஏடுகள், நிலக்கரி ஊழல் விவகாரத்தில் கள்ள மௌனம் சாதிக்கின்றன.

2 ஜி ஒதுக்கீடு முறைகேடு மூலம் தி.மு.க. 200 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் செதிருப்பதாகக் குற்றஞ்சுமத்தி எழுதிய பத்திரிகைகள், அப்படிப்பட்ட பொதுப்பணத்தைச் சுருட்டிக்கொண்ட குற்றச்சாட்டு எதையும் நிலக்கரி முறைகேட்டின் முக்கியப் புள்ளியான மன்மோகன் சிங் மீதோ, காங்கிரசு மீதோ சுமத்துவதில்லை.  இந்த விசயத்தில் முடிவெடுக்காமல் அமைதியாக இருந்ததுதான் மன்மோகன் சிங்கின் குற்றமே தவிர, தனிப்பட்டரீதியாக அவர் எந்த ஆதாயத்தையும் இதன் மூலம், அடையவில்லை என அவை எழுதுகின்றன.  இம்முறைகேடு பற்றி முறையான விசாரணை தொடங்குவதற்கு முன்பே மன்மோகன் சிங்கை உத்தமனாக்கி விட்டன.

நிலக்கரி முறைகேட்டை அடக்கி வாசிப்பது தலைமை தணிக்கை அதிகாரியிடமிருந்தே தொடங்கிவிடுகிறது.  இந்த முறைகேடான ஒதுக்கீட்டினால் தனியார் நிறுவனங்கள் அடைந்த அதிரடி இலாபம் 4.79 இலட்சம் கோடி ரூபாய் அளவிற்கு இருக்கக்கூடும் எனக் கூறி வந்த தணிக்கைத் துறை, தனது அறிக்கையில் அரசுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு 1.86 இலட்சம் கோடி ரூபாய்தான் எனக் குறைத்துக் காட்டியிருக்கிறது.

ஆ.ராசா 2 ஜி அலைக்கற்றை விற்பனையை அரசின் கொள்கை முடிவுப்படிதான் – முன்னால் வந்தவருக்கு முன்னுரிமை – விற்பனை செய்தார்.  அவ்விற்பனையில் அவர் வரிசையை மாற்றிக் கொடுத்து விட்டார் என்பதுதான் ராசா மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு.  ஆனால், நிலக்கரி வயல் ஒதுக்கீட்டிலோ, வயல்களை ஏலத்தில்தான் விடவேண்டும் என்ற கொள்கை முடிவை 2004-ம் ஆண்டு எடுத்துவிட்டு, அந்தக் கொள்கைக்கு ஏற்பச் சட்டத்திருத்தம் செய்யாமல் கிடப்பில் போட்டுவிட்டு, நிலக்கரி வயல்களைக் கேட்டு விண்ணப்பித்த பெயர்ப்பலகை நிறுவனங்களுக்கெல்லாம் பெருமாள் கோவில் உண்டக்கட்டியைப் போல, நிலக்கரி வயல்களைத் தூக்கிக் கொடுத்திருக்கிறார், மன்மோகன் சிங்.

நிலக்கரி-ஊழல்-1

நிலக்கரி வளம் 1973-ஆம் ஆண்டில் தேசியமயமாக்கப்பட்டாலும், அப்பொழுதே இரும்பு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனங்களுக்கு நிலக்கரி வயல்களை ஒதுக்கிக் கொடுக்கும் எனச் சலுகை அளிக்கப்பட்டிருந்தது.  தனியார்மயம் – தாராளமயம் அமலுக்கு வந்த பின், 1993-ல் மின்சாரம், சிமெண்ட் உற்பத்தியில் ஈடுபடும் அல்லது அத்தொழில்களைத் தொடங்கப் போவதாகச் சொல்லும் தனியார் நிறுவனங்களுக்கும் நிலக்கரி வயல்களை ஒதுக்கீடு செயலாம் என அச்சலுகை விரிவாக்கப்பட்டது.  2006-ல் மின்சாரம், சிமெண்ட், இரும்பு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு நிலக்கரியை விற்பதாகக் கூறும் ஏஜெண்டுகளுக்கும் நிலக்கரி வயல்களை ஒதுக்கலாம் எனத் தாராளமயம் புகுத்தப்பட்டது.  இதன் பிறகுதான் தனியார் நிறுவனங்களுக்கு நிலக்கரி வயல்களைத் தூக்கிக் கொடுப்பது முன்னெப்போதும் இல்லாத அளவிற்குச் சூடு பிடித்தது.

1993 தொடங்கி 2003 வரையில் 41 வயல்கள் மட்டுமே ஒதுக்கீடு செயப்பட்டிருந்தபொழுது, 2004 ஆம் ஆண்டு தொடங்கி 2009 ஆம் ஆண்டுக்குள் 175 வயல்கள் தன்னிச்சையாக ஒதுக்கீடு செயப்பட்டுள்ளன.  இவற்றுள் 111 நிலக்கரி வயல்கள் தனியார் நிறுவனங்களுக்கு வாரி வழங்கப்பட்டுள்ளன.  நிலக்கரி வயல்களைத் தனியாருக்குத் தாரை வார்ப்பது சூடுபிடித்த நேரத்தில், அதாவது 2006 முதல் 2009 முடிய அத்துறையின் பொறுப்பு பிரதமர் மன்மோகன் சிங்கிடமிருந்து குறிப்பிடத்தக்கது.

காங்கிரசு நாடாளுமன்ற உறுப்பினரான நவீன் ஜிண்டாலுக்குச் சொந்தமான ஜிண்டால் இரும்பு மற்றும் எரிசக்தி நிறுவனம்; மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள யவட்மால் தொகுதியைச் சேர்ந்த காங்கிரசு எம்.பி. விஜய் தர்தாவின் தம்பியும் மகாராஷ்டிரா மாநில அமைச்சருமான தேவேந்திர தர்தா இயக்குநராக உள்ள ஜே.ஏ.எஸ். குழுமம்; நிலக்கரித் துறை அமைச்சர் சிறீ பிரகாஷ் ஜெய்ஸ்வாலின் உறவினரான மனோஜ் ஜெய்ஸ்வாலால் நடத்தப்படும் அபிஜித் குழுமம்; பா.ஜ.க.வின் தேசியத் தலைவர் நிதின் கட்காரியின் உதவியாளர் அஜய் சஞ்சேட்டிக்குச் சோந்தமான எஸ்.எம்.எஸ். இண்டஸ்ட்ரீஸ்; பா.ஜ.க.வைச் சேர்ந்த நீனா சிங்கின் கணவர் வீ.கே. சிங்கிற்குச் சோந்தமான நவபாரத் பவர் லிமிடெட் ஆகியவையும் நிலக்கரி வயல்களைப் பெற்றுள்ளன.  ஆனாலும், இந்த அரசியல் தலைவர்கள், “நாங்கள் லாபியிங் செய்து வயல்களைப் பெறவில்லை; தகுதியின் அடிப்படையில் பெற்றோம்” என்கிறார்கள்.  அதாவது பனைமரத்தடியின் கீழ் உட்கார்ந்து கள்ளைக் குடித்துவிட்டு, பாலைத்தான் குடித்தோம் எனச் சத்தியம் செய்கிறார்கள்.

2 ஜி ஒதுக்கீடில் ராஜா – கனிமொழி – நீரா ராடியா இடையே நடந்த தொலைபேசி உரையாடல்களை வெளியிட்டு, லாபியிங் பற்றிக் கூச்சல் போட்ட முதலாளித்துவப் பத்திரிகைகளுள் ஒன்றுகூட, நவீன் ஜிண்டாலும், விஜய் தர்தாவும், அஜய் சஞ்சேட்டியும் நிலக்கரி வயல்களை எப்படிப் பெற்றார்கள் என்ற புலனாய்விற்குள் இறங்கவுமில்லை.  நிலக்கரி வயல்களை ஒதுக்கீடு செய்வதில் நடந்துள்ள லாபியிங் இவர்களோடு மட்டும் நின்று விடவுமில்லை.

கூடங்குளத்தில் இன்னும் மின் உற்பத்தித் தொடங்கப்படவேயில்லை; ஆனாலும், அவ்வணு உலையை எதிர்த்துப் போராடும் மீனவர்கள் மீது நாட்டின் வளர்ச்சியைச் சீர்குலைப்பவர்கள் எனக் குற்றஞ்சுமத்தி, அவர்கள் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டம் ஏவி விடப்படுகிறது.  அதேசமயம், நிலக்கரி வயல்களைப் பெற்று, திட்டமிட்டே உற்பத்தியில் ஈடுபடாமல் இருந்து, ‘வளர்ச்சியை’ச் சீர்குலைத்திருக்கும் டாடா, அம்பானி, ஜிந்தால், ரிலையன்ஸ், மிட்டல், மனோஜ் ஜெஸ்வால் உள்ளிட்ட பெரும் தரகு முதலாளிகள் மீது என்ன நடவடிக்கை பாய்ந்திருக்கிறது?

நிலக்கரி-ஊழல்-2இந்த ஒதுக்கீடு தொடர்பாக விசாரணை நடத்திவரும் சி.பி.ஐ., கணக்குக் காட்டுவதற்காக ஏழு உப்புமா கம்பெனிகள் மீது மோசடி உள்ளிட்ட சில குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருக்கிறது.  அமைச்சரவை இடைக்குழு, 58 வயல்களைப் பெற்றுள்ள 29 நிறுவனங்களுக்கு, “நீங்கள் ஏன் நிலக்கரியைத் தோண்டவில்லை?” என நோட்டீஸ் அனுப்பிவிட்டு, அவர்களின் பதில்களைக் கேட்டு வருகிறது.  அமைச்சரவை இடைக்குழு சிபாரிசு செய்தபடி 4 நிலக்கரி வயல்களின் ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதற்கு மேல் தனியார் நிறுவனங்கள் மீது எந்தப் பூச்சாண்டியும் பாயவில்லை.

ஏல முறையில் ரோடு போடும் வேலையை விடுவதிலேயே ஊழலும் முறைகேடுகளும் தாண்டவமாடும்பொழுது, நிலக்கரி ஒதுக்கீட்டில் ஏல முறையைக் கொண்டு வந்திருந்தால் இந்த ஊழல் நடைபெற்றிருக்காது என பா.ஜ.க., பிரசாந்த் பூஷண் உள்ளிட்ட பலரும் வாதாடுவது நகைப்புக்குரியது.  தனியார்மயம் என்பதே ஊழல்தான்.  ஊழலற்ற தனியார்மயம் என்பதே கிடையாது.  ஒரிசாவில் பல இலட்சம் கோடி ரூபாய் பெறுமான இரும்புக் கனிம வளத்தை போஸ்கோ என்ற அந்நிய நிறுவனத்திற்கு வெறும் 50,000 கோடி ரூபாய் மூலதனத்திற்குத் தாரை வார்த்திருக்கிறார்களே, அது ஊழலில்லையா? இப்படிச் ‘சட்டபூர்வமாக’ நீர், நிலம், அலைக்கற்றை, கனிம வளங்கள் ஆகியவையும் பொதுத்துறை நிறுவனங்களும் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கப்படுவதை, இக்கும்பல் வளர்ச்சி என்ற பெயரில் நியாயப்படுத்துகிறது.

தனியார்மயத்தின் பின் சட்டவிரோதமான முறையில் நடந்துள்ள ஊழல்கள் என்று பார்த்தால், கடந்த இருபது ஆண்டுகளில் பங்குச் சந்தை மோசடி தொடங்கி நிலக்கரி வயல் ஒதுக்கீடு முறைகேடு முடிய பல நூறு ஊழல்கள் நடந்திருப்பதை, நடந்துவருவதை யாரும் மறுக்க முடியாது.  ஆனால், அவற்றுள் ஒரு சில ஊழல்களைத்தான் எதிர்க்கட்சிகளும், தேசியப் பத்திரிகைகளும் தங்களது அரசியல் நோக்கங்களுக்கு ஏற்ப மக்கள் முன் வைத்துள்ளன.

உதாரணத்திற்குச் சொன்னால், 2 ஜி ஊழல் தி.மு.க. மட்டுமே செய்த ஊழலாக மக்கள் முன் கொண்டு செல்லப்பட்டது.  அதேசமயம், முகேஷ் அம்பானி, காங்கிரசு கட்சியின் முரளி தியோரா சம்பந்தப்பட்ட கே.ஜி. எண்ணெய் வயல் ஊழல், காங்கிரசு கட்சியின் பிரஃபுல் படேல் சம்பந்தப்பட்ட ஏர் இந்தியா ஊழல் உள்ளிட்ட பல மெகா ஊழல்கள் வெளியே கசிந்த நிலையிலேயே அமுக்கப்பட்டன.  2 ஜி வழக்கில் தி.மு.க.வைச் சேர்ந்த ராஜா, கனிமொழி ஆகியோர் வழக்கை எதிர் கொள்ளும்போது, காங்கிரசின் ப.சிதம்பரம் குற்றமற்றவராக நீதிமன்றத்தால் அறிவிக்கப்படுகிறார். இவை அனைத்துக்கும் மேலாக, “2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை ஏலமுறையில் விட வேண்டும் என்று கூறியிருப்பதால், அதே நடைமுறை அனைத்து இயற்கை வளங்களுக்கும் பொருந்தாது” என 2ஜி தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்திருப்பதன் மூலம், நிலக்கரி ஒதுக்கீட்டில் நடந்துள்ள கார்ப்பரேட் கொள்ளை தொடர்பாக யார் மீதும் ஊழல் குற்றமோ, வழக்கோ தொடுக்க முடியாது என்ற நிலையை உருவாக்கிவிட்டது.

படிக்க

____________________________________________

புதிய ஜனநாயகம், அக்டோபர் – 2012
____________________________________________