Monday, April 21, 2025
முகப்புசமூகம்அறிவியல்-தொழில்நுட்பம்யாருக்காக வருகிறது Google டிரைவரில்லா கார்?

யாருக்காக வருகிறது Google டிரைவரில்லா கார்?

-

கூகிள்-கார்ற்காலம் முதல் இக்காலம் வரையிலான மனிதனின் பரிணாம வளர்ச்சியின் அங்கமாக, காரணியாக விளங்கும் அறிவியலின் வளர்ச்சி வியக்கத் தக்க வகையில் மாற்றம் பெற்று வருகிறது. நாம் கற்பனையில், ஹாலிவுட் திரைப் படங்களில் மட்டுமே இது வரை பார்த்து வந்த முற்றிலும் ஆளில்லாமல் தானாக இயங்கும் கார் இப்போது நிஜத்தில் வெளி வர இருக்கிறது. இதற்கான அனுமதியை கூகுள் நிறுவனம் பெற்றிருக்கிறது.

இதற்காக இந்த காரில் ரேடார், கேமராக்கள், அகச்சிவப்பு கேமரா, லேசர், சென்சார் மற்றும் ஜி.பி.எஸ் GPSபோன்ற தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப் பட்டுள்ளன. இவை இதனுள் இருக்கும் கணினியுடன் இணைக்கப் பட்டிருக்கும்.

இதன் ரேடார் கருவி காரை சுற்றி கண்ணுக்கு தெரியாத இடங்களில் இருப்பவற்றை கணினிக்கு தெரிவிக்க உதவுகிறது. இதில் உள்ள கேமராக்கள் சாலையின் எல்லைகளை அறிவிக்க உதவுகிறது. மேலும் இதில் உள்ள அகச்சிவப்பு கேமாரா இருளிலும் சாலையில் வருபவற்றை துல்லியமாக கணினிக்கு அறிவிக்கும். இதன் மேற்புற கூரையில் உள்ள லேசர்கள் காரை சுற்றி 2 செ,மீ க்குள் வருபவற்றை அறிவிக்கும். இதில் உள்ள GPS தொழில்நுட்பம் காரின் தற்போது இருக்கும் இடத்தை கணினிக்கு அறிவிப்பதோடு கூகுள் மேப் உதவியுடன் கார் செல்ல வேண்டிய திசையையும் சரியாக கணினிக்கு அறிவிக்க உதவுகிறது. இதன் மூலம் கார் சரியான இடத்தை சென்றடைவதுடன் வழியில் வருபவற்றை அறிந்து சரியாக நின்று செல்லும் திறனை பெறுகிறது. இதனால் மனிதத் தவறுகளால் ஏற்படும் விபத்துகள் தவிர்க்கப் படுவதோடு போக்குவரத்து நெரிசல்களும் குறையக் கூடும்.

இதற்கான சோதனைகளுக்கும், ஆய்வுகளுக்கும் முதலீடு செய்திருப்பவர்கள் General Motors, Volkswagen, Volvo, BMW, Audi, Mercedes போன்ற உயர் ரக கார் தயாரிப்பு நிறுவனங்கள். எனவே இது பயன்படுத்தப்படப் போவது அதிக விலை கொண்ட கார்களில் என்பதை அறிந்து கொள்ள முடியும். அதிக விலை கொடுத்து கார்கள் வாங்கும் வர்க்கம் பாதுகாப்பு காரணங்களை காட்டிலும் தங்கள் கவுரவத்திரற்காகவும், அதிவேகத்தில் சென்று தங்கள் பணத்திமிரை காட்டவும் தான் நினைக்கிறது. உலக அளவில் இத்தகைய அதிக விலை கார்களால் நிகழ்ந்த விபத்துகளும், அப்பாவி மக்களின் உயிரிழப்புகளுமே அதற்கு சான்று. அப்படி இருக்கையில் இந்த மேல்தட்டு மக்களுக்கு இந்த கார் எந்த வித பயனை தரும் என்பது கேள்விக்குறி தான்.

ஒரு வேளை பிற்காலத்தில் இது சாதாண கார்களுக்கும், பொது போக்குவரத்திற்கும் பயன்படுத்த படுமானால் அது பயன் தரக் கூடியதாக இருக்கலாம். ஆனால் இப்போது நடைபெறும் விபத்துகள் மற்றும் போக்குவரத்து நெரிசல்களுக்கு மனிதத் தவறுகள் தான் காரணமா?

இன்றைய நுகர்வு கலாச்சாரத்தில் மக்களை பெரு நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் சுரண்டுவதற்கு அரசால் ஊக்குவிக்கப் படும் கார் கடன் திட்டங்களால் பல்கிப் பெருகி சென்னை போன்ற பெரு நகரங்களின் சாலைகளை அடைத்து நிற்கும் கார்கள் ஏற்படுத்தாத போக்குவரத்து நெரிசல்களா?

ஐந்து முதல் ஆறு பேர் செல்லக் கூடிய இடங்கள் ஒற்றை நபர் கார்களை பயன் படுத்துவதால் அடைத்து செல்லப்படுகிறது. சொகுசுக்காக கார்களில் தனியே செல்லும் இவர்கள் பிழைப்புக்காக ஆட்டோ ஓட்டும் நபர்களை நெரிசலுக்கு காரணம் என குற்றம் சாட்டுவார்கள்.

அடுத்து அரசு பேருந்துகளின் நிலை என்ன என்பதைப் பார்த்தால் வெறும் கேள்விக்குறி தான் விடையாக கிடைக்கிறது. அதன் பராமரிப்பு என்பது எவ்வளவு கேவலமான நிலையில் உள்ளது என்பதை நடந்திருக்கும் விபத்துகளும் அதில் பயணிக்கும் பொது மக்களுமே சாட்சி.

தனியார் பேருந்து நிறுவனங்களில் ஓட்டுனர்களுக்கு கொடுக்கப் படும் பணிச்சுமை, ஓய்வின்மை போன்றவற்றால் பெரும்பாலான விபத்துகள் நடந்திருப்பது நாம் அனைவரும் அறிந்ததே! அதோடில்லாமல் கொள்ளை லாபம் சம்பாதிக்க அதி வேகத்தில் செல்லுமாறு ஓட்டுனர்களை அறிவுறுத்தும் இதன் முதலாளிகள் விபத்துகளின் காரண கர்த்தாக்கள் இல்லையா?

இவற்றை எல்லாம் விட இங்கு நம் சாலைகளின் நிலை என்ன என்பது முற்றிலுமான கேள்விக் குறியே? முக்கிய சாலைகளில் கூட குண்டு குழிகள் காணப படுவதுடன் அவைகளும் விபத்துகளுக்கான காரணிகளாக அமைகின்றன.

இந்த ஆளில்லா கார் நடைமுறைக்கு வரும் பட்சத்தில் இங்குள்ள வாகன ஓட்டிகளுக்கு மாற்று வேலை ஏற்பாடு செய்து தர இந்த அரசு அமைப்பால் முடியுமா?

இத்தனை காரணங்கள் இருக்க விபத்துகளுக்கும், நெரிசல்களுக்கும் வெறும் மனிதத் தவறை காரணமாக சொல்ல முடியுமா? இவற்றை எல்லாம் சரி செய்வது என்பது இத்தகைய ஓட்டு பொறுக்கி அரசியலமைப்பு முறைகளில் சாத்தியமற்ற ஒன்று. இது எதிர்மறையாக வேலையிழப்பை வேண்டுமானால் உருவாக்கும். ஆகவே இந்த தொழில் நுட்பம் எந்த பயனையும் இந்த சமூகத்தில் தரப் போவதில்லை.

உயர்தர சாலைகளில் ஆடம்பர கார்களில் பயணிக்கும் உண்டு கொழுத்தோருக்கு மட்டும் இந்த ஆளில்லா கார்கள் பயன்படலாம். இன்னமும் ஒரு மிதிவண்டி கூட வாங்க முடியாமல் தவிக்கும் பெரும்பான்மை உலக மக்கள் இருக்கும் காலத்தில்தான் இத்தகைய அறிவியல் கண்டுபிடிப்புகள் வருகின்றன.

படிக்க