Monday, April 21, 2025
முகப்புகட்சிகள்அ.தி.மு.கதிமிர், ரவுடித்தனம், அலட்சியம், அதிகாரம்.....!

திமிர், ரவுடித்தனம், அலட்சியம், அதிகாரம்…..!

-

ரியாணாவில் நடப்பதாகச் சொல்லப்படும் கற்பழிப்புச் சம்பவங்கள் உண்மையில் கற்பழிப்புகளே அல்ல. இதில் 90 சதவீத சம்பவங்களில் சம்பந்தப்பட்ட பெண்கள் செக்ஸ் வைத்துக் கொள்ள விரும்பியே சென்றிருப்பார்கள். ஆனால், சமயத்தில் அது குழு வன்புணர்ச்சியாக மாறக் கூடும் என்று அறியாதவர்களாய் இருக்கிறார்கள்”

மேற்படி தத்துவ முத்தை துப்பியிருப்பவனின் பெயர் தரம்பீர் கோயத். இவன் தான் ஹரியாணா காங்கிரசின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளன். கேட்பதற்கே நாராசமாய் இருக்கிறதா? காதுகளில் கொதிக்கும் அமிலத்தை ஊற்றியது போலிருக்கிறதா? எனில் நீங்கள் அடுத்த தத்துவ முத்தையும் கேட்டாக வேண்டும்.

ஹரியாணாவில் நடக்கும் கற்பழிப்புச் சம்பவங்களைக் குறைக்க வேண்டுமென்றால் பெண்கள் வயதுக்கு வந்த உடனேயே திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார் ஹரியாணாவின் முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சௌதாலா. இவர் நடத்தி வரும் லோக் தளம் என்கிற அரசியல் கம்பேனி பாரதிய ஜனதாவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. செய்தியாளர்களிடையே பேசிய அவர் பாலியல் தாக்குதல்களுக்கு உள்ளானவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை நிறுத்தப் பட வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

காட்டுமிராண்டித்தனம், பொறுக்கித்தனம், ரவுடித்தனம், திருட்டுத்தனம் என்றெல்லாம் வந்து விட்டால் வடக்கு தெற்கு வித்யாசமெல்லாம் கிடையாது. காஷ்மீரிலிருந்து கன்யாகுமாரி வரையிலான இந்த தேசத்தின் நெடிய பரப்பளவின் குறுக்கிலும் நெடுக்கிலும் ஏராளமான உதாரணங்களை நீங்கள் பார்க்கலாம். அந்த வகையில் ஹரியாணாவின் அரசியல் ‘தலைவர்களுக்கு’ சவால் விடுக்கும் வித்தல் ரதாதியாவைப் பாருங்கள்.

வித்தல் ரதாதியா குஜராத்தைச் சேர்ந்த காங்கிரசு எம்.பி.  இவர் கடந்த வாரம் தனது காரில் வதோதரா அருகே சென்று கொண்டிருந்த போது நெடுஞ்சாலை சுங்கச்சாவடியில் தடுத்து நிறுத்தி நுழைவு வரி கேட்டுள்ளனர். இவர், தான் ஒரு எம்.பி என்றும் எனவே வரி கொடுக்க முடியாது என்று தெரிவித்துள்ளார். அந்த சமயத்தில் பணியில் இருந்த பணியாளர், இவர் சொன்னதை நம்பவில்லையாம். உடனே ஆத்திரம் அடைந்த வித்தல் ரதாதியா, தனது காரில் இருந்த துப்பாக்கியை எடுத்து சுங்கச்சாவடி பணியாளரை கொன்று விடுவதாக மிரட்டியிருக்கிறார்.

இந்தக் காட்சிகளெல்லாம் சுங்கச் சாவடியில் இருந்த கேமராவில் பதிவாகியிருக்கிறது. அந்தப் பதிவுகள் ஊடகங்களில் கசிந்தவுடன் விளக்கமளிக்க முன்வந்த வித்தல், தானொரு எம்.பி என்கிற மரியாதையைத் தரவில்லையென்றும், தனது உயிருக்கே ஆபத்து வந்து விட்டது என்று தான் அஞ்சியதாலேயே துப்பாக்கியை எடுத்து மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.

இவர்கள் ஒரு வகையென்றால், காங்கிரசிலேயே வேறு வகையான கோமாளிகளும் இருக்கிறார்கள். “டெங்குக் காய்ச்சலில் உங்கள் பிள்ளைகளைப் பாதுகாக்க அவர்களுக்கு முழு கை சட்டையும் முழு நீள கால்சட்டையும் அணிந்து விடுங்கள்”  என்கிறார் குலாம் நபி ஆஸாத். இவர் தான் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலையேற்றம் ஏதுமில்லாத நிலையிலேயே டீசல் விலையை உயர்த்தி, சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குக் கட்டுப்பாடு விதித்துள்ள மன்மோகன் சிங்கோ, “பணம் என்ன மரத்துலையா காய்க்குது நைனா” என்று அப்பாவி போல் மூஞ்சியை வைத்துக் கொண்டே கேட்கிறார். நரவேட்டை புகழ் மோடியோ பெண்கள் எடை கூடினால் அழகு போய் விடும் என்பதற்காக பட்டினி கிடந்து உடம்பைக் கெடுத்துக் கொள்கிறார்கள் என்று ஊட்டச்சத்து குறைபாடு கொண்ட ஏழைகளைப் பற்றி திமிராகப் பேசுகிறார்.

ராஜபாளையத்தில் அண்ணா தி.மு.கவின் நூறாண்டு பேசும் ஒராண்டு சாதனைப் பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் ( என்னவோ துறை) ராஜேந்திர பாலாஜி,

“திமுக தலைவர் கலைஞர் தேவையில்லாமல் கரண்ட்ட பத்தியே பேசுறார். கரண்ட் இல்லன்னு யார் கவலைப்படுறா. இந்த கூட்டத்துல உள்ளவங்க கைதூக்குங்க பாக்கலாம். மத்திய அரசுக்கிட்ட போய் கேளுங்க. நாங்களா கரண்ட் வைச்சிருக்கோம். நாங்களா தயாரிக்கிறோம். வைச்சுக்கிட்டு இல்லேன்னு சொல்றோமா. கரண்ட் இல்லனாலும் அவனவன் பொழப்ப பாத்துக்கிட்டுதானே இருக்கான். இப்படியே இருந்து பழகிட்டா கரண்ட் மிஞ்சமாகும். இது ஒரு டிரையல் மாதிரி” என்றுள்ளார்.

இவர்கள் தான் நம் தேசத்தை ஆளுகின்ற கட்சிகளைச் சேர்ந்தவர்கள். எந்தளவுக்கு வக்கிரமும் நெஞ்சழுத்தமும் மக்களை நாய் நரிகளைப் போல் மதிக்கும் திமிரும் இருந்தால் இவர்கள் வாயிலிருந்து இப்படிப்பட்ட வார்த்தைகள் வரும்? சுகாதாரத்தையும் ஆரோக்கியத்தையும் மக்களுக்கு உத்திரவாதப் படுத்திக் கொடுக்க வேண்டிய மத்திய அமைச்சர் தமக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லையென்கிறார் – அதெல்லாம் உங்கள் பொறுப்பு என்கிறார். பிறகெதற்கு இவர்கள் அதிகாரத்தில் இருக்க வேண்டும்?

மக்களின் நல்வாழ்வை உத்திரவாதப்படுத்திக் கொடுக்க வேண்டிய பொறுப்புள்ள பதவியில் இருப்பதாகச் சொல்லிக் கொள்ளும் பிரதமர், மக்களை கசக்கிப் பிழிந்தால் காசு கொட்டும்  அஃறிணைப் பொருட்களாகப் பார்க்கிறார். மக்களுக்கு அடிப்படை வசதியான மின்சாரம் கிடைப்பதை உத்திரவாதப்படுத்த வேண்டிய பொறுப்பில் இருக்கும் ஒரு அரசின் அமைச்சர், எவண்டா அவன் கரெண்டு கேட்கிறது என்று திமிராகக் கேட்கிறார். பெண்களின் பாதுகாப்பை உறுதிப் படுத்த வேண்டிய பொறுப்பில் இருப்பவரோ அதெல்லாம் சுத்த பஜாரிங்க என்று பாதிப்புக்குள்ளானவர்களைப் பார்த்து எள்ளி நகையாடுகிறார். மக்கள் முன் பணிவாக நடந்து கொள்ள வேண்டியவரோ துப்பாக்கியைக் காட்டி மிரட்டுகிறார்.

இது தான் பார் போற்றும் பாரத தேசத்தின் ‘ஜனநாயகம்’. இது தான் அதன் லட்சணம். இவர்கள் தான் ஆளும் கும்பல். இதற்கு மேல் இந்தக் கோமாளிக் கூத்துகள் தொடர வேண்டுமா என்பதை மக்களே முடிவு செய்து கொள்ளலாம்.