
நவீன மருத்துவ துறையில் நிகழ்த்தப்பட்டிருக்கும் பல உயிர்காக்கும் சாதனைகளின் அடுத்தகட்டமாக இரத்த செயலூக்கி (Blood Booster) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இரத்த சிவப்பணுக்களில் இருக்கும் ஹீமோகுளோபின் உடலின் அனைத்து திசுக்களுக்கும், தசைகளுக்கும் ஆக்சிஜனை சுமந்து செல்கிறது. விபத்துகளில் சிக்கி அதிக இரத்த இழப்பினால் பாதிக்கப்பட்டவர்களின் முக்கிய உடலுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்கப்பெறாததினால், அந்த உறுப்புகள் செயலிழப்பதுடன், இறுதியில் பாதிக்கப்பட்டவர் உயிரிழக்கும் அபாயம் ஏற்படுகின்றது. இதை தவிர்க்க உடனடியாக இரத்தம் ஏற்றப்பட வேண்டும். மிக அதிக காயங்களுடன் இருப்பவருக்கு இரத்தம் ஏற்றுவதில் சில நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன.
அமெரிக்க மருந்துக் கம்பெனியான சங்கார்ட் (Sangart) காலாவதியான இரத்த அணுக்களில் இருந்து MP4OX என்ற புதிய செயலூக்கியை தயாரித்துள்ளது. இது இரத்த சிவப்பணுக்களைப் போன்றே ஆக்சிஜனை சுமந்து செல்லும் திறனைப் பெற்றுள்ளதாகவும், அதிக இரத்த இழப்பு ஏற்பட்டு சிவப்பணுக்கள் குறைவாக இருக்கும் போது கூட அனைத்து உறுப்புகளுக்கும் ஆக்சிஜன் கிடைப்பதை உறுதிசெய்து உடலுறுப்புகள் செயலிழப்பதை இந்த பூஸ்டர் தவிர்க்கும் என்றும் கூறப்படுகிறது. ஆயினும் இந்த பூஸ்டர் செயற்கை இரத்தம் அல்ல, இயற்கை இரத்தத்தின் உயிர்க்குணங்களை இது பெற்றிருக்கவில்லை என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த மருந்து இராயல் லண்டண் மருத்துவமனையில் 50 பேருக்கு கொடுத்து சோதித்துப் பார்க்கப்பட்டுள்ளது. சோதனை வெற்றியடைந்திருப்பதாகவும், இந்த மருந்து கொடுக்கப்பட்ட நோயாளிகள், சாதாரண நோயாளிகளை விட விரைவில் குணமடைந்து வீடு திரும்பியதாகவும் ஆய்வாளர்கள் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளனர்.
எந்த மருந்தும் தயாரிக்கப்பட்டு முதல் சோதனையிலேயே வெற்றியை, குறிப்பிட்ட பலன்களை தருவதில்லை. இன்று வெற்றியடைந்ததாக அறிவிக்கப்படும் சோதனையின் ஆரம்ப கட்டங்களில், இந்த மருந்து கொடுத்ததால் உயிரிழந்தோரின், பாதிக்கப்பட்டோரின் பட்டியலையும் இதே பெருமிதத்துடன் ஆய்வாளர்களும் வெளியிடவில்லை. நாளை மருந்து கம்பெனி இம்மருந்திற்கு காப்புரிமை பெற்று சந்தைப்படுத்தி கொள்ளை லாபமீட்டும் போது சோதனைக்கு உட்படுத்தப்பட்டோருக்கு லாபத்தில் பங்கு கொடுக்கப்போவதுமில்லை.
இது வரை இந்தியா போன்ற மூன்றாம் உலக மற்றும் ஏழை நாடுகளின் மக்கள் தான் மருந்துக் கம்பெனிகளின் சோதனைச்சாலை எலிகளாக பயன்படுத்தப்பட்டு வந்தனர். யார் மீது மருந்துகள் சோதிக்கப்படுகிறதோ அம்மக்களுக்கே அது தெரியாது, சோதனைகள் அந்தந்த நாட்டு அரசுகளின் உடந்தையுடனும், அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் உதவியுடனும் நடப்பதுடன் இரசியமாக காக்கப்பட்டும் வருகின்றன. இலண்டனில் இந்த மருந்தை சோதித்திருப்பதோடு, சோதனை செய்யப்பட்ட நோயாளிகளுக்கோ, உறவினர்களுக்கோ அல்லது மருத்துவம் பார்த்த மருத்துவருக்கோ இம்மருந்து சோதிக்கப்பட்டது தெரியாது என்பதை பெருமையுடன் பகிரங்கமாக அறிவித்து “பாரம்பரியத்தை” அமெரிக்க மருந்து நிறுவனமும், லண்டன் ராயல் மருத்துவமனையும் தகர்த்திருக்கிறார்கள். மருந்து கம்பெனிகளும், அவற்றின் ஆய்வாளர்களும், மூன்றாம் உலக நாடுகளின் மக்களை மட்டுமல்ல, தனது சொந்த நாட்டு மக்களையும் கூட சோதனைச்சாலை எலிகளாகவும், தனக்கு லாபத்தைக் கொடுக்கும் பண்டமாகவும் மட்டுமே பார்க்கின்றனர்.
இந்த சோதனை லண்டனில் தானே நடந்திருக்கிறது, நமக்கு என்ன பிரச்சனை என்று நம்மில் பலரும் நினைக்கலாம். இந்த மருந்து உலக அளவில் பல நாடுகளில் பல்வேறு இனக்கூறுள்ள மனிதர்களுக்கும் கொடுத்து சோதிக்கப்பட இருக்கிறது. நினைத்துப் பாருங்கள் நாளை நம்மில் ஒருவரே விபத்தில் சிக்கி, சுயநினைவின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், இதே மருந்து நம்மீதும் சோதிக்கப்படாது என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை, அதனால் உயிர் இழந்தாலும் கூட யாருக்கும் ஒன்றும் தெரியப்போவதுமில்லை.
படிக்க: