Wednesday, April 16, 2025
முகப்புபார்வைகேள்வி-பதில்கடவுள், ஆன்மா, முக்தி........ கேள்வி பதில்!

கடவுள், ஆன்மா, முக்தி…….. கேள்வி பதில்!

-

கேள்வி: கடவுளை மறுத்தால்…..பரம்பொருள், ஆன்மா, பிறப்பற்ற நிலை, ஆன்மாவை உணர்வது என்று கூறுகிறார்களே…சற்றே விளக்குங்கள்!

– பி.தினேஷ் குமார்.

அன்புள்ள தினேஷ் குமார்,
உங்கள் கேள்விக்கான பதிலை இரண்டு விதத்தில் புரிந்து கொள்ளலாம்.

கடவுள் குறித்த அனைத்து விளக்கங்களும், செய்திகளும், கற்பனைகளும் நம்மால் சிந்தனையில் மட்டுமே அறியப்படுகிறது. சிந்தனை என்பது மூளையின் செயல்பாடு. நமக்கு வெளியே இருக்கும் உலகத்திலிருந்து புலன்கள் மூலம் கடவுள் குறித்த அனைத்தும் மூளையில் பதியப்பட்டு நாம் பேசுகிறோம், சிந்திக்கிறோம் அல்லது உணர்கிறோம். ஆன்மீகவாதிகள் சொல்லும் பரவச நிலை, சமாதி நிலை, முக்தி நிலை இன்ன பிற நிலைகளெல்லாம் கூட மூளையின் அறிதலோடு மட்டுமே கட்டுண்டு கிடக்கின்றன. டாஸ்மாக் குவார்ட்டரினால் கூட இத்தகைய நிலைகளை எளிதில் ‘உண்மை’யாகவே அடைய முடியும். அது மூளையின் மயக்க நிலை, அல்லது போதை நிலை.

ஒரு வேளை இந்த பரவச நிலைகளை அடையும் வண்ணம் நாம் பக்குவப்படவில்லை என்று ஆன்மீகவாதிகள் கூறுவார்களாயின் அதுவும் கூட மூளையின் உதவியோடுதான் அறியப்படுகிறது. கடவுளை ஒன்றியவர் என்று ஒருவர் கூறும் அனுபவம் கூட இவ்விதமே கடவுளை ஒன்றாதவர்களை சென்றடைகிறது. மனித உடலில் உயிரின் இயக்கம் நின்ற பிறகு மூளையின் செயல்பாடும் முடிவுக்கு வந்துவிடுகிறது. அதன் பிறகு டிடிஎஸ் எபெக்டில் கடவுள் வந்தாலும் செத்தவர் அதை உணர முடியாது. எனவே ஆன்மா, பருப்பொருள், கடவுள், என்று என்ன பெயரிட்டு அழைத்தாலும் அது மூளையின் செயல்பாடான சிந்தனையேயன்றி வேறல்ல. அந்த சிந்தனையும் வெளியே இருக்கும் மனித சமூகத்தின் வழியாக கற்றுக் கொள்ளப்படுகிறதே அன்றி சுயம்புவாக தோன்றிவிடுவதில்லை.

ஆகவே நாம் சிந்தித்தால் மட்டுமே ‘கடவுள்’ இருப்பார். சிந்திக்கவில்லை என்றால் கடவுள் இல்லை. அதன்படி நாய், குரங்கு, மாடு, ஆடு இன்னபிற சிந்திக்க இயலாத ஜீவராசிகளுக்கு கடவுள் கிடையாது. அவர்களெல்லாம் எங்களைப் போன்ற ‘நாத்திகர்கள்’. ஆக கடவுளை, ஆன்மாவை, பரம்பொருளை தோற்றுவிப்பவன் மனிதனே அன்றி கடவுள் அல்ல. பிறப்பற்ற நிலை, ஆன்மாவை உணர்வது அனைத்தும் மனித சிந்தனையால் தோற்றுவிக்கப்படும் கனவுலகமே அன்றி உண்மை அல்ல. இந்த கனவுலகின் கற்பனைக்கு கூட யதார்த்த உலகின் அறிவை மூளை கற்றிருப்பது அவசியம்.

அதாவது காட்டில் ஒரு மனிதக் குழந்தையை விட்டு அது தானே வளருகிறது என்றால் அது நாட்டில் இருக்கும் மனிதர்களின் கடவுளை அறியவே முடியாது. அதை அருகில் இருந்து உசுப்பேற்றி சொல்லிக் கொடுப்பதற்கு இன்னொரு மனிதன் வேண்டும். எல்லா மதங்களும் சொல்லும் சொர்க்கத்தின் வசதி, ஆடம்பரம், கேளிக்கைகளைக் கூட இகலோக இன்பங்களிலிருந்தே மனிதன் கற்பித்துக் கொள்கிறான். அல்வாவைச் சாப்பிட்டிருந்தால் மட்டுமே அமுதத்தின் சுவை எப்படி இருக்கும் என்று சிந்திக்க முடியும்.

இயற்கையின் நீட்சியாக நாம் என்றும் இருக்கிறோம். மனித வாழ்வு முடிந்த பிறகு நாம் மனிதன் எனப்படும் சிந்தனை அடங்கிய வாழ்வை மட்டுமே முடித்துக் கொள்கிறோமே அன்றி நமது உடல் சிதைவடைந்து வேறு ஒரு பொருளாக மாறுகிறது. அந்த பொருள் பிறிதொரு காலத்தில் வேறு தன்மை கொண்ட பொருளாக மாறும். ஆகவே இயற்கை அல்லது பருப்பொருள் என்ற அளவில் நாம் என்றும் மரணிப்பதில்லை. ஆனால் இந்த உண்மையை மனிதனாக இருக்கும் போது மட்டும் உணர்கிறோம். மற்ற பொருட்கள் அப்படி உணர முடியாது. அந்த வகையில் இயற்கை தன்னைத்தானே உணரும் உன்னத பொருள் என்று மனித மூளையைச் சொல்லலாம்.

ஒரு மனிதன் சேகரித்த அறிவும், திறமையும், கருத்தும் அவனது மரணத்தோடு அழிந்து விடுவதில்லை. அவனைச் சுற்றி இருக்கும் மற்ற மனிதர்கள் மூலம் அந்த அறிவு வாழையடி வாழையாக கைமாற்றித் தரப்படுகிறது. ஆகவே நாம் இன்று சிந்திக்கும் விசயமும், கண்டுபிடிக்கும் பொருளும் நாளைக்கு, பல நூறு, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னரும் இன்னும் மேம்பட்ட நிலையில் இருக்கும். அந்த வகையில் நமது சிந்தனைக்கும் ‘அழிவில்லை’ இதைத்தாண்டி ஆன்மீகவாதிகள் சொல்லும் பிறப்பற்ற நிலை, முக்தி நிலை என்று எதுவுமில்லை. அவை தன்னைத்தானே சமாதானம் செய்து கொள்ளும் சுய இன்ப கற்பனைகள்.

இரண்டாவதாக கடவுள் குறித்த கருத்தோ, நம்பிக்கையோ, பற்றோ எதுவும் நமது உயிர் வாழ்க்கையின் நிபந்தனையாக என்றுமே இருப்பதில்லை. நீங்கள் வேலை செய்தால் ஊதியம், ஊதியமிருந்தால் சாப்பாடு, தங்குமிடம், வாழ்க்கை. மற்றபடி எவ்வளவுதான் கவனத்தோடு தியானமோ, நம்பிக்கையோ கொண்டிருந்தாலும் நமது வாழ்க்கைப் பிரச்சினைகள் தீர்ந்து விடாது. மாறாக அந்த பிரச்சினைகளுக்கான ஒரு கற்பனையான இடைக்கால நிம்மதியை வேண்டுமானால் கடவுள் நம்பிக்கை தரலாம். அதனால்தால் இந்த உலகம் மனிதர்களை வைத்து மட்டுமே இயங்குகிறது, கடவுளை வைத்து அல்ல. அதனால்தான் வீட்டு சாக்கடை அடைத்தால் கூட நகர சுத்தி தொழிலாளிகளைத்தான் அழைக்கிறோமே அன்றி கடவுளை அல்ல. அந்த வகையில் இந்த உலகை இயக்க வைக்கும் உழைக்கும் மக்கள்தான் கடவுள். கருவறையில் உட்கார்ந்து அக்கார அடிசலைக் கூட சாப்பிடத் துப்பில்லாமல் தேமே என்றிருக்கும் கடவுள் வெறும் கற்சிலைதான்.

இறுதியாக நீங்கள் வாழ்க்கைப் பிரச்சினைகளை போராடி தீர்த்துக் கொள்ள வேண்டும் என்ற போராட்ட குணம் வேண்டுமென்றால் இல்லாத கடவுள் குறித்த நம்பிக்கையை அகற்ற வேண்டும். அந்த வகையில் கடவுள் இல்லை என்பது இளமைத்துடிப்புள்ள பண்பாகும். கடவுள் உண்டு என்றால் அது வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கு போராட வேண்டாம் என்று சொல்கிற கிழட்டுத் தத்துவமாகி விடுகிறது.

ஆகவே நீங்கள் இளமைத் துடிப்புடன் எப்போதும் வாழ விரும்புகிறீர்கள் என்றால் கடவுளை புரிந்து கொள்ளுங்கள்…அதாவது இல்லை என்பதை!