Saturday, April 19, 2025
முகப்புகலைகவிதைஅழிபடல் சரியோ அண்ணாச்சி கடைகள்?

அழிபடல் சரியோ அண்ணாச்சி கடைகள்?

-

வாங்கும் பொருளை உற்றுப் பார்ப்பவர்கள்
இதை வழங்குவோர் வாழ்க்கையை
நெருங்கிப் பார்த்ததுண்டா?

கடை சாத்தப் போகும் கடைசி நேரம் …
அரைக் கிலோ அரிசிக்கு
எடை போட வேண்டும்.
சிதறிய பொருளில் பசியாறி
சிற்றெறும்பும் நேரத்தே உறங்கும்.

ஒவ்வொரு நாளும் பதினோரு மணிக்கு …
ஏங்கிய குடலில் ராச்சோறு திணித்து
மறுநாள் ’லைன்’ வியாபாரிக்குத்
தர வேண்டிய காசைப் பாகம் பிரித்து,
விடிகாலை மார்க்கெட் சாமானுக்கு
வேண்டியதை எடுத்து,
குடும்பச் செலவுக்கு கேட்பதைக் குறைக்கையில்,
மனைவியின் பார்வையும்
மணி பன்னிரெண்டு முள்ளும்
கண்களைக் குத்தும்.
கண்களை மூடினால்
தசை கடுகடுத்துக் கொத்தும்.

அதிகாலை நான்கு மணிக்கெழுந்து
முகம் கழுவி, கொப்பளிக்க
புல் இமை மூடி நிலம் கூட அசந்து தூங்கும்.
எழுந்து கொள்ளும் தாயுடல் வேகத்தில்
இமை திறவாமல் பிள்ளை அசைந்து துவளும்.

இரு சக்கர வாகனத்தை எடுத்து உதைக்கையில் …
நடக்க வழியின்றி நாளும் கடைக்குள்

சிறைப்பட்ட கால்களில் சீரான ஓட்டமின்றி
இரத்த நாளம் வெடுக்கென வலிக்கும்.

வண்டியின் சுமைகள் கூடக் கூட
தனக்கென உடல் ஒன்றிருப்பதை
உணர்த்தும் நரம்பின் வலிகள்.
இத்தனையோடும் …
உங்கள் தேவைகளைத் தருவிக்கும்
சிறு கடை வாழ்க்கை!

பால்குடிப் பிள்ளைக்கு
மனைவி கேட்ட மருந்துகள் மறப்பினும்
கடையில் கேட்ட குரல்கள் துரத்தும்…
பால் பாக்கெட், தண்ணீர்—— கேன்
குழம்பு, வறுவல், பொறியலுக்கேற்ற பலவகைக் காய்,
புலம்பும் எதிர் வீட்டுக்காரர் உடலுக்கேற்ற
பாகற்காய், சுண்டக்காய்,
அவசரமாய் நீளும் கைகளின் தேவைக்கு
கறிவேப்பிலை, கொத்தமல்லி, கோழி முட்டை – என
உங்கள் தேவையின் தெரிவு
கடையினில் தெரியும்.
காலையிலிருந்து காய்ந்த
கடைக்காரரின் வயிறோ
ஒரு தேநீர் கேட்டு இரைப்பை எரியும்!

சில்லறைக் காசுக்கு சீரகம், புளி வரை
’கிரடிட்’ அட்டை தேவையில்லை …
சிறு சிகரெட் அட்டையில்
உங்கள் கடன் மொழி அடங்கும்.
வாந்தி, மயக்கம் அவசரத் தேவைக்கு
அடைத்த கடையைத் திறந்து உடனே
சோடா, ஜிஞ்சர் பீர் …
முகம் வாடாமல் அண்ணாச்சி உழைப்பில்
மனித உறவு தொடங்கும்.

பசி, நீர் ஒடுக்கி
சிறு நீர் அடக்கி, கிட்னி கெட்டு
நல்லது கெட்டது, நாள் கிழமை பார்க்காமல்
தெருவை நம்பியே கதியெனக் கிடக்கும்
அண்ணாச்சி வாழ்க்கையைக்
காவு வாங்க வருகிறது ’வால் மார்ட்’

தெரிந்தவர் வாழ்க்கை அழிபடும் தருணம்
தெரிந்தே நழுவுதல் தேசத் துரோகம்.
ஆபத்து ! அண்ணாச்சிகளுக்கு மட்டுமல்ல.
சில்லறை உணர்ச்சிகளின்
அந்நியப் பாக்கெட்டுகளில்
அடைக்கப்படப் போவது நீங்களும் தான்!
இதயத்தை விற்கச் சம்மதிக்காதவர்கள்
போராடுகிறார்கள்… நீங்கள்?

– துரை. சண்முகம்.

_______________________________________________

– புதிய கலாச்சாரம், அக்டோபர் – 2012
_____________________________________________________