
திவலாகிப் போன முதலாளித்துவத்தின் மக்கள் விரோத பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராக கிரீஸ் மக்கள் நடத்தி வரும் போராட்டங்கள் நவம்பர் 7-ம் தேதி மேலும் தீவிரமடைந்தன.
மருத்துவர்கள், செவிலியர்கள், பத்திரிகையாளர்கள், டாக்ஸி, மெட்ரோ ரயில் ஓட்டுனர்கள் என்று அனைத்து தரப்பினரும் பங்கு பெரும் 24 மணி நேர வேலை நிறுத்தம் திங்கள் கிழமை ஆரம்பித்திருக்கிறது.
தொழிலாளர் யூனியன்கள் செவ்வாய்க் கிழமை ஆரம்பித்து, புதன் கிழமை அன்று நாடு முழுவதுக்குமான பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. மக்கள் நலத் திட்டங்களை ஒழிப்பதற்கான மசோதாவின் மீதான புதிய வாக்கெடுப்பு கிரீஸ் நாடாளுமன்றத்தில் நடக்கவிருக்கும் வார இறுதி வரை வேலை நிறுத்தங்கள் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதன் கிழமை அன்று ஏதென்ஸின் மத்தியப் பகுதியில் மாபெரும் பேரணி ஒன்றை நடத்த தொழிற்சங்க அமைப்புகள் திட்டமிட்டுள்ளன. நாட்டின் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டுத் துறை ஊழியர்களும் வேலை நிறுத்தம் செய்வதால் கிரீஸ் நாட்டின் வான் வழியில் பறக்கும் அனைத்து வணிக விமான போக்குவரத்தும் 3 மணி நேரம் முடக்கப்படும். நீர் வழிப் போக்குவரத்து சேவைகளும் கடுமையாக பாதிக்கப்படும்.
திங்கள் கிழமை முதல் ஆரம்பித்துள்ள மருத்துவர்களின் 3 நாட்கள் வேலை நிறுத்தத்தின் போது மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை பிரிவுகள் மட்டும் இயங்கும். செவ்வாய்க் கிழமை தொலைக்காட்சி, வானொலி செய்திச் சேவைகள் நிறுத்தப்படும். செய்திப் பத்திரிகைகள் வெளியாகாது. பள்ளிகளும் அரசு அலுவலகங்களும் மூடப்பட்டிருக்கும்.
கிரீஸ் பொருளாதாரம் கடந்த ஐந்து ஆண்டுகளாக சுருங்கி வருகிறது. இந்த ஆண்டு 6.5 சதவீதமும் 2013ல் 3.8 சதவீதமும் சுருங்கும் என்று அரசின் நிதி நிலை அறிக்கை மதிப்பிடுகிறது. 55 சதவீதம் இளைஞர்கள் வேலை இல்லா திண்டாட்டத்தில் சிக்கியுள்ளனர்.
கிரீஸூக்கு கடன் கொடுக்கும் பன்னாட்டு அமைப்புகள் முன் வைக்கும் சிக்கன நடவடிக்கைகள் அனைத்தையும் பிரதமர் அன்டோனிஸ் சமராஸ் தலைமையிலான அரசு சிரமேற்கொண்டு நிறைவேற்றுகிறது. நிதி நிறுவனங்களின் அராஜக நடவடிக்கைகளால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சரி செய்வதற்கு மக்கள் மீது சிக்கனங்கள் சுமத்தப்படுகின்றன. அவ்வாறாக, பன்னாட்டு நிதி நிறுவனங்களால் அடுத்தடுத்து சுமத்தப்பட்ட பொருளாதார நடவடிக்கைகளால் மக்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இந்த வாரம் நாடாளுமன்றத்தில் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டுள்ள புதிய சிக்கன பொருளாதார நடவடிக்கைகள் மூலம் 13.5 பில்லியன் யூரோ மிச்சப் படுத்தப் போவதாக கிரீஸ் அரசு சொல்கிறது.
இந்த நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் பெற 300 உறுப்பினர்கள் கொண்ட கிரேக்க நாடாளுமன்றத்தில் 151 ஓட்டுகள் தேவைப்படுகிறது. மக்கள் போராட்டங்களின் விளைவாக இதற்கிடையில் சிக்கன நடவடிக்கைகளுக்கு ஆதரவான நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே போகிறது. இப்போதைய நிலைமையில் ஆளும் கூட்டணிக்கு 6 உறுப்பினர்கள் பெரும்பான்மை மட்டுமே உள்ளது.
‘இந்தச் செலவுக் குறைப்புகளை நிறைவேற்றா விட்டால், நாடு திவாலாகி விடும்’ என்றும் ‘வேறு எந்த வழியும் இல்லை’ என்றும் நிதி அமைச்சர் யானிஸ் ஸ்டௌர்னராஸ் மிரட்டியிருக்கிறார்.
ஆனால், பன்னாட்டு பண முதலைகளுக்கே ஆதாயம் அளிக்கும் இந்த பொருளாதார அமைப்பிலிருந்து தமது நாட்டை மீட்டு அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான போராட்டத்தில் மக்கள் இறங்கியிருக்கின்றனர்.
படிக்க: