Wednesday, April 16, 2025
முகப்புசமூகம்சாதி – மதம்பண்டிகை விடுமுறைகள் எந்த மதத்திற்கு அதிகம்?

பண்டிகை விடுமுறைகள் எந்த மதத்திற்கு அதிகம்?

-

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் – 23

இந்நாட்டில் ஏசு கிறிஸ்து, முகமது நபி பிறந்த தினங்கள் தேசிய விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், பாரதத்தின் தேசிய புருஷர்களான ஸ்ரீராமர் (ராம நவமி), ஸ்ரீகிருஷ்ணர் (கோகுலாஷ்டமி) பிறந்த தினங்களுக்கு விடுமுறை அளிக்க அரசு மறுக்கிறது.

இந்து முன்னணியின் இந்துக்களுக்கான கோரிக்கைகளில் ஒன்று.

காவிஷ்ணுவின் பத்து அவதாரங்களில் இரண்டிற்கு மட்டும் விடுமுறை கோருகிறார்கள். கல்கி அவதாரம் எப்போது பிறக்கும் என்பது தெரியாததால், ஏனைய ஏழு அவதாரங்கள், அப்புறம் சிவன்,  பிரம்மா அவர்கள் மனைவிமார்கள் – வைப்பாட்டிகள், நேரடிக் குழந்தைகள் – கள்ளக் குழந்தைகள், அவர்களின் பேரன் – பேத்திகள், மொத்தத்தில் முப்பது முக்கோடி தேவர்களையும் தேசிய புருஷர்களெனக் கருதினால், விடுமுறை அளிக்க 365 நாட்கள் போதாது. போதும் என்று வைத்துக்கொண்டால் வருடம் முழுவதும் கொழுக்கட்டை, அப்பம், பணியாரம், வடை, முறுக்கு, சுண்டல், அவல், பொரி, கடலை, பூசை – புனஸ்காரங்கள் என்று குஷாலாகக் காலம் தள்ளலாம். தற்சமயம் அவாளின் ஆட்சி நடைபெறுவதால் உடனே இதை அமலுக்குக் கொண்டு வர என்ன தடை?

மைய அரசின் விடுமுறைகளில் முசுலீம்களுக்கு ரம்சான், பக்ரித், மொகரம், மிலாது நபி நான்கும், கிறிஸ்தவர்களுக்க கிறிஸ்துமஸ், புனிதவெள்ளி என இரண்டும் மட்டும்தான் ஒதுக்கப்பட்டிருக்கிறது. எஞ்சிய விடுமுறைகளில் பெரும்பங்கு இந்து மதப் பண்டிகைகளுக்குத்தான் அளிக்கப்பட்டிருக்கிறது. மகர சங்கராந்தி, சித்திரை – யுகாதி வருடப் பிறப்பு, விநாயகர் சதுர்த்தி, சரஸ்வதி – ஆயுத பூசை, விஜய தசமி, தீபாவளி,  கார்த்திகை போன்றவை மைய அளவிலும், இராமநவமி, கிருஷ்ண ஜெயந்தி, ஓணம், ஹோலி, ரக்ஷாபந்தன், பொங்கல், சூரசம்ஹாரம், ஆடிவெள்ளி, புரட்டாசி சனி, பங்குனி உத்திரம், கும்பமேளா, குடமுழுக்கு, மகாமகம், தேரோட்டங்கள் போன்றவை மாநில, உள்ளூர் அளவிலும் விடுமுறை நாட்களாக இருக்கின்றன.

எனவே எல்லா மாநிலங்களிலும் உள்ள இந்துப் பண்டிகை விடுமுறை தினங்கள் இருபதுக்கும் மேல் வருகிறது. இராமநவமி, கிருஷ்ண ஜெயந்தி இரண்டும் ‘விருப்பப்பூர்வ விடுமுறை தினங்கள்’ என்ற பட்டியலில்  மறைமுகமாக மைய விடுமுறை தினங்களாக உள்ளன. பார்ப்பன மேல்சாதியினர்தான் இந்தப் பண்டிகை விடுமுறைகளைக் கொண்டாடுகின்றனர். இத்தகைய இந்துப் பண்டிகைகளில் தீபாவளி, பொங்கலைத் தவிர வேறு எதையும் பெரும்பான்மை இந்துக்கள் (சூத்திரர்கள், பஞ்சமர்கள்) கொண்டாடுவதில்ல. அவர்கள் கொண்டாடுகின்ற சுடலைமாடன், மதுரை வீரன், முனியாண்டி, இசக்கியம்மன் விழாக்களுக்கு விடுமுறை இல்லை. காரணம் அவை பார்ப்பன எதிர்ப்பு வரலாறுகள்.

புராணக் கடவுளர்களான இராமனையும், கிருஷ்ணனையும் ‘தேசிய புருஷர்கள்’ என்று பொருள் மாற்றி நாட்டு மக்களது தலைவர்களாகச் சித்தரிப்பது இந்து மதவெறியாளர்களின் சதியாகும். இருவரும் கோவில்களில் கும்பிடப்படும் கற்பனை உருவக் கடவுள்கள்தான். மேலும் இவ்விருவரையும் புராணப் புரட்டுக்களின் படி ‘உண்மையான’ அரசர்கள் என வைத்துக் கொண்டாலும் அவர்கள் சாதாரண அரசர்களேயன்றி முன்னுதாரணமான பண்புகளைக் கொண்ட தேசிய நாயகர்களல்லர்.

இதுபோக பார்ப்பனப் பண்டிகைகளின் ‘வரலாற்றுக் கதை’களைப் பாருங்கள். அனைத்தும் தேசிய, இன, பழங்குடி, மொழி, சாதி, பெண்கள் மீதான அடக்குமுறையைத்தான் கொண்டிருக்கின்றது. திராவிட ‘அசுரர்களை’க் கொன்றதைக் கொண்டாடத் தீபாவளியும், விஜயதசமி பழங்குடி மக்களை கொன்றதற்காகவும், ரக்ஷாபந்தன் பெண்கள் சாகும் வரை அடிமையாக இருப்பதற்கும் கொண்டாடப்படுகிறது. எனவே இந்தியாவின் பெரும்பான்மை மக்கள் பார்ப்பனியத்தின் ஆகப் பெரும்பான்மையான பண்டிகைகளை (பொங்கல் போன்றவை தவிர) கொண்டாடவே கூடாது என்கிறோம். மாறாக பார்ப்பன இந்துமத எதிர்ப்பு முன்னோடிகளான புத்தர், சித்தர், நந்தன், ஏகலைவன் இன்னபிற தலைவர்களைக் கொண்டாடலாம்.

அதேபோன்று காலனிய, நிலப்பிரபுத்துவ எதிர்ப்புப் போராட்டச் சம்பவங்களான 1857 சுதந்திரப் போர், ஜாலியன் வாலாபாக், 1905 வங்கப் பிரிவினை, 1942 மக்கள் போராட்டம், தெலுங்கானா – கீழ்த்தஞ்சை விவசாயப் போராட்டங்கள் போன்றவற்றையும், பகத்சிங் போன்ற புரட்சியாளர்களின் நாட்களையும் கொண்டாட வேண்டும். அதேபோன்று தாழ்த்தப்பட்ட, முசுலீம் மக்கள் மீதான படுகொலைகள் நினைவு கூறப்பட வேண்டும்.

மனிதகுல வரலாற்றில் அந்தந்தக் கால பிற்போக்கு விஷயங்களைத் தளராத ஆற்றலுடன் போராடி வென்ற மக்களின் போராட்டங்களையும், தலைவர்களையும் மனிதகுலப் பண்பாட்டின் மைல் கற்களாக நினைவு கூறுவதுதான் சரி. அவ்வகையில் பார்ப்பனப் புராணப் புரட்டு, அடிமைத்தனப் பண்டிகைகளையும் மொத்தத்தில் எல்லா மதப் பண்டிகைகளையும்  – அவற்றுக்கான விடுமுறைகளையும் இரத்து செய்வதே சரி.

– தொடரும்

__________இதுவரை____________