Saturday, April 19, 2025
முகப்புஉலகம்அமெரிக்காபாலஸ்தீனில் தொடரும் இஸ்ரேலிய பயங்கரவாதம்!

பாலஸ்தீனில் தொடரும் இஸ்ரேலிய பயங்கரவாதம்!

-

காசா

பயங்கரவாத நாடான இஸ்ரேல், பாலஸ்தீனியர்களின் சுயாட்சி பகுதியான காஸாவின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி ஹமாஸ் இராணுவத் தலைவரான அகமத் அல் ஜபாரியை கொலை செய்திருக்கிறது.

‘அடுத்தக் கட்ட தாக்குதல்களுக்காக தரைப்படைகள் தயார் நிலையில் இருப்பதாகவும் ஏவுகணை தாக்குதல் விரிவான தாக்குதல்களுக்கான முன் தயாரிப்புதான்’ என்றும் இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் தெரிவிக்கின்றன. இஸ்ரேலிய கடற்படையின் போர்க்கப்பல்கள் காஸா பகுதி மீது குண்டு வீச்சு நடத்தியிருக்கின்றன.

இந்தத் தாக்குதல்களில் 2 குழந்தைகள் உட்பட 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

வரும் ஜனவரி மாதம் நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வெற்றி வாய்ப்புகளை அதிகரிப்பதற்காக இந்தத் தாக்குதல்களை நடத்தியிருப்பதாக இஸ்ரேலின் முன்னணி நாளிதழ் ஹாரெட்ஸ் கூறுகிறது. ‘தேர்தலுக்கு முன்பு தன்னை உறுதியானவராகக் காட்டிக் கொள்ள நெதன்யாகு தாக்குதல்களுக்கு உத்தரவிடுவார்’ என்று அந்த நாளிதழ் திங்கள் கிழமை கணித்திருந்தது.

அமைதி பேச்சு வார்த்தைகளை வேண்டுமென்றே இழுத்தடிக்கும் இஸ்ரேலின் போக்கினால் வெறுப்படைந்த பாலஸ்தீனிய ஆணையம், நவம்பர் 29-ம் தேதி ஐநாவில் பார்வையாளர் அந்தஸ்துக்கு விண்ணப்பிக்க திட்டமிட்டிருக்கிறது. 1967 போரில் இஸ்ரேல் ஆக்கிரமித்த மேற்குக்கரை, காஸா, கிழக்கு ஜெருசலேம் பகுதிகளில் பாலஸ்தீன நாட்டை அங்கீகரிப்பதற்கான முதல் நடவடிக்கையாக அது இருக்கும். அதைத் தடுப்பதற்காக இஸ்ரேல் இந்த தாக்குதல்களை நடத்தியிருக்கிறது.

‘அமைதி’க்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு தனது ஆதரவை தெரிவித்திருக்கிறார். பிரதமர் நெதன்யாகுவிடம் நேரடியாக தொலைபேசியில் பேசி ‘இஸ்ரேலிய அரசின் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா ஆதரவளிக்கும்’ என்று உறுதியளித்திருக்கிறார்.

இஸ்ரேலின் பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்து எகிப்து இஸ்ரேலுக்கான தனது தூதரை திரும்ப அழைத்திருக்கிறது. ‘இந்த பயங்கரவாத தாக்குதலை ஐநா சபையில் விவாதிக்க வேண்டும்’ என்று கோரியிருக்கிறது. எகிப்து நாட்டில் இஸ்ரேலுடன் நட்பாக இருந்த அமெரிக்காவுக்கு வால் பிடிக்கும் ஹோஸ்னி முபாரக் அரசு சென்ற ஆண்டு பிப்ரவரியில் வீழ்த்தப்பட்டது. இப்போது ஹமாஸ் அமைப்புடன் நெருக்கம் உள்ள இஸ்லாமிய அமைப்புகள் ஆட்சியில் உள்ளன.

ஈரானிய வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் இந்த தாக்குதல்களை கண்டித்திருக்கிறார்.

பாலஸ்தீனர்களின் நிலத்தை ஆக்கிரமித்து தனது நாட்டை உருவாக்கிக் கொண்ட இஸ்ரேல், மண்ணின் மைந்தர்களான பாலஸ்தீனியர்களின் உரிமைகளை மறுப்பதோடு, அவர்களின் போராட்டங்களை கொடூரமாக ஒடுக்கி வருகிறது. லட்சக்கணக்கான பாலஸ்தீன மக்களை சொந்த நாட்டிலேயே கைதிகளாக சிறை வைத்து பொருளாதார ரீதியாகவும் இராணுவ ரீதியாகவும் கொடுமைப் படுத்தி வருகிறது.

பேச்சு வார்த்தை மூலம் சமாதானத்துக்கு முயற்சித்தவர்களையும் இசுரேலின் பயங்கரவாதத்திற்கு எதிர்வினையாக தோன்றிய தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்களையும் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனிய மக்களையும் கொலை செய்து வருகிறது இஸ்ரேல். 2008-ம் ஆண்டு இறுதியில் பாலஸ்தீன பகுதிகள் மீது நடத்திய ஏவுகணை தாக்குதல்களில் மூலம் 1,400 பாலஸ்தீனியர்களை கொன்று குவித்தது.பயங்கரவாத நாடான இஸ்ரேல், உலக தாதாவான அமெரிக்காவின் நிழலில் நின்று கொண்டு இப்போது இன்னும் ஒரு பயங்கரவாதத் தாக்குதலைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது.

படிக்க: