தனியார்மய-தாராளமய எதிர்ப்பு: தீர்வுக்கான திசை எது ?

ஆளும் வர்க்கத்தால் உருவாக்கப்பட்ட ‘தூய்மையாளர்’ எனும் ஒளிவட்டத்தின் பின்புலத்தில் மஞ்சக் குளித்துக் கொண்டிருந்த மன்மோகன் சிங், நிலக்கரி ஊழல் என்று அழைக்கப்படும் பகற்கொள்ளையில், ஆதாரங்களுடன் சிக்கி கடந்த இரு மாதங்களாகத் திணறிக் கொண்டிருந்தார். நிலக்கரிக் கொள்ளை, டெல்லி விமான நிலையக் கொள்ளை, டாடா-அம்பானி மின்நிலையங்கள் அடித்த கொள்ளைகள், மகாராட்டிரத்தில் நீர்ப்பாசனக் கொள்ளை, அதற்குமுன் காமன்வெல்த், ஆதர்ஷ், லவாசா கொள்ளைகள் என்று கார்ப்பரேட் கொள்ளைக்கு துணை நின்ற காங்கிரசின் கூட்டுக் களவாணித்தனம் அன்றாடம் அம்பலமாகிக் கொண்டிருந்தது. மன்மோகன் சிங்கின் பரிசுத்தவான் வேடம் கிழிந்து கந்தலாகிக் கொண்டிருந்தது.
இன்னொருபுறம் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டுக்கு அனுமதி, ஓய்வூதியம், காப்பீடு போன்ற துறைகளைத் திறந்து விடுதல் என்பன போன்ற தாராளமய நடவடிக்கைகளை துணிச்சலாக அமல்படுத்தாமல், தடுமாறும் மன்மோகனின் பலவீனத்தை அமெரிக்காவின் டைம் வார இதழ் விமரிசித்திருந்தது. இந்தியாவின் தர மதிப்பீட்டைக் குறைத்து, தாராளமய நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு ஸ்டாண்டர்டு அண்டு புவர் நிறுவனம் மிரட்டியது. ரூபாயின் மதிப்பு வீழ்ந்து கொண்டிருந்தது. கடைசியாக ஒபாமாவின் எச்சரிக்கையும் வந்து விட்டது.
இந்த இக்கட்டை ஒரு தேர்ந்த கிரிமினலுக்கே உரிய சாதுரியத்துடன், சங்கிலியைத் திருட்டுக் கொடுத்த பெண் சத்தம் போடாமலிருக்க சங்கை அறுக்கும் திருடனைப் போல சமாளித்திருக்கிறது மன்மோகன் அரசு. டீசல் விலை உயர்வு, எரிவாயு சிலிண்டர் குறைப்பு, சில்லறை வணிகத்தில் அந்நிய மூலதனம், ஆயுள் காப்பீடு, ஓய்வூதிய நிதியில் சூதாட அனுமதி, பொதுத்துறை நிறுவனப் பங்குகளை தனியாருக்கு விற்பது என ஒரே நேரத்தில் மக்கள் மீது வீசப்பட்ட கொத்து குண்டுகள் தோற்றுவித்த அதிர்ச்சி, ஊழல் விவகாரங்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டது.
‘வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது அந்நிய மூலதனமாக இருக்கட்டும்‘(“If we have to go down, we will go down fighting: PM on FDI”, Money control.com,14 sep, 2012)என்று பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவின் கூட்டத்தில் ‘வீர வசனம்‘ பேசியிருக்கிறார் மன்மோகன். இதே வீரத்தை இதற்கு முன்பும் ஒருமுறை காட்டியிருக்கிறார். வலது-இடது கம்யூனிஸ்டுகள் ஆதரவை திரும்ப பெறுகிறார்களா, கவலையில்லை. இந்திய – அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றியே தீருவோம்” என்று 2008 – இல் மன்மோகன் முழங்கினார்.
பலவீனமான பிரதமர் என்று பாரதிய ஜனதாவால் அவ்வப்போது கேலி செயப்பட்டவரும், விபத்தில் பிரதமரானவர் (Accidental Prime Minister) என்று தன்னைத்தானே கூறிக்கொண்டவருமான மன்மோகன் சிங், எட்டுத் திக்கிலிருந்தும் ஊழல் குற்றச்சாட்டுகளால் தாக்கப்படும் இன்றைய ஒரு சூழ்நிலையில் வெல்லப்படமுடியாத பலசாலியாகி விட்டார்.
பாரதிய ஜனதா உள்ளிட்ட எல்லாக் கட்சிகளும் ஊழல் குற்றச்சாட்டுகளிலும் உட்கட்சி மோதல்களிலும் சிக்கியிருப்பதுதான், மன்மோகன் அரசின் பலம் என்று ஊடகங்கள் கூறுகின்றன. இது ஒரு எளிமைப்படுத்தப்பட்ட மேம்போக்கான கருத்து. மன்மோகன் அரசும், அதன் எதிரிகளாகத் தம்மைச் சித்தரிக்கும் கட்சிகளும் ஒரே கொள்கையில் ‘சிக்கி‘யிருப்பதுதான், தனிப்பெரும்பான்மை இல்லாத சூழலிலும், காங்கிரசு அரசை இத்தனை வலிமையானதாக ஆக்கியிருக்கிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதாயின், மன்மோகன் சிங் அரசு அமல்படுத்தும் புதிய தாராளவாதக் கொள்கைகளுக்கு மாற்றுக் கொள்கையை எதிர்க்கட்சிகளால் முன்வைக்க முடியாத காரணத்தினால்தான், மன்மோகன் சிங் பலசாலி ஆகிவிட்டார்.
வெறித்தனமான இந்தப் புதிய தாராளவாத தாக்குதலுக்கு எதிராக உடனே போராட்டம் துவங்கும் என்பது அரசுக்குத் தெரியும். அது உடனே முடிந்துவிடும் என்பதும் தெரியும். டீசல், எரிவாயு உள்ளிட்ட அனைத்து மானிய வெட்டுகளையும் ஒரேயடியாக அறிவித்து விட்டால், ஒரே பந்த் உடன் முடிந்து விடும் என்பது அரசின் எதிர்பார்ப்பு. அனைத்தும் அவ்வண்ணமே நடந்து முடிந்தன.
அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் தி.மு.க. கடையடைப்பில் பங்கேற்றது. வால் மார்ட் நுழைவை எதிர்ப்பதாக கூறும் புரட்சித் தலைவியோ, கடையடைப்பை முறியடிக்க போலீசை ஏவினார். தற்போது அந்நிய முதலீட்டுக்கு எதிராக நெருப்பைக் கக்கும் மமதாவின் 2009-ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையோ, சில்லறை வணிகத்தில் அந்நிய மூலதனத்தை வரவேற்பதாக கூறுகிறது. கேட்டதற்கு, அது ‘அச்சுப்பிழை‘ என்று பதிலளித்து விட்டார் மமதா.

இந்தப் பதிலை ஒரு கவிதை என்றுதான் சோல்லவேண்டும். ஆட்சியிலிருக்கும்போது தனியார்மய-தாராளமயக் கொள்கைகளை அமல்படுத்துவதும், தோல்வியைத் தழுவி எதிர்க்கட்சியான பின்னர் அதனை எதிர்ப்பது போலப் பம்மாத்து செய்வதும் கடந்த 20 ஆண்டுகளாக இந்திய ஓட்டுக் கட்சிகள் நடத்தி வரும் நாடகம். மக்களின் வாக்குகள் மூலம் பெறப்பட்ட இறையாண்மைமிக்க அதிகாரத்தை, பன்னாட்டு நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்குப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் இந்த அரசமைப்பை, ‘ஜனநாயகம்‘ என்று குறிப்பிடப்படுவதும் ஒரு வகை அச்சுப்பிழைதானே!
பாரதிய ஜனதா முதல் போலி கம்யூனிஸ்டுகள் வரையிலான எல்லா கட்சிகளுமே, தமது தேர்தல் அரசியல் ஆதாயத்துக்காகவும், தத்தம் வாக்கு வங்கிகளை திருப்திப்படுத்துவதற்காகவும் தனியார்மய-தாராளமய எதிர்ப்பு பேசி வருகிறார்கள். சிறு வணிகர்களைத் தம் சமூக அடித்தளமாகக் கொண்டிருக்கும் பாரதிய ஜனதா, வால்மார்ட்டை எதிர்ப்பதாகச் சவடால் அடிக்கிறது. பொதுத்துறை தொழிற்சங்க சந்தாக்களால் உயிர் தரித்திருக்கும் வலது, இடது போலிகள், ‘பொதுத்துறை தனியார் மயத்தை முறியடிப்போம்‘ என்று தொண்டை நரம்பு புடைக்க பொளந்து கட்டுகிறார்கள்.
தனியார்மய-தாராளமய நடவடிக்கைகளின் விளைவாகப் பாதிக்கப்பட்ட மக்கள் யாரேனும் போராடினால், உடனே அங்கெல்லாம் ஓட்டுக் கட்சிகள் பிரசன்னமாகி விடுகிறார்கள். தமது கைத்தடிகள் புடைசூழ புயலைப் போல வந்திறங்கி, ‘தனியார் மயம் தாராளமயம் உலகமயம், அந்நிய ஆதிக்கம், அமெரிக்க ஆதிக்கம், மத்திய அரசு, மாநில அரசு உள்ளிட்ட அனைத்தையும் எதிர்ப்பதாக’ப் புழுதி கிளப்பி விட்டு, அடுத்த மேடையைத் தேடிப் புறப்படுகிறார்கள்.
கொட்டகை போட்டு கூட்டம் கூடியிருந்தால், அந்த மேடையில் ஏறி ஆதரவு தெரிவிக்க வரவேண்டும் என்பது, எழவு வீட்டிற்கு கேதம் கேட்கச் செல்வது போன்ற ஒரு சம்பிரதாயமாகவே ஆகிவிட்டது. தலைவர் ஆதரிக்கும் பிரச்சினை பற்றி சம்பந்தப்பட்ட கட்சியின் தொண்டனுக்கு எதுவும் தெரிந்திருக்காது என்பது மட்டுமல்ல; இத் தலைவர்களின் வீர உரைகள் எதுவும், அவர்களது அடுத்த தேர்தல் கூட்டணிகளையும் தீர்மானிக்காது என்பதுதான் முக்கியம்.
டீசல் விலை ஏற்றத்தையோ எரிவாயு சிலிண்டர் குறைப்பையோ நாளைக்கு ஆட்சிக்கு வர இருக்கும் எந்தக் கட்சியும் திரும்பப் பெறப்போவதில்லை. இருந்தாலும் இந்த விலையேற்றம் தோற்றுவித்திருக்கும் கோபத்தை, தங்களிடமிருந்து எந்தக் கட்சி திறமையாக ஜேப்படி செயவிருக்கிறது என்பதை, மக்களே மிகுந்த ஆர்வத்துடன் கவனிக்கும் வகையில் ‘அரசியல்‘ நடத்தப்படுகிறது. தேர்தல் அரசியல் என்பது ஒரு விளையாட்டு போலவும், அந்த விளையாட்டில் கூட்டணி அமைப்பதும், மக்களின் வாக்குகளை ஏமாற்றிப் பெறுவதும் ஒரு சாமர்த்தியம் போலவும் கருதி அங்கீகரிப்பதற்கும், சிலாகிப்பதற்கும் மக்கள் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.
தனியார்மயம்-தாராளமயம் என்பது எல்லா ஓட்டுக்கட்சிகளும் ஆதரிக்கும் கொள்கை மட்டுமல்ல; அது அவர்களுடைய சொந்த தொழிலின் அடித்தளம். பவார், கட்கரி, மாறன், வதேரா முதல் தளி ராமச்சந்திரன் வரையிலான சர்வகட்சி மேல்மட்டத்திற்கும், காண்டிராக்டு, ஏஜென்சி, ரியல் எஸ்டேட் தொழில்களில் வளையவரும் கீழ்மட்டத்திற்கும் அதுதான் அமுதசுரபி. பி.ஆர்.பி. வெட்டி விற்ற ஒவ்வொரு சதுரமீட்டர் கிரானைட்டிலும், அம்பானிக்குத் தரப்பட்ட ஒவ்வொரு சதுர கி.மீ. நிலக்கரி வயலிலும், ஏட்டு முதல் ஐ.ஜி. வரை, தலையாரி முதல் கலெக்டர் வரை, முன்சீப் முதல் உயர்நீதிமன்ற நீதிபதி வரை, வட்டச்செயலர் முதல் அமைச்சர் வரை ஆயிரக்கணக்கான திருடர்களின் பெயர்கள் கண்ணுக்குத் தெரியாத வண்ணம் பொறிக்கப்பட்டிருக்கின்றன. இவர்கள்தான் இந்தக் கொள்கைகளைத் தாங்கி நிற்கும் அமைப்பு. இவர்களை வைத்தே இக்கொள்கையை முறியடித்து விட முடியும் என்று பேசுபவர்கள் கிறுக்கர்கள் அல்லது கேட்பவனைக் கிறுக்கனாக்குபவர்கள்.
தனியார்மயம் – தாராளமயம் என்பது உலக முதலாளித்துவம் தனது நெருக்கடியைத் தீர்த்துக் கொள்வதற்கும், தனது கொள்ளையை விரிவுபடுத்திக் கொள்வதற்கும் வகுத்திருக்கும் கொள்கை. இந்தக் கொள்கைக்கு ஏற்றவாறு இந்தியாவின் அரசமைப்பும் சட்டங்களும் மாற்றியமைக்கப் படுவதைத்தான் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்த அரசமைப்பின் மூலம், கட்சிகள், நீதிமன்றம், சட்டங்கள் மூலம் – அந்தக் கொள்கைகளை மாற்றியமைப்பதோ, தடுப்பதோ நடக்காத காரியம்.
இந்த அமைப்புக்கு வெளியே நின்று இதனை எதிர்த்துப் போராடி வீழ்த்துகின்ற மக்கள்திரள் போராட்டங்களின் மூலம், ஒரு புதிய ஜனநாயக அமைப்பைக் கட்டியமைப்பதன் மூலம்தான் இதற்குத் தீர்வு காண முடியும். இதெல்லாம் உடனே ஆகக்கூடிய காரியமில்லை என்றும், காரியசாத்தியமான தீர்வைத் தேடவேண்டும் என்றும் கூறுபவர்கள் இருக்கிறார்கள்.
இலக்கு இமயம் என்றால், பயணம் வடக்கு நோக்கித்தான் இருக்க வேண்டும். போச் சேர நாளாகும் என்பதால், பரங்கிமலையை இமயமாகச் சித்தரிப்பதும், பரங்கிமலை செல்வதே காரியசாத்தியமானது என்று பேசுவதும் பித்தலாட்டம். போகாத ஊருக்கு வழி சொல்வது என்பதும் இதுதான்.
தன்னார்வக் குழுக்களும், அறிவுத்துறையினரும், போலி கம்யூனிஸ்டுகளும் அவரவர்க்கு உரிய மொழியில் இதைத்தான் கூறிக்கொண்டிருக்கிறார்கள். கம்யூனிசமல்லாத, முதலாளித்துவமும் அல்லாத, இரண்டைக் காட்டிலும் மேலான, நீதியான ஒரு மாற்று இருப்பதைப் போலவும், கையில் சிக்காமல் நழுவிக்கொண்டிருக்கும் அந்த ‘மாற்றை‘ பிடிப்பதற்குத் தாங்கள் முயற்சித்துக் கொண்டிருப்பதாகவும் பம்மாத்து செகிறார்கள்.பம்மாத்துகளால் எதார்த்தத்தை எதிர்கொள்வதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சி, கோமாளித்தனத்தில் முடிவது தவிர்க்கவியலாதது.
அச்சம் காரணமாகவோ, ஆதாயம் காரணமாகவோ இவர்கள் தமக்குத்தாமே வகுத்துக் கொண்டிருக்கும் எல்லைக் கோட்டினைக் காட்டி, இந்தப் பார்டரைத் தாண்டி நீயும் வரக்கூடாது; நானும் வரமாட்டேன். ஜனநாயக நாட்டில பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்” என்று எதிரியை எச்சரிக்கிறார்கள்.
சிரிக்கிறீர்களா?
அந்த பார்டரை இவர்கள் மக்களின் மூளையிலும் அழுந்த இழுத்து, தாண்டக்கூடாது என்று மிரட்டி வைத்திருக்கிறார்கள். இது நகைச்சுவையில்லையே!
_____________________________________________
– புதிய ஜனநாயகம், நவம்பர் – 2012
_____________________________________________