எனது சொற்கள்
மண்ணாய் மணத்த நாளில்
கோதுமைத் தாள்களின்
நண்பனாயிருந்தேன்.
எனது சொற்கள்
கொதித்துச் சீறிய நாளில்
இரும்புத் தளைகளின்
நண்பனாயிருந்தேன்.
எனது சொற்கள்
கற்களாய் உறைந்த நாளில்
தழுவிச் செல்லும் ஓடையின்
நண்பனாயிருந்தேன்.
எனது சொற்கள்
கலகமாய்க் கிளர்ந்த நாளில்
நடுங்கும் நிலத்தின்
நண்பனாயிருந்தேன்.
எனது சொற்கள்
புளித்த ஆப்பிளாய் சுருங்கிய நாளில்
நம்பிக்கை தளரா உள்ளங்களின்
நண்பனாயிருந்தேன்.
ஆனால்
சொற்கள் தேனாய்ச் சுரந்த தருணத்தில்….
ஈக்கள் மொய்த்தன
என் உதடுகளில்!
-மஹ்மூத் தார்வீஷ்
(ஆங்கிலம் வழி தமிழில்: புதூர் இராசவேல்)

மஹ்மூத் தார்வீஷ் பாலஸ்தீனப் போராளி. இழந்த தாய்நாட்டை மீட்கப் போராடி வரும் எல்லா பாலஸ்தீன மக்களும் நேசித்த கவிஞரும் கூட. 1948இல் இசுரேல் அரசு தார்வீஷின் கிராமத்தைச் சூறையாடி முற்றிலுமாக அழித்தபோது, அவரது குடும்பம் லெபனானுக்குச் சென்றது. விடுதலைத் தாகம் கொண்ட இளம் போராளியாக தனது இருபதாம் வயதுகளிலேயே இசுரேல் கம்யூனிஸ்டு கட்சியில் இணைந்து பணியாற்றினார். 1970இல் ரசியா சென்று படித்தார்; பிறகு பெய்ரூட்டிலும், பாரீசிலுமாக சுமார் 26 ஆண்டுகள் புலம் பெயர்ந்து வாழ்ந்தார். 1996இல் இசுரேல் திரும்பி, கொந்தளிப்பான ‘மேற்கு கரையில்’உள்ள ரமல்லாவில் தங்கினார்.
கவிதை, உரைநடைப் படைப்புக்களில் 30 தொகுதிகளை வெளியிட்டுள்ள அவர், கலை மக்களுக்கானது என்பதில் தெளிவான பார்வை கொண்டவர். தார்வீஷ் பாலஸ்தீன மக்களின் உயிர்மூச்சு; தாயகம் பிடுங்கப்பட்டவர், நீக்கப்பட்டவர். தாயகம் ஏக்கம் கொண்டவர்களின் கம்பீரமான போராட்ட சாட்சி.
கடந்த ஆகஸ்டு 9, 2008 அன்று அவரது 66ஆவது வயதில் இதயநோய்ச் சிகிச்சையின் போது இறந்து போனார். பாலஸ்தீனத் தாயகத்தின் போராளியாகவும், புலம் பெயர்ந்தோரின் உரிமைக் குரலாகவும், கம்யூனிச உணர்வுமிக்க சர்வதேசவாதியாகவும் வாழ்ந்த கவிஞர் மஹ்மூத் தார்வீஷ்.
______________________________________________
-புதிய கலாச்சாரம், அக்டோபர்’ 2008
______________________________________________