Saturday, April 19, 2025
முகப்புஉலகம்அமெரிக்காஅவுட்சோர்சிங் துறையில் ஆட்குறைப்பு!

அவுட்சோர்சிங் துறையில் ஆட்குறைப்பு!

-

ந்தியாவில் இருந்து அமெரிக்க நிறுவனங்களுக்கு சேவை அளிக்கும் வணிகத்தை முதன் முதலில் ஆரம்பித்து வைத்த அமெரிக்காவின் டல்லாஸை தலைநகரமாக கொண்டு இயங்கும் டெக்சாஸ் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் நிறுவனம் இந்தியாவில் ஆட்குறைப்பு நடவடிக்கையை ஆரம்பித்திருக்கிறது.

1985-ம் ஆண்டு செயற்கைக் கோள் வழியாக தகவல் பரிமாறிக் கொள்ளும் வசதியை பெங்களூருவில் நிறுவி இந்தியாவின் ஐடி அவுட்சோர்சிங் துறையை தொடங்கி வைத்த நிறுவனம் டெக்சாஸ் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் (டிஐ). அந்நிறுவனம் இந்தியாவில் 1500 பொறியாளர்களை வேலைக்கு வைத்திருக்கிறது.

டெக்சாஸ் இன்ஸ்ட்ருமென்ட்ஸ் ஆண்டுக்கு $14 பில்லியன் (சுமார் ரூ 77,000 கோடி) வருமானம் ஈட்டுகிறது. மொபைல் போன் சில்லுகள் உற்பத்தியில் இன்டெல், சாம்சங் நிறுவனங்களுக்கு அடுத்து உலகிலேயே மூன்றாவது இடத்தில் இருக்கிறது.

அதன் உலகளாவிய மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக ஒரு வணிகப் பிரிவையே இழுத்து மூடுவதாக டிஐ முடிவு செய்திருக்கிறது. மொபைல் போன், டேப்லட் போன்ற கருவிகளில் பயன்படுத்தப்படும் சில்லுகளிலிருந்து அதிக லாபம் தரும் துறைகளுக்கு கவனத்தை திருப்பப் போவதாக அறிவித்திருக்கிறது. குவால்காம் போன்ற நிறுவனங்களின் கடும் போட்டியாலும், சாம்சங் போன்ற வாடிக்கையாளர்கள் தாமே சில்லுகளை உற்பத்தி செய்து கொள்வதாலும் டிஐ கம்பியில்லா இணைப்புக்கான துறையில் கவனத்தை செலுத்த முடிவு செய்திருக்கிறது.

உலகெங்கும் உள்ள ஊழியர்களில் 5 சதவீதம் பேரை (1700 பேர்) வேலை நீக்கம் செய்வதன் மூலம் ஆண்டுக்கு $450 மில்லியன் சேமிப்பு கிடைக்கும் என்று கணக்கு போட்டிருக்கிறது. இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தியாவில் 300 முதல் 500 வரை பொறியாளர்கள் வேலை இழப்பார்கள். இவர்கள் அனைவரும் 2 முதல் 5 ஆண்டுகள் வரை அனுபவமுடைய மென்பொருள் வல்லுனர்கள். வேலை இழப்பவர்களில் சில உயர் மேலாளர்களும் அடங்குவார்கள்.

மின்னணு கருவிகள் உற்பத்தி செய்யும் பிற நிறுவனங்களும் இந்தியாவில் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்திருக்கின்றன.

ஏற்கனவே, பிரான்சைச் சேர்ந்த அல்காடெல்-லூசென்ட் 1,000 இந்திய ஊழியர்களை வேலை நீக்கம் செய்யப் போவதாக அக்டோபர் மாதம் அறிவித்திருந்தது. இந்த ஆட்குறைப்பில் பெரும்பகுதி 7,000 பேர் வேலை பார்க்கும் பராமரிப்புப் பணிகள் பிரிவில் செய்யப்படும். உலக அளவில் 5,000 ஊழியர்கள் குறைக்கப்படுவார்கள் என்று அல்காடெல் ஜூலை மாதம் அறிவித்திருந்தது.

மேலும் நோக்கியா சீமன்ஸ் நெட்வொர்க்ஸ் நிறுவனம் உலக அளவில் 17,000 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யப் போவதாக அறிவித்திருக்கிறது.

இந்தியாவில் மொபைல் தொலைபேசி நிறுவனங்களுக்கு சேவை வழங்கி வரும் எரிக்சன்ஸ், ஹூவாவெய், ZTE ஆகிய நிறுவனங்களும் சம்பளக் குறைப்பு, ஆட்குறைப்பு மறு சீரமைப்பு நடவடிக்கைகளில் இறங்கியிருக்கின்றன.

உலகளாவிய பொருளாதார சூதாட்டக் குமிழியின் போது ஆயிரக் கணக்கான ஊழியர்களை வேலைக்கு எடுத்த நிறுவனங்கள், குழிழி உடைந்த பிறகு தமது லாபத்தை தக்க வைத்துக் கொள்ள அவர்களை நடுத்தெருவில் விட ஆரம்பித்திருக்கின்றன.

‘சந்தையின் செயல்பாடு இப்படி இருந்தால்தான் நாட்டுக்கு(முதலாளிகளுக்கு) நல்லது’ என்ற மந்திரத்தை முதலாளித்துவ ஆதரவாளர்கள் முணுமுணுக்கலாம். ஆனால் வேலையிழந்த ஊழியர்கள் ஒன்றிணைந்து போராடாவிட்டால் வாழ்க்கை இல்லை!

படிக்க: