Tuesday, April 22, 2025

பிணந்தின்னிகள் !

-

மெரிக்க விதைகள் அமோக விளைச்சல் தரும் என நம்பி, பி.டி. பருத்தியைப் பயிரிட்டுக் கடனாளியான விவசாயிகள், கந்துவட்டிக் கொடுமைக்கு பயந்து தற்கொலை செய்துகொள்ளும் அவலம் மகாராஷ்டிர மாநிலத்தில் இன்னமும் தொடர்கிறது. சாய்நாத் என்ற பத்திரிக்கையாளர் விவசாயிகளின் தற்கொலைகளைப் பற்றி தொடர்ச்சியாக எழுதிய பின்னர்தான், விதர்பா பிராந்திய விவசாயிகளின் துயரம் வெளியுலகுக்குத் தெரிய வந்தது. ஆனால், தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டிருந்த விவசாயிகளின் நலனுக்காக ஒதுக்கப்பட்ட நிதியைக்  கூட விட்டுவைக்காமல் கொள்ளையடித்துள்ளனர், மகாராஷ்டிர ஓட்டுப் பொறுக்கிகள். இழவுவீட்டில் கூட திருடிக் கொண்டிருந்த அந்த இழிபிறவிகள், நீர்ப்பாசனத் திட்டங்களின் பெயரால் பத்தாண்டுகளுக்கும் மேலாகப் பகற்கொள்ளையை நடத்தி வந்துள்ளனர்.

மகாராஷ்டிர  மாநில நீர்ப்பாசனத்துறைத் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் சுமார் 35 ஆயிரம் கோடி ரூபா அளவிற்கு ஊழல்கள் நடந்துள்ளதை அம்மாநிலத்தின்  தலைமைப் பொறியாளரான விஜ பந்தாரே என்பவர் முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில் அம்பலப்படுத்தியுள்ளார். மகாராஷ்டிர  முன்னாள் துணை முதல்வரான அஜித்பவார் நீர்பாசனத்துறை அமைச்சராக இருந்தபோது,  நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்த செலவிடப்பட்ட ரூ.70 ஆயிரம் கோடியில், பாதிக்குப்பாதி கொள்ளையடிக்கப்பட்டு, கொள்ளையில் பெரும்பங்கு அஜித்பவாருக்குப் போயுள்ளது.

முன்பெல்லாம்  நீர்ப்பாசனத்துறையில் வெட்டாத கிணறுக்குக் கணக்குக் காட்டுவதும், ஒப்பந்தக்காரரிடம் சதவீதக் கணக்கில் பணம் வாங்குவதும்தான் ஊழல் என்றிருந்தது. ஆனால் மகாராஷ்டிர மாநிலத்தில் நடந்துள்ள கொள்ளையோ நினைத்துக் கூடப் பார்க்க முடியாத அளவிற்கு,  ஊழலின் அடுத்த பரிணாமத்தை எட்டியுள்ளது.

முதலில் அரசின் திட்ட மதிப்பிற்கு உட்பட்டு ஒப்பந்தங்களை வாங்குவது, பின்னர் ஏதாவதொரு காரணத்தைக் காட்டி திட்ட மதிப்பை உயர்த்திக் கேட்பது – என இக்கொள்ளை நடந்துள்ளது. மேட்டுப்பாங்கான இடங்களுக்கு நீரை ஏற்றி, அதன் பிறகு வாய்க்கால்கள் மூலம் பாசனவசதி செய்து தரும் திட்டங்களுக்காக  மகாராஷ்டிர அரசு சுமார் 30 ஆயிரம் கோடி ரூபா செலவிட்டுள்ளது. ஆனால் அதில் 90% திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவேயில்லை.  கீழ் பெங்கங்கா திட்டத்தில், ஒரு ஒப்பந்தத்தின் மதிப்பு அதன் உண்மை மதிப்பிலிருந்து ரூ.9072 கோடிக்கு உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல, ரூ.60 கோடி திட்டமதிப்பில் தொடங்கப்பட்ட ஜிகான் பாசன வசதித் திட்டம், பின்னர் ரூ.1322  கோடியாக உயர்த்தப்பட்டது. பல திட்டங்கள் அதன் உண்மை மதிப்பிலிருந்து 100 முதல் 1000 மடங்கு வரை உயர்த்தப்பட்டு, நிதி முழுவதுமே கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. நர்வாதே அணைக்கட்டை உயர்த்திக் கட்டுவதாகக் கூறி 650 கோடி ரூபா கொள்ளை, வாசிம் மாவட்டத்தில் 11 தடுப்பணைகள் கட்டுவதாகக் கூறி அணைக்கு 50 கோடி ரூபாவரை கொள்ளை -என இப்பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

விதர்பா விவசாயிகளின் தற்கொலை உச்சத்தில் இருந்த  2008-ஆம் ஆண்டில், மூன்றே மாதங்களில் அப்பகுதியில் தொடங்கப்பட்ட 32 திட்டங்களின் மதிப்பை மொத்தமாக ரூ,17,700 கோடி அளவிற்கு ஒப்பந்ததாரர்கள் உயர்த்தினர். ஒருபுறம் விவசாயிகளின் தற்கொலை அவலம் தொடர்ந்து கொண்டிருந்தபோது,  இன்னொருபுறம் அவர்களது வாழ்வை மேம்படுத்தப் போவதாகக் கூறிக்கொண்டு இத்திட்டங்களின் மூலம் கொள்ளையடித்துள்ளனர். திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட பணம் முழுவதையும் இவர்கள் விழுங்கிவிட்டதால், 32 திட்டங்களில் ஒன்றுகூட இதுவரை முடிக்கப்படவில்லை.

பெரிய திட்டங்களுக்கான ஒப்பந்தங்களை, அதிகாரிகளுக்குப் பதிலாக அஜித்பவாரே நேரடியாகத் தலையிட்டுத் தனக்கு வேண்டிய ஒப்பந்தக்காரர்களுக்கு ஒதுக்கியுள்ளார். பெரிய ஒப்பந்தங்கள் அனைத்திலும் நீர்ப்பாசனத்துறை அதிகாரியின் கையொப்பம் இருக்க வேண்டிய இடத்தில், அஜித் பவாரின் கையொப்பம் இருப்பதே அவரது தலையீட்டிற்குச் சாட்சி. வேலையைத் தொடங்கும் முன்னரே ஒப்பந்தக்காரர்களுக்கு பலநூறு கோடி ரூபாய்கள் முன்பணமாக வழங்கப்பட்டுள்ளன. பல சமயங்களில் ஒப்பந்தக்காரர்கள், கட்டுமானப் பணிகளைத் தொடங்காமல் இழுத்தடித்துக் கொண்டிருந்தபோதே நூற்றுக்கணக்கான கோடி ரூபாகள் அவர்களுக்கு அடுத்த தவணையாக வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு முன்பணம் வழங்குதல் கூடாதென நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் இருவர் அனுப்பிய சுற்றறிக்கை, அஜித் பவாரால் திரும்பப் பெறப்பட்டது.

ஓட்டுக்கட்சி அரசியல்வாதிகள், அதிகாரிகள், ஒப்பந்தக்காரர்கள் இணைந்து நடத்தியுள்ள இந்தக் கொள்ளையின் விளைவாக 1200-க்கும் அதிகமான திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.  பத்து ஆண்டுகளாகியும் பல திட்டங்கள் நிறைவடையவில்லை. மகாராஷ்டிர  மாநிலப் பொருளாதார ஆய்வறிக்கையின்படி, கடந்த பத்து ஆண்டுகளில் அம்மாநிலத்தில் பாசன வசதிபெறும் நிலங்களின் பரப்பு வெறும் 0.1% மட்டுமே அதிகரித்துள்ளது.

இந்தப் பகற்கொள்ளை அம்பலமாகிய பின்னரும் எந்த ஓட்டுக்கட்சியும் இதனைத் தட்டிக்கேட்கவில்லை.  மாநிலத்திலும், மத்தியிலும் தேசியவாத காங்கிரசுக் கட்சியானது கூட்டணியில் இருப்பதால், காங்கிரசுக் கட்சி இந்தக் கொள்ளைகளைக் கண்டுகொள்ளவில்லை. தங்கள் கட்சிகளைச் சேர்ந்த முக்கிய புள்ளிகளும்  ஒப்பந்தங்களைப் பெற்றுக் கொள்ளையடித்துள்ளதால், எதிர்க்கட்சிகளான பா.ஜ.க.வும் சிவசேனாவும்  இந்த ஊழலை அம்பலப்படுத்த முன்வரவில்லை.

இந்தத் திட்டங்கள் பெரும்பாலும் நான்கு ஒப்பந்தக்காரர்களுக்கே வழங்கப்பட்டுள்ளன. பத்தாண்டுகளுக்கு முன்னர் சாதாரண ஒப்பந்தக்காரர்களாக இருந்த இவர்கள், இன்று பல ஆயிரம் கோடி ரூபா மதிப்புள்ள கட்டுமான நிறுவனங்களின் உரிமையாளர்கள். அவர்களில் மூன்று பேர் பா.ஜ.க. மற்றும் தேசியவாத காங்கிரசின்  சட்டமேலவை  உறுப்பினர்களாக உள்ளனர். இன்னொருவரோ பா.ஜ.க. மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார்.

பா.ஜ.க. தலைவர் கட்காரியோ, அஜித்பவார் மீது விசாரணை கூடாதென்றும் நடவடிக்கை தேவையில்லை என்றும்  கூறியிருக்கிறார். ஏனெனில், நீர்ப்பாசன ஊழல்களில் கட்காரியும் கை நனைத்திருக்கிறார். விதிமுறைகளுக்கு மாறாக, பத்துக்கும் அதிகமான ஒப்பந்தங்களை கட்காரியின் நிறுவனத்துக்கு அஜித்பவார் ஒதுக்கி, இருவரும் கூட்டுக் களவாணித்தனம் செய்துள்ளனர். அது மட்டுமன்றி, பா.ஜ.க. எம்.பி.யும் கட்காரியின் கூட்டாளியுமான அஜய் சஞ்செட்டியின் நிறுவனத்திற்குத்தான் மிக அதிக அளவில் ஒப்பந்தங்கள் வாரிவழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கட்காரி எவ்வாறு இந்த ஊழலை எதிர்த்துப் பேசுவார்?

அஜித்பவாருக்கும், நீர்ப்பாசனத்துறை ஒப்பந்தக்காரர்களுக்கும் நெருங்கிய தொடர்பிருப்பதை, கடந்த 2009-ஆம் ஆண்டு லோக்சத்தா என்ற நாளேடு அம்பலப்படுத்தியதைத் தொடர்ந்து, அப்போது நீர்ப்பாசனத்துறை அமைச்சராக இருந்த அஜித்பவார் பதவி விலகினார். ஆனால், அப்பதவியில் அவரின் விசுவாசியான  சுனில் தட்காரே அமர்த்தப்பட்டார். அதன் பின்னர், அஜித்பவாரின் அரசியல் வளர்ச்சி வேகமடைந்தது. ஊழல் குற்றச்சாட்டில் பதவி விலகிய அஜித்பவார், துணை முதல்வராக்கப்பட்டார். அவர் மீதான விசாரணைகள் படிப்படியாக முடக்கப்பட்டன.

2010-இல் நீர்ப்பாசனத்துறை முறைகேடுகளை விசாரித்த இரண்டு விசாரணைக் கமிட்டிகளின் அறிக்கைகள் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னரும், இன்னமும் வெளியிடப்படாமல் கிணற்றில் போட்ட கல்லைப் போலக் கிடக்கின்றன. இதுவரை அஜித்பவார் மீது மும்பை உயர் நீதிமன்றத்தில் தன்னார்வக் குழுக்களால் தொடரப்பட்டுள்ள இரண்டு பொதுநல வழக்குகளைத் தவிர, அரசு தரப்பிலிருந்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஆதர்ஷ், காமன்வெல்த், 2-ஜி,  நிலக்கரி என அடுத்தடுத்து ஊழல்களும் கொள்ளையும் அம்பலமாகிக் கொண்டே இருக்கின்றன. இந்த ஊழல்களில் பல லட்சம் கோடிகளை விழுங்கிய கொள்ளையர்கள் சுதந்திரமாகத் திரிகின்றனர். அவர்களைப் பாதுகாக்கின்ற அதே அரசியமைப்புதான் மகாராஷ்டிர நீர்பாசனக் கொள்ளையர்களையும் பாதுகாக்கிறது. ஒட்டுமொத்தமாக இந்த அரசியலமைப்பே ஊழலுக்கும், கொள்ளைக்கும் ஏதுவாகக் கட்டமைக்கப்பட்டுள்ள நிலையில், சட்டத்தின் மூலம் இவர்களைத் தண்டித்துவிடமுடியுமா?

___________________________________

– புதிய ஜனநாயகம், நவம்பர் – 2012

___________________________________