தேவாலயம் போதல் – பிலிப் லார்கின்
ஒருமுறை அங்கு எதுவும் நடக்கவில்லை என்று
நன்கு அறிந்தே நான் உள் செல்ல,
கதவு மெத்தொலியுடன் சாத்திக் கொண்டது.
பாய் விரிப்புகள், இருக்கைகள் மற்றும் கற்கள்
மேலும் கொஞ்சம் புத்தகங்கள் கொண்ட மற்றுமொரு தேவாலயம்;
ஞாயிற்றுக்கிழமைக்காகப் பறிக்கப்பட்ட மலர்கள்
பழுப்பு நிறத்தில் பரவிக் கிடந்தன;
சிறிய, நேர்த்தியான இசைக்கருவி;
மேலும் ஒரு கலவரமூட்டும், நாட்பட்ட, ஆதாரமான மவுனம்,
அதன் காலத்தை
நுரைத்திருக்கும் கடவுள் மட்டுமே அறிவார்.
தொப்பியையும், ஊக்குகளையும்
அருவருப்பான மரியாதையுடன் கழற்றினேன்.
முன்நகர்ந்து விளக்குக்கலத்தில் கையைப் பரவ விட்டேன்;
நான் நின்றிருந்த இடத்திலிருந்து கூரை புதிதாகத் தெரிந்தது–
துடைக்கப்பட்டிருந்ததா அல்லது புதுப்பிக்கப்பட்டிருந்ததா
எனத் தெரியவில்லை
வேறு யாரேனும் அறிந்திருக்கலாம்.
மேடையேறி சாய்மேசையில் பகட்டாக அகல்விரிவு கொண்டிருந்த
பைபிள் வசனங்கள் சிலவற்றில் கவனம் குவித்து
‘இங்கு முடிந்தது’ என்று நான் உணர்ந்து கொண்டதை விட
சற்றே உரத்து கூவினேன்.
எதிரலை சற்று நேரம் நீடித்து அடங்கியது
கதவு பின்னால் பதிவேட்டில் கையெழுத்திட்டு
ஆறணா ஐரிஷ் நாணயங்களை காணிக்கை செலுத்தினேன்.
அப்பகுதி நிற்கத் தகுதியற்றது என உணர்த்தியது.
இருந்தும் நான் நின்றேன்.
மெய்யாகவே, நான் இது போன்று
ஏதாவது செய்ய எப்போதும் ஒரு நட்டத்தில் முடியும்.
என்ன பார்ப்பது எனக் கிலேசமுற்று;
தேவாலயங்கள் அவற்றின்
பயன்பாட்டுத் தேவையை முழுவதும் இழக்க நேர்ந்தால் நாம்
அவற்றை என்ன செய்வது என்று யோசிக்கலானேன்.
சில தேவாலயங்களைக் காலவரன்முறைப்படுத்தி அவற்றின்
வரைதோல், தட்டு மற்றும் பெட்டியில் பூட்டி வைக்கப்பட்டிருக்கும்
அப்பக் கலத்தை மக்களின் பார்வைக்காக வைத்துக் கொள்ளலாம்.
மற்றவற்றை வாடகையின்றி ஆடுகள் மழையிலிருந்து
ஒதுங்கிக் கொள்ள அனுமதிக்கலாம்.
அல்லது அவற்றை துர்பாக்கிய நிலையங்கள் என்று
ஒதுக்கி விடலாமா?
இல்லையேல், இருண்ட பிறகு ஊசலாட்ட பெண்கள்
தம் குழந்தைகளை இங்குள்ள
ஒரு மந்திரக் கல்லில் தொட வைப்பார்கள்.
புற்று நோய்க்கு மூலிகை தேடுவர்;
அல்லது நெஞ்சறிந்த ஓர்
இரவில் இறந்தவர் நடமாடுவதாக உரைப்பர்.
விளையாட்டு, புதிர்கள் மற்றும் அங்கொன்று, இங்கொன்றாகச்
சில விஷயங்களினுள் ஏதோவொரு சக்தி அல்லது
வேறான ஓன்று என்பது நீடிக்கவே செய்யும்.
ஆனால், மூடநம்பிக்கையும், நம்பிக்கை போன்றே
கட்டாயம் அழிய வேண்டும்.
இந்த அவநம்பிக்கையும் கூட சென்று விட்டால்
வேறென்ன இருக்கும்? புற்கள், பாசிபடிந்த நடைமேடைகள், புதர்,
தூண்கள் மற்றும் வானம்.
ஒவ்வொரு வாரமும் அதன் தோற்றம் காணியல்பு குறைகிறது;
அதன் நோக்கம் மேலும் இருளார்நது போகிறது. இந்த இடத்தின்
நோக்கம் பொருட்டு இறுதியாக, மிக இறுதியாக வருகிறவர்
யாராக இருக்கும் என்று நான் வியக்கிறேன்.
இந்த இசைக்கூடத்தின்
பேழைகளை இங்கு வந்து லேசாகத் தட்டி இசைக்கும்
கடைசி மனிதர் யார்?
ஒரு பாழ் குடிகாரரா, அவர்?
பழமையின் மீது காதல் கொள்ளும் ஒருவரா?
அல்லது இங்குள்ள வாடை வீசும் அங்கிகள், இசைப்பேழைகள் மற்றும்
நறுமணப் பொருள்களை எதிர்பார்த்து வரும்
ஓர் கிறிஸ்மஸ்– கொண்டாட்ட அடிமையா?
அல்லது அவர் என்னைப் போன்ற ஒருவரா?
சலிப்புற்று, உண்மையறியாது,
இந்த ஆன்மீக எச்சம் உருக்குலைவதை அறிந்தும்,
புறநகரின் புதர்க்காடு வழியே இந்த சிலுவையின் தளத்தை
நாடி வருவதன், காரணம், அது உருவான காலத்திலிருந்து
நீண்ட நெடுங்காலமாக திருமணம், பிறப்பு, இறப்பு மற்றும்
இது போன்றவற்றிற்குப் பயன்படுத்திக் கொள்ளும் பொருட்டுக்
கட்டப்பட்ட சிறப்புக்கூடம்?
துப்புரவற்ற, மட்கிய இந்த களஞ்சியத்திற்கு
வேறு என்ன மதிப்பு இருக்க முடியும்
என்று என்னால் சொல்ல இயலவில்லை.
அது என்னை இங்கு அமைதியாக நிற்கத் தூண்டுகிறது.
நிறை முனைப்பு கொண்ட இப்புவியின் நிறைவான ஓர் இல்லம் இது.
இவற்றின் இணைந்த உலாவலில் நமது வாழ்க்கை நிர்ப்பந்தங்கள்
சந்தித்து, அங்கீகாரம் பெற்று
நமது விதிகள் என்று அலங்காரம் கொள்கின்றன. மேலும்
அது கூடுதலான தொன்மம் அடையவில்லை.
யாரேனும் ஒருவர் எப்போதாவது வந்து ஆச்சரியப்படுத்துகிறார்.
பசித்த ஒருவர் மிகத் தீவிரமாக இந்த இடத்திற்கு இழுக்கப்படுகிறார்.
இங்கு இறந்து கிடப்பவர்களை வைத்து,
இங்கு வருவது
நல்லது என்று அவர் ஒருமுறை கேள்விப்பட்டார்.
_________________________________________________
– பிலிப் லார்கின். தமிழில் – சம்புகன்.
__________________________________________________
குறிப்பு:
‘இங்கு முடிந்தது’ — சர்ச்சில் திருமறைப் பகுதி வாசித்து முடித்த பின் சொல்லப்படும் கடைசி வார்த்தை.
ஆறணா ஐரிஷ் நாணயங்கள் — இங்கிலாந்தில் செல்லத்தக்கவை அல்ல.
__________________
ஆசிரியர் குறிப்பு:

இங்கிலாந்தில் 1922 ஆம் ஆண்டு பிறந்த பிலிப் லார்கின் தனது கல்லூரி படிப்பை ஆக்ஸ்பர்டில் மேற்கொண்டார். ஐரோப்பாவின் நவீனத்துவ கவிதை மரபில் 1950 –களில் உருவான ‘செயற்பாட்டு கவிஞர்கள்’ [Movement Poets ] குழுவில் முதன்மையான பங்கு வகித்தார். ஜே. என்ரைட் . எலிசபத் ஜென்னிங்க்ஸ், தாம் கன், டொனால்ட் டேவி போன்றோர் செயற்பாட்டு கவிஞர்களில் முக்கியமானவர்கள். டி.எஸ். எலியட், எஸ்ரா பவுண்ட், டி.எச். லாரன்ஸ் போன்ற ஆரம்ப கட்ட நவீனத்துவ கவிஞர்களிடமிருந்து சற்றே வேறுபட்டவர்கள் இவர்கள். பழமையை மீட்பதும், மீடுவதும் அல்ல; அதனை நிராகரிப்பதும், எதிர்த்த சமருமே நவீனத்துவம் என்று பிலிப் லார்கின் கவிதைகள் அறைந்து பேசுகின்றன. Whitsun Weddings , High Windows , The Less Deceived போன்றவை விரிந்த சமூகப் பார்வை கொண்ட அவருடைய அங்கதக் கவிதைகள். 1984 –ல் தனக்கு அளிக்கபட்ட அரசவை கவிஞர் அந்தஸ்தை ஏற்க மறுத்தார் பிலிப் லார்கின். இயக்குனர்கள், நடிகர்கள், டி.வி.க்கள் மற்றும் ஆட்சியாளர்களின் அழைப்பு மணிக்காக ஏங்கித் தவித்துக் கிடக்கும் நமது தமிழ் இலக்கிய அவலச் சூழலுக்கு பிலிப் லார்கின் மொழியடிப்படையில் மட்டுமல்ல அரசியல் மற்றும் பண்பு வகையிலும் அந்நியமானவர்.
இரண்டாம் உலகப் போரின் முடிவில் கருத்துநிலை சார்ந்தும், நடைமுறை ரீதியிலும் ஐரோப்பிய மக்களிடையே சமயம் சார்ந்த நம்பிக்கைகளும், மதிப்பீடுகளும் வீழ்ச்சியுற்றதை இக்கவிதை கொண்டாடுகிறது. ஞாயிறு ஆராதனைகளில் மக்களின் எண்ணிக்கை அற்பமாக ஆனது. வருத்தப்பட்டு பாரம் சுமந்தவர்கள் தமது ஆகக்குறைந்த தேவையான இளைப்பாறுதலுக்கு கூட தேவாலயத்தின் கதவுகளை தட்ட மறுத்தார்கள். உள்ளடங்கிய கேலியும், எள்ளலுமாக இக்கவிதை மிளிர்கிறது. இக்கவிதை விரிக்கும் சித்திரத்திற்கு நேர்மாறான நிலையை நாம் இந்தியாவில் காண்கிறோம். நூறாண்டு, இருநூறாண்டு பழம்பெருமையை பேசும் தேவாலயங்கலில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. ஐரோப்பியர்கள் அறிமுகப்படுத்திய ஒரு பழக்கத்தை அவர்கள் கைவிட்ட பின்னரும் நமது நாட்டின் கிறித்தவர்கள் தொடர்வது ஒருவகையில் நகைமுரண் தான். மதுப்பழக்கத்தை கற்றுக் கொண்டவன், கற்றுக் கொடுத்தவன் திருந்திய பின்னரும் தொடர்வது போன்ற சோகம் இது. தமது நற்செய்தி மேளாக்கள் களைகட்ட மேற்கத்திய பிரச்சாரகர்களை அழைத்து வரும் பாதிரிமார்கள், பிலிப் லார்கின் போன்ற கவிஞர்களையும் அறிமுகப்படுத்துவார்களா?