Monday, April 21, 2025
முகப்புகலைகவிதைசெட்டிநாட்டு சிதம்பரம் வெட்கப்படுகிறார்!

செட்டிநாட்டு சிதம்பரம் வெட்கப்படுகிறார்!

-

ப.சிதம்பரம்நாட்டையே
பன்னாட்டு மூலதனங்களின் பலாத்காரத்திற்கு
தள்ளிவிடும் ப.சிதம்பரத்திற்கு
வெட்கப்படவும் தெரியுமாம்!

ஒரிசா பழங்குடிப் பெண்களை
கூட்டாக பாலியல் வன்புணர்ந்து,
பழங்குடிப் பெண்களின் பிறப்புறுப்பில்
கற்களைத் திணித்து…
காட்டுவேட்டை நடத்தி
களித்திட்ட சிதம்பரம்,
தில்லி சம்பவத்திற்காக
ஒரு ஆண் என்ற முறையில்
வெட்கித் தலைகுனிகிறாராம்!

அடேயப்பா…
யாருக்கு வரும் இந்த கெழுதகை நடிப்பு!

அறிக்கையில் வெட்கப்பட்டு
அறிக்கையில் துக்கப்பட்டு
அறிக்கையிலேயே மிச்சப்படும் இவர்கள்,
ஆண் என்பதை நிரூபிக்க….
இன்னும் எத்தனை பாலியல் வன்முறைக்கு
ஆளாக வேண்டுமோ இந்தியப் பெண்கள்!

கருத்த பனையின்
உரித்த தோலென
அறுத்த முலையுடன் கிடந்த
ஈழப்பெண்களைப் பார்த்து துடிக்காத சோனியாவும்,
இருளர் பெண்களை துகிலுரிந்த போலீசுக்கு
ஆசி வழங்கும் ஜெயலலிதாவும் கூட
பெண்கள் மீதான பாலியல் வன்முறையைக்
கடுமையாகக் கண்டிக்கிறார்களாம்!
கொடுமை இதைவிட வேறென்ன?

இவர்களின் இரக்கத்தைப் பெறுவதற்குக் கூட
தலைநகர் அளவுக்கு
பாலியல் வன்முறைக்கு
‘தகுதி’ வேண்டும் போல!

எந்த நேரத்திலும்… எந்த இடத்திலும்..
உழைக்கும் பெண்களுக்கு
ஒரு பாதுகாப்புமில்லை…
‘தாலி கட்டிய’ கணவனாலும்
கூலி கொடுக்கும் முதலாளியாலும்
குதறப்படுகின்றன பெண்களின் பொழுதுகள்.

கயர்லாஞ்சியில்
பிரியங்கா எனும் தலித் பெண்ணும்
அவரது அம்மா சுரேகாவும்
ஆதிக்கச் சாதிவெறியர்களால்
ஊரே கூடிநின்று வன்புணர்ந்து பிணமாக்கி
பிறப்புறுப்பில் குச்சி செருகி
கொடூரமாக வெறியாடியபோதும்…

சிதம்பரம் பத்மினியும்
வாச்சாத்தி பழங்குடிகளும்
போலீசு நகங்களால்
பாலியல் வெறிக்கு பிய்க்கப்பட்டபோதும்…

உள்துறையும், உளவுத்துறையும்
கோபத்தால் வேண்டாம்,
வெட்கத்தால் கூட சிவக்காத மர்மம் என்னவோ?

பொதுவில் என்றால்
பொத்துக் கொண்டு வரும்
நடுத்தர வர்க்கக் கோபம் கூட
தலித்துகள் எனில்…
தனிக்கிணறு… தனிக்குவளை
தனிச்சுடுகாடு போல
‘தனி பாலியல் வன்முறை’ – என
தள்ளிவைக்கும் போல!

தில்லிக்கு திரள்வது நல்லதுதான்…
தலித்துக்கும் கூட,
பிறப்புறுப்பில் குச்சி செருகினால் வலிக்கும்
என்பதையாவது உங்களால் உணர முடியுமா?
பள்ளுக்கும், பறைக்கும் சேர்த்து
தெருவில் இறங்குவாய் நன்நெஞ்சே!

பிளேடு விளம்பரம் முதல்
பர்ஃபியூம் விளம்பரம் வரை
பெண்ணுடலையும் சேர்த்து விற்கும்
தாராளமயம்.

மெமரி கார்டு வக்கிரத்தை
பேருந்தில் பிரயோகித்தவன் பொறுக்கி.
அதையே சட்டமன்றத்தில் உட்கார்ந்து
மக்கள் வரிப்பணத்தில் சாவகாசமாய்
நீலப்படம் பார்த்தவன் எம்.எல்.ஏ.

அடையாளம் தெரியாத நபர்களால்
பாலியல் வன்முறைக்குள்ளாகும்
பெண் மீதான கொடுமைக்கெதிராக
கண்டனம் முழங்கும் பெண்ணே – ஒன்றை
அடையாளம் தெரிந்து கொள்!
இதையே.. அன்றாடம்
மணிப்பூரிலும்…. சத்தீஸ்கரிலும்.. காசுமீரிலும்
படைகளைக் கொண்டு செய்யும்
அரசாங்கத்திடம்தான் நீ நீதி கேட்பது!

______________________________________________________

– துரை. சண்முகம்
______________________________________________________