Wednesday, April 30, 2025
முகப்புகட்சிகள்அ.தி.மு.ககோவையில் காட்டாட்சி - நெல்லையில் தீண்டாமை!

கோவையில் காட்டாட்சி – நெல்லையில் தீண்டாமை!

-

புளுகுணி ஜெயாவின் காட்டாட்சி!

மின்வெட்டைக் கண்டித்து ஒரு துண்டுப் பிரசுரம் தயாரித்து, அதனைப் பொதுமக்கள் மத்தியில் கொடுத்த ‘குற்றத்திற்காக’ கோவை, சிவானந்தா காலனியைச் சேர்ந்த சல்மா என்ற பெண் பத்திரிகையாளரை, நள்ளிரவு நேரத்தில் அவரது வீடு புகுந்து ஸ்டேஷனுக்குத் தூக்கிவந்து, கொலைமிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட மூன்று கிரிமினல் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்து, அந்த நள்ளிரவிலேயே அவரை மாஜிஸ்ட்ரேட் முன் நிறுத்தி, பின் சிறையில் அடைத்துத் தனது விசுவாசத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறது, கோவை நகர போலீசு.

‘‘இது மக்களை வாழ வைக்க வந்த அரசா? இல்லை, கோவை மாவட்டத்தில் முதுகெலும்பாக உள்ள சிறு தொழிற்சாலைகளை அழிக்க வந்த அரசா?” எனத் தனது துண்டுப் பிரசுரத்தில் கேட்டிருக்கிறார், சல்மா.  அவரின் இந்தக் கேள்வி, ஒட்டுமொத்த தமிழக மக்களின் உள்ளக் குமுறல் அன்றி, வேறென்ன?  எனவே, சல்மாவைப் பொக் குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்ததை, மின்வெட்டை எதிர்த்துப் போராடிவரும் தமிழக மக்களுக்கு விடப்பட்டுள்ள எச்சரிக்கையாகவே கருத முடியும்.

‘‘தான் ஆட்சிக்கு வந்தால் மூன்று மாதத்தில் மின்சாரப் பிரச்சினையைத் தீர்த்து விடுவேன்” என்ற ஜெயாவின் பிரச்சாரத்தை நம்பி, அ.தி.மு.க.விற்கு வாக்களித்தவர்களுள் இந்த சல்மாவும் ஒருவர்.  இப்பொழுதோ பதவியில் அமர்ந்துவிட்ட கொழுப்பில், நான் அப்படி எந்த வாக்குறுதியும் கொடுக்கவேயில்லை என புளுகித் திரிகிறார், ஜெயா.  சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் அவர் அளித்த வாக்குறுதி அண்டப் புளுகு என்றால், அவரது மறுப்பு ஆகாசப் புளுகு!

நியாயத்தைக் கேட்ட சல்மாவின் மீது வழக்கும் சிறையும் பாயுமென்றால், பொய் வாக்குறுதி அளித்துத் தமிழக மக்களை நம்பிக்கை மோசடி செய்த ஜெயாவை எந்தக் காராகிரகத்தில் அடைப்பது?

______________________________________

பள்ளிகளில் தலைவிரித்தாடும் தீண்டாமை!

தலித் சிறுமினித உரிமைக் களம் என்ற அமைப்பின் சார்பில் திருநெல்வேலியில் தாழ்த்தப்பட்ட மாணவர்களிடையே தீண்டாமை குறித்து நடத்தப்பட்ட பொது விசாரணையில், கடந்த இரண்டாண்டுகளில் நெல்லை மாவட்டத்தில் மட்டும் தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த 1,680 மாணவ-மாணவியர் பள்ளிப் படிப்பைப் பாதியிலேயே நிறுத்தியிருக்கும் உண்மை அம்பலமாகியிருக்கிறது.

இந்த மாணவர்கள் பள்ளிப் படிப்பைப் பாதியிலேயே கைவிட்டு ஓடியதற்குப் படிப்பின் மீது நாட்டமின்மையோ, ஏழ்மையோ காரணமாக அமையவில்லை.  பள்ளிக்கூடத்தில் இம்மாணவர்களிடம் காட்டப்பட்ட சாதிப் பாகுபாடும் தீண்டாமைக் கொடுமையும்தான் முதன்மையான காரணமாக உள்ளது.

‘‘நான் வீட்டுப் பாடம் எழுதவில்லை; அதற்கு ஹெட்மாஸ்டர், ‘உன் அப்பா கக்கூஸ் அள்ளுறவன்தானே, பின்னே உனக்கு மட்டும் எப்படி படிப்பு வரும்’ எனச் சாதிவெறியோடு கிண்டல் செய்தார்.  தினம் தினம் சாதியைச் சொல்லித் திட்டியதால் பள்ளிக்கூடமே வெறுத்துவிட்டது.  இப்பொழுது நான் மதுரையில் லாரி கிளீனராக இருக்கிறேன்” என தேவர்குளத்தைச் சேர்ந்த 14 வயதான அருந்ததியர் சாதியைச் சேர்ந்த அஜித்குமார் அப்பொது விசாரணையில் சாட்சியம் அளித்திருக்கிறான்.

பள்ளிகளில் நிலவும் தீண்டாமையைத் தனது பார்வையைப் பறிகொடுத்துத் தமிழகத்திற்கு எடுத்துக் காட்டினாள், தனம் என்ற சிறுமி.  அச்சம்பவம் நடந்து பத்தாண்டுகளுக்கு மேலாகிவிட்ட பின்னும் தமிழகப் பள்ளிகளில் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் இழிவுபடுத்தப்படுவது எவ்வித உறுத்தலும் அச்சமுமின்றித் திமிரோடு தொடர்ந்து கொண்டிருப்பதை இப்பொது விசாரணை அம்பலப்படுத்திக் காட்டியிருக்கிறது.  இவ்வன்கொடுமையைத் தடுக்க முயலாமல் வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு, பள்ளிப் பாடப் புத்தகங்களில் தீண்டாமை மனிதநேயமற்ற செயல்-பெருங்குற்றம்” என அச்சடித்துப் போதிக்க மட்டும் தவறுவதில்லை.  இம்மோசடியை, பகல்வேடத்தை இன்னுமா நாம் பொறுத்துக் கொள்ளுவது?

__________________________________________________

– புதிய ஜனநாயகம், டிசம்பர் – 2012
_________________________________________________________