Monday, April 21, 2025
முகப்புமறுகாலனியாக்கம்கார்ப்பரேட் முதலாளிகள்வால்மார்ட்டிற்கு எதிராக திருச்சி தரைக்கடை வணிகர்கள்!

வால்மார்ட்டிற்கு எதிராக திருச்சி தரைக்கடை வணிகர்கள்!

-

திருச்சி அனைத்துத் தரைக்கடை  வியாபாரிகள் பாதுகாப்பு சங்கத்தின் ஆர்ப்பாட்டம்.சிறுவணிகத்தை விழுங்கவரும் அந்நிய மூலதனத்தை விரட்டியடிப்போம் என்ற தலைப்பில் அனைத்து தரைக்கடை வியாபாரிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்ப்பில் அதன் செயலர் தோழர்.பழனிச்சாமி தலைமையில் 28.12.12 அன்று காலை 10 மணிக்கு சத்திரம் பேருந்து நிலையம் சிந்தாமணி அண்ணா சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் எழுச்சியூட்டும் முழக்கத்துடன் சிறப்பான முறையில் நடைப்பெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் மாற்று வணிக சங்கத்தினர், கட்சியினர் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்கள். அதில் மனித நேய நல சங்கத்தின் சார்ப்பில் வழக்குரைஞர் காஜாமைதீன் கலந்துகொண்டு அந்நிய மூலதனத்தால் சில்லறை வர்த்தகம் பாதிப்பதை எளிய உதாரணங்களுடன் விளக்கி அம்பலப்படுத்தி பேசினார்.

அடுத்ததாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில இணை செயலர். திரு.ஆனந்தன் அவர்கள் தமது சங்கம் நடத்திய கருப்பு கொடி, ரயில் மறியல் போராட்டம் போன்றவற்றின் அனுபவத்தையும் விளக்கி பேசினார். அடுத்து பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர செயலர் தோழர்.சுரேஷ் அவர்கள் தமது உரையில் அந்நிய மூலதனம் சிறுவணிகத்தில் நுழைவதால் ஏற்ப்படும் பாதிப்புகளை விளக்கியும் சென்னை அண்ணா நகரில் திறக்கவுள்ள வால்மார்ட் கடையை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் மார்க்ஸ்சிட் கட்சியும் இணைந்து நடத்திய போராட்டங்களை பற்றி ஒப்பிட்டு பேசினார்.

அனைத்து தரைக்கடை வியாபாரிகள் பாதுகாப்பு சங்கத்தின் சிறப்பு தலைவர் தோழர்.சேகர் தனது உரையில் அந்நிய மூலதனம் வால்மார்ட் வந்தால் வேலை கிடைக்கும் என்ற மத்திய அரசின் பேச்சை கண்டித்து வெளிநாட்டுகாரன் வந்தால்தான் எங்களுக்கு வேலை கிடைக்கும் என்றால் நீங்கள்(மத்திய அரசு) எதற்கு இருக்கிறீர்கள். எங்களுக்கு வேலை உருவாக்கி தருவதைவிட உங்களுக்கு என்ன வேலை? உங்களால் வேலை தரமுடியாது என்றால் பதவியை விட்டு போங்கள் என்றும் வால்மார்ட் வந்துதான் தரமான பொருளை தருவான் என்றால் இதுவரை வியாபாரிகள் தரம் கெட்ட பொருளையா விற்கிறார்கள்? என கேள்வி எழுப்பி வால்மார்ட் வருவதன் நோக்கம் மக்களை கொள்ளையடிக்கவே என்றும் இதுநாள் வரையில் பெரிய கடை, வியாபாரிக்கும் தரைக்கடை, தள்ளுவண்டி வியாபாரிகளுக்கும் இடையில் ஒற்றுமையின்றி இருந்தோம். தற்போது ஒன்றுபட்டு வால்மார்ட்டை எதிர்க்கிறோம். அதனால் வால்மார்ட்டை விரட்டியடிப்பது உறுதி என்று பேசினார்.

அடுத்து ஆட்டோ ஓட்டுநர் பாதுகாப்பு சங்கத்தின் சிறப்பு தலைவர் தோழர்.தர்மராஜ் பேசுகையில் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய மூலதனம் நுழைவதை எதிர்த்து பலபேர் போராடி வருகிறார்கள். பிரதமர் மன்மோகன் சிங் பூனை கண்ணை கட்டிகொண்டு இருப்பது போல இருக்கிறார். கண்ணை திறந்துபார் எவ்வளவு பேர் வேலையில்லாமல் அவதிக்குள்ளாகிறார்கள். சென்ற மாதத்தில் சித்தார் வெசல்ஸ் என்ற கம்பெனியில் வேலை தராததால் மனமுடைந்து தீக்குளித்து இறந்துபோனார் ஒரு இளைஞர் என்பதை பற்றி நினைவுபடுத்தியதோடு அந்நிய மூலதனம் நம் நாட்டில் நுழைவதற்க்கும் வேலையின்மைக்கும் பல்வேறு விதமான துயரங்களுக்கும் காரணமான தனியார்மய கொள்கைக்கதிராக போராட வேண்டும் என்று பேசினார்.

சிறப்புரை நிகழ்த்திய மனித உரிமை பாதுகாப்பு மைய புதுக்கோட்டை மாவட்ட செயலர் வழக்கறிஞர் இராமலிங்கம் நமது பிரதமர் மனித முகம் கொண்டவர் அல்ல நாய் முகம் கொண்டவர் என்றும் அதனால்தான் மக்கள் படும் துயரத்தை பற்றி கவலைப்படாமல் அமெரிக்காவின் அல்லக்கையாக செயல்படுகிறார். வால்மார்ட்டையும், அந்நிய மூலதனத்தையும் கொண்டு வருகிறார் இதனால் சிறு தொழில் மட்டுமல்ல, எல்லாத் துறைகளில் உள்ளவர்களும் பாதிக்கப்படுகிறார்க்ள் என்பதை பல்வேறு உதாரணங்கங்களுடன் பேசியதோடு, இதற்கு காரணமான தனியார்மயம், தாரளமயம், உலகமயக் கொள்கைகளுக்கு எதிராக போராடவேண்டிய தேவையை உணர்த்தி பேசி ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்தார்.

ஆர்ப்பாட்ட்த்தின் இடை இடையே மைய கலைகுழுவினரின் புரட்சிகர பாடல்கள் இடம்பெற்றது. திரளானவர்கள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை சிறப்பித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒத்த கருத்துள்ளவர்கள் ஜனநாயக பூர்வமாக திரட்டி நடத்தியது சிறப்பு என்று பேச்சாளராக வந்த மற்ற அமைப்பினர் கருத்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடதக்கது.

_________________________________________________________________________

செய்தி: அனைத்து தரைக்கடை வியாபாரிகள் பாதுகாப்பு சங்கம், திருச்சி.

__________________________________________________________________________