Monday, April 21, 2025
முகப்புமறுகாலனியாக்கம்கார்ப்பரேட் முதலாளிகள்திட்டமிட்டு திணிக்கப்படுகிறது செயற்கை மின்வெட்டு !

திட்டமிட்டு திணிக்கப்படுகிறது செயற்கை மின்வெட்டு !

-

திட்டமிட்டு திணிக்கப்படுகிறது செயற்கை மின்வெட்டு,

பவரை கையிலெடுத்தால் பவர் வரும்

கடலூர் பொதுக்கூட்டம் மற்றும் கலை நிகழ்ச்சி

கடலூர் பொதுக்கூட்டம்மிழகத்தில் நிலவும் கடுமையான மின்வெட்டால், சிறுதொழில், விவசாயம், வியாபாரம் உள்ளிட்டு அனைத்து தொழில்களும் அழிந்து வருவதன் மூலம் மக்களின் வாழ்க்கை முற்றிலுமாக சூறையாடப்படுவதைக் கண்டித்தும், நோக்கியா, போர்டு, ஹூயுண்டாய், ரிலையன்ஸ் போன்ற பன்னாட்டு கம்பெனிகளுக்கும் சென்னையில் உள்ள ஷாப்பிங் மால்கள், நீச்சல் குளங்கள், உல்லாச விடுதிகளுக்கும் தடையற்ற மின்சாரம் வழங்குவதை ரத்து செய்து சமச்சீர் மின்வெட்டை அமல்படுத்தக் கோரியும் ம.க.இ.க., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு., வி.வி.மு. ஆகிய அமைப்புகளின் சார்பில் பிரச்சார இயக்கம் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கடந்த 5.1.2013 அன்று கடலூரில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, கடலூர் கிளையின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இப்பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றிய தமிழ்நாடு மின்துறை பொறியாளர் அமைப்பின் தலைவர் காந்தி தனது உரையில், “மின்வெட்டும், மின்வெட்டால் இன்று சாதாரண மக்கள் பயன்படுத்தும் இன்வெர்ட்டர், ஜெனரேட்டர், போன்றவை விலை உயர்த்தப்படுவதும் முதலாளிகளின் லாபம் அதிகரிப்பதற்கான அரசின் கொள்கைகளின் விளைவுதான்” என்பதை விளக்கினார்.

“ஒரு ரெனால்ட்ஸ் பேனாவின் உற்பத்திச் செலவு வெறும் 70 பைசாதான். ஆனால், அதை கடையில் ரூ 10க்கு விற்கிறார்கள். கறிச் சிக்கன் என்று நாம் சாப்பிடுவது உண்மையில் கோழிக் கறியல்ல. மக்களின் உணர்ச்சிகளை தூண்டி  நுகர்வு வெறியை வளர்த்து விடுகிறார்கள். இவற்றை ஊக்குவிப்பதுதான் உலகமயமாக்கல் கொள்கை. இன்றைக்கு மின்துறையை முதலாளிகளின் சந்தைக்கும், கொள்ளைக்கும் பங்கு போட்டுக் கொள்ள அரசே உருவாக்கியிருக்கும் ஒரு ஏற்பாடுதான் டெல்லியில் உள்ள மின்வாரிய ஒழுங்குமுறை மேலாற்று வாரியம்.  வேலை. மின்சாரத் துறையின் தேவை, யாருக்குத் தர வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் கொண்ட புரோக்கர் கும்பல்தான் இவர்கள். தனியார் மயம், தாராள மயம், உலக மயக் கொள்கைகள்தான் இதன் ஆணிவேர். எனவே இதை எதிர்த்துப் போராடுவது ஒன்றுதான் மின்வெட்டை தீர்க்க நிரந்தரமான ஒரு வழி” என்றார்.

2 மணி நேரத்துக்கும் அதிகமான பேச்சின் போது மக்கள் ஆர்வமாக அமைதியாக குறிப்பெடுத்துக் கொள்வதை கவனிக்க முடிந்தது.

அடுத்துப் பேசிய மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜூ,

“கடந்த ஓராண்டுக்கு மேலாக மின் வெட்டால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்தில், தஞ்சை மாவட்டப் பகுதியில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு வருகிறார்கள். திருப்பூரில் பின்னலாடைத் தொழில் உள்ளிட்ட அனைத்து ஆயத்த ஆடை தொழில்களும் பாதிக்கப்பட்டு தெருவில் நின்று போராடுகிறார்கள். மின்சாரம் இல்லை, பற்றாக்குறை என்பது பொய். கருணாநிதியும் ஜெயலலிதாவும் வெளிநாட்டு கம்பெனிகளுடன் போட்டுக் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின்படி நமது நாட்டை சூறையாடக் காட்டிக் கொடுக்க கிளம்பி விட்ட தேசத் துரோகிகள். மன்மோகன் சிங்கும், ப. சிதம்பரமும், மான்டேக் சிங் அலுவாலியாவும் நமது நாட்டைக் காட்டிக் கொடுத்த ஒன்றாம் நம்பர் கிரிமினல்கள். இந்த ஓட்டுப் பொறுக்கி கட்சிகள் யாரும் தாங்கள் மின்சாரத்தை தனியாருக்கு விடப் போகிறோம் என்றா ஓட்டுக் கேட்டார்கள்? அப்படிக் கேட்டு இருந்தால் நாம் ஓட்டுப்போட்டு இருப்போமா”

என்று கேள்வி எழுப்பிய போது மக்கள் கைதட்டி வரவேற்றனர்.

“இனி மாற்று தேர்தல் பாதையல்ல, புரட்சிகர அமைப்புகளின் போராட்ட வழிமுறையே தீர்வு! இனி சட்டத்தின் ஆட்சி நடக்காது. சட்டத்தை மீறி தெருப்போராட்டங்களின் மூலம் அரசியல் அதிகாரத்தை மக்களே கையிலெடுக்கப் போராட வேண்டும்”

என்று முடித்தார்.

இறுதியாக மக்கள் கலை இலக்கிய கழக மைய கலைக்குழுவின் நாடகமும், கலை நிகழ்ச்சியும் மக்களின் அரசியல் பார்வையை தங்களின் வாழ்க்கையின் அன்றாடம் அவலங்களுக்கும் கொடுமைகளுக்கும் காரணம் இன்றைய பொருளாதார அமைப்புதான் என்று அம்பலப்படுத்தியது.

குறிப்புகள்:

1. இப்பொதுக்கூட்டத்தில் கூம்பு வடிவ ஒலிபெருக்கி கட்டக்கூடாது என்று சட்டம் பேசிய போலீசு மைக்செட் போட்டவரை மிரட்டியது. பின் பு.மா.இ.மு., hrpc தோழர்கள், ‘குழாயை கழற்ற முடியாது, எல்லா கட்சிக்கும் இப்படித்தான் செய்கிறீர்களா’ என்று வாதிட்டு மற்ற தெருக்களில் அவிழ்ப்பதை நிறுத்தினோம்.

2. பொதுக்கூட்டத்தின் போது மின்வெட்டு ஏற்பட்டு மக்கள் குடியிருக்கும் தெருக்களில் அமைதியான சூழ்நிலையில் பொதுக்கூட்ட கருத்துக்கள் பகுதி மக்களிடம் வெகுவாகச் சென்றது. பகுதிப் பெண்களும், மக்களும் கணிசமாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, கடலூர்