Monday, April 21, 2025
முகப்புபார்ப்பனிய பாசிசம்சிறுபான்மையினர்ஷாருக்கான் பாதுகாப்பிற்கு பாகிஸ்தான் கவலை ஏன் ?

ஷாருக்கான் பாதுகாப்பிற்கு பாகிஸ்தான் கவலை ஏன் ?

-

மை நேம் இஸ் கான் - கார்ட்டூன்மாத் உத் தாவா என இன்று அறியப்படும் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் தலைவர் ஹபீப் சயீத் கடந்த சனியன்று பாகிஸ்தானின் எக்ஸ்பிரஸ் சேனலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மும்பை பாலிவுட் திரைப்பட நடிகர் ஷாருக்கானை தனது நாட்டில் வந்து வசிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார். முன்னதாக அவுட்லுக் டர்னிங் பாயிண்ட் என்ற நியூயார்க் டைம்ஸ் இன் மேகசினுக்கு அளித்த நேர்காணல் ஒன்றில், ‘இந்தியாவில் உள்ள சில அரசியல்வாதிகள் தன்னை முசுலீம் என்பதால் வெறுத்து ஒதுக்குவதாகவும், பகைமை பாராட்டி மிரட்டுவதாகவும், முசுலீமாக இருப்பதால் தனது தேசபக்தியை கேள்விக்குள்ளாக்குவதாகவும்’ ஷாருக்கான் வருத்தப்பட்டிருந்தார்.

இதையடுத்து ‘பாகிஸ்தானில் நீங்கள் விரும்பியபடி வாழ முடியும், எனவே இந்தியாவிலிருந்து வர விரும்பினால் நீங்கள் இங்கு வசிக்க எல்லா உதவியும் தருவோம்’ என ஹபீப் சயீத் கூறியிருந்தார். இதனைக் கேள்விப்பட்ட பிறகு முதலில் மிகவும் அதிர்ச்சியடைந்த ஷாருக்கான் பின்னர் கோபமடைந்ததாக அவருடைய வட்டாரத்திலிருந்து தகவல்கள் கசிய விடப்படுகின்றது. ஒருவேளை இதற்கு அவர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை எனில், தானொரு ‘நல்ல’ முசுலீம் என்று நிரூபிக்காவிட்டால் அவர் முசுலீம் என்பதற்காக வரும் காழ்ப்புணர்வுகள் மேலும் அதிகரிக்கும்.

செப். 11 க்குப் பிறகு உலகளாவிய பயங்கரவாதம் என்ற பெயரில் அமெரிக்கா நடத்தி வரும் யுத்தத்தை நியாயப்படுத்தியும், அதை எப்படி புரிந்து கொண்டால் நமக்கு நல்லது என இந்திய முசுலீம் மக்களுக்கு எடுத்துச் சொன்ன மை நேம் இஸ் கான் திரைப்படத்தில் நடித்தவர் ஷாருக்கான். படத்தில் தீவிரவாத முசுலீம்களை இவரே பிடித்துக் கொடுத்து விட்டு தன்னைப் போன்ற அப்பாவி முசுலீம்களை பயங்கரவாதிகள் என்று சித்தரிப்பதை மெல்லிய எதிர்ப்போடு அமெரிக்க அரசுக்கு புரிய வைப்பார்.

எனினும் இதற்காக அமெரிக்கா அவரை சும்மா விட்டு விடவில்லை. அவரது பெயரில் உள்ள கான் என்ற பெயருக்காக பல மணி நேரம் விமான நிலையத்தில் அலைக்கழித்தனர். இசுலாமியப் பெயர் இருந்தாலே இத்தகைய மிரட்டல்கள் இந்தியாவில் மட்டுமல்ல, அமெரிக்காவிலும் சகஜம். ஆனாலும் ஷாருக்கான் பொதுவில் இந்துமதவெறியர்கள் பாராட்டும் வண்ணம் ஒரு ‘நல்ல’ முசுலீமாகவே காட்டிக் கொள்கிறார். இதற்கு இவரை விட நல்ல எடுத்துக்காட்டாக அப்துல் கலாமைக் கூறலாம். அதனால்தான் கலாமை குடியரசுத் தலைவராக்கி அழகு பார்த்தது பாரதிய ஜனதா. பதிலுக்கு கலாமும் அவாளின் செல்லப் பிள்ளையாக வலம் வந்தார்.

ஷாருக்கானை கலாமோடு நேருக்கு நேர் ஒப்பிட முடியாது. ஏனெனில் இவர் வெறும் நடிகர் என்பதைத் தாண்டி ஒரு தரகு முதலாளி. பெரிய பட்ஜெட் படங்களைத் தயாரிப்பது, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கிரிக்கெட் கிளப்பை விலைக்கு வாங்கி இலாபகரமாக நடத்துவது என்று மிகப்பெரும் தொழிலதிபர். இவரைப் போன்ற மேட்டுக்குடி முசுலீம்கள் சாதாரண முசுலீம்களைப் போன்ற மதப்பிடிப்பு கொண்டவர்களல்ல. மும்பையில் இவர்களுக்கும் மேட்டுக்குடி இந்துக்களுக்கும் பெரிய அளவு வித்தியாசமில்லை.

புதிய பொருளாதார கொள்கையை தொடர்ந்து வந்த பண்பாட்டுத் தொழிலில் வெற்றிபெற்றவர் ஷாருக்கான். முதலில் விளம்பரங்களில் தோன்றி, பிறகு நாடகங்கள், தொலைக்காட்சி தொடர்கள், பின்னர் பாலிவுட், அரதப் பழைய இந்தி காதல் திரைப்படம், அப்புறம் கொஞ்சம் மசாலா, தீவிரவாதம், வடகிழக்கு என அங்கங்கு நிறையவே  மசாலா தடவிய படங்களில் நடித்தார்.

ஷாருக்கானின் படத் தயாரிப்பு நிறுவனம் சோனி நிறுவனத்துடன் இணைந்து உலக அளவில் திரைப்படத் தயாரிப்பில் இறங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை ஐபிஎல் க்காக களமிறக்கியிருக்கிறார். அவரது அணி சாம்பியன் பட்டம் பெற்ற போதிலும் ‘மைதானத்தில் போதையோடு வந்தார், டான்ஸ் ஆடினார், புகை பிடித்தார்’ என ஏகப்பட்ட சர்ச்சைகள். இருப்பினும் அவரது நட்சத்திர அந்தஸ்தை கருத்தில் வைத்து இவை பொறுத்துக் கொள்ளப்பட்டன. தற்போது இவர் தான் முசுலீம் என்பதால் பாதிக்கப்பட்டதாக கூறுகிறார். தனது பிள்ளைகளுக்கு பெயரே இந்துப் பெயர்தான் என்றும், தனது தந்தை சுதந்திரப் போராட்ட வீரராக இருக்கையில் தனது தேசபக்தியை சந்தேகப்படலாமா என்றும் வினவுகிறார்.

ஷாருக்கான் சினிமா முதலாளிஇவருக்கும் சாதாரண உழைக்கும் மக்களாக இருந்து, பொய்க் குற்றச்சாட்டுகளின் கீழ் இந்திய சிறைகளில் இருக்கும் முசுலீம் மக்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. முசுலீம் என்ற ஒரே காரணத்தால் வாடகைக்கு வீடு கிடைக்காமல், போகுமிடமெல்லாம் சந்தேகக் கண்ணோடு நோக்கும் நிலைமையில் அவர் இல்லை. கையில் காசே இல்லை என சாமான்யன் ஒருவனும், மல்லையாவும் சொல்வதற்கு உள்ள வித்தியாசம்தான் இது. ஆனால் பாதிக்கப்பட்ட இசுலாமிய மக்களில் ஒருவராக தன்னைக் காட்டிக் கொள்ளும் ஷாருக்கான் எந்த வேளையில் அவர்கள் பாதிக்கப்பட்ட போதிலும் நேசக்கரம் நீட்டியவரல்ல. நல்ல தரகு முதலாளியாக வளர்ந்து வரும் கான் அதற்கேற்பவே தன்னை வெளிப்படுத்திக் கொண்டு வருகிறார்.

இதனால் ஷாருக்கானை முசுலீம் என்று மிரட்டியவர்கள் இல்லையா என்றால் இருக்கிறார்கள். என்னதான் மேல்நிலையில் இருந்தாலும் இத்தகைய முசுலீம்கள் ‘இந்து மதவெறியர்களின்’ அங்கீகாரத்தைப் பெற்றிருக்க வேண்டும். ஷாருக்கானே அப்படி அடங்கி இருந்தாலும் இவர்கள் விடுவதாக இல்லை. பார்ப்பன ஊடகங்களும், இந்துமதவெறி அமைப்புகளும் அவரை தொடர்ந்து துரத்தியே வருகின்றன.

ஷாருக்கானை மிரட்டியவர்கள் ஒருபுறமிருக்க, சங் பரிவார் கும்பல் தற்போது அவருக்கு வந்திருக்கும் லஷ்கரின் அழைப்பை குறிப்பிட்டு நவ.26 மும்பை தாக்குதலோடு அவரை தொடர்புபடுத்த முயற்சிக்கின்றது. பத்திரிகைகளும் செய்தி என்ற பெயரில் இதனை ஊக்குவிக்கின்றனர். தினமலரோ பாக் பயங்கரவாதி ஷாருக்கானுக்கு அழைப்பு விடுவிக்கிறார் என்று விசமத்தனத்துடன் செய்தியை வெளியிடுகிறது. இந்துமதவெறியர்களை கண்டிப்பதற்க்காக மதச்சார்பற்ற, ஜனநாயக, புரட்சிகர சக்திகளோடு ஷாருக்கான் பெரிய அளவு அணி சேர்ந்ததில்லை. என்றாலும் அவரை இந்துமதவெறியர்கள் சும்மா விடுவதில்லை. எனில் சாதாரண முசுலீம்கள் இந்தியாவில் எத்தகைய அச்சுறுத்தலோடு வாழ்கிறார்கள் என்பதை விளக்கத் தேவையில்லை.

ஷாருக்கான் பிரச்சினையை வைத்து பாகிஸ்தான் அமைச்சர்களெல்லாம் தலையிட்டு அவருக்கு பாதுகாப்பு கொடுக்குமாறு பேசுகிறார்கள். தினமலர் போன்ற ஊடகங்களும் அதை பெரிதுபடுத்தி வெளியிடுகின்றன. இந்தியாவில் ஒரு முசுலீமுக்கு பாதுகாப்பு இல்லை என்றால், அது குறித்து பேசுவதற்கு எவருக்கும் உரிமை உண்டு. அப்படி இல்லை என்று பேசுபவர்கள் குஜராத் 2002 இனப்படுகொலைக்கு பதில் சொல்ல வேண்டும். பாகிஸ்தானும் மற்ற நாடுகளும் மட்டம் தட்டி பேசுமளவு இங்கு முசுலீம்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதுதான் ஆகப்பெரிய அவமானமே அன்றி, பாகிஸ்தான் பேசுவது அல்ல.

மேலும் படிக்க