Wednesday, April 30, 2025
முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்பாலியல் வன்முறையை எதிர்த்தால் பயங்கரவாதமா ?

பாலியல் வன்முறையை எதிர்த்தால் பயங்கரவாதமா ?

-

டெல்லியில் நடநத மாணவி மீதான பாலியல் வன்முறையை கண்டித்து மாணவர்களும் பொதுமக்களும் நடத்துகின்ற‌ போராட்டங்கள், அவற்றை ஒடுக்க நினைகின்ற அரசின் காவல்துறை அராஜகம் இவற்றை உழைக்கும் மக்களின் கவனத்திற்கு கொண்டுவரவும், பாலியல் ரீதியான வன்கொடுமைகள் நடப்பதற்கு பெண்களை போகப் பொருளாய், அடிமைகளாய் நடத்தும் ஏற்கனவே உள்ள சமூகக் கட்டமைப்பு, மாணவர் இளைஞர்களின் சிந்தனையை சீரழிக்கும் மறுகாலனியாக்க விளைவுகளே காரணம் என்பதை மக்களிடையே எடுத்துக் கூறவும்  27.12.2012 அன்று சென்னை பல்லாவரம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்த சென்னை பெண்கள் விடுதலை முன்னணி திட்டமிட்டது.

ஆர்ப்பாட்டத்திற்கு அமைதி வழங்க உள்ளுர் போலீசு, உளவுத்துறைக்கு போகச் சொன்னது. உளவுத்துறையும் அனுமதி வழங்குகிறோம் என்று முதலில் சொன்னார்கள். 26.12.2013 அன்று மாலை 7.00 மணிக்கு மேல் நமது அலுவலக முகவரிக்கு அனுமதியை மறுத்து விட்டனர் என்ற செய்தியை அனுப்பினார்கள். ‘அனுமதி கொடுப்பதற்கு 5 நாட்கள் முன்னதாக மனு கொடுக்க வேண்டுமாம். அனுமதி மறுப்பதை மட்டும் சில மணி நேரங்களுக்கு முன்னால் கொடுப்பார்களாம்.’ இது தான் காவல்துறை சட்டத்தின் ஜனநாயகம்.

அனுமதி மறுப்பதற்கு மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு இருப்பதாக 26.12.2013 ம் தேதி சற்று முன்பாகத்தான் தகவல் தெரிந்ததாம். ஆர்ப்பாட்டம் நடத்தும் போது கலவரமாக பரவி, பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்துவார்கள் என நம்பத்தகுந்த‌ தகவல்கள் கொஞ்ச நேரத்திற்கு முன்புதான் அறிந்தார்களாம். எனவே அனுமதியை மறுத்தார்களாம். கலவரம் செய்பவர்கள் அனுமதி வாங்கிக் கொண்டா செய்வார்கள் என்று குழந்தை கூட கேள்வி கேட்கும்.

ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி இல்லை என்றவுடன் தோழர்கள் மலைக்கவில்லை. 1 குடம் குடிநீருக்கு குடத்தைத் தூக்கிக் கொண்டு லாரி தண்ணீர் பிடிக்க ஓடிக் கொண்டிருக்கும் பெண்கள் லாரி வரவில்லை எனில் தன்னெழுச்சியாக மறியல் செய்தால் மறியல் செய்யக் கூட 30 நாட்களுக்கு அனுமதி வாங்க வேண்டும் என்றும் குண்டர் சட்டம் போடும் அரசின் கருவிதானே உளவுதுறை. இவர்கள் அனுமதியை மறுத்ததில் ஆச்சரியம் இல்லை என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த பெ.வி.மு தோழர்கள் அடுத்த கட்ட வேலைகளுக்கு தயாரானார்கள்.

அனுமதி மறுக்கப்பட்ட செய்தியினை உடனடியாக பெண்களுக்கு சொன்னார்கள். சுவரொட்டி அடித்து ஆர்ப்பாட்டத்தில் கலத்துக் கொள்ள இருக்கும் பொதுமக்களுக்கு காவல்துறை அனுமதியை மறுத்துள்ளது என்ற செய்தியையும், அதே இடத்தில் வேறோரு நாள் அனுமதி பெற்று ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்பதை உறுதியாக அறிவித்தனர்.

சுவரொட்டியை பார்க்க வருபவர்களை வேவு பார்க்க உளவுத்துறை அங்கே குவிந்தது. ‘போராட்டமே மகிழ்ச்சி’ என்ற மார்ச்சின் வழி வந்த பெ.வி.மு தோழர்கள் அடுத்ததாக நீதிமன்றத்திற்கு போராட தயாரானார்கள். ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கோரி போன போது அங்கே புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி பொதுக் கூட்டத்திற்கும் இதே மாதிரி காரணங்களால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது.

இரண்டு வழக்குகளும் ஒன்றாகவே எடுத்துக் கொள்ளப்பட்டன. அதுவும் மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் போராடி வழக்கை எடுத்துக் கொள்ள வைத்தனர். நீதிபதி மனுவை பார்த்தவுடன் ‘இந்தப் பிரச்சனைக்கு ஏன் தடை’ என்று காவல்துறையைப் பார்த்து கேட்டாலும் 19.1.2013 ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்கினாலும் ‘100 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும், பொது அமைதிக்கு இடையூறு வரக் கூடாது’ என்பது போன்ற‌ 16 நிபந்தனைகள் போடப்பட்டன.

தினமும் நீதிமன்றத்தில் விடாது சென்று அனுமதியை பெற்ற தோழர்கள் மறுபடியும் உளவு துறைக்கு கொண்டு சென்ற போது ‘இன்று வா, நாளை வா’ என்று இழுத்தடிக்கப்பட்டார்கள். ஆர்ப்பாட்டத்திற்கு முதல் நாள் தான் அனுமதிக்கொடுத்தார்கள். அதனை எடுத்துக் கொண்டு வந்து உள்ளூர் காவல் நிலையத்தில் கொடுத்தால் “அதற்குள்ளாகவா ஆர்டர் வாங்கி விட்டீர்கள்” விடாம போராடுறீங்களே” என்றனர்.

ஆச்சரியப்பட்டு நம்மை பாராட்டுகிறார்களாம். இதன் பின்னே என்ன உள்ளது என்பது நமது தோழர்கள் அறியாதது அல்ல. அது 19.1.2013 அன்று வெளிப்படையாக தெரிந்தது.

உள்ளூர் போலீஸ் ‘அனுமதி கேட்ட இடத்தில் இருந்து உட்புறமாக நடத்த வேண்டும்’ என்றது, பேருந்து நிலையத்திற்கு வரும் மக்களது பார்வையிலிருந்து விலக்கி வைக்கவே இந்த ஏற்பாடு. வாக்குவாதத்திற்குப் பின் ஆர்ப்பாட்டம் துவங்கியது.

தோழர் அமிர்தா தலைமையேற்று நடத்தினார். அவர் பேசும் போது

சமூகத்தை சாக்கடையாக மாற்றியுள்ளனர் அதிலிருந்து கொசுக்கள் உருவாகிறது. கொசுக்களை ஒழிப்பதை விட சாக்கடையைத் தான் ஒழிக்க வேண்டும். சாதி ஆதிக்கம், ஆணாதிக்கம் மிக்க‌ சமூகமாய் உள்ளது. இதனை மாற்றாமல் பெண்களது நிலைமை மாறாது.

என்பதை வலியுறுத்திப் பேசினார்.

சிறப்புரை ஆற்றிய மக்கள் கலை இலக்கிய கழக தோழர் துரைசண்முகம்.

பெண்களது பிரச்சனைக்குப் பெண்களே காரணம், ஆடைகளே காரணம் என்பவர்களுக்கு பதில் கொடுக்கும் வகையில் பெண்களை போகப்பொருளாய், அடிமைகளாய், நுகர்வுபொருள் பிரியர்களாய் ஆக்கி வைத்துள்ள‌ இந்த நிலவுடைமை சமூகக் கட்டமைப்பை, பார்ப்பனீய பண்பாட்டை மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் எளிமையாக விளக்கிப் பேசினார்.

சட்டத்தை பாதுகாப்பதாக் சொல்லும் காவல்துறையிலேயே பெண் போலீசுக்கு பாதுகாப்பு இல்லை. இதில் பெண்களுக்கு பாதுகாப்புக்கு சட்டத்தை கடுமையாக்கி பயனில்லை. திட்டமிட்டே நுகர்வோர் கலாச்சாரத்தை வள்ர்த்து மலிவான் விலைக்கு செல், மெமரிகார்டுகளை கொடுத்து இளைஞர்களின் சிந்தனையை சிதறடிக்கும் மறுகாலனியாக்கத்தைப் பற்றி விளக்கிப் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் 100 பெண்கள் பங்கேற்றனர், தோழமை அமைப்புத் தோழர்கள் கூட்டத்தில் பங்கேற்க இயலவில்லை பிரதான சாலையில் நம்மை நிற்கவிடாமல் உட்பகுதிக்கு காவல்துறை விரட்டியதையும் தோழர்கள் சாதகமாக பயன்படுத்தினர். ஆர்ப்பாட்டம் நடத்திய நேரம் மின்வெட்டால் பாதிக்கப்பட்ட நேரத்தை பயன்படுத்தி வியாபாரிகளும் பொதுமக்களும் நமது தோழர்கள் எழுப்பிய முழக்கங்களால் ஈர்க்கப்பட்டு அதிக அளவில் நின்று கவனித்தனர்.

கல்லூரி மாணவிகள், தொழிலாளர் பெண்கள் நமது முழக்கங்களையும் தோழர்களது பேச்சையும் அங்கீகரிக்கும் வகையில் ஆர்வமோடு பங்கேற்றனர்.

தகவல்:
பெண்கள் விடுதலை முன்னணி, சென்னை