Wednesday, April 30, 2025
முகப்புபுதிய ஜனநாயகம்பெண் விடுதலை கானல் நீரல்ல !

பெண் விடுதலை கானல் நீரல்ல !

-

புரட்சியில் மகளிர்
பிரெஞ்சு புரட்சியில் பெண்கள்

லைநகர் டெல்லியில் துணை மருத்துவ மாணவி கும்பல் பாலியல் வல்லுறவுத் தாக்குதலுக்கு ஆளானதைத் தொடர்ந்து நடந்த ஆர்ப்பாட்டங்கள் தற்போதைக்கு ஓய்ந்துவிட்டன. ஆனால் பெண்கள் மீதான பாலியல் வன்முறைத் தாக்குதல்கள் இன்னமும் தொடர்கின்றன. தூக்கில் போடுவது, ஆணுறுப்பை வெட்டுவது – எனத் தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டுமென்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரியபோதிலும், இத்தகைய கொடூரங்களில் ஈடுபடும் கிரிமினல்கள் எவரும் அதற்காக அச்சப்படுவதாகத் தெரியவில்லை.

இதற்கான காரணம், இன்றைய சமூக, பொருளாதார, கலாச்சார, அரசியலமைப்பில் உள்ளது. இந்தியச் சமூகமானது ஜனநாயகத்துக்கான அரசியல் போராட்டங்களின் ஊடாக உருவாகி வளர்ந்த சமூகமல்ல. நீண்ட நெடுங்காலமாக நீடித்துவரும் சாதி, மத, ஆணாதிக்கம் நிறைந்த நிலப்பிரபுத்துவ தந்தைவழி சமூக அமைப்பும், அதற்கு அக்கம்பக்கமாக தரகு முதலாளித்துவ உற்பத்திமுறையும், அதற்கேற்ற அரசியல், பண்பாட்டு நிறுவனங்களும் காலனிய காலத்திலிருந்து திணிக்கப்பட்டு நிலைநாட்டப்பட்டன.

நிலப்பிரபுத்துவ ஆணாதிக்கப் பிற்போக்குத்தனம் பெண்களின் மீதான ஒடுக்குமுறைக்கு-பாலியல் தாக்குதலுக்கு ஆணிவேராக இருக்கும் அதேநேரத்தில், அதன் மீது திணிக்கப்பட்டுள்ள உலகமயமாக்கம் இத்தாக்குதல்களை முன்னெப்போதும் கண்டிராத வகையில் தீவிரப்படுத்தியிருக்கிறது. ஒருபுறம், பெண்களை நுகர்வுப் பண்டமாக்கி எவ்வித விழுமியங்களுமின்றி பாலியல் வன்முறைகளைத் தீவிரமாக்கியிருக்கும் உலகமயமாக்கம்; மறுபுறம், ஆதிக்க சாதி மற்றும மத அமைப்புகள் பெண்கள் மீது கேள்விக்கிடமற்ற முறையில் தொடுக்கும் தாக்குதல்கள், கட்டுப்பாடுகள், கௌரவக் கொலைகள்- என இத்தாக்குதல்கள் அதிகரித்திருக்கின்றன.

சாதியானாலும், பாலியல் வன்கொடுமையானாலும் இரண்டுக்குமே அடிப்படையாக உள்ள அரசியல்- பொருளாதார கட்டமைவை இன்றைய அரசு பாதுகாக்கிறது. பெண்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதாகக் கூறப்படும் அரசு எந்திரமே பெண்களுக்கு எதிராக உள்ளது. அதிகாரவர்க்கம், போலீசு, இராணுவம், நீதித்துறை முதலான அரசின் உறுப்புகளே பெண்களுக்கு எதிரான முதன்மைக் குற்றவாளிகளாக உள்ளன. அதை யாரும் தட்டிக் கேட்கவோ, நீதியைப் பெறவோ முடியாதபடி சட்டத்துக்கு மேலானதாக, தனிவகைச் சாதியாக இருந்துகொண்டு சமூகத்தையே அச்சுறுகின்றன. ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தைக் கொண்டு பெண்கள் மீது கேள்விமுறையற்ற வன்முறைகளில் ஈடுபடும்இராணுவத்தினரை சிவில் கோர்ட்டுகளில் கிரிமினல் சட்டங்களின்கீழ் தண்டிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட நீதிபதி வர்மா கமிட்டி பரிந்துரைத்த முக்கியமான சில சீர்திருத்தங்களைக்கூட ஏற்க மறுக்கிறது அரசு. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பற்றிய ஆதாரங்கள் குவிந்துள்ள போதிலும், மாநில போலீசு இயக்குனர் முதல் மகளிர் நல அமைச்சகம், வாரியங்கள் உள்ளிட்ட எந்த அரசாங்க உறுப்புகளும் தமது பரிந்துரைகளை வர்மா கமிஷனுக்குக் கொடுக்கவுமில்லை.

வரதட்சிணை தடுப்புச் சட்டமும், வன்கொடுமைத் தடுப்புச் சட்டமும் பெண்கள் மற்றும் தாழ்த்தப்பட்டோர் மீதான வன்முறைத் தாக்குதல்களை தடுக்காத நிலையில், சட்டங்களை அமலாக்கும் இன்றைய அரசியலமைப்பு முறையே பெண்களுக்கு எதிராக உள்ள நிலையில், கடுமையான சட்டங்களாலும் தண்டனைகளாலும் பெண்கள் மீதான வன்முறைத் தாக்குதல்களுக்கு முடிவு கட்டிவிட முடியாது. நிலப்பிரபுத்துவ தந்தைவழி சமூக அமைப்பு, மறுகாலனியாக்கம் – எனுமிரு நுகத்தடிகளையும் அடித்து நொறுக்காமல் பெண்கள் மீதான வன்முறைகளை தடுத்து நிறுத்திடவும் முடியாது.

இவ்விரு நுகத்தடிகளையும் கட்டிக்காத்து வருகின்ற இன்றைய சமூக, பொருளாதார, அரசியல், கலாச்சார அமைப்பை அடியோடு மாற்றியமைக்கும் திசையில், குடும்பம் உள்ளிட்டு சமூகத்தின் சகல அரங்குகளிலும் ஜனநாயகத்தை நிலைநாட்டும் போராட்டங்களைக் கட்டியமைப்பதும், இன்றைய அரசியலமைப்பு முறையை வீழ்த்திவிட்டு புதிய ஜனநாயக அரசியலமைப்பை நிறுவும் திசையில் போராட்டங்களை வளர்த்தெடுப்பதுமே ஒடுக்கப்பட்டுள்ள பெண்ணினத்துக்கு விடுதலையையும் உரிமைகளையும் பெற்றுத்தரும்.

________________________________________________________________________________
– புதிய ஜனநாயகம், பிப்ரவரி – 2013
________________________________________________________________________________