
“இப்படி ஒரு நல்ல மனிதரை நான் நீதிமன்றத்தில் எதிர்கொண்டதேயில்லை” குற்றம் நிரூபிக்கப்பட்டு தீர்ப்பை எதிர்நோக்கி நிற்கும் ஒருவரைப் பார்த்து நீதிபதி சொன்ன வார்த்தைகள் இவை.
“இவர் குற்றம் செய்திருப்பாரென்பதை எங்களால் நம்பவே முடியவில்லை. ஆனாலும் சாட்சியங்களின் வலுவால் குற்றவாளி என்று உறுதி செய்கிறோம்” – நீதிமன்றத்தின் ஜூரிகள் உதிர்த்த வார்த்தைகள் இவை. அவர்களில் சிலருக்கு சொல்லும்போதே கண்களில் நீர் கோர்த்து விட்டது.
குற்றவாளியின் சார்பில் ஆஜராகி வழக்காடிய வழக்கறிஞரோ, “இது காப்பிய நாயகர்களின் வீழ்ச்சிக்கு நிகரானது” என்கிறார். மேலும், “இவரைச் சிறைக்கு அனுப்பாமல் ருவாண்டாவுக்கு சமூக சேவை செய்ய அனுப்புங்கள்” என்றும் மன்றாடுகிறார்.
இந்தக் காட்சிகள் நடப்பது அமெரிக்காவில் என்பதால், முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டனில் இருந்து மைக்ரோசாஃப்டின் பில் கேட்ஸ் வரை குற்றவாளிக்குக் கருணை காட்ட வேண்டுமென நீதிமன்றத்துக்கு வேண்டுகொள் விடுவிக்கின்றனர்.
சரி, ‘குற்றவாளியின்’ கருத்து என்ன? அவர் இன்னமும் தான் செய்த காரியம் தவறானது என ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால், “நடந்த விவகாரத்தில் என் நண்பர்களுக்கும், நெருக்கமான அமைப்புகளுக்கும், குடும்பத்தாருக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நினைத்து வருந்துகிறேன்” என்று மட்டும் தெரிவிக்கிறார்.
கேட்பதற்கு தமிழ் திரைப்பட இயக்குனர் ஷங்கரின் திரைக்கதை போல் இருக்கிறதா? இல்லை நண்பர்களே, இவையனைத்தும் உண்மையில் நடந்தேறிய காட்சிகள் தான். நடந்தது இங்கேயல்ல – அமெரிக்காவில். கதையில் வரும் ‘குற்றவாளி’ கோடீஸ்வர அமெரிக்க இந்தியர் ரஜத் குப்தா.
ரஜத்தின் குற்றம் என்னவென்கிற விவரங்களுக்குள் செல்லும் முன், அவரைப் பற்றியும் அவரது வளர்ச்சி பற்றியும் முதலில் பார்த்து விடுவது அவசியம். ஏனெனில், அவருடைய வளர்ச்சி என்பதும் அவர் செய்ததாகச் சொல்லப்படும் ‘குற்றம்’ எனப்படுவதும் பிரித்துப் பார்க்கவியலாதபடிக்கு ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்துள்ளன.
ரஜத் குப்தா தில்லி ஐ.ஐ.டியில் பொறியியலும், அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் நிர்வாக மேலாண்மையும் பயின்றவர். 1973ம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த நிர்வாக ஆலோசனை (Management Consulting) நிறுவனமான மெக்கின்சியில் சேர்கிறார். 1994ம் ஆண்டு அதன் நிர்வாக இயக்குநராக உயரும் ரஜத் குப்தா, 2003ம் ஆண்டு வரை அந்தப் பொறுப்பில் தொடர்கிறார். 2003க்குப் பிறகு மூத்த ஆலோசகராக மெக்கின்சியுடனான தொடர்பை பராமரித்துக் கொள்கிறார். பணி ஓய்வு பெற்ற பின்பு, 2006 முதல் 2010 வரை நிதி மூலதன சூதாடியான கோல்ட்மேன் சாக்ஸிலும், 2007 முதல் 2011 வரை நுகர்வுப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான பிராக்டர் – கேம்பிளிலும், 2008 முதல் 2011 வரை விமான சேவை நிறுவனமான அமெரிக்கன் ஏர்லைன்ஸிலும் இயக்குநர் குழுவில் பணியாற்றுகிறார்.
ரஜத் குப்தா பணியாற்றிய நிறுவனங்கள் சாமானியப்பட்டவை அல்ல. புகழ்பெற்ற பன்னாட்டு நிறுவனங்கள், தேசங்கடந்த தொழிற்கழங்கங்கள் அவை. பல்வேறு நாடுகளின் அரசாங்கங்களுக்கே நிர்வாகம் தொடர்பான ஆலோசனைகளை வழங்கும் நிறுவனம் தான் மெக்கின்சி. அந்த நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்கள் என்ரானில் இருந்து பெப்சி, வோடஃபோன் வரை உலகளவில் பிரபலமாக அறியப்பட்ட பல்வேறு பன்னாட்டு கம்பெனிகளின் செல்வாக்கான பதவிகளில் அமர்ந்துள்ளனர். அது மட்டுமின்றி, மெக்கின்சி மற்றும் கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனங்களில் உயர் பதவிகளில் இருந்தவர்கள் அமெரிக்காவின் நிதித்துறை, கருவூலத் துறை மற்றும் மத்திய ஃபெடரல் வங்கியின் தலைமைப் பதவிகளையும் அடைந்துள்ளனர்.
இவர்கள் தான் வால்வீதியின் அசைவுகளையும், உலக முதலாளித்துவ அமைப்பின் இயக்கத்தையும் கட்டுப்படுத்தக் கூடிய முடிவுகளை எடுக்கும் நிலையில் இருப்பவர்கள். பல்வேறு நாடுகள் எடுக்க வேண்டிய முக்கியமான பொருளாதாரக் கொள்கைகளைத் தீர்மானிப்பதும், அது தாமதமாகும் போது அந்நாடுகளைத் தர வரிசைப் பட்டியலில் கீழிறக்கி அச்சுறுத்துவதும் இந்நிறுவனங்கள் தாம். இன்றைய தேதியின் இந்தப் புவிப்பரப்பையே ஆட்டிப் படைக்கும் நிதிமூலதனத்தின் கருவறை வால்வீதி என்றால், அங்கே பூசாரிகளாய் நிற்கும் விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சில நிறுவனங்களில் இவையும் உண்டு.
ஒரு பக்கம் பெரும் கார்ப்பரேட்டுகளின் உயரிய பதவிகளை அனுபவித்த அதே நேரத்தில், பில் கேட்ஸூம், முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனும் நடத்தும் சில அறக்கட்டளைகளிலும் ரஜத் குப்தா பதவி வகிக்கிறார். இந்திய பிரதமர் மன்மோகன் சிங் ஏற்படுத்திய உலக ஆலோசகர் குழுவிலும் 2012 வரை உறுப்பினராக இருக்கிறார். மேலும் மெக்கின்சியில் வெலை பார்த்த இவரது சீடரான அனில் குமாருடன் சேர்ந்து இந்தியன் ஸ்கூல் ஆப் பிசினஸ் என்ற பன்னாட்டு மேலாண்மை கல்லூரியை ஹைதராபாத்தில் ஆரம்பித்திருக்கிறார்.
சுருக்கமாகச் சொன்னால் ரஜத் குப்தா இந்த முதலாளித்துவ பரமபதத்தில் அடைந்த இடம், அவருக்குக் கீழே உள்ள மற்ற அனைவரும் தமது கற்பனையிலும், கனவிலும் அடைய ஏங்கும் இடமாகும். அவர் உலக முதலாளித்துவத்தின் மணிமகுடத்தின் ஒளிவீசும் வைரக்கற்களில் ஒருவராக இருந்தார். இந்தப் பின்னணியில் வைத்துத் தான் ரஜத் குப்தா மேல் சுமத்தப்பட்டு, அமெரிக்க நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்ட குற்றங்களைப் பார்க்க வேண்டும்.
ரஜத் குப்தா செய்ததாகச் சொல்லப்படும் குற்றம் – உள்வட்ட வியாபார மோசடி (insider trading). 2008 காலகட்டத்தில் அமெரிக்க நிதிமூலதன வங்கிகள் ஒவ்வொன்றாக பொருளாதார நெருக்கடியெனும் புதைகுழியில் மூழ்கிக் கொண்டிருந்தன. அப்போது கோல்ட்மேன் சாக்ஸ் வங்கி கிட்டத்தட்ட முற்றிலுமாக நொறுங்கிப் போகும் நிலையிலிருந்த சமயத்தில்தான் வாரன் பப்பெட் என்ற உலக கோடீசுவரன் அதில் 5 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய முன்வந்திருந்தார்.
அந்த சமயத்தில் கோல்ட்மேனின் சேர்மன் போர்டில் அங்கம் வகித்த ரஜத், இந்த முக்கியமான உள்தகவலை ராஜரத்தினம் என்பவருக்கு கடத்துகிறார். அதே நாளில் பங்குவர்த்தகம் முடிய மூன்று நிமிடங்கள் இருக்கும் நிலையில் ரஜத் அளித்த உள்தகவல்களின் அடிப்படையில் 43 மில்லியன் டாலர்களை முதலீடு செய்யும் ராஜரத்தினம், அதன் மூலம் 1 மில்லியன் டாலர்கள் லாபமாக சம்பாதிக்கிறார்.
ஏறக்குறைய அதே காலகட்டத்தில் ப்ராக்டர் – கேம்பிள் என்ற பன்னாட்டு நிறுவனத்தின் உயர்மட்ட நிர்வாகக்குழு உறுப்பினராகவும் இருந்த ரஜத், அந்நிறுவனத்தின் விற்பனை மற்றும் லாப அறிக்கை வெளியாவதற்கு முன்பாகவே அதன் விவரங்களை ராஜரத்தினத்துக்கு அளித்துள்ளார். மேலும், அந்நிறுவனம் கையகப்படுத்த உத்தேசித்துள்ள நிறுவனங்கள் பற்றிய விவரங்களையும் ராஜரத்தினத்திற்கு அளித்து அந்நிறுவனங்களின் பங்குகளிலோ ப்ராக்டர் – கேம்பிள் நிறுவன பங்குகளிலோ முதலீடு செய்து லாபம் பெற ராஜரத்தினத்துக்கு உதவி புரிந்துள்ளார்.
மேலும், ரஜத் நிர்வாகக்குழு உறுப்பினராக இருந்த பிற நிறுவனங்களின் ஆலோசனைக் கூட்டங்கள் முடிந்த ஒவ்வொரு சமயமும் அதில் விவாதிக்கப்பட்டவைகள் பற்றி ராஜரத்தினத்துக்கு தொலைபேசியில் தகவல் அளித்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
’பங்குச்சந்தை சூதாட்டம் நியாயமாக செயல்பட வேண்டுமானால் எந்த ஒரு தனிநபரும் பொதுவில் அனைவருக்கும் கிடைக்காத நிறுவனங்களைப் பற்றிய உள் தகவல்களை வைத்துக்கொண்டு பங்குகளை வாங்கி விற்கக் கூடாது’ என்று ஒரு விதி உள்ளது. குறிப்பாக, பில்கேட்ஸ், டாடா, அம்பானி போன்ற முதலாளிகள் மற்றும் அந்த நிறுவனங்களின் உயர் அதிகாரிகளுக்கு, தமது கம்பெனி லாபமாக நடக்கிறதா, புதிய தொழில்கள் மூலம் எக்கச்சக்கமாக லாபம் ஈட்டும் வாய்ப்பு இருக்கிறதா என்பன போன்ற விவரங்கள் தெரிந்திருக்கும். இந்த விவரங்கள் தெரிந்ததன் அடிப்படையில் அவர்கள் தமது சொந்த கம்பெனியின் பங்குகளில் சூதாடக் கூடாது, அல்லது இந்த ரகசியங்களைத் தமக்கு வேண்டியவர்களுக்கு கசிய விட்டு, அவர்கள் மூலம் பங்குச்சந்தையில் சூதாடி ஆதாயமடையக் கூடாது என்பது விதி. இதை மீறுவது குற்றம்.
நடுத்தர வர்க்க மக்கள் தமது சேமிப்புகளை பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாம், எந்தக் குதிரை (கம்பெனி) ஜெயிக்கும், எந்தக் குதிரை தோற்கும் என்று ஊகித்து அறியும் திறமை கொண்டவர்கள் இதில் பெரும் லாபம் ஈட்டலாம் என்பதுதான் பங்குச்சந்தை சூதாட்டத்தின் அடிப்படை விதி.
சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உயர்மட்டப் பொறுப்புகளிலோ அல்லது அதன் உள் விவகாரங்களைத் அறிந்துகொள்ளும் இடத்திலோ இருப்பவர்கள் இவ்விதியை மீறுவது சட்டவிரோதம். அமெரிக்காவில் இது தண்டனைக்குரிய குற்றம்.
ரஜத் குப்தா 2008ம் ஆண்டில் மூன்று தருணங்களில் கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் பற்றிய உள் விவரங்களை வேலியிடப்பட்ட நிதிய (Hedge Funds) சூதாடி ராஜரத்தினத்தின் காலியோன் நிறுவனத்திற்கு கடத்தியதன் மூலம் அந்நிறுவனம் $23 மில்லியன் லாபம் சம்பாதிக்க உதவி செய்துள்ளார். மேலும் ப்ராக்டர் – கேம்பிள் நிறுவனம் பற்றிய உள் விபரங்களையும் அவர் ராஜரத்தினம் பிள்ளையுடன் பகிர்ந்து கொண்டு பங்குச்சந்தை சூதாட்டத்தில் அவர் கொழுத்த லாபத்தை அறுவடை செய்ய உதவியுள்ளார்.
இந்த வழக்கில் நடந்த விசாரணைகளின் இறுதியில் ரஜத் குப்தா மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டு ஐந்து மில்லியன் டாலர் அபராதமும், இரண்டு ஆண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பை வாசிப்பதற்கு சற்று முன்பாக நடந்த சென்டிமெண்ட் காட்சிகளைத் தான் கட்டுரையின் துவக்கத்தில் பார்த்தோம். ரஜத் குப்தாவின் வீழ்ச்சிக்காக நீதிபதியும், ஜூரர்களும் மாத்திரம் இழவு கொண்டாடவில்லை. வழக்கு நடந்து கொண்டிருந்தபோதே ‘ரஜத்தின் நண்பர்கள்’ எனும் பெயரில் ஒரு இணையதளம் துவங்கப்படுகிறது.
இதில் முகேஷ் அம்பானியிலிருந்து ஆதி கோத்ரேஜ் வரையிலான இந்திய தரகு முதலாளிகளும், பல்வேறு பன்னாட்டு முதலாளிகளும் ரஜத் குப்தாவுக்கு நேர்ந்து விட்ட சங்கடத்துக்காக கண்ணீர் வடிக்கிறார்கள். இவர்களில் பலரும் செவாலியே சிவாஜி கணேசனே பொறாமை கொள்ளும் அளவுக்கு “நம்ப முடியவில்லை.. வில்லை.. வில்லை…” என்று நீட்டி முழக்குகிறார்கள். ரஜத் குப்தாவின் தர்ம சிந்தனைகளை நினைவு கூர்ந்து மெய்சிலிர்க்கிறார்கள். இவர்களே இப்படியென்றால், முதலாளித்துவ ஊடகங்கள் வடித்த கண்ணீரின் அளவு பற்றி தனியே சொல்ல தேவையில்லை.
ரஜத் குப்தாவுக்கு ஏற்பட்டிருக்கும் நிலைமை இவர்களை அசைத்து விட்டதில் அர்த்தம் இல்லாமல் இல்லை. ஏனெனில், இவர்களனைவருக்கும் ரஜத் குப்தா ஒரு முன்மாதிரி. ஏனெனில், இந்தியாவில் நடக்கும் உள்வட்ட வியாபார மோசடிகளை கடந்த அக்டோபரில் விசாரித்த செபி, ரிலையன்ஸ் குழுமத்தைச் சேர்ந்த இரண்டு நிறுவனங்கள் இதே போன்ற மோசடிகளில் ஈடுபட்டதாக கண்டுபிடித்து தலா 25 கோடி ரூபாய் அபராதமும் விதித்துள்ளது. அந்த வகையில் ரஜத் குப்தாவுக்காக அம்பானியின் தசையாடுவது புரிந்துகொள்ளத் தக்கதே.
இது ஒருபுறமிருக்க, மெக்கின்சியில் இருக்கும்போது நாள்தோறும் தான் அலுவல் ரீதியாக செய்த அதே வேலையை தனிப்பட்ட முறையில் செய்ததற்காக தான் கைது செய்யப்படுவோம் என்று ரஜத் எதிர்பார்க்கவில்லை. அல்லது அப்படி நடிக்கிறார்.
ஏதோ நடக்கவே வாய்ப்பற்ற ஒன்று நடந்து விட்டதைப் போல் இவர்கள் வெளிப்படுத்தும் உணர்ச்சிகள் ஆபாசமான மிகை நடிப்பாகப் பல்லிளிக்கின்றன. ஏனெனில், ரஜத் எந்த ஏணியில் ஏறி சிகரத்தைத் தொட்டாரோ அதே ஏணியின் பல்வேறு படிநிலைகளில் தான் இவர்களனைவருமே ஏறிக் கொண்டுள்ளனர்.
முதலாளித்துவம் பரமாத்மா என்றால் அதன் சேவகர்கள் அனைவரும் ஜீவாத்மாக்கள். இவர்களனைவரும் பிரிக்கவொண்ணாத படிக்கு ஒன்று கலக்கும் ஆத்மசாகரப் பெருவெளி தான் முதலாளித்துவ சந்தைப் பொருளாதாரமும், அதன் இயக்கு சக்தியாக இருக்கும் நிதிமூலதனமும்.
அந்த நிதிமூலதனத்தின் கருவறையில் ரஜத் குப்தா ஒரு தலைமைப் பூசாரி; ‘துண்ணூறு’ வாங்க வந்த அம்பானிகள் அவர் ‘தேவநாத’ கோலத்தில் நிற்பதைப் பார்த்து அதிர்ந்து போயுள்ளனர். ஆனால் அந்த அதிர்ச்சியில் ஒரு சதவீதம் கூட உண்மையில்லை; ஏனெனில், ரஜத் சிறிய அளவில் தனிப்பட்ட முறையில் செய்ததைத் தான் அவர் பணியாற்றிய நிறுவனங்களும், வால்வீதியின் பிற நிறுவனங்களும் தங்கள் நடைமுறைகளாகக் கொண்டுள்ளன என்பதை இவர்கள் அறியாதவர்களல்ல.
எந்தவிதமான உற்பத்தியிலும் ஈடுபடாத கோல்ட்மேன் சாக்ஸ் போன்ற நிதிமூலதன வங்கிகள், உலகின் பல்வேறு நாடுகளின் பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்குகளை வாங்குவதன் மூலம் அதில் முதலீடு செய்கின்றன. பின்னர் அவற்றின் மதிப்புகளை வெறும் ஊகங்களின் அடிப்படையிலேயே அதிகரிக்கச் செய்கின்றன. இவ்வாறான ஊகங்களை முதலீட்டு வங்கிகளின் நிர்வாக ஆலோசனைப் பிரிவுகளைக் கொண்டே சந்தையில் உற்பத்தி செய்து உலவ விடுகின்றன. இதன் மூலம் பங்குச்சந்தையில் குறிப்பிட்ட நிறுவனத்தின் மதிப்பு உயரும் போது, மொத்தமாக கையில் உள்ள பங்குகளை விற்று லாபம் ஈட்டுவது நிதிமூலதன வங்கிகளின் வழக்கமான நடைமுறை.
மேலும், வீட்டுக்கடன் பத்திரங்களின் மேல் சூதாட்டம், வேலியிடப்பட்ட நிதியத்தின் மேலான சூதாட்டம், உணவுப் பொருட்களின் மேல் முன்பேர சூதாட்ட வர்த்தகம், காப்பீட்டின் மேல் சூதாட்டம், ஓய்வூதியத்தை வைத்து சூதாட்டம், நிலத்தின் மேல் சூதாட்டம் என்று கண்ணில் பட்ட சகலத்தின் மேலும் சூதாடி, பொருளாதாரத்திலிருந்து பொருளுற்பத்தியையே அந்நியமாக்கி அதனிடத்தில் சூதாட்டத்தை அமர வைத்த நிறுவனங்களின் பதவிப் படிநிலைகளில் தான் ரஜத் குப்தா தாவித் தாவி ஏறியுள்ளார். அவ்வாறு ஏறி அவற்றின் உச்சபட்ச பொறுப்புகளில் அமர்ந்தது தான் முதலாளித்துவ ஊடகங்கள் விதந்தோதும் அவரது ‘வளர்ச்சி’. தன்னை ஏற்றி விட்ட ஏணிக்கு நம்பிக்கை துரோகம் செய்து விட்டார் என்பது தான் அவர் செய்த குற்றம்.
இவ்வாறான மோசடிகளில் ஈடுபடுவது ரஜத் குப்தாவின் இயல்புக்கே மீறிய ஒன்று என ‘ரஜத்தின் நண்பர்கள்’ இணையதளத்தில் பலரும் ஆச்சரியத்தோடு கருத்துத் தெரிவித்துள்ளனர். ஆனால், ரஜத் மோசடி செய்ததல்ல – செய்யாமல் இருந்திருந்தால் தான் ஆச்சரியம். வால்வீதியின் சூதாடிகள் தாமே வகுத்துக் கொண்ட சூதாட்ட விதிகளையும் தங்களுக்கு வேண்டிய மட்டும் வளைத்துக் கொண்டனர் – போலிப் பத்திரங்கள் தயாரித்து சக சூதாடிகளையே கழுத்தறுத்தனர். எந்த முகாந்திரமும் இன்றி அளிக்கப்பட்ட வீட்டுக்கடன் பத்திரங்களுக்கு நட்சத்திர அந்தஸ்தை அளித்து, அதன் மேல் சூதாடி, ஒட்டுமொத்த முதலாளித்துவ கட்டமைப்பையே நெருக்கடிக்கு உள்ளாக்கினர். இந்தக் கழுத்தறுப்புப் போட்டியில் ஆத்மார்த்தமாக ஈடுபட்டிருந்தவர் தான் ரஜத் குப்தா.
டாட் காம் குமிழி வெடித்து ஒவ்வொரு நிறுவனங்களாக விழுந்து கொண்டிருந்த தொன்னூறுகளின் இறுதியில் மெக்கின்சியின் நிர்வாக இயக்குனராக இருக்கும் ரஜத் குப்தா ஒரு முக்கிய முடிவை எடுக்கிறார். அதாவது, நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட ஆலோசனைகளுக்கான கட்டணமாக அவற்றின் பங்குகளைப் பெறும் முறையை அறிமுகம் செய்கிறார். இப்படிச் செத்த மாட்டிடம் திறமையாக பால் கறந்த ‘தகுதியின்’ அடிப்படையிலேயே அவரது வளர்ச்சி அமைந்தது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளையும், அமெரிக்க மக்களையும், தனது சொந்த ஊழியர்களையுமே ஏமாற்றி, அவர்களுடைய பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் பணத்தை ஏப்பம் விட்ட என்ரான் நிறுவன முதலாளிகள் மற்றும் அதிகாரிகளின் கொள்ளைக்கு ரூட் போட்டுக் கொடுத்து, நிர்வாக ஆலோசனைகள் வழங்கிய மெக்கின்சி நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில், இந்த அயோக்கியத்தனம் நடைபெற்ற காலத்தில் பணியாற்றியவர்தான் ரஜத் குப்தா.
வால்வீதி சூதாட்டங்கள் இரண்டாயிரங்களின் இறுதியில் ஓரு மாபெரும் பொருளாதாரக் கட்டமைப்பு நெருக்கடியை உண்டாக்கியது. அதைத் தொடர்ந்து வீடு, வேலை, சேமிப்பு, ஓய்வூதியம், காப்பீடு என்று சகலத்தையும் இழந்த அமெரிக்கர்கள் தெருவிலிறங்கிப் போராடி வருகிறார்கள். அமெரிக்காவையும் தாண்டி, ஐரோப்பிய கண்டமெங்கும் போராட்டத் தீயினால் அனல் பறந்து கொண்டிருக்கிறது. இந்தியா போன்ற நாடுகளிலோ இந்த சூதாட்டப் பொருளாதாரம், ஊழல்களாகவும், இயற்கை வளங்களைக் கொள்ளையிடும் முயற்சிகளாகவும் அதைத் தாங்கி வரும் அரச பயங்கரவாதமாகவும் வெளிப்பட்டு, மக்களைத் தெருவுக்கு இழுத்து வந்துள்ளது. வாழ்விழந்த மக்களைத் தங்கள் வசிப்பிடங்களில் இருந்து பெயர்த்தெடுத்து தேசத்தின் குறுக்கும் நெடுக்குமாய் அவர்களை வீசியெறிந்துள்ளது.
இந்நிறுவனங்கள் எடுத்த ஒவ்வொரு சின்னச் சின்ன முடிவுகளும், தீர்மானங்களும் உலகெங்கும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை சொல்லவொண்ணாக் கொடுமைகளுக்கு உள்ளாக்கியிருக்கிறது. இந்த முடிவுகளை ஆத்மார்த்தமாக எடுக்கும் ஒரு நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பிலிருப்பவரின் அறம் என்னவாயிருக்கும்?
இவர் அலுவலகத்தில் செய்யும் ஒவ்வொரு ‘சட்டப்பூர்வமான’ செயல்பாடும் லட்சக்கணக்கானவர்களின் வாழ்க்கையைப் பறிக்கும் என்பதை அறிந்தே அதைத் திறமையாகச் செய்துள்ளார் என்றால், அவரது மனச்சாட்சி அவரைக் குத்திக் கிழித்திருக்காதா? இல்லை என்பது தான் எதார்த்தமான உண்மையாய் இருக்க முடியும். அதைத் தான் அவர் தண்டனை பெற்ற பின் நீதிமன்றத்துக்கு வெளியே உதிர்த்த வார்த்தைகளும் மெய்ப்பிக்கின்றன.
ரஜத்திடம் அமெரிக்க முதலாளித்துவம் எதிர்பார்த்து ஏமாந்த நேர்மை என்பது, அம்பானி போன்றோரிடம் அண்ணா ஹசாரேக்கள் எதிர்பார்க்கும் அதே நேர்மை தான். விபச்சாரத் தரகன் வள்ளலாராக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்று பசப்புகிறார்கள்.
ரஜத் குப்தா புறங்கையை நக்கி விட்ட நிலையில், பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு முதலாளித்துவத்தின் மீது நம்பிக்கை ஏற்படுத்தும் பொருட்டு, ‘இந்த ஒரு கனி மட்டுமே கெட்ட கனி; எனவே பொறுமையாக நல்ல கனியைத் தேடுவீராக’ என்று முதலாளித்துவம் உலக மக்களுக்குத் தனது சுவிசேஷத்தை அருளுகிறது.
சூதாட்ட சந்தை விதிகள் எனும் நஞ்சை அருந்தி வளரும் நச்சு மரங்கள் நல்ல கனிகளையே தரும் என்று நம்ப வைக்கும் முயற்சி தான் இந்த வழக்கும், தண்டனைகளும், அதைத் தொடர்ந்து நடக்கும் சென்டிமெண்ட் நாடகங்களும். குற்றவாளிக் கூண்டில் முதலாளித்துவம் நிறுத்தப்படாமல் தவிர்ப்ப்பதற்காக, முதலாளித்துவத்தை குற்றத்திலிருந்து காப்பாற்றுவதற்காக, தமது நாயகர்கள் சிலரைக் கூடக் காவு கொடுப்பதற்கு முதலாளித்துவம் எப்போதும் தயாராகவே இருக்கிறது.
உள்வட்ட வர்த்தகத்தில் ஈடுபட்டவர்கள் மீதான விசாரணையில் வால் வீதி முதலீட்டு நிறுவனங்களுக்குள்ளும், புனிதமான அமெரிக்க கார்ப்பரேட் இயக்குநர் குழுக்களுக்குள்ளும் தனது விசாரணை வலையை வீசுகிறது, நீதிமன்றம். அடுத்த மூன்று ஆண்டுகளில் 70க்கும் மேற்பட்ட வர்த்தகர்களும், கார்ப்பரேட் மேலாளர்களும், வங்கி அதிகாரிகளும் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை பெறுகின்றனர். அந்த வரிசையில் மாட்டிக் கொண்ட திமிங்கலம் தான் ரஜத் குப்தா.
‘உலகத்துக்கும், தனி மனிதர்களுக்கும் அர்ப்பணிப்பு மிகுந்த இது போன்ற ஒரு பிரதிவாதியை இந்த நீதிமன்றம் சந்தித்ததில்லை என்று சொன்னால் அது மிகையாகாது‘ என்றார் நீதிபதி ஜெட் ராக்கோப். ‘அவர் ஒரு நல்ல மனிதர். ஆனால் இந்த உலகின் வரலாறு நல்ல மனிதர்கள் செய்த கெட்ட செயல்களின் வரலாற்றால் நிரம்பியிருக்கிறது’ என்று வருத்தப்பட்டுக் கொண்டே தண்டனைத் தீர்ப்பை வாசிக்கிறார். வாழ்ந்து கெட்ட பண்ணையாராக ரஜத் குப்தா நீதிமன்றத்திலிருந்து வெளிப்படுகிறார்; அவரது துயரத்தை தங்கள் துயரமாக வரித்துக் கொள்ளும் முதலாளித்துவ ஊடகங்கள் அதை மக்களின் துயரமாகவும் மாற்றும் விதமாக சோக ரசம் பொங்கும் கட்டுரைகளை எழுதிக் குவிக்கின்றன.
இந்த நிகழ்வுகளுக்குப் பிறகு ரஜத் குப்தாவின் பெயரை தனது பதிவுகளிலிருந்தே நீக்கி விட்டது மெக்கின்சி. அவர்களைப் பொறுத்த வரை, ரஜத் குப்தா அங்கு வேலை செய்யவே இல்லை, அந்த நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கவே இல்லை.
“ரஜத் குப்தாவுடன் எங்கள் நிறுவனத்துக்கு எந்தத் தொடர்பும் இல்லை‘ என்கிறது மெக்கின்சி. ’இதற்கு மேல் அவருடன் எந்த பரிமாற்றங்களும் வைத்துக்கொள்ள வேண்டாம்’ என்று மெக்கின்சியின் உலகளாவிய வாடிக்கையாளர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். ’எங்கள் புனிதத் தன்மை இப்படி நிரூபிக்கப்பட்டு விட்ட பிறகு, இனிமேல் எங்களை நம்பி வழக்கமான செயல்பாடுகளைத் தொடரலாம்’ என்று அவர்களை நம்பச் சொல்கிறார்கள்.
ரஜத் குப்தாவின் குற்றத்திற்கு தீர்ப்பு எழுதப்பட்டு விட்டது; முதலாளித்துவத்திற்கு எதிரான வழக்கு மக்கள் மன்றத்தில் இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது.
_________________________________________________________________________________________________________________