Monday, April 21, 2025
முகப்புமறுகாலனியாக்கம்கார்ப்பரேட் முதலாளிகள்Even the Rain (2009) - வியர்வைத் துளிகளையும் திருடுவார்கள் !

Even the Rain (2009) – வியர்வைத் துளிகளையும் திருடுவார்கள் !

-

திரை விமர்சனம் – “ஈவன் த ரெயின்” :

ஈவன் த ரெயின்”அவர்கள் நம் நதிகளை விற்றார்கள். நமது கிணறுகளை, ஏரிகளை, ஏன் நம் தலை மேல் விழும் மழையைக் கூட விற்று விட்டார்கள். லண்டனிலும், கலிபோர்னியாவிலும் வசிப்பவர்களுடைய கம்பெனி நம் தண்ணீரை வாங்கியிருக்கிறது. இனிமேல் எதைத் திருடப் போகிறார்கள்? நமது மூச்சுக் காற்றிலிருக்கும் நீர்த்துளிகளையா? அல்லது நமது நெற்றியில் முகிழ்க்கும் வியர்வைத் துளிகளையா?”

ஈவன் த ரெயின் (மழையைக் கூட) என்ற ஸ்பானிய திரைப்படத்தில், தண்ணீர் தனியார் மயமாக்கத்தை எதிர்த்துப் போராடும் மக்களிடம் கதாநாயகன் டானியல் பேசும் வசனம் இது. 2010ல் இகியார் பொலைன் இயக்கத்தில் வெளிவந்த இந்தப் படம், விவசாயம் செய்ய பக்கத்து மாநிலத்தை எதிர்பார்த்து நிற்கும்போதே, தாமிரபரணி ஆற்றை கோக்கிடம் தாரை வார்த்திருக்கும் நமக்கு நெருக்கமானதுதான்.

வாள் முனையில் காலனிகளாக அடிமைப்படுத்தி, பல நூறு ஆண்டுகள் சுரண்டிய பிறகு, சுதந்திரம் என்ற பெயரில் தமது ஏஜெண்டுகளுக்கு அதிகாரத்தைக் கைமாற்றிக் கொடுத்து, அதற்காக நாம் ஆடிக்கொண்டும் பள்ளு பாடிக் கொண்டும் இருக்கும்போது, வளர்ச்சி என்கிற பெயரில் மறுகாலனியாக்கத்தை அமல்படுத்திக் கொண்டிருக்கின்றன ஏகாதிபத்திய நாடுகள். இன்று மூன்றாம் உலக நாடுகள் மீது திணிக்கப்படும் மறுகாலனியாதிக்கத்தையும், 16ம் நூற்றாண்டின் காலனியாக்கத்தையும் ஒப்பிட்டு அழுத்தமாக முன் வைக்கும் படம் ஈவன் த ரெயின்.

மெக்சிகோவைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர் செபாஸ்டினும், திரைப்படத் தயாரிப்பாளர் கோஸ்டாவும் தமது குழுவுடன் புதிய திரைப்படத்தை படம் பிடிப்பதற்காக தென் அமெரிக்காவில் இருக்கும் ஏழை நாடான பொலிவியாவுக்கு வருகிறார்கள்.

கொலம்பஸ் புதிய உலகைக் கண்டுபிடிக்க கடற்பயணம் புறப்பட்டு, மேற்கிந்திய தீவுகளின் பூர்வகுடி மக்களை விலங்குகள் போல அடிமைப்படுத்தியது, அவற்றுக்கெதிராக தைனோ இன மக்கள் அத்வே எனும் பழங்குடியினத் தலைவர் தலைமையில் எதிர்த்து சண்டையிட்டது போன்றவற்றின் அடிப்படையில் காலனியாதிக்கத்தின் கொடுமைகளைப் படமாக எடுக்க விரும்புகிறார்கள்.

நாள் கூலியாக 2 அமெரிக்க டாலர் கொடுத்தாலே ஆள் கிடைக்கும் நாட்டில், குறைந்த செலவில் பெரும் எண்ணிக்கையிலான துணை நடிகர்களை நடிக்க வைக்கலாம் என்று திட்டமிடுகிறார்கள். விளம்பரத்தைப் பார்த்து படப்பிடிப்பில் வேலை செய்வதற்கு நூற்றுக்கணக்கான பேர் கூடி விடுகிறார்கள். தைனோ இனத் தலைவர் அத்வே கதாபாத்திரத்திற்கு டானியலையும், சிறுமியாக நடிப்பதற்கு அவன் மகள் பெலனையும் தேர்ந்தெடுக்கிறார்கள்.

குறைந்த கூலிக்கு துணை நடிகர்களை எடுத்தது மட்டுமின்றி, படப்பிடிப்புக்கான தயாரிப்புகளையும் உள்ளூர் மக்களை வைத்து முடிப்பதன் மூலம் ஆயிரக்கணக்கான டாலர்கள் மிச்சப்படுத்துகிறார் தயாரிப்பாளர் கோஸ்டா.

டானியலுக்கு திரைப்படத்தில் நடிக்கிறோம், அதுவும் கதாநாயகனாக என்பது போன்ற பெருமிதங்கள் ஏதுமில்லை. அவனுக்கு சினிமா என்பது காசு சம்பாதிக்க உதவும் ஒரு தொழில், அவ்வளவுதான். ஆனால் அவனது முழு நேர வேலை கோபகன் நகரில் தண்ணீரை ஒரு கார்ப்பரேட் நிறுவனத்திற்கு அரசு தாரை வார்த்ததை எதிர்த்த போராட்டங்களுக்கு மக்களை ஒன்றிணைப்பதுதான்.

இகியார் பொலைன்
இயக்குநர் – இகியார் பொலைன்

ஒரு பக்கம் கொலம்பஸ் தலைமையிலான காலனிய ஆதிக்கவாதிகள் மக்களை அடிமையாக்கி கொடுமைப்படுத்துவது, தண்டிப்பது போன்ற நிகழ்ச்சிகள் படம் பிடிக்கப்பட, மறுபுறம் நகரில் தண்ணீர் தனியார்மயமாக்கலுக்கெதிரான போராட்டம் சூடு பிடிக்கிறது. டானியல் இந்த போராட்டங்களில் கலந்து கொள்வது தயரிப்பாளர் கோஸ்டாவையும், இயக்குநர் செபாஸ்டினையும் கவலைக்குள்ளாக்குகிறது.

பாதிப் படம் எடுத்திருந்த நிலையில் ஒரு போராட்டத்தில் டானியல் போலிஸாரால் கைது செய்யப்பட்டு நன்றாக அடிக்கப்படுகிறான். தங்கள் சொந்த செலவில் லஞ்சம் கொடுத்து டானியலை படக் குழுவினர் மீட்டு வருகிறார்கள். இந்த போராட்டங்களில் பங்கேற்க வேண்டாம் என அவனைக் கேட்டுக் கொள்கிறார்கள்.

நகரில் போராட்டம் முற்றி கலவரமாக மாறுகிறது. விவசாயிகளும், நகரவாசிகளும் நகர மையத்தை முற்றுகையிடுகிறார்கள். அவர்களை எதிர்த்து ஆயுதப் படைகள் துப்பாக்கிகளால் சுடுகின்றனர். மக்கள் பின்வாங்காமல் போராடுகிறார்கள்.

அந்த கலவரத்திலிருந்து தப்பிப்பதற்காக படக் குழுவினர் நகரத்தை விட்டு கிளம்ப முடிவு செய்து வேறு ஊருக்குப் புறப்படுகிறார்கள். டானியலின் மகள் பெலன் கலவரத்தில் மாட்டிக் கொண்டதாகவும், அவளைக் காப்பாற்றும்படியும் கோஸ்டாவிடம் டானியலின் மனைவி தெரசா மன்றாடுகிறாள். கோஸ்டாவும் மனம் மாறி பெலனைத் தேட நகரத்தினுள் காரில் போகிறான்.

போராடும் மக்கள் டஜன் கணக்கில் கொல்லப்படுகின்றனர், இன்னும் பலர் சிறைப்படுத்தப்படுகின்றனர். மக்கள் தளராமல் முற்றுகைப் போராட்டத்தைத் தொடர்கிறார்கள்.

பெலனை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்க்கிறான் கோஸ்டா. இயக்குநர் செபாஸ்டினையும், தயாரிப்பாளர் கோஸ்டாவையும் விட்டு விட்டு படக்குழுவின் மற்ற உறுப்பினர்கள் நாட்டை விட்டே வெளியேறுகின்றனர்.

இறுதிக் காட்சியில் தண்ணீரை வாங்கிய தனியார் நிறுவனத்தின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்ட செய்தி வெளியாகிறது. போராட்டங்கள் நிறுத்தப்படுகின்றன. தன் மகளைக் காப்பாற்றிய கோஸ்டாவை பார்க்க வரும் டானியல் உணர்ச்சிப் பெருக்குடன், நன்றிக் கடனாக ஒரு பரிசுப் பொதியை கொடுக்கிறான். அதனுள் ஒரு பாட்டிலில் தண்ணீர் இருக்கிறது.

கொலம்பஸ் கடல் வழி பயணத்தின் மூலம் அமெரிக்காவை கண்டுபிடித்து காலனியாக்கியது வரலாறு. பொலிவியாவில் தண்ணீர் வளங்களை தனியார் நிறுவனத்துக்கு குத்தகை கொடுத்ததை எதிர்த்து போராடி மக்கள் வெற்றி பெற்றது சமீபத்திய நிகழ்வு. இரண்டையும் பொருத்தி, காலனிய வரலாற்று நிகழ்வுகளும், மறுகாலனிய சம கால நிகழ்வுகளும் பின்னிப் பிணையும் படியான திரைக்கதை வடிவம் மிகவும் பொருத்தமாக அமைகிறது.

நகர மக்கள் மலை மீது ஒரு ஏரியை விலைக்கு வாங்கி, 7 கிலோ மீட்டருக்கு கால்வாய் தோண்டி தண்ணீரைத் தங்கள் இடத்துக்கு கொண்டு வருகிறார்கள். தண்ணீர் கம்பெனி அதற்கு அரசுப் படைகளின் உதவியுடன் பூட்டு போட்டு சீல் வைத்து விடுகிறது. ”எங்கள் குழந்தைகள் குடிப்பதற்கான தண்ணீரை ஆண்டுக்கு $300 கொடுத்து எப்படி வாங்க முடியும்?” என்று பெண்கள் சண்டை போடுகிறார்கள். அந்த ஊரில் சராசரி தினசரி கூலியே $2 தான்.

சுரண்டலை நேரடியாக எதிர்கொள்ளும் பெண்களும், முதியவர்களும் உள்ளிட்ட மக்கள் வீதியில் இறங்கிப் போராடத் தயாராகிறார்கள். எழுச்சி மெல்ல வளர்ந்து இறுதியில் தனது இலக்கை எட்டுகிறது.

கதாநாயகனின் எழுச்சிமிக்க ஒரு உரையில் வில்லனை அடையாளம் கண்டு, உணர்ச்சிகரமான பாடல் வரிகளினால் உந்தப்பட்டு, இறுதிக் ஈவன் த ரெயின்காட்சியில் போராடச் சென்றவர்கள் அல்ல இவர்கள். சிறு சிறு தீப்பொறிகளாக மக்கள் தண்ணீர் கம்பெனியை எதிர்த்து சண்டை இடுகிறார்கள், போராடுகிறார்கள்.

அரசு சார்பில் நடத்தப்படும் விருந்தில் கலந்துகொள்ளும் படக் குழுவினரிடம் அந்த நாட்டு மந்திரி, வெளியில் நடக்கும் போராட்டத்தைக் குறிப்பிட்டு, ஒரு சில தீவிரவாதிகள் மக்களைத் தூண்டி விட்டு கலவரம் செய்வதாகச் சொல்கிறார்.

”அந்நிய முதலீடு இல்லாமல் நாட்டின் தண்ணீர் தேவையை நிறைவு செய்வது சாத்தியமில்லை. அரசாங்கத்துக்கு பணம் மரத்தில் காய்ப்பதாக மக்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்” என்று அவர் பேசும் வசனம், சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை நியாயப்படுத்துவதற்கு மன்மோகன் சிங் பேசியிருக்கும் அதே வசனம்.

இறுதிக் காட்சியில் மக்கள் முற்றுகையிடும் செப்டம்பர் 14 மைதானத்தில் கேடயங்களுடனும், துப்பாக்கிகளுடனும், கண்ணீர் புகைக் குண்டுகளுடனும், ரப்பர் குண்டுகளுடனும் படையினர் நிற்க பெண்களும், குழந்தைகளும், வயதானவர்களும் உள்ளிட்ட மக்கள் படையோ கையில் கம்புகளோடு அவர்களை எதிர்கொள்கிறது. மக்கள் படையின் முன் ஆயுதம் ஏந்திய கூலிப்படை எப்போதுமே வெற்றி பெறுவதில்லை என்பதை பொலிவிய மக்கள் நிரூபித்திருக்கிறார்கள்.

டானியல் போலிஸிடம் அடிபட்டுக் கிடக்கும் போது, அவனை போரட்டத்தைக் கைவிடும்படி சொல்லி, திரைப்பட வேலைகள் கெட்டுப் போவதாக கோஸ்டாவும், செபாஸ்டினும் கோபப்படுகின்றனர். டானியல் உள்ளிட்ட மக்கள் நடத்தும் போராட்டத்தை திரைப்படக் குழுவினர் ஒரு தொந்தரவாகவே பார்க்கிறார்கள். வருமானத்தைக் கூட துறந்து போராடக் கிளம்பும் டானியல் அவர்களின் கண்களுக்கு பைத்தியகாரனாகவே தெரிகிறான்.

ஆனால் இறுதியில் டானியல், அவனது மனைவி தெரசா, மகள் பெலன் மூலம் அவர்கள் மனித நேயத்தையும் போராட்ட நியாயங்களையும் உணர்கிறார்கள். இறுதிக் காட்சியில் டானியல் அன்பளிப்பாக கொடுக்கும் ஒரு பாட்டில் நீரை வாங்கும் கோஸ்டாவின் முகத்தில் தோன்றும் உணர்ச்சிகள் பல அரசியல் நியாயங்களை நமக்கு உணர்த்துகின்றன.

படைப்பாளிகளும், கலைஞர்களும் மக்கள் விரோத நிறுவனங்களையும், அரசையும் எதிர்க்க முதுகெலும்பில்லாமல் இருக்கும் நிலையில், உண்மையை இயல்பான முறையில் பேசும் நேர்மையான ஒரு படைப்பு இந்தத் திரைப்படம் – ஈவன் த ரெயின் – மழையைக் கூட!
____________________________________________________________
– புதிய கலாச்சாரம், ஜனவரி – 2013
____________________________________________________________