Tuesday, April 22, 2025
முகப்புஉலகம்ஈழம்பாலச்சந்திரன் படுகொலை: இந்தியாவிற்கு பங்கில்லையா?

பாலச்சந்திரன் படுகொலை: இந்தியாவிற்கு பங்கில்லையா?

-

ந்திய அரசின் துணையோடு இலங்கை அரசு நடத்திய இனப் படுகொலை பற்றிய ஆதாரங்கள் புதிது புதிதாக வெளியாகின்றன. இங்கிலாந்தைச் சேர்ந்த சேனல்4 தொலைக்காட்சி நிறுவனம் தயாரித்திருக்கும் ஆவணப்படத்தின் ஒரு பகுதியாக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் ஈவு இரக்கமின்றி படு கொலை செய்யப்பட்டதைப் பற்றிய ஆதாரங்கள் வெளியாகியிருக்கின்றன.

சென்ற ஆண்டு வெளியான சேனல்4 ஆவணப்படத்தில் பாலச்சந்திரன் மிக நெருக்கமான தூரத்தில் சுடப்பட்டதற்கான ஆதாரங்களை தடயவியல் நிபுணர் டெரிக் பவுண்டர் விளக்கியிருந்தார்.

“அவன் மீது 5 துப்பாக்கிச் சூட்டு காயங்கள் இருக்கின்றன, இங்கே, இங்கே, இங்கே, மற்றும் இந்த இடத்தில் இரண்டு துப்பாக்கிச் சூட்டு காயங்கள். இதுதான் முதலில் சுடப்பட்ட காயமாக இருக்க வேண்டும். அதைச் சுற்றி வெடிமருந்து புகையும் துகள்களும் படிந்திருப்பதால் அது அழுக்காக தெரிகிறது. இதனால் சுடப்பட்ட ஆயுதத்துக்கும் பையனின் உடம்புக்கும் தூரம் 2 அல்லது 3 அடிக்குள்தான் இருந்திருக்கும் என்று தெரிகிறது. அவன் கையை நீட்டி தன்னை கொன்ற துப்பாக்கியை தொட்டிருக்க முடியும். இந்த காயம் பெற்றவுடன் அவன் பின் நோக்கி விழுந்திருக்கிறான். அதன் பிறகு இந்த இரண்டு காயங்களையும் பெற்றிருக்கலாம். அவை கீழ் பகுதியில் மழுங்கலாக இருப்பது, குண்டுகள் உடம்பில் மேல் நோக்கி சென்றன என்று காட்டுகின்றது. அவனது இடது தோளின் மேல் பகுதியில் சந்தேகத்துக்கிடமில்லாத ஒரு வெளியேறும் காயம் இருப்பதை பார்க்க முடிகிறது. எனவே சுடுபவர் அவன் தரையில் விழுந்து கிடக்கும் போது அவன் காலுக்கு அருகில் நின்று கொண்டு மேல் நோக்கி சுட்டிருக்க வேண்டும் என்று தெரிகிறது. இது ஒரு கொலை, சந்தேகமில்லாத படுகொலை”.

“உடல் ரீதியான சித்தரவதைக்கான அறிகுறிகள் எதுவும் உடலில் தென்படவில்லை. ஆனால் அவன் இருந்த நிலைமையை நாம் நினைத்துப் பார்க்க முடிகிறது. அவனுக்கு அருகில் 5 உயிரிழந்த ஆண்களை பார்க்கிறோம். அவர்கள் இவனுக்கு முன்னதாக கொல்லப்பட்டிருக்கலாம். அவன் கண்கள் கட்டப்பட்டிருப்பதற்கான அறிகுறிகள் எதுவுமில்லை என்பதும் அவன் காலருகில் நின்று கொண்டிருக்கும் ஒருவனால் சுடப்பட்டிருக்கிறான் என்பதும் தெளிவாகிறது. எனவே, இதுவே ஒரு வகையான உளவியல் சித்திரவதைதான்.”பாலச்சந்திரன்

நேற்று வெளியான புகைப்படங்கள் இதை உறுதி செய்கின்றன. 12 வயது சிறுவன் பாலச்சந்திரன் அரைக்கால் சட்டை அணிந்து மேல் சட்டை அணியாமல் ஒரு லுங்கியை போர்த்திக் கொண்டு மணல் மூட்டைகளுக்கு மத்தியில் உட்கார வைக்கப்பட்டிருக்கிறான். கையில் ஒரு பிஸ்கட் பொதியை பிரித்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான்.

அடுத்த புகைப்படம் தேடுதல் நிறைந்த, குழப்பமான பார்வையுடன் யாராவது வருகிறார்களா என்று திரும்பிப் பார்க்கும் போது எடுக்கப்பட்டிருக்கிறது. அடுத்த புகைப்படத்தில் 5 குண்டுகள் பாய்ந்த உயிரற்ற உடல், அதே கால்சட்டை உடுத்த உடல்.

‘இந்த புகைப்படங்கள் ஒரே காமராவில் எடுக்கப்பட்டிருக்க வேண்டும்’ என்றும் ‘சுமார் சில மணி நேரங்களுக்குள் எடுக்கப்பட்டிருக்க வேண்டும்’ என்றும் தடயவியல் நிபுணர்கள் முடிவு செய்திருக்கின்றனர்.

பாலச்சந்திரன் கொல்லப்பட்டது குண்டு வீச்சினாலோ, சண்டையின் போதோ, குறுக்கு துப்பாக்கிச் சூட்டினாலோ அல்ல. பிடித்து வைத்து, சாப்பிட பிஸ்கட்டும் குடிக்கத் தண்ணீரும் கொடுத்து உட்கார வைத்து, பிறகு ஈவு இரக்கமின்றி பச்சைப் படுகொலையை நடத்தியிருக்கின்றனர் சிங்கள இராணுவ வீரர்கள். அதற்கான உத்தரவை மேலிருந்து பிறப்பித்திருக்கின்றனர் நாட்டை ஆளும் ராஜபக்சே கும்பல்.

ஈழப் போர் உச்சகட்டத்தில் இருக்கும் போது அமைதி ஏற்படுத்துவதற்காக கொழும்புக்கு அனுப்பப்பட்ட இந்திய நாடாளுமன்றக் குழுவின் உறுப்பினராக போன அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் “போப் கூட ஈழத்தில் போர் நிறுத்தம் வேண்டும் என்று கூறியிருப்பதாகவும் எப்படியாவது போரை நிறுத்தி விடும்படியும் தான் கேட்டதாகவும், அதற்கு ‘நான் ஒன்றும் போப் இல்லை, நட்பு நாடான இலங்கையின் உள் விவகாரங்களில் தலையிட முடியாது’ என்று தாதா பிரணாப் பதிலளித்ததாகவும்” போலி கம்யூனிஸ்ட் தா பாண்டியன் கூறியிருக்கிறார்.

ஈழத்தில் நடத்தப்பட்ட இன அழிப்பை தடுத்து நிறுத்துவதற்கு போப் ஆக இருக்க வேண்டியதில்லை, சாதாரண மனிதனாக இருந்திருந்தால் போதும். ஆனால் பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட இந்திய ஆளும் வர்க்கங்களுக்கு, இலங்கைக்கு ஆயுதங்கள் வழங்கி பயிற்சி வழங்கி இன அழிப்புக்குத் துணை போன இந்திய ஆளும் வர்க்கங்களுக்கு மனித உணர்வுகள் இல்லை என்பதுதான் நிதர்சனம். இலங்கை அரசுடன் நட்புறவு பேண வேண்டும் என்ற கணக்குக்கு முன்பு பல ஆயிரம் ஈழத் தமிழர்களின் உயிர்கள் அவர்களுக்கு பொருட்டாக தோன்றியிருக்கவில்லை.

இலங்கையுடன் கூட்டாகச் சேர்ந்த போர் நடத்திய இந்தியாவின் இப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷீத் இப்போது வெளியாகியிருக்கும் புகைப்படங்கள் நம்பகமானவை என்று நிரூபிக்கப்படவில்லை என்றும் இலங்கை இந்தியாவின் முக்கியமான அண்டை நாடு என்றும் அந்நாட்டுடனான நட்பை மேம்படுத்த முயற்சி செய்து வருவதாகவும் தெரிவித்திருக்கிறார். இலங்கை சந்தை இந்திய தரகு முதலாளிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் வரை இலங்கையின் போர்க்குற்றங்களுக்கு எந்த தீங்கும் வந்து விடாது.

ஆம், இலங்கையின் ஆளும் வர்க்கங்கள் நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டால், அந்த நெருக்கடியில் அவர்கள் அவர்களது கிரிமினல் குற்றங்களுக்கு இந்திய ஆளும் கும்பல் உடந்தையாக இருந்ததை யாரும் மறைக்க முடியாது. அதனால் இலங்கையை இந்தியா ஒருபோதும் விட்டுக்கொடுக்காது.

‘ஈழப்போரின் இறுதிக் கட்டங்களில் நடந்த போர்க்குற்றங்களையும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களையும் அவை தொடர்பான ஆதாரங்களையும் முன் வைத்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையத்தில் இலங்கையை கண்டிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு இந்தியா ஆதரவு தெரிவிக்க வேண்டும்’ என்று அரசியல் நடத்திக் கொண்டிருக்கின்றனர் தமிழ் தேசிய அமைப்புகள். அப்படி ஒரு தீர்மானத்தால் ஏதாவது ஒரு பலன் இருக்க வேண்டுமானால், அந்த கண்டனத்தில் இந்திய அரசும் சேர்க்கப்பட வேண்டும். கொலைக் குற்றவாளியை கண்டனம் செய்யும் தீர்மானத்தை கொலைக்குத் திட்டம் போட்டுக் கொடுத்த சதிகாரன் ஆதரிப்பது எந்த விதத்திலும் நியாயத்தை நிலை நாட்டாது!

ஈழத்தமிழர்களின் சுய நிர்ணய உரிமையை அங்கீகரித்து தனி ஈழம் அமைப்பதை இந்தியாவின் விரிவாக்க அரசியல் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்பது தெரிந்தும் இந்திய அரசுக்கு மனு கொடுத்து, மத்திய அரசின் மீது அழுத்தம் கொடுத்து, காங்கிரசு ஆட்சியை மாற்றி பாஜக ஆட்சியை கொண்டு வந்து ஈழத்தில் நியாயத்தை நிலை நாட்டலாம் என்று பேசுவது இந்தியாவின் குற்றத்தை மறைப்பதாகும்.

மேலும் படிக்க
Can not vouch for authenticity of pictures – says Kurshid
The killing of a young boy