Wednesday, April 30, 2025
முகப்புகட்சிகள்காங்கிரஸ்வீரப்பன் கூட்டாளிகள் தூக்கு: அதிரடிப்படைக்கு என்ன தண்டனை?

வீரப்பன் கூட்டாளிகள் தூக்கு: அதிரடிப்படைக்கு என்ன தண்டனை?

-

வீரப்பன் கூட்டாளிகள் என்று உண்மையில் நிரூபிக்கப்படாத மீசை மாதையன், ஞானபிரகாஷ், பிலவேந்திரன், சைமன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதற்கான தடையை உச்சநீதிமன்றம் நீட்டித்திருக்கிறது.

கர்நாடகாவின் பெல்காம் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அவர்கள் ‘தமக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும்’ என்று ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பியிருந்தனர். அவர்களது கருணை மனுவை ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ‘கொலையாளி’ பதவியில் இருக்கும் பிரணாப் முகர்ஜி கடந்த 13ம் தேதி நிராகரித்து விட்டார்.

அதைத் தொடர்ந்து ‘கருணை மனுவை பரிசீலிப்பதில் ஏற்பட்ட9 ஆண்டுகள் தாமதத்தின் அடிப்படையில் தூக்குத் தண்டனை ரத்து செய்யப்பட வேண்டும்’ என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உச்ச நீதிமன்றம் அந்த வழக்கை விசாரணை செய்து முடிவு செய்யும் வரை தூக்குத் தண்டனை நிறைவேற்றுவதற்கு தடை விதித்திருக்கிறது.

உச்சநீதிமன்றத்தின் வேறு அமர்வு ஒன்று இதே போன்ற தேவேந்தர் பால் சிங் புல்லார், எம் என் தாஸ் என்ற இருவரின் மனு மீதான விசாரணையை 2012 ஏப்ரல் 19ம் தேதி முடித்து தீர்ப்பை தள்ளி வைத்திருக்கிறது. அந்த வழக்கில் தீர்ப்பு வரும் வரை வீரப்பன் கூட்டாளிகள் தொடர்பான வழக்கு விசாரணையை தள்ளி வைப்பதாக நீதிபதிகள் தெரிவித்திருக்கின்றனர்.

ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுவை முடிவு செய்வதில் ஏற்பட்ட நீண்ட தாமதத்தின் அடிப்படையில் சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு நிலுவையில் உள்ளது.

மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு தண்டனையை நிறைவேற்றுவதில் நீண்ட தாமதம் செய்வதினால் அவர்களுக்கு ஏற்படும் மன உளைச்சல் கடுமையானது. பல ஆண்டுகள் அத்தகைய மன உளைச்சலுக்கு ஆளாக்கிய பிறகு இறுதியில் மரண தண்டனை வழங்குவது மனிதத் தன்மையற்றது என்று உலகின் பல நாடுகளின் நீதி அமைப்புகள் கருதுகின்றன.

அந்த அடிப்படையிலான இரண்டு வழக்குகள் ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் முடிவை எதிர் நோக்கி உள்ளன.  இதைச் சேர்த்து பார்க்கும் போது அப்சல் குருவை ரகசியமாக அவசர அவசரமாக தூக்கில் போட்டு கொலை செய்த இந்திய அரசின் அயோக்கியத்தனம் தெளிவாகிறது. அப்சல் குருவின் கருணை மனு நிராகரிக்கப்பட்ட தகவல் உறவினர்களுக்கோ பொதுமக்களுக்கோ தெரிய வந்து அவர் சார்பில், தடை உத்தரவு வாங்க விடக் கூடாது என்ற தீய எண்ணத்துடன் தந்திரமாக நடந்து கொண்டிருக்கிறது மத்திய அரசு. மேலும் வரும் பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு போட்டியாக இந்தி பேசும் மாநிலங்களில் உள்ள ‘இந்துக்களின்’ வாக்குகளை கவருவதற்காகவும் இந்த தூக்கு நாடகம் நடத்தப்பட்டிருக்கிறது.

மேலும் மனிதாபிமான காரணங்களைத் தாண்டி அப்சல் குருவைப் போலவே வீரப்பனின் கூட்டாளிகள் என்று கைது செய்யப்பட்டு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட ஞானபிரகாஷ், சைமன், மீசை மாதையன், பிலவேந்திரன் போன்றவர்கள் அப்பாவிகள் என்பதை மூடி மறைக்க விரும்புகின்றன போலீசும் நீதித்துறையும். வீரப்பனுடன் சேர்ந்து கண்ணி வெடி  வெடிப்பிலும் அதைத் தொடர்ந்த துப்பாக்கிச் சண்டையிலும் தொடர்புடையவர்கள் என்று சொல்லப்படும் இவர்கள் வீடுகளிலிருந்தும் பொது இடங்களிலிருந்தும் கைது செய்யப்பட்டார்கள். வீரப்பனுடன் காட்டில் பதுங்கியிருக்கும் போது பிடிக்கப்படவில்லை.

இவர்கள் மீதான வழக்கு ஏற்கனவே ரத்து செய்யப்பட்ட தடா சட்டத்தின் கீழான நீதிமன்றத்தில் நடத்தப்பட்டது. காட்டுக்குள் நடவடிக்கை எடுப்பதற்காக வேன்களில் போன காவல் துறையினரின் சாட்சியங்களை மட்டுமே வைத்து இவர்களை குற்றவாளிகள் என்று முடிவு செய்திருக்கிறது விசாரணை நீதிமன்றம். முக்கியமான ஒரே சாட்சி, குண்டு வெடிப்பில் படுகாயமடைந்த போலீஸ் அதிகாரி கோபாலகிருஷ்ணன் எப்படி சுயநினைவுடன் இவர்களை கண்டுபிடிக்க வாய்ப்பில்லை என்ற உண்மையையும் ஒதுக்கித் தள்ளியிருக்கிறது. இந்த நான்கு பேரை சம்பவ இடத்தில் பார்த்ததாகச் சொன்ன மற்ற போலீஸ்காரர்களின் சாட்சியங்கள் நம்பக் கூடியவை அல்ல என்பது நீதிமன்றத்தில் நிரூபணம் ஆகியிருக்கிறது.

2001ம் ஆண்டு விசாரணை நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை மேல் முறையீட்டின் போது தூக்குத் தண்டனையாக மாற்றி தமது கொலை வெறியை வெளிப்படுத்தினர் உச்ச நீதிமன்ற நீதிபதிகள். 2004ம் ஆண்டு வழங்கப்பட்ட அந்தத் தீர்ப்பில் ஆயிரக்கணக்கான பெண்கள், அப்பாவி மக்களை துன்புறுத்திய அதிரடிப் படையினரின் கொலை வெறிக்கு இன்னும் நான்கு பேரின் உயிரை பலி கேட்டது உச்சநீதிமன்றம்.

ஆனால், சதாசிவம் கமிஷன் விசாரணையில் அம்பலப்படுத்தப்பட் அதிரடிப்படையினரின் கொடூரங்களுக்கு பொறுப்பானவர்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் இது வரை எடுக்கப்படவில்லை.

படிக்க:

Execution of Veerappan aides stayed for 6 weeks