Thursday, April 17, 2025
முகப்புசெய்திபு.மா.இ.மு. தோழர்கள் மீது பொய் வழக்கு!

பு.மா.இ.மு. தோழர்கள் மீது பொய் வழக்கு!

-

உழைக்கும் மக்களுக்காக போராடி வரும் பு.மா.இ.மு. தோழர்கள் மீதான போலீசின் பொய் வழக்குகளையும் அடக்குமுறைகளையும் முறியடிப்போம்!

பொதுக்கூட்டம்

நாள் : 23.2.2013 சனிக்கிழமை
நேரம் : மாலை 6 மணி
இடம் : சி.டி.என். நகர், நெற்குன்றம், சென்னை.

தலைமை : தோழர் அ முகுந்தன், மாநிலத் தலைவர், பு.ஜ.தொ.மு., தமிழ்நாடு.
சிறப்புரை :
தோழர் சி ராஜூ, மாநில ஒருங்கிணைப்பாளர், மனித உரிமை பாதுகாப்பு மையம், தமிழ்நாடு.
தோழர் வ கார்த்திகேயன், சென்னை கிளைச்செயலர், பு.மா.இ.மு.

உழைக்கும் மக்களுக்காகப் போராடிவரும் பு.மா.இ.மு தோழர்கள் மீதான போலிசின் பொய் வழக்குகளையும் அடக்குமுறைகளையும் முறியடிப்போம்!

ன்பார்ந்த உழைக்கும் மக்களே !

தமிழகத்தின் ஒன்றரை கோடி ஏழை மாணவர்களுக்கான சமச்சீர் பாட புத்தகத்தை முடக்க நினைத்த தமிழக அரசின் சதியை எதிர்த்துப் போராடி முறியடித்தோம். அனைவருக்கும் இலவசக் கட்டாயக்கல்வியை அரசே வழங்க வேண்டும், அதற்கு தனியார் கல்வி நிறுவனங்கள் அனைத்தையும் அரசுடைமையாக்க வேண்டும், என்று பள்ளிக் கல்வி இயக்குனரகத்தை முற்றுகையிட்டு போர்க்குணத்துடன் போராடினோம். இவற்றை எல்லாம் தொலைக்காட்சி பத்திரிக்கைகளின் வாயிலாகத் தெரிந்திருப்பீர்கள். பல்வேறு சமூக,அரசியல் பிரச்சனைகளுக்காக உங்கள் வீடுளைத் தேடிவந்தும், பேருந்து, ரயில்களில் பிரச்சாரம் செய்யும் போதும், போரட்டக்களத்திலும் எங்களை பார்த்திருப்பீர்கள். இவ்வாறெல்லாம் எமது பு.மா.இ.மு-வின் செயல்பாட்டை நீங்கள் நன்கு அறிவீர்கள்.dyf2

மதுரவாயல் பிள்ளையார் கோவில் தெரு பகுதியில் மக்களோடு இணைந்து அடிப்படைப் பிரச்சினைகளுக்காகப் போராடினோம். அதுவரை உறைக்காத அரசின் எருமை மாட்டுத் தோலுக்கு உறைக்க வைத்தோம், கழிவறை கட்டப்பட்டது. இது அக்கம் பக்கத்திலுள்ள பகுதி மக்களையும் தங்களுடைய பாதிப்புகளுக்கு எதிராக அமைப்பாகத் திரண்டு போராடத் தூண்டியுள்ளது. இப்படி மக்களோடு ஒன்று கலந்து அவர்களுக்கான போராட்டப் பாதையை காட்டி வரும் புரட்சிகர அமைப்புகளைத்தான் முடக்க எத்தனிக்கிறது போலீசு.

காரணம், நாங்கள் உழைக்கும் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்காக அவர்களின் உரிமைகளுக்காகப் போராடும் போது பல வண்ண ஓட்டுக்கட்சிகளைப் போல் அதிகாரிகளிடமோ, போலீசிடமோ சமரசம் செய்து கொள்வதில்லை. இவர்களை அண்டிப் பிழைப்பதில்லை. போலிசின் பொய் வழக்குகள், சிறை ஆகியவற்றிற்கு பணிந்துபோவதில்லை. நேர்மையாக, உறுதியாகப் போராடி வருகிறோம். இதனைப் பார்க்கும் உழைக்கும் மக்கள் எங்களை வரவேற்கின்றனர். எமது செயல்பாட்டை ஆதரிக்கின்றனர். இந்த அரசால் உழைக்கும் மக்கள் பாதிக்கப்படும் போதெல்லாம் புரட்சிகர அமைப்புகள்தான் களத்தில் நிற்கின்றன. இதைத்தான் அரசும் சவாலாக பார்க்கிறது, இது மிகையல்ல, உண்மை !

கடந்த ஆகஸ்ட் 25 ந்தேதி மதுரவாயல் ஏரிக்கரைப் பகுதியில் ஒரு வழக்கில் விசாரணை என்கிற பெயரில் போலீசு அராஜகம் செய்தது. இதை எதிர்த்துக் கேள்வி எழுப்பியதற்காகத்தான் அப்பகுதியைச் சேர்ந்த இரண்டு பு.மா.இ.மு தோழர்கள் மீது தாக்குதல், பொய் வழக்கு, சிறை. மேலும் மக்கள் பிரச்சனைகளுக்காகப் போராடி வரும் தோழர்கள் மீது பொய்யாக கிரிமினல் வழக்குகளை ஜோடித்து குண்டர் தடுப்புக் காவலில் சிறையிலடைத்துள்ளார் மதுரவாயல் இன்ஸ்பெக்டர் ஆனந்தபாபு.

இதைக் கேட்கச் சென்ற அப்பகுதி மக்கள், இளம் பெண்கள் உள்ளிட்ட பு.மா.இ.மு தோழர்கள் மீது கொலை வெறித்தாக்குதல் நடத்தினர். சுமார் 64 தோழர்கள் மீது பொய்வழக்குப் போட்டனர். ஊருக்குள் கருங்காலிகளை உருவாக்கிக்கொண்டு மீண்டும் , மீண்டும் பொய் வழக்கு ஜோடிப்பது, தேடுதல் என்கிற பெயரில் பீதியூட்டுவது என போலீசு ராஜ்ஜியத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். இவற்றிற்கெல்லாம் நாங்கள் கிஞ்சித்தும் அஞ்சப்போவதில்லை. அடி, உதை, சிறை, பொய் வழக்குகள் என அனைத்தையும் எதிர்கொண்டுதான் உழைக்கும் மக்களுக்காகப் போராடிவருகிறோம்.

இதை, ஏதோ எங்கள் மீதான தாக்குதல் என்று மட்டும் நினைக்காதீர்கள். சமூக உணர்வோடு போலிசின் வன்முறைகளை துணிவுடன் எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு நடத்தக் கூடிய, உயர்நீதிமன்ற மூத்த வழக்குரைஞர் சங்கரசுப்புவின் மகன் போலீசாரால் கடத்தப்பட்டார். சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். கூடங்குளம் அணு உலைக்கு எதிராகப் போராடிய அப்பகுதி மக்கள் மீது நவீன ஆயுதமேந்திய போலிசார் தாக்குதல் நடத்தினர். பொய்யாக நூற்றுக்கணக்கான கிரிமினல் வழக்குகளைப் போட்டு பீதியூட்டினர். ஊருக்குள் அத்துமீறி புகுந்து அவர்களின் உடைமைகளை அடித்து நொறுக்கினர். பெண்களின் பிறப்புறுப்பில் லத்தியால் குத்தி சித்திரவதை செய்தனர். இளம்பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோரை கைது செய்த்ததோடு 3 பேர் குண்டர் தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டனர். நாடு முழுவதும் நடைபெற்று வரும் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளில் முதல் குற்றவாளிகளே போலிசும்,ராணுவமும்தான். ஆனால்,பாசிச ஜெயா அரசோ சாதாரண சாலை மறியலுக்கும், இணையத்தில் அரசுக்கு எதிராக கருத்துச் சொன்னாலும்ம் குண்டர் சட்டம், போலீசுக்கு ஆள்காட்டி வேலை செய்வதற்கு இளைஞர் கூலிப்படை என்று புரட்சிகர அமைப்புகளையும், ஜனநாயசக்திகளையும் ஒடுக்க போலீசு ராஜ்ஜியத்தை கட்டவிழ்த்து விட்டுவருகிறது.

இது மட்டுமல்ல, தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் எனும் மறுகாலனியாக்கக் கொள்கைகளை புகுத்தியதன் விளைவாக பெட்ரோல், டீசல் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு, சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடு, சமையல் கியாஸ் சிலிண்டருக்கு கட்டுப்பாடு என மறுகாலனியாக்கக் கொத்து குண்டுகளை அன்றாடம் வீசி வருகிறன மத்திய –மாநில அரசுகள். இதற்கெதிராகப் போராடும் உழைக்கும் மக்கள் மீது போலீசு, சிறப்பு ஆயுதப்படைகளைக் கொண்டு அடக்குமுறைகளை ஏவி புழு பூச்சிகளைப் போல கொன்று குவித்து வருகின்றன.

எனவேதான் சொல்கிறோம், பன்னாட்டு முதலாளிகள், தரகு அதிகார வர்க்க முதலாளிகளின் நலன் கொண்ட இந்த சுரண்டல் அரசமைப்பு முறைக்குள் உழைக்கும் மக்கள் தங்கள் பிரச்சனைகளுக்காகப் போராடி தீர்வு காண முடியாது. மாறாக இதை ஒரு புதிய ஜனநாயகப் புரட்சியின் மூலம் தூக்கியெறிந்து புதிய ஜனநாயக அரசை நிறுவுவதன் மூலமே நமக்கான விடியலைத் தேடிக்கொள்ள முடியும். இப்படி ஒரு தீர்வை முன்வைத்து உழைக்கும் மக்கள் மீதான ஆளூம் வர்க்கங்களின் தாக்குதலுக்குத் தடையாக இருப்பவர்களும், அத்தாக்குதலுக்கு எதிராக உண்மையில் மக்களைத்திரட்டிப் போராடுபவர்களும் புரட்சிகர அமைப்புகளும் ஜனநாயக சக்திகளும்தான். அதனால் தான் எங்கள் மீது போலீசு மூலம்அடக்கு முறைகளை ஏவி செயல்பாட்டை முடக்க முயலுகிறது இந்த அரசு. எனவே இது எங்கள் மீதான தாக்குதல் அல்ல, உழைக்கும் மக்களாகிய நம் அனைவர் மீதான தாக்குதல் என்பதை உணருவோம். உழைக்கும் வர்க்கமாய் ஒன்றிணைவோம் புரட்சிகர அமைப்புகளின் தலைமையில் அணிதிரள்வோம். போலிசின் பொய் வழக்குகளுக்கும் அடக்குமுறைகளுக்கும் முடிவுகட்டுவோம்.

தொடர்புக்கு :
41, பிள்ளையார் கோவில் தெரு, மதுரவாயல், சென்னை – 95.
அலைபேசி – 94451 12675. மின்னஞ்சல் – Rsyfchennai @gmail.com

தகவல்:
மக்கள் கலை இலக்கிய கழகம்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி