Wednesday, April 30, 2025
முகப்புசமூகம்சாதி – மதம்மனித இருப்பும் மனித அடையாளமும் - சி. சிவசேகரம்

மனித இருப்பும் மனித அடையாளமும் – சி. சிவசேகரம்

-

அறிமுகம்

மனித இருப்பை உறுதிசெய்ய வல்லதும் மனிதருக்குத் தேவையானதுமான ஒரே அடையாளம் மனித அடையாளமாகும். பிற அடையாளங்கள் அனைத்தும் இரண்டாம் பட்சமானவை.

மௌரிஷியஸ்இயற்கையின் அடிப்படையில் அமைந்த முக்கியமான அடையாளம் பால் அடையாளமாகும். வழமையானவை என்று கூறக் கூடிய அடையாளங்களுக்குமப்பால் மனித உடலமைப்பிலும் உள்ளத்தின் தன்மையிலும் வழமை எனக் கூறப்படுபவற்றிலிருந்து பிறழ்ந்த பண்புகளையுடைய மனிதரின் பிறப்புக்கும் இயற்கை இடமளிக்கின்றது. அவ் வேறுபாடுகளிற் சில சிறப்பான ஆற்றல்களையும், வேறு சில குறைபாடுகளையும், பிற வழமையானவற்றிலிருந்து வேறுபட்ட முனைப்புகளையும் சுட்டலாம்.

இவ்வாறே கூர்ப்படைந்த மனித இனத்தின் வாழிடம் உட்பட்ட புறச் சூழல்களும் மரபணு மாற்றங்களும் மனிதரது தோற்றத்திலும் ஆற்றல்களிலும் வேறுபாடுகட்கு வழி செய்துள்ளன. இவ்வாறான அடையாள வேறுபாடுகள் இன அடையாளங்களாகக் கொள்ளப்பட்ட போதிலும், அவை ஒரே உயிரினத்துக்கு உட்பட்டனவாயும் தம்மிடையே கலப்பிற்கு இடமளிப்பனவாயும் அமைந்திருந்தன. அதன் பயனாக மனித இனம் தோற்றத்தில் வேறுபாடுடைய பல்வேறு இனப்பிரிவுகளைக் கொண்டதாக விருத்தி பெற்றது, இவற்றில் எதுவுமே மனிதர் சேர்ந்து வாழ்வதற்கு தடையாய் இருந்ததாகக் கொள்ளமுடியாது.

மனிதரிடையே தனிப்பட்ட முறையிலும் குழுக்களாகவும் மோதல்கள் இருந்து வந்துள்ளன. மனிதர் எப்போதுமே போரை விரும்புவோர் என்பதால் அவை நிகழவில்லை. தமது இருப்பு மிரட்டலுக்குட்படும் போது தனிமனிதரும் மனிதக் குழுக்களும் பிறருடன் மோத நேருகிறது. அவ்விதமான ஆதிநிலைக் குழுக்களிடமிருந்து நாம் இன்று வெகுதூரம் வந்து விட்டோம். இன்று எந்த மனிதரதும் மனிதக் குழுவினரதும் இருப்பிற்குப் பிற மனிதரை அழிக்கும் தேவை உள்ளதாகக் கூற இயலாது. ஆயினும், மனித இனம், கடந்த நூற்றாண்டினுள், கொடிய போர்களை அதிகரிக்கும் அளவிற் கண்டுள்ளது. மனிதரை மனிதர் அழித்தற்கான பேரழிவு ஆயுதங்கள், கொடுமையிலும் ஆற்றலிலும் தொகையிலும் பெருகி வந்துள்ளன. மனித உற்பத்தியின் கணிசமான பகுதி வேண்டுமென்றே மனித இனத்தை அழிப்பதற்குப் பயன்படுகிறது.

பொருளாதார விருத்தியின் பேரிலும் மனிதரது தேவைகள் எனப்படுகின்றவற்றின் பேரிலும் மனிதர் தமது சுற்றாடலுக்கும் அதில் வாழும் பிற உயிரிகட்கும் ஈற்றில் மனித இனத்திற்கும் செய்கின்ற கேடுகளைத் தவிர்த்து, மனிதரை மனிதர் அழிப்பதற்காக வேண்டுமென்றே மேற்கொள்ளும் நடவடிக்கைகளைக் கவனத்திற் கொண்டால், அடையாளம் என்பது மனிதரைப் பிரித்து வைப்பதுடன் மனிதருடன் மனிதர் மோதி அழிவதற்கான முதன்மைக் காரணமாக அமைவதைக் காணலாம்.

பெரும் அடையாளங்கள்

இயற்கையின் பாற்பட்ட அடையாளங்களுள் மனிதரிடையே தோற்றத்திலும் உடலமைப்பிலும் வேறுபட்ட மனிதக் குழுக்களின் அடையாளம் முக்கியமானது. எனினும் எந்த மனிதக் குழுவும் தூய தனி இனம் என்று சொல்ல இயலாதவாறு இன்று இனப் பிரிவுகளிடையே கலப்பு ஏற்பட்டுள்ளது. எவ்வாறாயினும், நிறத்தின் அடிப்படையிலான வேறுபாடு, அடிமை வியாபார மூலமும் கொத்தடிமை முறையிலும் மனிதர் புலம்பெயர்க்கப்பட்ட காலத்தில் இருந்து தொடருகிறது. ஏற்றத்தாழ்வான ஒரு சமூக அமைப்பும் அதைப் பேணும் உற்பத்தி முறைகளும் உற்பத்தி உறவுகளும் மட்டுமன்றிச் சமுதாயத்தில் ஊறிப்போயிருந்த ஆதிக்கச் சிந்தனைகட்கு உரிய சமூக அமைப்பும் நீங்கிய பின்னும், மனித சிந்தனையில் நிற வேறுபாடு நிலைத்துள்ளது. இன்றைய அடையாளஞ் சார்ந்த முரண்பாடுகளில் நிறமும் நிறஞ்சார்ந்த இன அடையாளமும் தொடர்ந்தும் முக்கிய பங்கு வகிக்கின்றன எனலாம். ஆயினும் அவை தொடர்வதற்கான பிரதான சமூக அடிப்படை நிறமல்ல என்பதையும் இன்று உலகளாவியதாக விரிந்துள்ள ஏகாதிபத்திய முதலாளிய அரசியல் பொருளாதார முறையே என்பதையும் நாம் உணரவேண்டும்.

ஹோண்டூராஸ்
ஹோண்டூராஸ் தொழிலாளர் பேரணி – 2009

மனித சமுதாயம் என்பது, சிறு சிறு சமுதாயப் பிரிவுகளாகவே தனது அன்றாட இருப்பைக் கொண்டு இருந்து வந்துள்ளது. எனினும் மனிதத் தேவைகளும் அவை சார்ந்த உற்பத்தியும் நுகர்வும் விரிந்து வந்தமையையொட்டிச் சமூகப் பிரிவுகளிடையே உறவாடல்கட்கான தேவை வளர்ந்தது. அதே வேளை, ஒரே சமூகப் பிரிவு வளர்ந்து பெரும் நிலப்பரப்பொன்றிற் பரவி வாழ்ந்த நிலைமைகளில் அச் சமூகத்தில் மேலும் கிளைகள் உருவாகவும் சில கிளைகளிடையே உறவே இல்லாமற் போகவும் வாய்ப்புண்டு. மொழிகளின் விருத்தியை நோக்குவோமானால் சமூகங்களிடையிலான உறவின் தன்மையும் நெருக்கமும் பொது மொழியொன்றின் உருவாக்கத்திற்கு வழி செய்துள்ளமையையும், அதே வேளை, பொது மொழி ஒன்றிற்கான தேவையின்றி ஒவ்வொரு கிளை மொழியும் தனித்துவமான ஒரு விருத்தியையும் இருப்பையும் பேணுவதனையுங் காணுவோம்.

மொழி என்பது முக்கியமான ஒரு சமூக அடையாளமாக இருந்து வந்துள்ளது. அதன் காரணம் விளங்கக் கடினமானதல்ல. எந்தவொரு சமுதாயத்தினதும் அக உறவாடல்களில் மொழியின் பங்கு முதன்மையானது. சமுதாய விருத்திப் போக்கில் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளின் பயன்பாடு வெவ்வேறு துறைகள் சார்ந்தேனும் இருந்துவரக் கண்டிருக்கிறோம். எவர்க்கும் எந்த மொழி முதன்மையானதாக உள்ளதென்பதைச் சமூகத்தில் அவரது நிலையும் பங்களிப்பும் தீர்மானிக்கக் கூடும். எவ்வாறாயினும் ஒரு தேசம் அல்லது ஒரு தேசிய இனம் என்பதை அடையாளப்படுத்துவதில் ஒரு மொழிக்கு பிற மொழிகளினுங் கூடிய முக்கியம் இருப்பதைப் பொதுவாகக் காணலாம். அதே வேளை, பல மொழிகளோ மொழிப்பிரிவுகளோ சமமான முக்கியத்துடன் ஒரு சமூகத்திற் பகிரப்படுவதும் உண்டு. இதனை, நகர் சார்ந்த சில சமூகங்களில் மட்டுமன்றிப் பழங்குடிச் சமூகப்பிரிவுகள் ஒரு பொதுமையை நோக்கி நகரும் போதும் காண இயலும்.

மதம் எப்போதுமே சமூகங்களின் ஆதிக்கச் சிந்தனையாய் இருந்ததாகக் கூற முடியாது. மனிதரின் அன்றாட வாழ்விலும் பண்பாட்டிலும் மத நம்பிக்கைகளும் மதஞ்சார்ந்த சடங்குகளும் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் கொண்டுள்ளன. முதலாளியத்தின் எழுச்சியை ஒட்டி மதங்களின் முக்கியம் குறையுஞ் சாத்தியப்பாடுகள் இருந்த போதும், மதத்தை ஒரு அடையாளமாக வலியுறுத்தச் சமூக வாழ்வில் மதம் எவ்வளவு தூரம் பின்பற்றப்படுகிறது என்பது முக்கியமல்ல. ஒரு மதத் தீவிரக் கொள்கையை வலியுறுத்துகிறவர் அம் மதத்தை முறையாகப் பின்பற்றுபவராக இருக்கத் தேவையில்லை என்பதை நாம் காண இயலும். எனினும், ஒருவரின் அன்றாட வாழ்வுடன் குறிப்பிடத்தக்க உறவே இன்றி மதம் என்பது அவரது சமூக அடையாளமாக அமையலாம். சில சூழ்நிலைகளிற் பண்பாடு உட்பட பிற அடையாளங்களின் கூறுகளின் துணையுடன் மதம் ஒரு தேசிய இன அடையாளமாகவும் அமையலாம்.

சாதி என்பது குறிப்பாகத் தென்னாசியாவின் நிலவுடமைச் சமூகத்தின் வர்க்க அடையாளத்தின் நீட்சியாகவுள்ளது. நிலவுடையச் சமுதாய உற்பத்தியுறவுகள் தொடர்ந்த சூழல்களில் அது வலுவான ஒரு வர்க்க அடையாளமாக இருந்தது. நிலவுடமை உற்பத்தி உறவுகள் பெருமளவும் தளர்ந்தோ அழிந்தோ போன பிறகும் நிலவுடமைச் சிந்தனையின் நீட்சியாகச் சாதியச் சிந்தனைகள் நிலைக்கின்றன. அகமண முறையின் மூலம் நிலைபெற்று வந்த சாதி அடையாளங்கள் இன்னமும் நகரச் சூழல்களில் அகமண முறையின் தொடர்ச்சி மூலம் பேணப்படுவதை நாம் காணுகிறோம்.

பண்பாடு என்பது முற்குறிப்பிட்ட அடையாளங்கள் அனைத்தையும் விட வேகமாக மாறுவதாகும். எனினும் பண்பாட்டை முன்னிறுத்திச் சமூகங்களின் தனித்துவத்தையும் அடையாளச் சிறப்பையும் வலியுறுத்துவோர் தமது பண்பாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் கவனிக்க விரும்புவதில்லை. மனிதரின் சமூக இருப்பிற்கும் நடைமுறைக்கும் முக்கியமற்ற பண்பாட்டுக் கூறுகளை எவரும் மிகையாக வலியுறுத்தல் பண்பாட்டைப் பேணும் நோக்கின்றி அடையாளத்தை வலியுறுத்தும் நோக்கிலேயே என்பதை நாம் அவதானிக்கலாம்.

சமூக உற்பத்தி முறையும் உற்பத்தி உறவுகளும் மாறுகையிற் பண்பாடு எவ்வளவு மாறுகிறது என்பதைப், பண்பாட்டை மேலைத்தேய-கீழைத்தேய என்று பிரித்துப் பேசுவோர் தவறவிடுகின்றனர். இன்று நாம் மேலைத்தேயப் பண்பாடு என்பது முதலாளியத்தின் விளைபொருளாகும். நகர் சார்ந்த பழைய கிரேக்கச் சிந்தனையின் தொடர்ச்சியான பண்பாடாக அதைக் கொள்ள இயலாது என்பதுடன் ஐரோப்பிய நிலவுடமைச் சமூகத்தினின்று உருப்பெற்ற முதலாளியப் பண்பாடு, பின்னைய முதலாளிய விருத்தியையொட்டி மேலும் பாரிய மாற்றங்கட்குள்ளாகி வந்துள்ளது.

இந்தியப் பண்பாட்டுக்குரியன என மெச்சப்படும் பல பண்பாட்டுக் கூறுகளின் வேர்கள் இந்தியத் துணைக்கண்டத்திற்கு வெளியிலிருந்து வந்தவையே. எனவே சீனப் பண்பாடென்பதும் பிற ஆசியப் பண்பாடுகளெனக் கூறப்படுவனவும் ஒவ்வொன்றும் தனித்துவமான ஒரு பண்பாட்டிலிருந்து உருவானவை என்பதை விடப் பல்வேறு பண்பாடுகளின் தாக்கத்தால் உருவானவை என்பது கூடப் பொருந்தும்.

எனவே மனிதர் தம்முடைய தனித்துவமான அடையாளங்கள் என்று கூறித் தம்முட் பிளவுபட்டுப் போரிடுமளவிற்குத் தூண்டும் அடையாளங்களில் எதுவும் தூயதுமல்ல, முற்றிலும் தனித்துவமானதும் அல்ல. அடையாளங்களின் பல்வேறு கூறுகளின் சேர்க்கையில் தனித்துவம் இருக்கலாமே ஒழிய, ஒவ்வொரு அடையாளக் கூறும் பிற அடையாளங்கட்குரிய பலருடன் பகிரப்படுவது என நாம் காணலாம்.

மனிதரை இன்று அதிகம் பிளவுபடுத்தியுள்ள அடையாளங்களில் மதமும் தேசியமும் முக்கியமானவை. மதங்களின் பேரால் மக்கள் மோதும் வேளையில், எல்லா மதங்களும் ஒன்றையே போதிக்கின்றன என மதத் தலைவர்கள் எனப்படுவோர் சொல்லத் தவறுவதில்லை. அதைவிடப் பொய்யான கூற்றுக்கள் அதிகம் இருக்கமுடியாது. ஏனெனில் மாதங்கடகுப் பொதுவானவை என்று கூறக்கூடிய எதுவும் இருப்பின், அது, மனித நேயத்திற்குள் அல்லது மனிதரின் சமுதாய இருப்பிற்குத் தேவையான அற ஒழுக்க விதிகட்குள் அடங்கும். எனவே அவ்வாறான பொதுப் பண்புகளைப் பேண மதங்கள் தேவையில்லை. மனிதர் மதங்களை நாடுவது அவ்வாறானதொரு தேவை கருதியும் அல்ல. அல்லல் மிக்க வாழ்வில் அல்லல்களின் காரணங்களைக் கண்டறிந்து தீர்க்க வழிகாட்டுதற்கு மாறாக மனிதர்க்கு ஆறுதல் கூறுவதுடன் தற்காலிகமான மனநிம்மதியை மதம் வழங்குகிறது. எனவே வாழ்க்கை அல்லல்மிக்கதாக உள்ளவும் தனிப்பட்ட முறையிற் பலருக்கு மதம் எனும் பற்றுக்கோடு தேவைப்படுகிறது.

ஆனால் தனிமனித நம்பிக்கை என்ற எல்லையைத் தாண்டி மனிதரை வேறுபடுத்திப் பிரிக்கும் அடையாளமாக அது வலியுறுத்தப்படும் போது, அது ஆபத்தான சக்தியாகிறது. இவ்விடத்து அரசியற்படுத்தப்பட்ட மதங்களும் அவற்றின் தீவிர வடிவங்களும் சமூகக்கேடானவையாகின்றன. எந்தவொரு மதத்தையும் அவ்வாறான நிலைக்குத் தள்ள இயலும் என்பதை நாம் அண்மையிற் கண்டுள்ளோம்.

தேசியம் என்பது மனிதரின் இயல்பான இருப்புக்குரிய ஒரு அடையாளமல்ல. தேசம் என்ற கருத்தாக்கம் வரலாற்றில் மிக அண்மையானது. அரசு என்பதையும் நாடு என்பதையும் தேசம் என அடையாளப்படுத்தல் முதலாளியத்திற்குத் தேவைப்பட்டது. அதன் பயனாகப் பல தேசிய இன அடையாளங்கள் அழிக்கப்பட்டன. முக்கியமாகப், பல மொழிகள் வழக்கொழிந்தன அல்லது வழக்கொழிக்கப்பட்டன. இவ்வாறான வழக்கொழிப்புப் பண்பாட்டையும் பாதித்துள்ளது. மனிதக் குழுக்களின் அடையாளங்களின் சிதைவு முதலாளியத்தின் தேச எல்லைக்குள் நில்லாது அதற்கு வெளியிலும் நடந்துள்ளதை நாம் அறிவோம்.

எனவே தேசியம் என்பது வெறுமனே குறிப்பிட்ட ஒரு சமூக-அரசியல்-பொருளாதாரக் கட்டமைப்பைப் பேணுவதற்கும் அப்பால் பிற தேசங்களை ஆதிக்கத்துக்குட்படுத்தவும் அழிக்கவும் முற்படுவதை நாம் காணுகின்றோம். தேசத்தினதும் தேசத்தின் நலன்களினதும் பாதுகாப்பினதும் பெயராற் கொடிய போர்கள் நடத்தப்படுகின்றன. உலகின் ஒடுக்கப்பட்ட மக்கள் தேசியத்தின் பேராற் தம்முட் போரிடும் விதமாக இன்று தேசியம் என்பது பின்தங்கிய முதலாளிய உற்பத்தியுடைய நாடுகளைப் பிளவுபடுத்தவும் பயன்படுகிறது. எனினும் இத் தேசங்களினதும் தேசிய இனங்களதும் மோதல்கள் பெரு முதலாளியத்திற்கு மட்டுமே நன்மை பயக்கின்றன. உண்மையில் இப் போர்களுக்குப் பின்னல் உள்ள ஊக்குவிப்பாளர்கள் பன்னாட்டுக் கம்பனிகளாக இருப்பதும் அவர்களுக்கும் அவர்களுடைய மூலதனத்திற்கும் இப் போர்களால் ஒரு தேசம் இல்லை என்பதும் கவனிக்கத்தக்கன. அவர்கள் வலிய தேச அரசுககளுடன் தம்மை அடையாளப்படுத்தி வலிமை குறைந்த தேச அரசுகளையும் தேசங்களையும் தேசிய இனங்களையும் பிரித்தும் பிளவுபடுத்தியும் போரில் ஆழ்த்தியும் தேவையானபோது அவற்றின் மீது போர் தொடுத்தும் அடக்கியாள முற்படுகின்றனர்.

சிறு அடையாளங்கள்

இவை மனித சமூகம் ஒன்றின் முழுமைக்கோ அதன் ஒரு தனித்துவமான சமூக-பொருளாதார-பண்பாட்டுக் கூறாக இயங்கக் கூடிய ஒரு பகுதிக்கோ உரிய அடையாளங்களுக்குட் காணப்படும் இயற்கையின் பிறழ்வுகள் எனப்படுவற்றையும் தனிமனிதத் தெரிவுகளையும் சார்ந்த சிறுபான்மை அடையாளங்களை இவ்வாறு கூறலாம். இவ்வாறான அடையாளமுடையோரைச் சிலர் விளிம்பு நிலை மாந்தர் என்பர். எனினும் இங்கு கருதப்படும் அடையாளங்கள் ஒவ்வொன்றும் மனிதரை விளிம்பு நிலையில் வைத்திருப்பதாகக் கூறுவது கடினம். எவ்வாறாயினும் இவ்வாறான அடையாளங்களால் மனிதர் பாரபட்சங்களுக்கு உட்பட இடமுண்டு என்பது உண்மை.

சுயபாற்காமம் என்பதைக் குற்றமாகக் கருதித் தண்டித்த பல நாடுகளில் இன்று அது ஏற்கப்பட்டுள்ள போதும், சமூகத்தில் உள்ள மனத்தடைகள் காரணமான பாரபட்சம் தொடர்வதை நாம் காணுகிறோம்.

உடலமைப்பிலும் உளவியலிலும் வேறுபாடு உடையோருடன் சமூகம் பொதுவாகப் பகைமையுடனேயே நடக்கின்றது. வலது குறைந்தவர்களுடன் தனிப்பட்ட முறையில் உறவையோ நட்பையோ கருதி மனிதர் பரிவுடனும் மரியாதையுடனும் நடந்தாலும் அவர்கட்குச் சமவாய்ப்பளிக்க எல்லாச் சமூகங்களும் முன்வருவதில்லை. அவர்கட்கான சலுகைகள் உள்ள இடங்களிலும் சமத்துவம் உள்ளதா என்ற கேள்வியுள்ளது. முடவர், செவிடர், குருடர், பைத்தியகாரர் போன்ற சொற்களைத் தவிர்ப்பது நல்ல நோக்கமுடையதாயினும் உடல், உளக் குறைபாடுகள் பற்றிய மனத்தடைகளை நீக்கப் பேர் மாற்றம் போதாது.

இடதுகைப் பழக்கமுடையோரும் எல்லாச் சமூகங்களிலும் சமமாக நடத்தப்படுவதில்லை. பொதுப் பாவனைக்கான கருவிகள் முதல், கதவுகள் வரையிலான பலவும் வலது கைப் பழக்கக்காரருக்கானவை என்பதை நாம் பொதுவாகக் கவனிப்பதில்லை. மேற்குறிப்பிட்ட உடல் உள நிலை தொடர்பான சிறுபான்மை அடையாளங்கள் போகச், சமூக நிர்ப்பந்தங்கள் உருவாக்கும் விதவை, பரத்தை, சில்லறைத் திருடர் போன்றோர், குறிப்பாகப் பின்தங்கிய சமூகங்களில், மிகவுங் கேவலமாகக் கருதவும் நடத்தவும் படுவதை நாம் அறிவோம். இன்று பெருந்தொகையான முதியோரும் இவ் வகைக்குள்ளடங்குவர். பெரும் அடையாளங்களின் பேரிற் சமூகப் பிரிவினராக ஒன்றுபட்டுப் போராடக் கூடிய அளவிற்கு சிறு அடையாளங்களின் அடிப்படையில் போராடல் இயலாவிடினும் சமூக விழிப்புணர்வு கூடுதலாக உளள சூழல்களில் அவர்களாற் தமது உரிமைகட்காகப் போராட முடிகிறது. எனினும், அடிப்படையான சமூக மாற்றம் என வரும் போதும் பிற நியாயமான போராட்டங்களின் போதும் அவர்களுடைய தேவைகளைக் கணிப்பில் எடுப்பதன் மூலம் உரிமைப் போராட்டங்கள் வலிமை பெறுகின்றன என்பது கவனத்திற்குரியது.

மனித இருப்பிற்கான போராட்டம்

மனித குலத்தின் நலமானதும் நிலையானதுமான இருப்பு, மனித சமுதாயம் நீதியானதாயும் சமத்துவமானதாயும் அமையும் போதே இயலும். அடையாள வேறுபாடுகள் ஏற்றத்தாழ்வாயும் அடக்கலையும் நசுக்கலையும், சுரண்டலையும் உள்ளடக்கியும் உள்ளளவும் அடையாள அடிப்படையிலான பகைமை தவிர்க்க இயலாதது.

தென் கொரியா
தென் கொரிய வேலை நிறுத்தம் – 1987

எனவே, ஒரு அதிகார வர்க்கத்தின் நிலைப்பிற்காகப் பல மனிதரைச் சில மனிதர்; சுரண்டுவதை அடிப்படையாகக் கொண்ட வர்க்க சமூகத்தின் உற்பத்தி உறவுகள் பகையானவை. வர்க்க முரண்பாடு, மனித இருப்பின் அடிப்படை முரண்பாடாகவும் பகை முரண்பாடாகவும் இருந்து வருகிறது. அவ்வாறான சுரண்டல் அமைப்பின் நீடிப்பிற்காக முதலாளியம் பிற சமூக முரண்பாடுகளைத் தனக்கேற்பப் பயன்படுத்தி வந்துள்ளது. குறிப்பாக, முதலாளியம், நவீன ஏகாதிபத்தியமாகி உலக மயமாக்கல் என்ற பேரில் உலகு முழுவதையும் சில பெரு முதலாளியக் குழுக்களின் ஆதிக்கத்தின் கீழ் வைத்திருப்பதற்காக தேசிய, மத, இன அடையாளங்கள் ஆகிய யாவற்றையும் பயன்படுத்தி ஒடுக்கப்பட்ட மக்களைப் பிளவுபடுத்துகிறது.

அத்துடன், ஏகாதிபத்தியம், பின்நவீனத்துவத்தின் மூலமும் அதன் தொடர்ச்சியாக உருவாக்கப்பட்டு வரும் புதிய கோட்பாடுகள் மூலமும் சிறு அடையாளங்கள் எனப்படுபவனவற்றை மிகைப்பட வலியுறுத்திப் பெரிய பிரச்சினையிலிருந்து கவனத்தைத் திருப்பவும் முனைகிறது. இன்று நவகொலனிய முறை மூலம் ஏகாதிபத்தியம் பின்தங்கிய முதலாளிய நாடுகளின் அரசுகளைக் கட்டுப்படுத்தி அதன் மூலம் மக்களின் எழுச்சிகளைக் கட்டுப்படுத்துவது போக, என்.ஜி.ஒக்கள் எனப்படும் ‘தன்னார்வக்’ குழுக்கள் மூலமும் மக்களின் ஐக்கியப்பட்ட எழுச்சிக்குக் குழி பறிக்கிறது.

  • இந் நிலையில் மக்களின் நலன் மீதும் மானிட நிலைப்பின் மீதும் நலமான இருப்பின் மீதும் அக்கறையுடையோர்; செய்யக்கூடியது என்ன?
  • அடிப்படையான முரண்பாட்டை விட மற்றவற்றை மாயை என்று புறக்கணிக்க இயலுமா?
  • அடிப்படையான முரண்பாடான வர்க்க முரண்பாடு தீர்ந்தாற் பிற யாவும் தாமாகத் தீருமென ஆறுதல் கூற இயலுமா?

மேற்கண்டவாறான அக்கறையின்மை மனிதரிடையே அடையாளஞ் சார்ந்த பகையும் அதன் விளைவான மோதல்களும் வலுப்பதற்கே உதவும். எனவே ஆண்-பெண் வேறுபாடு தவிர்ந்த சகல அடையாள வேறுபாடுகளும் மனித இனத்திற்குத் தேவையற்றவை என்பதை உணர்வதுடன், ஆண்-பெண் வேறுபாடு பாகுபாட்டுக்கும் ஆண்களின் மேலாதிக்கத்திற்கும் வழி செய்தல் மானுட நலனுக்குக் கேடானது என்பதை ஏற்பதும் முக்கியமானது.

எனவே, எந்த அடையாள அடிப்படையிலான முரண்பாட்டையுஞ் சுமுகமாகத் தீர்க்கக் கூடியவாறு அதை நீதி நியாயத்தின் அடிப்படையிற் கையாளுந் தேவை நமக்கு உண்டு. நீதி நியாயங்கள் மறுக்கப்படும் போது நிகழும் போராட்டங்கள் சரியானவை என்பதுடன் நீதிக்கான பிற போராட்டங்களுடன் ஒவ்வொன்றும் உறவு படுத்தப்பட்டு வலுப்படுத்தப்படுவதும் மனித இனத்தின் இருப்பிற்கு அவசியமானது.

மனித அடையாள வேறுபாடுகள் தம்மளவிற் கேடானவையல்ல. அவை நட்பான முரண்பாடுகளாக அமையுமாறு கவனித்துக் கொள்வது எவ்வாறு என்பது தான் மனித இனத்தை எதிர்நோக்கும் பெரிய சவாலாகும்.

___________________________________________________________________

நன்றி : செம்பதாகை  16, ஜனவரி – மார்ச் 2013

___________________________________________________________________