Saturday, April 19, 2025
முகப்புகட்சிகள்பா.ஜ.கமகாராஷ்டிரம்: காவி, காக்கி, சாதி மூன்றும் ஒரே நிறம்!

மகாராஷ்டிரம்: காவி, காக்கி, சாதி மூன்றும் ஒரே நிறம்!

-

திக்க சாதிப் பெண்ணைக் காதலித்ததற்காக, ஜனவரி 1-ஆம் தேதியன்று, மகாராஷ்டிர மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட இளைஞர் ஒருவர் துண்டு துண்டாக வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். அவருடைய நண்பர்கள் இருவரும் இவருடன் கொல்லப்பட்டுள்ளனர். அஹமத் நகர் மாவட்டத்தின் நவேசா பட்டாவிலிருக்கும் திரிமூர்த்தி பவன் பிரதிஸ்தான் எனும் கல்லூரியின் துப்புரவுப் பணியாளர்களான சச்சின் காரு (வயது 24) , சந்தீப் (25), ராகுல் (20) ஆகியோரே இவ்வாறு கொல்லப்பட்டவர்கள். இவர்களில் சச்சினும் இதே கல்லூரியில் படித்து வந்த ராதாவும் காதலித்திருக்கின்றனர். ராதா, ஆதிக்க சாதியை சேர்ந்த போபட் தரன்டாலே என்பவரின் மகளாவார்.

தரன்டாலே குடும்பத்தின் கடும் எதிர்ப்பையும் மீறித் திருமணம் செயும் முடிவில் இருவரும் இருந்ததால், சச்சினைக் கொல்வதற்குச் சதித்திட்டம் ஒன்றை அரங்கேற்றியிருக்கின்றனர். இரு தரப்பினருக்கும் அறிமுகமான அசோக் என்ற நண்பர், தரன்டாலேவின் பண்ணை வீட்டில் இருக்கும் “செப்டிக் டேங்கை” கழுவ வருமாறு சச்சினையும் மற்ற இருவரையும் அழைத்துச் சென்றிருக்கிறார்.

அன்று மாலையில் போலீசைத் தொடர்பு கொண்ட தரன்டாலே தரப்பினர், சச்சினும் ராகுலும் சேர்ந்து சந்தீப்பைக் கொன்றுவிட்டுத் தப்பிவிட்டதாகவும், செப்டிக் டேங்கின் உள்ளே சந்தீப் இறந்துகிடப்பதாகவும் தகவல் கொடுத்தனர். சந்தீப்பின் முகத்தில் காயங்கள் இருந்தன. தேடுதலுக்குப் பின் அருகில் இருந்த வறண்ட கிணறு ஒன்றில் ராகுலின் உடலைக் கண்டுபிடித்தது போலீசு. சச்சினுடைய தலை, கை,கால்கள் அனைத்தும் வெட்டி வெவ்வேறு இடங்களில் வீசப்பட்டிருந்தன.

சாதிவெறிக் கொலை என்று தெளிவாகத் தெரிந்தும் இதனை மூடிமறைக்கவே போலீசு முயன்றது. கொல்லப்பட்ட சந்தீப்பின் அண்ணன் பங்கஜ் ஒரு இராணுவ சிப்பாய். செய்தி அறிந்து அவர் காஷ்மீரிலிருந்து நேரில் வந்து விடாப்பிடியாகப் போராடியதனால்தான் வழக்கு பதிவு செய்யப்பட்டு, தரன்டாலே குடும்பத்தினர் 5 பேர்களை போலீசு கைது செய்திருக்கிறது. இருப்பினும் கொல்லப்பட்ட இளைஞர்களின் குடும்பத்தினர் அனைவரும் உயிருக்குப் பயந்து ஊரை விட்டே சென்று விட்டனர்.

தூலே கலவரம்
இந்து மதவெறி – அரச பயங்கரவாதத்தின் அட்டூழியம் : கொள்ளயடிக்கப்பட்டு தீவைத்து நாசமாக்கப்பட்ட இசுலாமியர்களின் வீடு மற்றும் உடைமைகள்.

இந்த ஆதிக்க சாதி வெறிக் கொலை சம்பவம் நடந்து முடிந்து ஐந்து நாட்கள் கழித்து, ஜனவரி 6-ஆம் தேதியன்று மகாராஷ்டிராவின் துலே நகரில் உணவு விடுதி ஒன்றில் கடைக்காரருக்கும் வாடிக்கையாளருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தகராறு இந்து-முஸ்லிம் மோதலாக வெடித்தது. கலவரத்தைக் கட்டுப்படுத்துவது என்ற பெயரில் குவிக்கப்பட்ட போலீசுப் படை நேரடியாகவே முஸ்லிம்களுக்கெதிரான தாக்குதலில் ஈடுபட்டது. எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் போலீசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 முஸ்லிம் இளைஞர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். மேலும் 34 முஸ்லிம்களின் உடலில் குண்டு பாய்ந்திருக்கிறது. முழங்காலுக்கு கீழே சுடவேண்டும் என்று விதி இருந்தும், அனைவருக்குமே தலையிலும், கழுத்திலும், விலாவிலும், முதுகிலும்தான் குண்டு பாந்திருக்கிறது. தங்கள் மீது ஆசிட் வீசப்பட்டதனால்தான் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக போலீசு ஊடகங்களிடம் புளுகிய போதிலும், போலீசே பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் கூட ஆசிட் வீச்சு பற்றிக் குறிப்பிடப்படவில்லை.

இந்துக்களும் முஸ்லிம்களும் இரு தரப்பாகப் பிரிந்து நின்று ஒருவர் மீது ஒருவர் கல் வீசிக் கொண்டிருந்தபோது, இந்துக்களுடன் சேர்ந்து கொண்டு முஸ்லிம்களை மட்டுமே தாக்கியிருக்கிறது போலீசு. ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துவிட்டு, முசுலிம் குடியிருப்புகளைக் கொள்ளையடித்திருக்கிறது. மறுநாள் விடிவதற்குள் தடயங்கள் ஏதுமில்லாமல் கலவரம் நடைபெற்ற பகுதி முழுவதும் கழுவி சுத்தம் செய்யப்பட்டுவிட்டது. பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்கள் புகார் கொடுக்க வந்தபோது, “புகார் கொடுத்தால் உங்கள் மீதே வழக்கு போட்டு உள்ளே வைத்து விடுவோம்” என்று அச்சுறுத்தி விரட்டியிருக்கிறது போலீசு. முஸ்லிம் பகுதிகளில் வீடுவீடாகச் சோதனை நடத்திக் கைது செய்ய இருப்பதாக ஒரு வதந்தியை போலீசே திட்டமிட்டு கிளப்பி விட்டதனால் பீதியடைந்து, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த காயமடைந்த முஸ்லிம்களெல்லாம் அவசர அவசரமாக வெளியேறியிருக்கின்றனர்.

இந்த மதவெறி – அரசு பயங்கரவாதப் படுகொலைகள் நடந்து 9 நாட்களுக்குப் பின்னரே துலேவுக்கு மாநில முதல்வரும் உள்துறை அமைச்சரும் வந்தனர். போலீசே முன்நின்று கலவரக்காரர்களைத் தூண்டி விடுவதும், கடைகளில் புகுந்து கொள்ளையடிப்பதும் செல்பேசி காமெராக்களில் பதிவு செய்யப்பட்டு தொலைக்காட்சிகளிலும் இணையத்திலும் வெளிவந்துவிட்டதால், போலீசின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் அரசுக்கு ஏற்பட்டு விட்டது. சொத்துகளைச் சூறையாடிய 6 போலீசார் மட்டும் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர்.

மாநில முதல்வர் இந்த சம்பவத்தை போலீசுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான மோதல் எனச் சித்தரித்ததன் மூலம், இந்து வெறியர்களைப் பாதுகாத்திருப்பதுடன், இந்துவெறியர்களின் அறிவிக்கப்படாத அடியாள் படையே போலீசு என்பதையும் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

அகமது நகர் கொலைகள்
ஆதிக்க சாதியைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்ததற்காகவே படுகொலை செய்யப்பட்ட சச்சின் காரு (இடது) மற்றும் அவரது நண்பர்கள்

அதே ஜனவரி மாதத்தில் துலே கலவரத்தை அடுத்த ஒரு வாரத்தில், அந்நகரிலுள்ள அம்பேத்கர் சமூக சேவைக் கல்லூரியின் பேராசிரியர் டாக்டர் பிரமோத் சுக்தேவ் பூம்பே இந்து மதவெறிக் கும்பலால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த இவர், இந்தியாவில் சமூக சீர்திருத்த இயக்கங்கள் குறித்து வகுப்பில் விளக்கும்போது, இராமாயணத்தில் சில சம்பவங்கள் சாதி ஒடுக்குமுறையை ஆதரிப்பதைக் குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார். இதனை இந்து மதவெறி அமைப்பைச் சேர்ந்த ஒரு மாணவன் தனது செல்போன் காமெராவில் பதிவு செய்து, பஜ்ரங் தள், வி.எச்.பி. யினரிடையே சுற்றுக்கு விட்டிருக்கிறான்.

பூம்பே இந்து மதத்தை இழிவு படுத்துவதாகவும், இந்துக்கள் மனம் புண்பட்டுவிட்டதாகவும், பிரமோத் பூம்பேவை வேலையை விட்டு நீக்குமாறும் இந்து மதவெறியினர் பிரச்சினையைத் தொடங்கினர். கல்லூரி முதல்வரும் இதற்கு விளக்கம் கேட்டு பேராசிரியருக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தார். யாரையும் புண்படுத்தும் நோக்கம் தனக்கில்லை என்று விளக்கமளித்த பூம்பே மன்னிப்பும் கேட்டிருந்தார். கல்லூரி சார்பில் துலேவிலுள்ள ராமர் கோவிலில் பூசை நடத்தப்பட்டு சமாதான முயற்சியும் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்நிலையில் கல்லூரிக்குள் நுழைந்த பஜ்ரங் தள், விஷ்வஇந்து பரிஷத் குண்டர்கள், பூம்பேவை அடித்து உதைத்து மாடிப்படிகளில் உருட்டிவிட்டுக் கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். இத்தாக்குதலில் வட மராட்டிய பல்கலைக்கழகத்தின் ஆட்சிக்குழு உறுப்பினரும் பங்கேற்றதாகக் கூறியிருக்கிறார் கல்லூரி முதல்வர்.

****

ராட்டிய மாநிலத்தில் நடைபெற்றுள்ள இம்மூன்று சம்பவங்களும் தொடர்பற்றவையோ தற்செயலாக ஒரே மாதத்தில் நடந்து விட்டவையோ அல்ல. தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் மீதான சாதிவெறிப் படுகொலையை நடத்தியவர்களும், பேராசிரியர் மீதான தாக்குதல் தொடுத்தவர்களும் ஒரே விதமான சாதி ஆதிக்க சக்திகள்தான். முஸ்லிம்கள் தாக்கப்பட்ட அதே துலே நகரில்தான், பேராசிரியரும் தாக்கப்பட்டிருக்கிறார். இது இந்துமதவெறி சக்திகளின் வளர்ந்து வரும் வலிமையைக் காட்டுகின்றன.

தமிழகத்தைப் போலவே தொழில்மயமான மாநிலம் மகாராட்டிரம். தமிழகத்தைப் போலவே சீர்திருத்தங்களின் மூலம் சலுகை பெற்ற இடைநிலைச் சாதிகளின் மேட்டுக்குடியினர் தமது ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொண்டிருக்கும் மாநிலம். இந்தப் பிரிவினர்தான் தாழ்த்தப்பட்ட மக்களுக்கெதிராகக் கவுரவக் கொலைகள் நடத்துவதுடன், இந்துவெறி அமைப்புகளின் முன்னணியில் நின்று முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தையும் நடத்துகிறார்கள். இதே பிரிவினர்தான், தன்னை மதச்சார்பற்ற கட்சியாக சித்தரித்தக் கொள்ளும் காங்கிரசு, பவார் கட்சி உள்ளிட்ட கட்சிகளில் மட்டுமின்றி, போலீசு உள்ளிட்ட அதிகார வர்க்க நிறுவனங்களிலும் செல்வாக்கு செலுத்துகிறார்கள்.

மும்பை, குஜராத், கயர்லாஞ்சி – எனத் தொடர்ந்து கொண்டிருக்கும் இத்தகைய சம்பவங்கள், போலீசையோ இவ்வரசமைப்பையோ சீர்திருத்தவே முடியாது என்பதையே மீண்டும் மீண்டும் காட்டுகின்றன.

– கதிர்.
____________________________________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – மார்ச் 2013
____________________________________________________________________________________________________