Monday, April 21, 2025
முகப்புஉலகம்ஈழம்ஈழத்துக்காக சென்னை குடிசைப் பகுதி மக்கள் போராட்டம்!

ஈழத்துக்காக சென்னை குடிசைப் பகுதி மக்கள் போராட்டம்!

-

மிழகம் முழுவதிலுமுள்ள கலை-அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாணவர்களின் போராட்டத்தை அரசு முடக்க முயற்சித்த போதிலும், இராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவித்து பொதுவிசாரணையின் மூலம் தண்டிக்கக்கோரியும், ஈழத்தமிழ்மக்களுக்கு ஆதரவாகவும் தமிழகம் முழுவதும் மாணவர்கள் தொடர்ந்து போராடிவருகின்றனர்.

மாணவர்களின் போராட்டம் என்ற அளவில் சுருங்கிவிடாமல், பகுதி மக்கள், இளைஞர்களையும் இப்போராட்டத்தில் இணைக்கும் வகையில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர், எழும்பூர் சந்தோஷ்நகர் பகுதி மக்களை அணிதிரட்டி இன்று காலை 10.30 மணியளவில் பூவிருந்தவல்லி நெடுஞ்சாலை, தாசப்பிரகாஷ் சிக்னல் அருகில் எழுச்சிமிகு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாநில அமைப்புக்குழு உறுப்பினர் சரவணன் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிங்கள இனவெறியன் ராஜபக்சே கும்பல் நடத்திய இனப்படுகொலையை வெறும் மனித உரிமை மீறல் என்று நாடகமாடி இராஜபக்சே கும்பலை காப்பாற்றுவதற்காக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை நிராகரிக்க வலியுறுத்தியும், இந்தப்போரை வழிநடத்திய இந்தியாவே இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் கொண்டுவருவது அயோக்கியத்தனம் என்பதை அம்பலப்படுத்தியும், இதற்கு தீர்வாக இராஜபக்சேக் கும்பலை நூரம்பர்க் போர்க்குற்ற விசாரணை போன்ற பொதுவிசாரணையின் மூலம் தண்டிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர்.  இதில் ராஜபக்சே போன்று வேடமிட்டிருந்த நபரை பெண்கள் செருப்பால் அடித்து தங்களது கண்டனத்தைத் தெரிவித்தனர்.

நகரின் மையமான பகுதியில், போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில், சுமார் அரைமணி நேரத்திற்குமேல் நீடித்த இப்போராட்டத்தால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதில் கைக்குழந்தைகளுடன் பெண்கள், பள்ளிக்கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் உட்பட சுமார் 200-க்கும் மேற்பட்டோர் அணிதிரண்டு வந்திருந்தனர்.

தகவல்:
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி.