
ஜெனிவாவில் இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வர இருக்கும் தீர்மானத்தையொட்டி, “ராஜபக்சேவை இனப்படுகொலைக் குற்றவாளியாக அறிவித்து தண்டிக்கவேண்டும், போர்க்குற்றத்துக்காக தண்டிக்க வேண்டும், தமிழீழத்துக்கான பொது வாக்கெடுப்பு நடத்தவேண்டும்” என்பன போன்ற கோரிக்கைகளை முன்வைத்து தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடந்து வருகிறது. சட்டக்கல்லூரி மற்றும் கலைக்கல்லூரி மாணவர்கள் மத்தியில் தொடங்கிய போராட்டம் தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் முதல் பள்ளி மாணவர்கள் வரை அனைவரையும் ஈர்த்திருக்கிறது.
தமது கோரிக்கைகள் பற்றிய தெளிவான புரிதல் இல்லையெனினும், அமெரிக்க தீர்மானம் ஒரு மோசடித் தீர்மானம் என்பதும், இந்திய அரசு இந்த இன அழிப்புப் போருக்கு உடந்தையாக இருந்திருக்கிறது என்ற உண்மையும் குறிப்பிடத்தக்க அளவுக்கு மாணவர்கள் மத்தியில் சென்றிருக்கிறது. இந்திய அரசின் தயவைச் சார்ந்துதான் ஈழத்தமிழ் மக்கள் விடுதலை பெற முடியும் என்ற அடிமைத்தனமான கருத்தை முறியடிக்க முடியும் என்பதற்கான துவக்கமாக இதனைக் கொள்ளலாம்.
பொதுவான மனிதாபிமானக் கண்ணோட்டம் அல்லது தமிழின உணர்வு போன்றவற்றால்தான் பல மாணவர்கள் வழிநடத்தப்படுகின்றனர். இருப்பினும், 2009 இனப்படுகொலை தோற்றுவித்த தமிழக மக்களின் கோபத்தை கருணாநிதி எதிர் ஜெயலலிதா, காங் எதிர் பாஜக என்ற சட்டகத்துக்குள் அடக்கி, எதிர்ப்பு வாக்குகளை அறுவடை செய்து ஜெயலலிதாவின் பொற்பாதங்களில் சமர்ப்பித்த ஆழ்வார் கூட்டத்தின் அரசியல் தந்திரத்திற்கு வெளியில் இந்தப் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. அந்த அளவில் இது ஓட்டுப்பொறுக்கி அரசியலின் காலடியில் சரண்டைவதிலிருந்து வெளியே வந்திருக்கிறது. இருப்பினும் இதனை அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் ஆதாயத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதில் குறியாக இருக்கும் நெடுமாறன் வகையறாவைச் சேர்ந்த ஜெயலலிதாவின் ஐந்தாம்படை, மாணவர் போராட்டம் நடக்கும் இடங்களுக்கெல்லாம் சென்று வாழ்த்துரை வழங்கி வருகிறது.
2009 தேர்தலில் இராணுவத்தை அனுப்பி தனி ஈழம் வாங்கித் தருவதாக வாக்குறுதி அளித்த ஜெயலலிதா, ஒன்றுபட்ட இலங்கை என்று பேசுவது மட்டுமின்றி, அமெரிக்க தீர்மானத்துக்கு திருத்தம் சொல்வதோடு நிறுத்திக் கொண்டிருக்கிறார். போராட்டம் நடைபெறும் எந்த இடத்திலும் வன்முறையோ பொதுச்சொத்துக்கு சேதமோ நிகழவில்லை என்ற போதிலும், ஆகப்பெரும்பான்மையான இடங்களில் மாணவர்கள் உண்ணாவிரதம்தான் நடத்தி வருகிறார்கள் என்ற போதிலும், 525 பொறியியல் கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்துக் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்து, விடுதிகளைக் காலி செய்யச் சொல்லி உத்தரவிட்டிருக்கிறது ஜெயலலிதா அரசு. இருந்த போதிலும், அம்மாவின் ஐந்தாம்படை இவை குறித்து சதித்தனமான மவுனம் சாதிப்பதுடன், மாணவர்களின் கோபம் அம்மாவுக்கு எதிராகத் திரும்பிவிடாமல் கவனமாகப் பார்த்துக் கொள்கிறது.
நடைபெற்று வரும் இந்த மாணவர் போராட்டம், இனப்படுகொலை, போர்க்குற்றம், இந்திய இலங்கை உறவு என்ற எல்லைகளைத் தாண்டி ஆளும் வர்க்கம் மற்றும் அரசு எந்திரத்தின் கவலைக்குரியதாகியிருக்கிறது. கிரிமினல் குற்றநடத்தை கொண்டோரின் விவரங்களைத் திரட்டி வைப்பதன் மூலம், குற்றப் புலனாய்வு மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது போல, தற்போது போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மாணவர்களின் பெயர், ஊர், முகவரி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் சேகரித்து வருவதாக மத்திய மாநில புலனாய்வுத்துறையினர் வெளிப்படையாகவே அறிவித்திருக்கின்றனர் (தினத்தந்தி, 17.3.2013). போராட்ட எண்ணத்தில் இருக்கும் மாணவர்களின் டேட்டா (விவரங்கள்) போலீசுக்கு அவசியம் தேவைப்படுவதாகவும், எங்காவது குற்றம் நடந்தால் குற்றவாளிகள் பட்டியலில் உள்ளோரை அழைத்து விசாரிப்பதைப் போல, போராட்டம் நடக்கின்ற இடங்களில் இவர்களை அழைத்து விசாரிக்க முடியும் என்றும் கூறியிருக்கின்றனர்.
இது மட்டுமின்றி, இத்தகைய போராட்டங்களில் ஈடுபடும் மாணவர்களுடைய பெயர்கள் மேற்படி பட்டியலில் ஏற்றப்பட்டுவிட்டால், பின்னாளில் அவர்கள் அரசு வேலைக்கு தெரிவு செய்யப்படும்போது, மாணவப் பருவத்தில் அரசுக்கு எதிரான போராட்டங்களில் அவர்கள் ஈடுபட்டது குறித்த விவரத்தையும், போராட்டத்தின் தன்மை, கோரிக்கைகள், எழுப்பிய முழக்கங்கள், போராட்ட நாள் ஆகிய அனைத்தையுமே உளவுத்துறை தொகுப்பான முறையில் அரசுக்கு அளிக்கும் என்றும், இதன் காரணமாக இத்தகைய போராட்டங்களில் ஈடுபடும் மாணவர்கள் இந்தியா முழுவதும் எந்த இடத்திலும் அரசு வேலைவாய்ப்புக்கு செல்ல இயலாது என்றும் எச்சரித்திருக்கின்றனர் உளவுத்துறையினர்.
“போராட்ட குணம் கொண்ட மாணவர்களை அடையாளம் காண்பது” என்பதுதான் இந்த உளவுத்துறை எச்சரிக்கையின் முக்கியமான பகுதி. மனிதாபிமான நோக்கிலோ, இன உணர்விலோ அல்லது பாலச்சந்திரன் என்ற குழந்தை படுகொலை செய்யப்பட்டிருக்கும் அநீதியைக் கண்டு பதைத்தோ ஒரு மாணவன் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கலாம். இந்தக் குறிப்பிட்ட போராட்டம் அல்லது கோரிக்கையின் நியாய அநியாயங்களைக் காட்டிலும், “மாணவர்களின் போராட்ட குணம்” என்பதுதான் ஆளும் வர்க்கத்தையும் அதிகார வர்க்கத்தையும் எச்சரிக்கையடையச் செய்திருக்கிறது.
இன்று ஈழத்தமிழ் மக்களுக்கு நீதி கேட்டுப் போராடும் இந்த மாணவர்கள், நாளை தமிழக மக்களின் உரிமை பறிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராடக் கூடும். மறு காலனியாக்க கொள்கைகளால் உணவு, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் உரிமைகள் பறிக்கப்பட்டு வரும் சூழலில், பொதுத்துறைகள், இயற்கை வளங்கள், விளைநிலங்கள் உள்ளிட்ட மக்களின் பொதுச்சொத்துக்கள் பன்னாட்டு நிறுவனங்களின் உடைமையாக மாற்றப்பட்டு வரும் சூழலில், எல்லா ஓட்டுச் சீட்டு அரசியல் கட்சிகளும் இந்த மறுகாலனியாக்க கொள்கையின் ஏவலர்களே என்ற உண்மை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அம்பலமாகி வரும் சூழலில், “மாணவர்களின் போராட்ட குணம்” தலையெடுத்திருப்பது ஆளும் வர்க்கத்தை கவலையடையச் செய்திருக்கிறது. கண்ணுக்கு முன்னால் தெரிகின்ற ஈழப்பிரச்சினை என்ற வரம்பைத்தாண்டி, வரவிருக்கும் பிரச்சினையின் உண்மையான பரிமாணத்தை உளவுத்துறை அடையாளம் கண்டிருக்கிறது. ஆளும் வர்க்கங்களின் நலனுக்காக இந்த நாட்டை பரிபாலனம் செய்பவர்கள் ஓட்டுக்கட்சிகள் அல்லர்; ஆளும் வர்க்க நலனுக்காகவே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டிருக்கும் அரசு எந்திரம்தான் என்ற உண்மையை உளவுத்துறையின் இந்த அறிக்கையிலிருந்து மாணவர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
பாசிச நடவடிக்கையான இந்தக் கண்காணிப்பை எதிர்க்க வேண்டும், முறியடிக்க வேண்டும் என்கிற அதே நேரத்தில், நாம் இந்த சூழ்நிலையை எதிர்கொண்டுதான் தீரவேண்டும். சுமுகமான அரசுப்பணி அல்லது உத்திரவாதமான வாழ்க்கை, அவற்றுக்கு குந்தகம் நேராத வண்ணம் மனச்சாட்சியின் ஆறுதலுக்காக சில போராட்டங்கள் என்ற மாய்மாலத்தை பேணிக்கொள்வதற்கு நடுத்தர வர்க்கம் விரும்பினாலும், அதனை அனுமதிக்க ஆளும் வர்க்கம் தயாராக இல்லை. இருக்கின்ற வாழ்க்கையையே பறித்து விரட்டும் நடவடிக்கை ஈழத்தில் மட்டுமின்றி உலகம் முழுவதும் நடந்து கொண்டிருக்கிறது.
உத்திரவாதமான வாழ்க்கை என்ற மாயைதான் துப்பாக்கியை விடவும் ஆபத்தான ஆயுதம். உயிரை மட்டுமின்றி மானத்தையும் பறிக்கும் ஆயுதம். அப்படியொரு வாழ்க்கையை, அரசு வேலைவாய்ப்பை இழந்து விடுவீர்கள் என்று மிரட்டுவதன் மூலம் போராட்டக் குணத்தின் மீது தண்ணீர் ஊற்றுகிறது உளவுத்துறை. அரசுப்பதவி என்பது ஆளும் வர்க்கத்துக்குச் செய்யும் ஊழியம். அங்கே மக்கள் விரோத நடவடிக்கைகள் மட்டுமே சாத்தியம். அத்தகைய பதவிகளைப் பெறுவதை வாழ்க்கை இலட்சியமாக கொண்டதனால்தான், ஓட்டுக்கட்சிகள் பிழைப்புவாதிகளாக இருக்கிறார்கள். மக்களின் கண்ணீரை தன் சொந்த ஆதாயத்துக்கு பயன்படுத்தும் இழிபிறவிகளாக இருக்கிறார்கள்.
நடைபெற்று வரும் இந்த மாணவர் போராட்டத்திலிருந்து, மக்கள் விடுதலையை நோக்கமாகக் கொண்ட, போராட்ட குணம் கொண்ட ஒரு புதிய தலைமுறை உருவாகவேண்டும். உருவாக்குவோம்.
– (18.3.2013 அன்று எழுதப்பட்டு புதிய கலாச்சாரம் – மார்ச், 2013 இதழில் வெளிவந்துள்ள தலையங்கம்)