Wednesday, April 30, 2025
முகப்புகட்சிகள்அ.தி.மு.கபாலாறு குண்டு வெடிப்பு வழக்கும் நீதிமன்ற பயங்கரவாதமும்!

பாலாறு குண்டு வெடிப்பு வழக்கும் நீதிமன்ற பயங்கரவாதமும்!

-

ந்துத்துவ மனசாட்சியைத் திருப்திப்படுத்த அப்சல் குருவைத் தூக்கில் போட்டதை மறைத்து, சட்டத்தின் ஆட்சிப்படியே அவர் தூக்கிலிடப்பட்டுள்ளார் என்று காட்டுவதற்காகவே, இப்போது வீரப்பன் கூட்டாளிகள் எனப்படுவோரை அவரசமாகத் தூக்கில் போடத் துடிக்கிறது இந்திய அரசு.

1993-இல் மேட்டூரை அடுத்த பாலாறு பகுதியில் வீரப்பனால் நடத்தப்பட்ட கண்ணிவெடித் தாக்குதலில் வனத்துறையினர், போலீசார் உள்ளிட்டு 22 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் 124 பேர் மீது வழக்கு பதிவு செயப்பட்டு, கர்நாடக மாநிலம் மைசூர் தடா நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. இதில் 117 பேர் குற்றமற்றவர்கள் என்று அப்போதே விடுதலை செய்யப்பட்டனர். இருப்பினும், போலீசைத் திருப்திபடுத்துவதற்காகவே 7 பேர் மீது பொய்க்குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அதை கர்நாடக உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்தியது. பின்னர், அப்பாவிகளான அவர்கள் தமக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தபோது, அதில் மூவரை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது.

வீரப்பன் கூட்டாளிகளாகச் சித்தரிக்கப்பட்ட எஞ்சிய நால்வருக்கும் மரண தண்டனை விதிக்க வேண்டும் என கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது. அவ்வழக்கு உச்ச நீதிமன்றத்தின் அமர்வு நீதிபதிகளால் தள்ளுபடி செய்யப்பட்டது. பின்னர், 2004 ஜனவரியில் கொலைவெறி பிடித்த உச்ச நீதிமன்றத்தின் மற்றொரு அமர்வு, ஆயுள் தண்டனையை மரண தண்டனையாக உயர்த்தித் திமிராகத் தீர்ப்பளித்தது. பொய்க்குற்றம் சாட்டப்பட்டுள்ள இந்நால்வரும் ஏழைகள், சமூகத்தின் அடித்தட்டைச் சேர்ந்தவர்கள் என்பதாலேயே அதிகாரத் திமிரோடு நீதிபதிகள் அவர்களைத் தூக்குமேடையில் நிறுத்தினர்.

இதையடுத்து கர்நாடகத்தின் பெல்காம் சிறையிலுள்ள இந்நால்வரும் அரசுத் தலைவரிடம் கருணை மனுக்களைத் தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் கடந்த 9 ஆண்டுகளாக எந்த முடிவும் எடுக்கப்படாமல் நிலுவையில் இருந்தன. இந்தக் கருணை மனுக்களை, கடந்த பிப்ரவரி 11 அன்று அரசுத் தலைவர் “தூக்குத்தூக்கி” பிரணாப் முகர்ஜி நிராகரித்துள்ளார்.

தடா சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில்தான் இவர்களுக்குத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வீரப்பன் கூட்டாளிகளாகச் சித்தரிக்கப்பட்ட இந்நால்வர் மீது நான்கு வழக்குகள் பதிவாகியிருந்தன. அவற்றில் 3 வழக்குகளில் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஒரு வழக்கில் மட்டுமே அவர்களுக்குத் தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வழக்கிலும், இந்நால்வரையும் வீரப்பனுடன் பார்த்ததாக ‘என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்’ என்று போலீசு வெறியர்களால் புகழப்படும் எஸ்.பி. கோபாலகிருஷ்ணன் கூறியதை எந்த விசாரணையுமின்றி அப்படியே ஏற்றுக் கொண்டு நீதிபதிகள் அநியாயமாகத் தீர்ப்பு எழுதியுள்ளனர். அதேசமயம், நீதிபதி சதாசிவம் கமிசன் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்த அதிரடிப்படையின் அட்டூழியங்களுக்குப் பொறுப்பான போலீசு அதிகாரிகள் எவர் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்க அந்நீதிபதிகள் முன்வரவில்லை.

பயங்கரவாத தடா சட்டத்தின்படி, குற்றம் சாட்டப்பட்டவரே தன்னை நிராபராதி என்று நிரூபித்துக் கொள்ள வேண்டும். அங்கு போலீசு கூறுவதுதான் சாட்சியமாகும். இதுதான் தடா பயங்கரம். இக்கொடிய தடா சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதாலேயே அச்சட்டம் காலாவதியாக்கப்பட்டுள்ளது. தடா சட்டமே அநீதியானது எனும்போது, காலாவதியான அச்சட்டத்தின்கீழ் நடந்த விசாரணையின்படி தண்டிப்பது அதைவிடப் பெரிய அநீதி.

பாலாறு வழக்கு
நீதிமன்ற பயங்கரவாதம் : தூக்குக் கயிற்றின் நிழலில் நிறுத்தப்பட்டுள்ள பிலவேந்திரன், சைமன், மாதைய்யா, மற்றும் ஞானப்பிரகாசம்.

வீரப்பனுடன் எவ்விதத்திலும் தொடர்பில்லாத அப்பாவிகளான இவர்களை, அவர்களது வீடுகளிலிருந்தும், பொது இடத்திலிருந்தும்தான் போலீசு இழுத்துச் சென்றுள்ளது. தோமையார்பாளையம் சர்ச்சில் வேலை பார்த்து வந்தவரான ஞானப்பிரகாசத்தை மாதாகோயிலிலிருந்து அதிரடிப்படையினர் இழுத்துச் சென்றதாக பாதிரியார் வின்சென்ட் டிசோசா பகிரங்க வாக்குமூலமே கொடுத்துள்ளார். “பாலாறு வெடிகுண்டுத் தாக்குதலில் எஸ்.பி. கோபாலகிருஷ்ணனுக்குக் காலில் அடிபட்டு மயக்கமாகிவிட்டார். மயங்கிய நிலையில் இருந்த அவர் எப்படி நான்குபேரை அடையாளம் கண்டிருக்க முடியும்? மேலும், நீதிமன்றத்தில் கோபாலகிருஷ்ணனைத் தவிர வேறு எவரும் இந்நால்வரையும் பார்த்ததாகச் சொல்லவுமில்லை. ஒருவரது சாட்சியை வைத்துதான் இப்படி அநியாயமாக தண்டனை வழங்கப்பட்டுள்ளது” என்று பாலாறு தாக்குதலின்போது வீரப்பனுடன் காட்டில் இருந்த அவரது மனைவி முத்துலட்சுமி குமுதம் ரிப்போர்ட்டர் இதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மேலும், இவர்கள் மைசூர் உயர் நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை அனுபவித்து வரும்போதே, உச்ச நீதிமன்றம் அநியாயமாகத் தூக்குத் தண்டனையை விதித்துள்ளது. இவர்களது கருணை மனுவும் 9 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் நிராகரிக்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் கடந்த 19 ஆண்டுகளாகச் சிறையில் இருப்பதாலும், அதிலும் கடந்த 9 ஆண்டுகளாக கருணை மனு மீதான முடிவு தெரியாமல் அவர்கள் காத்திருந்ததால், இது அவர்களின் உரிமையை மீறுவதாக அமைந்துள்ளது என்ற அடிப்படையில் தூக்கு தண்டனையை ரத்துசெது ஆயுள்தண்டனையாகக் குறைக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்குரைஞர்கள் வாதிட்டனர்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்றவர்களும், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த புல்லரும் கருணை மனு மீது முடிவெடுக்க பல ஆண்டுகள் தாமதமாவதைச் சுட்டிக்காட்டி நீதி மன்றத்தை நாடியுள்ளனர். இது தொடர்பான விசாரணை முடிவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அத்தீர்ப்பை எதிர்பார்த்து ஆறு வாரங்களுக்கு இந்த வழக்கை ஒத்திவைப்பதாக நீதிபதி அல்தாமஸ் கபீர் அடங்கிய பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.

சமூகத்தின் கூட்டுத்துவ மனசாட்சி என்று கூறி அப்சல் குருவைத் தூக்கில் போட்டது போல, போலீசின் மனசாட்சியைத் திருப்திபடுத்தவே வீரப்பன் கூட்டாளிகள் என்று கூறி அப்பாவிகள் நால்வரைத் தூக்கில் போடத் துடிக்கிறது இந்திய அரசு. பாசிச ஜெயாவோ, வீரப்பன் வேட்டையில் ஈடுபட்ட போலீசாருக்கு பணமும், பரிசுகளும் பதவி உயர்வும் அளித்து போலீசின் அட்டூழியங்களை உறுதிப்படுத்துகிறார். இதுதான் சட்டத்தின் பெயரால் நடக்கும் காட்டுதர்பார் ஆட்சியின் மகிமை.

– குமார்

____________________________________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – மார்ச் 2013
____________________________________________________________________________________________________