Monday, April 21, 2025
முகப்புகட்சிகள்அ.தி.மு.கத.நா தமிழனுக்கு 1ரூபாய் இட்லி! ஈழத்தமிழனுக்கு இலவச ஈழம்!

த.நா தமிழனுக்கு 1ரூபாய் இட்லி! ஈழத்தமிழனுக்கு இலவச ஈழம்!

-

தா-பாண்டியன்“யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே” என்பது நாம் அறிந்த முதுமொழி. வலது கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலர் என்று கூறப்படும் தா.பாண்டியன்தான் யானையின் கழுத்தில் தொங்கும் மணி.

மார்ச் 20 ஆம் தேதியன்று, இராஜபக்சேவின் இனப்படுகொலைக்கும் போர்க் குற்றத்துக்கும் எதிரான மாணவர் போராட்டங்கள் தீவிரமடைந்திருந்த சூழலில் தா.பா ஒரு அறிக்கை விட்டிருந்தார். “மாணவர்கள் இப்படி தனித்தனியாகப் போராடுவதால் பயனில்லை, எல்லோருடைய போராட்டத்துக்கும் முதல்வர் தலைமை தாங்கி நடத்த வேண்டும்” என்ற விசித்திரமான கோரிக்கையை அவர் முன்வைத்திருந்தார்.

“மணி தானாக ஆடாதே” என்று நாம் யோசித்து முடிப்பதற்குள் சீனுக்கு யானை வந்து விட்டது. “ஐ.பி.எல் போட்டியில் இலங்கை ஆட்டக்காரர்கள் சென்னைக்கு வரக்கூடாது. இலங்கையை நட்பு நாடாக இந்தியா கருதக்கூடாது. தனி ஈழம் குறித்த வாக்கெடுப்பை ஈழத்தில் உள்ள தமிழர்கள் மற்றும் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் நடத்த வேண்டும்.” என்று அடுக்கடுக்கான அம்மாவின் தீர்மானங்களால் செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் சுவர்கள் அதிர்ந்து விரிசல் விடத் தொடங்கி விட்டன.

அம்மாவுடைய சட்டமன்ற உரையின் கடைசி வரிகள்தான் மிகவும் கவனிக்கத்தக்கவை. மாணவர் போராட்டத்துக்குப் பயந்துதான் கருணாநிதி ராஜினாமா செய்து விட்டார் என்று எல்லோரும் கருணாநிதியை கலாய்த்துக் கொண்டிருக்கும் சூழலில், இந்த தீர்மானமும் மாணவர்களுக்குப் பயந்து கொண்டு அம்மா போட்ட தீர்மானம் என்று யாராவது எண்ணி விட்டால்? குறிப்பாக மாணவர்களிடம் அப்படி ஒரு ஆணவம் வந்துவிடக்கூடாதே என்பது தாயுள்ளத்தின் கவலை. எனவேதான், “இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தமிழக அரசின் நடவடிக்கைகளைப் பிரதிபலிக்கும் வகையில் மாணவ மாணவியரின் போராட்டம் அமைந்திருந்தது” என்ற உண்மையைத் தனது உரையில் அவர் அழுத்தம் திருத்தமாகவும் அதே நேரத்தில் பணிவுடனும் சுட்டிக் காட்டியிருந்தார்.

“அம்மாதான் சத்யம், தமிழகம் மாயை ; தமிழகம்தான் அம்மாவைப் பிரதிபலிக்க வேண்டுமேயன்றி, தமிழகத்தை அம்மா பிரதிபலிக்க முடியாது. இந்த பிரம்மஞானம் கைவரப் பெற்றவர்கள் தமிழகத்தில் ஓ.ப, தா.பா போன்ற வெகுசிலர்தான். (ஓ.ப = ஓ. பன்னீர் செல்வம்)

“பிரதிபலித்தது போதும், போராட்டத்தை நிறுத்திக் கொள்ளுங்கள்” என்றும் தனது சட்டமன்ற உரையில் அம்மா அன்புடன் உத்தரவிட்டிருக்கிறார். “அம்மா தலைமை தாங்கவேண்டும்” என்று தா.பா சொன்னதன் உட்பொருளும் இதுதான். தோளில் “சிவப்பு” துணியைத் தொங்கவிட்டிருக்கும் ஒரு மனிதர், “போதும், போராட்டத்தை முடியுங்கள்” என்று “பச்சை”யாக சொல்ல முடியாதல்லவா?

போராட்டம் இப்படியே தொடர்ந்து, எங்காவது ரெண்டு ஊரில் தடியடி-கைது என்று ஏடாகூடமாகிவிட்டால், “செக்கா சிவலிங்கமா என்று வித்தியாசம் தெரியாத மாணவர்கள் ஜெயலலிதாவுக்கும் ஒரு கொடும்பாவி தயார் செய்து பற்ற வைத்து விடுவார்கள்; புரட்சித்தலைவியின் கொடும்பாவி என்பதால் போலீசார் அதனை மிதித்து அணைப்பதற்கும் அஞ்சுவார்கள்; இதெல்லாம்  “களம் பல கண்ட கம்னிஸ்டான” தா.பாவுக்கு தெரியாதா என்ன? அதனால்தானே கொண்டை தெரிந்தாலும் பரவாயில்லை என்று அவரைத் தன்னுடைய ஒற்றர் படையின் தலைமைத் தளபதியாக அம்மா நியமித்திருக்கிறார்.

தாபா வாக இருக்கட்டும், பிற ஐந்தாம் படைத் தளபதிகளான வைகோ, பழ. நெடுமாறன், சீமான், டி.கே. ரங்கராஜன் போன்றோராக இருக்கட்டும். ஒரே நேரத்தில் எட்டுத் திக்குகளிலிருந்தும், வெவ்வேறு கட்டையில், நாளுக்கொன்றாகப் புரட்டிப் பேசும் இவர்களை அம்பலப் படுத்துவதென்பது மிகமிகக் கடினம். அது ரோலர் கோஸ்டரில் சவாரி செய்பவன் மீது குறி பார்த்து எறிவதற்கு ஒப்பானது.

“போரில் இலங்கையின் கூட்டாளியாக இந்திய அரசு செயல்பட்டிருக்கிறது என்ற உண்மையை ராஜபக்சே சொல்லிவிடுவார் என்பதால்தான் இந்திய அரசு ஐ.நா விசாரணையை எதிர்க்கிறது” என்று முழங்கினார் தா.பா – இது மார்ச் 6-ம் தேதி.

இந்திய அமைதிப்படைக்கு டவாலி வேலை பார்த்தவரான தா.பா,  இப்படி “அநியாயத்துக்கு”  நியாயமாகப் பேசுகிறாரே, என்று நாம் ஆச்சரியப்பட்டு முடிவதற்குள், “அமெரிக்க தீர்மானத்தை ஆதரித்து இலங்கை அரசுக்கு புத்தி புகட்டும் வரையில் இந்தியா திருத்தம் கொண்டு வர வேண்டும் என்கிறார். இது 12 ஆம் தேதி.

“திருத்தமாவது ஒண்ணாவது, இந்தியாவே தீர்மானத்தை கொண்டு வரவேண்டும்” என்று ஆங்கில சானல்களில் சீறுகிறார் தேசிய செயலர் டி. ராஜா. சி. மகேந்திரனோ, சன் டிவி விவாத மேடையில், “சுயநிர்ணய உரிமை, தேசிய இனப்போராட்டம்” என்று ஏ.கே 47 துப்பாக்கியாய் வெடிக்கிறார்.

“செய்த பாவத்துக்கு இந்தியா பிராயச்சித்தம் செய்து கொள்ள வேண்டும்” என்கிறார் நெடுமாறன். “அதெல்லாம் முடியாது, இந்தியாவின் டவுசரைக் கழட்டாமல் விடமாட்டேன்” என்று மேல் ஸ்தாயியில் ஒரு சவுண்டு விட்டு, அப்படியே மத்திய ஸ்தாயிக்கு இறங்கி வந்து, “தமிழக சட்டமன்றத் தீர்மானம் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியது” என்கிறார் வைகோ.

இன்னொரு பக்கம் மார்க்சிஸ்டு எம்.பி டி.கே ரங்கராஜன். அவர் அம்மாவின்  முதுகுப் பக்கம் முளைத்திருக்கும் கை. “ராஜபக்சேவை ராஜபக்சேவே விசாரித்தால் போதும், என்பதும், வாக்கெடுப்பு கூடாது என்பதும்தான் அவர் கொள்கை. மார்க்சிஸ்டு கட்சியின் கொள்கையும் அதுதான். 2009 ஏப்ரல் வரையில் ஜெயலலிதா பேசியதும் இதைத்தான். காங்கிரசு அரசின் கொள்கையும் அதுதான். ஆனால் மத்திய அமைச்சரவையிலிருந்து திமுக விலகியதை, நாடகம் என்று சாடிய ரங்கராஜன், சட்டமன்றத்தில் ஜெ போட்டிருக்கும் தீர்மானத்தை நாடகம் என்று சாடவில்லை. கட்சி மட்டும் சம்பிரதாயமாக தனது கருத்து வேறுபாட்டை தெரிவித்திருக்கிறது.

தேசிய இனப்பிரச்சினையைப் பொருத்தவரை “இந்தியா இலங்கை சிங்கப்பூர் மலேசியா உள்ளிட்ட உலகின் எந்த நாட்டிலும் எந்த தேசிய இனத்தின் பிரிந்து போகும் உரிமையையும் அங்கீகரிக்க முடியாது” என்பதுதான் வலது இடது கம்யூனிஸ்டு கட்சிகளின் கொள்கை. இப்படி ஒரு கொள்கையை வைத்துக் கொண்டு ஒரே நேரத்தில் காஷ்மீரை எதிர்த்தும், ஈழத்தை ஆதரித்தும் எப்படி இவர்களால் வாள் சுழற்ற முடிகிறது என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். இதென்ன பிரமாதம், ஒரே நேரத்தில் ஈழத்தை ஆதரித்தும், எதிர்த்தும் அம்மா கம்பு சுற்றி வூடு கட்டவில்லையா?

“ராஜீவைக் கொன்ற புலிகளை கருணாநிதி ஆதரிக்கிறாரே, சோனியா ஏன் மவுனம் சாதிக்கிறார், அவர் ராஜீவின் பெண்டாட்டிதானே?” என்று ஏப்ரல் 2009 இன் முற்பகுதியில் பேசிய ஜெயலலிதா, அதே ஏப்ரல் மாதத்தின் பிற்பகுதியில் “இராணுவத்தை அனுப்பி ஈழம் வாங்கித் தருவேன்” என்று தேர்தல் கூட்டங்களில் முழங்கவில்லையா?”

“இலங்கையில் தற்போது நடைபெறும் உள்நாட்டுப் போரை நிறுத்துவதற்கான அதிகாரம் இந்திய அரசிடம் இல்லை என்பதை ஐந்து முறை முதலமைச்சராக இருந்த கருணாநிதி புரிந்து கொள்ளாதது விந்தையாக உள்ளது” என்று அக்டோபர் 2008 இல் பேசிய ஜெயலலிதா, இன்று ஈழத்துக்கு பொது வாக்கெடுப்பு என்று சட்டமன்றத்தில் தீர்மானம் போடவில்லையா?

“இலங்கைத் தமிழர்களைப் பாதுகாப்பான இடத்திற்குச் செல்லவிடாமல் பிடித்து வைத்துக் கொண்டு, விடுதலைப் புலிகள் அவர்களைப் ஒரு கேடயமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்” என்று கூறி ஜனவரி 2009 இல் ராஜபக்சேவுக்கு வக்காலத்து வாங்கிய ஜெயலலிதா, இன்று ராஜபக்சே மீது இனப்படுகொலைக் குற்ற விசாரணை கேட்கவில்லையா?

இத்தனை தகிடு தத்தங்களையும் மறைத்து அம்மாவை ஈழத்தாயாக காட்டுவதென்பது, பச்சை ஆடை ஜெயலலிதாவை வெண்ணிற ஆடை ஜெயலலிதாவாக காட்டுவதற்கு ஒப்பான சவால். இதனை சாதிப்பதற்கு வைகோ, தாபா, சீமா, நெடுமா உள்ளிட்ட ஒப்பனைக் கலைஞர் சங்கமே களத்தில் இறங்கியிருக்கிறது. எனினும், இது சும்மா அரிதாரத்தை மாற்றிப் பூசும் வேலை மட்டுமல்ல என்பதால், கிராபிக்ஸ், அனிமேசன், ஈவென்ட் மானேஜ்மென்ட், மீடியா மேனேஜ்மென்ட், பிராண்ட் புரமோசன் வல்லுநர்களான ஃபீரீலான்ஸ் போராளிகளும் களத்தில் இறக்கப்பட்டிருக்கிறார்கள்.

000

ட்டமன்றத்தில் தனிப்பெரும்பான்மை வழங்கிய சென்னைத் தமிழனுக்கு அம்மா ஒரு ரூபாய் இட்டிலி வழங்கவில்லையா? 2009 நாடாளுமன்றத் தேர்தலில் 40 சீட்டையும் அம்மாவுக்கு வழங்கியிருந்தால் அன்றைக்கே அம்மா ஈழம் பெற்றுத் தந்திருக்க கூடும். “வரவிருக்கும் தேர்தலில் 40 எம்.பி தொகுதிகளையும் பெற்றுத் தந்தால், இலவச ஈழம் உறுதி” என்று சொல்வதற்குத்தான் இந்த சட்டமன்றத் தீர்மானம்.

ஆனால் இலவச ஈழத்தை வழங்கவிருக்கும் மஞ்சள் பையில், புலி படத்தை அச்சிட அம்மா சம்மதிக்க மாட்டார். அம்மா படத்தை மட்டும் போட்டு, புலி படத்தை புறக்கணிப்பதற்கு புலி ஆதரவாளர்களுக்கு மனம் ஒப்பாது. புலி மேல் அம்மா சவாரி செய்வது போல போடலாம். நல்ல கருத்துப் படமாகவும் இருக்கும்.

–   தொரட்டி