Monday, April 21, 2025
முகப்புஉலகம்ஈழம்புல்லர் மனு தள்ளுபடி – மூவர் தூக்கு: மீண்டும் தமிழகம் சிவக்கட்டும்!

புல்லர் மனு தள்ளுபடி – மூவர் தூக்கு: மீண்டும் தமிழகம் சிவக்கட்டும்!

-

(உச்சநீதிமன்றத்தின் முழுத்தீர்ப்பு விவரமும் கிடைக்காத நிலையில் மட்டும் இந்த செய்திப் பதிவு வெளியிடப்படுகிறது. பிற்பாடு விவரங்கள் முழுமையாக கிடைக்கும் போது விரிவாக எழுதுகிறோம்.)
‘கருணை மனு மீது முடிவு எடுப்பதில் நீண்ட தாமதம் ஏற்பட்டதால் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும்’ என்ற காலிஸ்தான் விடுதலை படையைச் சேர்ந்த தேவீந்தர் பால் சிங் புல்லரின் மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்து விட்டது. நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, எஸ்.ஜே.முகோபாத்யாயா அடங்கிய அமர்வு, ‘தண்டனையை குறைப்பதற்கான உறுதியான வாதத்தை மனுதாரர்கள் முன் வைக்க தவறி விட்டார்கள்’ என்று கூறியிருக்கிறது.

இந்தத் தீர்ப்பு ராஜீவ் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் உட்பட 17 மரண தண்டனை கைதிகளின் மனுவையும் தள்ளுபடி செய்வதற்கு வழி வகுத்திருக்கிறது. இதை முழு அமர்வு நீதிபதிகள் மறு ஆய்வுக்கு உட்படுத்தினாலும் இந்த தீர்ப்பின் செல்வாக்கு குறைந்து விடுமென்று தோன்றவில்லை.

மூவர் தூக்கு

1991-ம் ஆண்டு மே 21-ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட வழக்கில் தடா நீதிமன்றம் 26 பேருக்கு மரண தண்டனை விதித்தது. உச்ச நீதிமன்றத்தில் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய நான்கு பேருக்கு மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது. மற்றவர்களின் தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. இதிலிருந்தே தடாநீதிமன்றத்தின் கொலை வெறியை புரிந்து கொள்ளலாம். நளினியின் மரண தண்டனை தமிழ்நாடு ஆளுநரால் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரின் கருணை மனுவை அப்போதைய ஜனாதிபதி பிரதிபா பட்டீல் 2011-ம் ஆண்டு நிராகரித்தார். அதைத் தொடர்ந்து மூவர் தூக்குக்கு எதிராக தமிழ்நாட்டில் பெருமளவிலான மக்கள் போராட்டங்கள் நடந்தன. ‘கருணை மனுவின் மீது முடிவெடுப்பதில் நீண்ட தாமதம் ஏற்பட்டதாலும், ஏற்கனவே 20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் கழித்து விட்டதாலும் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும்’ என்ற வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தண்டனையை நிறைவேற்ற இடைக்காலத் தடை விதித்தது.

இதே மாதிரியான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருவதால் மூவர் தூக்கு தொடர்பான வழக்கும் உச்சநீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. புல்லார் வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில் மூவர் தூக்கு வழக்கிலும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மூவர் தூக்கை ரத்து செய்யுமாறு அரசியல் காரணங்களுக்கு அப்பாற்பட்ட மனிதாபிமான, அரசியலற்ற கோரிக்கைகளே தமிழகத்தில் பல்வேறு கட்சிகள், குழுக்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் தனிநபர்களால் முன்வைக்கப்பட்டன என்ற உண்மையை இங்கு நினைவுபடுத்த வேண்டும். மரண தண்டனை எதிர்ப்பு, நீண்ட நாட்கள் சிறையில் இருந்து விட்டார்கள், மத்திய அரசு, நீதித்துறை மனமிரங்க வேண்டும் போன்ற அந்த கோரிக்கைகள் எப்படியாவது மூவரை தூக்கிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டும் சிக்கியிருக்கின்றன.

இறுதியில் இவையெல்லாம் நீதித்துறையின் வரம்பற்ற அதிகாரத்தை ஏற்றுக் கொள்வதாகவும், அதை அமல்படுத்தும் இந்திய அரசின் அதிகாரத்தை கேள்வி கேட்கா முடியாததாகவும் சரிந்து விடுகின்றன.

ஆனால் மூவர் தூக்கு மேடையில் இருப்பது ஒரு அரசியல் நியாயம். இலங்கைக்கு அமைதிப்படையை அனுப்பி, ஈழத்தமிழர்களை கொன்று, பெண்களை வன்புணர்ச்சி செய்து, இளைஞர்களை சித்திரவதை செய்து, குடியிருப்புகளை நாசமாக்கி எண்ணற்ற கொடுமைகளை செய்த முதல் குற்றவாளி ராஜீவ் காந்தி தலைமையிலான அரசாங்கம். அதற்கு முன்பே இந்திரா காந்தி காலத்தில் ஈழப் போராளிக் குழுக்கள் அனைத்தும் இந்திய அரசின் மேலாதிக்கத்தை நிறுவும் பொருட்டு பகடைக்காய்களாக பயன்படுத்தப்பட்டன.

எனவே ராஜீவ் காந்தியின் கொலையை விசாரிக்க வேண்டுமென்றால் அது இந்திரா காந்தி காலத்திலிருந்து இந்திய அரசு, ரா உளவுத்துறை, வெளியுறவுத்துறை, இராணுவம் அனைத்தும் விசாரிக்கப்பட வேண்டும். ‘ஈழத்தமிழர்களை கொல்வதற்கும், சித்திரவதை செய்வதற்கும் இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது’ என்ற கேள்விதான் ராஜீவ் கொலை ஒரு குற்றமல்ல என்ற நீதியை நிலைநிறுத்தும்.

‘ராஜீவ் கொலையை விடுதலைப்புலிகள் செய்தார்கள்’ என்று ஒத்துக் கொள்வதிலோ ‘இல்லை, அந்தக் கொலை இந்திய அரசின் போர்க்குற்றத்திற்கான பதிலடி’ என்று வாதாடுவதையோ அன்றும் சரி இன்றும் சரி தமிழினவாதிகள் மற்றும் புலி ஆதரவாளர்கள் செய்வதில்லை. ‘ராஜீவ் கொலை அமெரிக்க சிஐஏ சதி, சு.சாமி சதி, சோனியா சதி’ என்றெல்லாம் நீர்த்துப் போக வைத்தவர்களும் இவர்கள்தான். ராஜீவ் கொலை பழிக்குப்பழி வாங்கிய அரசியல் நடவடிக்கை என்று அதன் நியாத்தை ம க இ கவும் அதன் தோழமை ஏடான புதிய ஜனநாயகமும் ராஜீவ் கொலை முதலே உரத்துப் பேசி வந்தன. அதன் பொருட்டு ஏராளமான அடக்குமுறைகளையும் சந்தித்தன.

இந்திய அரசுக்கு படை அனுப்பி ஈழத்தமிழர்களை கொல்வதற்கு உரிமை இருக்கிறது என்றால் அதே உரிமை அந்த படையால் வாழ்விழந்த ஒரு ஈழத்து பெண்ணுக்கும் இருக்கிறது. பின்னதை மட்டும் குற்றம் என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. இந்திய அரசு படை அனுப்பியதன் எதிர்விளைவுதான் ராஜீவ் கொலை என்பதால் அதை ஒரு கிரிமினல் குற்றமாக யாரும் நியாயப்படுத்த முடியாது.

இப்போது மீண்டும் மூவர் தூக்கு அரசியல் அரங்கிற்கு வந்திருக்கிறது. அவர்களது மனு தள்ளுபடி செய்ய வாய்ப்பிருக்கும் நிலையில் மீண்டும் தமிழகத்தில் மக்களும் மாணவர்களும் போர்க்குணமிக்க போராட்டங்களை துவக்க வேண்டும். அந்தப் போராட்டம் மரண தண்டனை கூடாது போன்ற அரசியலற்ற முழக்கங்களை தவிர்த்து,  இந்திய அரசின் போர்க்குற்றங்களை இந்திரா காலத்தில் இருந்து விசாரிக்கவும், அதன் பொருட்டு மூவர் தூக்கை ரத்துசெய்ய வேண்டும் என்பதாகவும் இருக்க வேண்டும்.

‘கேரளத்து மீனவர்களை கொன்ற இத்தாலிய வீரர்களுக்கு மரணதண்டனை மட்டும் உள்ள பிரிவுகளில் வழக்காட மாட்டோம்’ என்று இந்திய அரசு உறுதி அளித்திருப்பதிலிருந்து சட்டமும், நீதியும் இவர்களது சட்டைப்பையில் இருக்கிறது என்பதை உறுதி செய்கிறது. நீதித்துறையின் இலட்சணம் இதுதான். எனவே மூவர் தூக்கை ரத்து செய்ய வேண்டும் என்று அரசியல் நீதியின் அடிப்படையில் மத்திய, மாநில அரசுகளை கீழ்ப்பணியச் செய்யும் போராட்டம் ஒன்றே மூவரையும் தூக்கு மேடையில் இருந்து காப்பாற்றும். கூடவே ஈழத்தமிழரின் தன்னுரிமையையும்,அதற்காக கொல்லப்பட்ட பல்லாயிரம் மக்களது தியாகத்தையும் அர்த்தமுள்ளதாக்கும்.

மீண்டும் தமிழகம் சிவக்கட்டும்!

மேலும் படிக்க
Supreme court rejects Bhullar’s mercy plea