Tuesday, April 22, 2025
முகப்புகட்சிகள்அ.தி.மு.கபேச்சுரிமையின் கழுத்தை நெரிக்கும் ஜெயா அரசு!

பேச்சுரிமையின் கழுத்தை நெரிக்கும் ஜெயா அரசு!

-

ழைக்கும் மக்களை, ஒடுக்கப்படும் மக்களை ஒன்று திரட்டி ஆளும் வர்க்கங்களை வீழ்த்தி மக்களுக்காக அரசு அதிகாரத்தைக் கைப்பற்றிய ரஷ்யப் புரட்சிக்குத் தலைமை தாங்கியவர் தோழர் லெனின். அவரது பிறந்த நாளை தொழிலாளர்கள் கொண்டாடும் விதமாக கோவை மாவட்ட புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பாக கோவையில் தெருமுனை கூட்டம் நடத்த கணபதியில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு 13 நாள்களுக்கு முன்னால் சரவணபட்டி காவல் நிலையத்தில் அனுமதி மனு கொடுக்கப்பட்டது.  நான்கு தினங்கள் கழித்து மக்கள் நிறைந்துள்ளதால் அனுமதி மறுக்கப்படுகிறது என்று காவல் துறை மறுப்புக் கடிதம் வழங்கியது.

இருப்பினும் கோவை மாவட்ட புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சங்கத்தை சார்ந்த தோழர்களுக்கு உணர்வு ஊட்டும் விதமாக ஓர் இடத்தில் ஒன்றுகூடி லெனின் பிறந்தநாளை சிறப்பிக்கும் விதமாக சிஆர்ஐ பம்ப் நிறுவனத்தின் அருகில் உள்ள ஒரு திடலில் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. புஜதொமு உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது

ஏப்ரல் 22 தேதி காலையில் அனைத்து கிளைகளிலும் லெனின் படத்தை வைத்து கிளை தோழர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

மாலை 5.00 மணியளவில் சிஆர்ஐ பம்ப் நிறுவனத்தின் அருகில் உள்ள திடலில் நடந்த கூட்டத்துக்கு அனைத்து கிளைகளிலிருந்தும் தோழர்கள் வந்திருந்தனர்.

முதலில் கோவை மாவட்ட இணைச் செயலாளர் தோழர் கோபிநாத் அவர்கள் இந்த கூட்டதின் லெனின் பற்றி உரையாற்றி வந்திருந்த தோழர்களுக்கு இனிப்பு வழங்கினர்.

தலைமை தாங்கிய தோழர் ராஜன் கோவையில் நடக்கும் முதலாளித்துவ பயங்கரவாதம் பற்றி உரையாற்றினார்.

சிறப்புரை ஆற்றிய தோழர் விளைவை ராமசாமி அவர்கள் தனது உரையில் கோவையில் கடந்த 50 ஆண்டுகளாக செயல்பட்டுவரும் ஓட்டு கட்சி தொழிற் சங்கங்கள் முடக்குவாதமும், பக்கவாதமும் கொண்டு முதலாளிகளின் தாக்குதலை கண்டு சரணடைந்து கொண்டு உள்ளன. போராடி பெற்ற அனைத்து உரிமைகளும் பறிபோய் கேம்பஸ் கூலி முறை, மாங்கல்ய திட்டம், காண்டிராக்ட் முறைகள் என்று ஆண், பெண் தொழிலாளர்ள் எவ்வாறு கசக்கி பிழியப்படுகிறார்கள் என்று விளக்கினார்.

இதற்கு இடையில் சரவணப்பட்டி காவல் துறை ஆய்வாளர் பெரியசாமி அங்கு வந்து “தாங்கள் அனுமதியில்லாமல் கூட்டம் நடத்துகிறீர்கள் நிறுத்துங்கள்” என்று கூட்டத்தை தடுத்தார்.

மாவட்டச் செயலாளர் விளைவை ராமசாமி “நாங்கள் எங்களிடத்தில்தான் கூட்டம் நடத்துகிறோம் யாருக்கும் இடையூறு இல்லாமதான் கூட்டத்தை நடத்துகிறோம்” என்று வாதிட்டார்.

ஆய்வாளர் பெரியசாமி “எனக்கு மேலிடத்தில் இருந்து பிரசர் வருகிறது அதனால்தான் நிறுத்தச் சொல்கிறேன்” என்று கூறினார்.

“இன்னும் சிறிது நேரத்தில் கூட்டம் முடிந்துவிடும் சிறிது நேரம் காத்திருங்கள்” என்று கூறினர் ராமசாமி. வந்திருந்த ஆய்வாளருக்கு இனிப்பு கொடுத்து காத்திருக்க செய்துவிட்டு தனது உரையை தொடர்ந்தார்.

கோவையில் நாம் சந்திக்கும் அனைத்து சிக்கல்களுக்கும் தோழர் லெனினது கண்ணோட்டத்தில் பெறும் விடை இதுதான் .

  • ஊதிய உயர்வுக்காகவும், சிறந்த வாழ்க்கை நிலைமைககவும், போனசுக்காகவும் போராடுவதோடு மட்டும் கம்யூனிஸ்டுகள் நின்று விடக்கூடாது.
  • இதனை ஓட்டுக் கட்சி தொழிற்சங்கங்கள் கடந்த 50 ஆண்டுகளாக செய்து தொழிலாளர்களின் போராட்டக் குணத்தை மழுங்கடித்து விட்டனர்.
  • கம்யூனிஸ்டுகள் தமது நடவடிக்கைகளை தொழிலாளி-வர்க்க வட்டத்துக்குள் மட்டும் குறுக்கிக் கொள்ளக் கூடாது.
  • விடுதலைக்கான எல்லா வகையான அரசியல் போராட்டங்களையும் அவை எந்த மக்கட் பிரிவினரிடமிருந்து, எத்தகைய வடிவங்களில் தோன்றினாலும் அவற்றை தலைமை தாங்கி வழி நடத்திச் செல்ல கற்றிருக்கவேண்டும்.

என்று கூறி தனது உரையை முடித்துக்கொண்டார் .

இறுதியில் சிஆர்ஐ பம்ப் கிளைச் செயலாளர் குமாரவேல் நன்றி உரை ஆற்றினார்.

தகவல்:
கோபிநாத்
கோவை மாவட்ட புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
தொடர்புக்கு : 96297 30399