Thursday, April 17, 2025
முகப்புகட்சிகள்அ.தி.மு.கஈழப் போராளிகள் முதுகில் குத்தும் எம்.ஜி.ஆர்-ராஜீவ் கும்பல்!

ஈழப் போராளிகள் முதுகில் குத்தும் எம்.ஜி.ஆர்-ராஜீவ் கும்பல்!

-

ஈழப்போராட்டம் குறித்து  பல வருடங்களுக்கு முன்னர் என்ன சொன்னோம் என்று தமிழினவாத இயக்கங்களிடம் கேட்டால் அவற்றை மீட்டுப்பார்க்க விரும்ப மாட்டார்கள். பொதுவில் இந்தியாவுக்கு காவடி தூக்கியும், ஓட்டுக்கட்சி தலைவர்களின் பிழைப்புவாதத்திற்கு ஒத்துப் போனதையும் மறைக்கவே விரும்புவார்கள். ஈழப்போராளிகள், புலிகளும் கூட இந்த அணுகுமுறையைத்தான் பொதுவில் கொண்டிருந்தனர். ஆனால் ம.க.இ.க அமைப்புகள் மட்டுமே ஈழம் குறித்த சரியான பார்வையை அன்று முதல் இன்று வரை தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கின்றன. இது குறித்து கடந்த 25 ஆண்டுகளில் புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் இதழ்களில் ஈழம்  தொடர்பாக வந்த கட்டுரைகளை இங்கு வெளியிடுகிறோம். ஈழப்போராட்டம் முள்ளிவாய்க்கால் போரில் ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்களை பலி கொடுத்து பரிதவிக்கும் நேரத்தில் இந்த வரலாற்று பார்வை ஒரு ஆவணம் போல உண்மைகளை வெளிக் கொண்டு வருகிறது. ஈழத்தின் நண்பன் யார், எதிரி யார், பாதை என்ன, செயல் தந்திரம் என்ன என்பதையெல்லாம் இந்த வரலாற்றிலிருந்து நாம் தெரிந்து கொள்ளலாம். படித்துப் பாருங்கள்!

– வினவு

________________________________________________________

(நவம்பர் 1986ல் வெளியானது)

எம்.ஜி.ஆர்., ராஜீவ் காந்திதுரோகம்! தன்னிடம் தஞ்சம் புகுந்த வீரபாண்டிய கட்டபொம்மனை ஆங்கிலேய காலனியவாதிகளிடம் காட்டிக் கொடுத்துக் கைது செய்து, புதுக்கோட்டை அரசன் விஜயரகுநாத தொண்டைமான் செய்தது துரோகம். சிங்கள இனவெறிபிடித்த பாசிச இராணுவத்துக்கு எதிராகப் போராடி வரும் ஈழ விடுதலைப் போராளிகள் தமிழகத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர். அவர்களுக்கெதிராக நவம்பர் 7-ம் தேதி நள்ளிரவுக்குப் பிறகு இந்திய பாசிச ராஜீவ்-எம்.ஜி.ஆர் கும்பல் மோகன்தாஸ்-தேவாரம் தலைமையிலான போலீசுப் படையை ஏவி திடீர்த் ‘தாக்குதல்’ நடத்தியிருப்பது துரோகம்.

சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள ஈழப் போராளி அமைப்புகளின் முகாம்கள், அலுவலகங்கள், இல்லங்களை ஆயுதம் தாங்கிய தமிழ்நாடு சிறப்புக் காவற்படையினரோடு போய் திடீர் சோதனை நடத்தினர். தலைவர்கள் உட்பட 1000த்துக்கும் மேற்பட்ட போராளிகள் கைது செய்யப்பட்டனர். கோடிக்கணக்கான மதிப்புடைய அதிநவீன ஆயுதங்களும், வெடி மருந்துகளும் பறிமுதல் செய்யப்பட்டன. நக்சல்பாரி புரட்சியாளர்களை ஒடுக்குவதற்காகவே அமைக்கப்பட்டுள்ள “க்யூ” பிரிவு போலீசாரால் பல மணி நேரம் விசாரணைக்குப் பிறகு, புகைப்படங்களும் அடையாளக் குறிகளும் எடுத்துக் கொண்டு தலைவர்கள் மட்டும் விடுவிக்கப்பட்டனர். பின்னர் அவர்களும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் போராளிகளில் அணிகள் பலர் இன்னும் விடுவிக்கப்படவில்லை.

மத்திய மாநில அரசுகள் ஏற்கனவே கலந்தாலோசித்து திட்டமிட்டு, எடுக்கப்பட்ட நடவடிக்கைதான் இது; எனினும் மாநிலத்தின் சட்டம்-ஒழுங்குப் பிரச்சினையை ஒட்டி எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று மத்திய அரசு மழுப்புகிறது. முரண்பட்ட தகவல்கள் தரப்படுகின்றன. “’சட்டத்தை தங்கள் கரங்களில் எடுத்துக் கொள்ள முடியாது’ என்று போராளிகளை எச்சரிக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது” என்று எம்.ஜி.ஆர். கூறினார்.

“பெங்களூரில் நடக்கவிருக்கும் தெற்காசிய வட்டார ஒத்துழைப்பு சங்கக் கூட்டத்துக்கு வரும் இலங்கை அதிபர் ஜெயவர்த்தனாவுக்கு எந்தவித ஆபத்தும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காகவே எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இவை; அந்தச் சமயத்தில் தங்கள் இருப்பிடங்களை விட்டு வேறெங்கும், குறிப்பாக பெங்களூருக்குச் செல்லக் கூடாது என்று எச்சரிக்கப்பட்ட பின் பெரும்பாலான போராளிகள் நிராயுதபாணிகளாக விடப்பட்டு பிறகு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்” என்று செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன.

ராஜீவ் காந்தி, ஜெயவர்தனே
ராஜீவ் காந்தி, ஜெயவர்த்தனா

ஈழப் போராளிகளுக்கு எதிரான இந்த அதிரடி நடவடிக்கை சிங்கள இனவெறியர்களையும் அவர்களது இந்தியப் பங்காளிகளையும் குதூகலமடையச் செய்துள்ளது. கொழும்பில் பெரும் உற்சாகம் காணப்படுகிறது. “தங்களுக்கு ஆதரவும் அடைக்கலமும் அளித்த மக்களையே விழுங்கிவிடும் அளவுக்கு போராளிகள் பயங்கர பூதமாக உருவாவதை பிரதமர் ராஜீவும் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரும் விரும்பவில்லை என்பதையே அவர்களின் ஒப்புதலுடன் நடந்த இந்த வேட்டை புலப்படுத்துகிறது” என்று இலங்கை அரசுப் பத்திரிக்கை எழுதுகிறது. “இது துணிச்சலான செயலாகும், முன்பு ஈழத்தலைவர்களை வெளியேற்றிய போது நடந்ததைப் போல இந்தத் தடவை தென்னாட்டின் அரசியல் நிர்ப்பந்தங்களுக்கு ராஜீவும், எம்ஜிஆரும் பணிந்து விட மாட்டார்கள்” என்று வேறொரு பத்திரிகை நம்புகிறது.

“தமிழகக் கொரில்லாக்களை இந்தியத் தலைவர்கள் தனிமைப்படுத்தத் தொடங்கியுள்ளனர்” என்று சிங்கள இராணுவ மந்திரி லலித் அதுலத் முதலி பாராட்டியுள்ளார். “பல தோல்விகளால் சோர்வடைந்துள்ள இலங்கை ராணுவத்துக்கு தமிழ்ப் போராளிகள் மீது நடந்த வேட்டை உற்சாகமும் புதிய நம்பிக்கையும் அளிக்கும்; இதைச் சாதகமாக்கிக் கொண்டு வட பகுதி போராளிகள் மீது ராணுவத் தாக்குதலைத் தீவிரப்படுத்துமாறு சிங்கள இனத்தினர் நிர்ப்பந்திக்கலாம்” என்று இந்தியப் பிற்போக்குப் பத்திரிகைகளே ஊகிக்கின்றன.

இலங்கைத் தமிழர்களின் அடிப்படை உரிமைகளை சிங்கள பேரினவாதத்துக்கு அடகு வைக்கும்படியான ஒரு சமரசத் திட்டத்தை ஏற்றுக் கொள்ளும்படி ஈழப் போராளிகளை இந்திய பாசிச ராஜீவ்-எம்.ஜி.ஆர். கும்பல் நிர்ப்பந்தித்து வரும் தொடர்ச்சியான நடவடிக்கைகளில் ஒன்றுதான் இந்த அதிரடித் தாக்குதல்.

ஏற்கனவே, ஈழப் போராளிகளின் பிரதிநிதிகளை நாடு கடத்தியும், பலமுறை எச்சரித்தும், தொலைபேசித் தொடர்புகளைத் துண்டித்தும், ஈழப் போராளிகளுக்கு எதிராக அவதூறுகளைப் பரப்பியும் இதைச் செய்து வருகிறது ராஜீவ்-எம்.ஜி.ஆர். கும்பல். தீபாவளி நாளன்று சென்னையில் ஒரு ஈழ அமைப்பினர் நடத்திய துப்பாக்கிச் சூடு உட்பட பல சம்பவங்களில் ஈழப் போராளிகள் நடந்து கொள்ளும் அராஜகவாத நடவடிக்கைகள் மேற்கண்ட நோக்கத்துக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.

ஈழப் போராளி அமைப்புகள் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்துள்ளதாகப் பத்திரிகைச் செய்திகள் கூறுகின்றன. “இது இனப்படுகொலை தொடர்வதற்கு ஊக்கமளிக்கும்; எவ்வித விளக்கம் அளிக்கப்பட்டாலும் ஜெயவர்த்தனாவை மகிழ்விக்க எடுத்த நடவடிக்கை இது. விடுதலை இயக்கம் அவமானத்துக்கும் இழிவுக்கும் ஆளாக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளைப் போல நடத்தப்பட்டோம். முன் கூட்டியே எச்சரிக்கை விட்டிருந்தால் இந்த நாட்டை விட்டு வெளியேறியிருப்போம்” என்று விடுதலைப் புலிகள் அறிக்கை விட்டுள்ளனர்.

ஈழப் போராளிகளுக்கு வேண்டுமானால் இந்த நடவடிக்கை அதிர்ச்சியும் ஆச்சரியமும் அளித்திருக்கலாம். இது என்றாவது ஒரு நாள் நடக்குமென்று நாம் முன் கூட்டி முடிவு செய்ததுதான். “நரிகளின் தயவில் புலிகளா?”, “நாயிடமிருந்து பிடுங்குவது பேயிடம் தருவதற்கோ?” – என்று ஏற்கனவே புதிய ஜனநாயகம் – புதிய கலாச்சாரம் ஆகிய புரட்சிகர ஏடுகள் கேட்டிருக்கின்றன.

ஆனால், ஆயுதம் தரித்த அந்த “மாவீரர்கள்” எப்போதும் இந்தியப் புரட்சியாளர்களை அலட்சியம் செய்தே வந்திருக்கின்றனர். எமது எச்சரிக்கைகளைத் துச்சமாக மதித்து, உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக, சமாதானத் தலைவர்களாக இந்திராவையும், ராஜீவையும் இன உணர்வின் இலட்சியப் புருஷர்களாக எம்ஜிஆரையும், கருணாநிதியையும் மதித்து வந்தனர். தாக்குதல் தொடுக்கிறது ராஜீவ்-எம்ஜிஆர் கும்பல். கருத்து சொல்ல மறுக்கிறது கருணாநிதி கூட்டம்.

இப்போதும் காலம் மீறிப் போய் விடவில்லை. இந்திய ஆளும் வர்க்கப் பிரதிநிதிகளையும், தமிழக அரசியல் பிழைப்பு வாதிகளையும் நம்பி, சார்ந்து ஈழ விடுதலைப் போராளிகள் நிற்பதைக் கைவிட வேண்டும். சர்வதேசப் பாட்டாளி வர்க்கமும், புரட்சியாளர்களும்தான் தேசிய இன விடுதலைக்கு நம்பகமான கூட்டாளிகள் என்பதை ஏற்க வேண்டும்.

எட்டப்பர்களாக போலிக் கம்யூனிஸ்டுகள்

நவம்பர் முதல் தேதியன்று சென்னையில் ஈழமக்கள் புரட்சிகர முன்னணியினர் துப்பாக்கிச் சூடு நடத்தி ஒருவர் இறந்து போனார். எல்லா அரசியல் கட்சிகளையும் முந்திக் கொண்டு அறிக்கை விட்டார் வி.பி.சிந்தன். ஈ.பி.ஆர்.எல்.எ்ப் தனது வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டுள்ள ருஷ்ய சமூக ஏகாதிபத்தியத்தின் இந்திய அடிவருடிக் கட்சிகளில் ஒன்றான ‘மார்க்சிஸ்ட்’ கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.

“உடனடியாக ஈழ அமைப்புகளின் அலுவலகங்கள், முகாம்கள், வீடுகள் அனைத்திலும் சோதனை நடத்தி ஆயுதங்களைப் பறிமுதல் செய்ய வேண்டும். அவர்களால் தமிழக மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விட்டது” வி.பி.சிந்தனின் இந்த எட்டப்பன் எச்சரிக்கையை அப்படியே ஏற்று அடுத்த வாரமே ஈழப்போராளிகளிடமிருந்து ஆயுதங்களைக் கைப்பற்றினார் அவரது “சகபாடி” எம்.ஜி.ஆர்.

இன்னொரு போலி கம்யூனிஸ்டு கட்சித் தலைவர் எட்டப்பர்களின் திலகம் கல்யாணசுந்தரம், “தமிழக போலீசின் நடவடிக்கை பிரதமர் ராஜீவ் காந்திக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தக் கூடாது” என்று கண்டிக்கிறார். ராஜீவின் ஏவுதலால் நடந்த நடவடிக்கை காரணமாக ராஜீவுக்கு கெட்ட பெயர் வந்து விடக் கூடாதே என்ற அக்கறையைத்தான் முக்கியமாக கல்யாணசுந்தரம் காட்டுகிறாரே தவிர, ஈழப் போராளிகளுக்கு ஏற்பட்ட பாதிப்பை அல்ல. சர்வதேச விடுதலைக்காகப் போராடி வரும் புரட்சிகர சர்வதேச தலைவராக ஈ.பி.ஆர்.எல்.எ்ப் கொண்டாடும் கல்யாணசுந்தரத்தின் யோக்கியதை இதுதான்! “அவரது புரட்சிகர அனுபவங்களை சுவீகரித்துக் கொள்வோம்” என்று புத்தகம் போட்ட போராளி பத்மநாபா பார்வைக்கு இந்த எட்டப்பன் வேலைகளை முன் வைக்கிறோம்.
_______________________________________________________________________
புதிய ஜனநாயகம், நவம்பர் 1986
________________________________________________________________________