Monday, April 21, 2025
முகப்புகட்சிகள்அ.தி.மு.கஈழத்தமிழ் அகதிகளை விடுதலை செய் ! மே தினப் பேரணி, முற்றுகை போராட்டம் ! !

ஈழத்தமிழ் அகதிகளை விடுதலை செய் ! மே தினப் பேரணி, முற்றுகை போராட்டம் ! !

-

‘சிறப்பு அகதி முகாம்’ எனும் முள்வேலிக்குள் சிறை வைக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழ் அகதிகளை விடுதலை செய்!
அனைத்து ஈழத்தமிழ் அகதிகளுக்கும் இரட்டைக் குடியுரிமை வழங்கு!!

என்ற முழக்கத்துடன்

மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
விவசாயிகள் விடுதலை முன்னணி,
பெண்கள் விடுதலை முன்னணி,
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

ஆகிய புரட்சிகர அமைப்புகள் மே நாள் அன்று சென்னையில் பேரணி மற்றும் போலீசு டிஜிபி அலுவலகம் முற்றுகை போராட்டம் நடத்தின. இந்த பேரணி-முற்றுகை போராட்டத்தில் தமிழகம் முழுவதிலுமிருந்து தோழர்கள், மக்கள், மாணவர்கள் சுமார் 5000 பேர் கலந்து கொண்டனர்.

காலை 10 மணிக்கு பூக்கடை போலீஸ் ஸ்டேஷன் முன்பு மக்கள் கலை இலக்கிய கழகத்தின் கலைக்குழுவினரின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. பெருந்திரளான மக்கள் கூடியிருந்தனர்.

“வைகோ, நெடுமா, சீமா கெளம்பிட்டாங்க டீமா”,  “இருட்டு, கும்மிருட்டு”, “ஏன் என்ற கேள்வியைக் கேள்”, “காங்கிரசு என்றொரு கட்சி” ஆகிய பாடல்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன.

உயர்நீதிமன்றத்திலிருந்து கடற்கரை சாலையில் உள்ள டிஜிபி அலுவலகம் நோக்கி பேரணி போய் டிஜிபி அலுவலகத்தை முற்றுகை இடுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், போலீஸ் அதற்கு அனுமதி மறுத்தது. பூக்கடை போலீஸ் ஸ்டேஷனில் ஆரம்பித்து மெமோரியல் ஹால் நோக்கி பேரணி நடத்த மட்டும்தான் அனுமதி வழங்கினார்கள். மெமோரியல் ஹால் தாண்டி போலீஸ் தடையரணை மீறி அண்ணா சாலை வழியாக டிஜிபி அலுவலகம் போவதாக முடிவு செய்யப்பட்டது.

(படங்களை பெரிதாக பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்)

பேரணிக்கு தலைமை தாங்கிய புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் மாநில தலைவர் தோழர் முகுந்தன் தமிழக அகதி முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழ் அகதிகளின் விடுதலைக்காக கடந்த ஒரு மாதமாக நடத்தப்பட்ட மாநிலம் தழுவிய பிரச்சார இயக்கம் பற்றி விளக்கி, அதன் ஒரு பகுதியாக இன்று சென்னையில் டிஜிபி அலுவலகம் முற்றுகை நடைபெறவுள்ளது என்று தெரிவித்தார்.

அடுத்து பெண்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த தோழர் அஜிதா பேசினார்:

“கடந்த இரு மாதங்களாக ஈழத் தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலை நடத்திய இலங்கை அதிபர் ராஜபக்சேவை தண்டிக்க கோரி தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கானவர்கள் வீதிகளில் இறங்கி போராடினார்கள். அந்த போராட்டங்கள் தொய்வடையாமல் உந்தித் தள்ளக் கூடிய சக்தியாக இருந்தவை நம்முடைய அமைப்புகள். அந்த போராட்டங்களின் தொடர்ச்சியாக, ராஜபக்சே உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளை தண்டிப்பது என்கிற கோரிக்கையோடு, ‘தமிழகத்தில் சிறப்பு அகதி முகாம் என்ற பெயரில் முள்வேலிக்குள் சிறை வைக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழர்களை விடுதலை செய்!’, ‘அனைத்து ஈழத் தமிழ் மக்களுக்கும் இரட்டை குடியுரிமை வழங்கு’ என்ற முழக்கங்களோடு கடந்த ஒரு மாதமாக தமிழகம் முழுவதும் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக இன்று முற்றுகை போராட்டம் நடைபெறவுள்ளது.”

“இலங்கையில் நடந்த போரால் பாதிக்கப்பட்டவர்களில் பலர் பல்வேறு நாடுகளுக்கும் அகதிகளாக போயிருக்கிறார்கள், இந்தியாவுக்கும் வந்திருக்கிறார்கள். கை, கால்களை இழந்து, உறவுகளை இழந்து, நாட்டை இழந்து வந்திருக்கிறவர்களின் உண்மையான நிலை என்ன?” என்று கேட்டு சிறப்பு முகாம்கள் என்பவை சித்திரவதை கூடாரங்களாக இருக்கின்றன என்பதை விளக்கும் சம்பவங்களை குறிப்பிட்டார்.

தொடர்ந்து, “இந்தியா முழுவதும் பெண்கள் எதிர் கொள்ளும் பிரச்சனை கொடூரமானது. இந்த நாட்டின் சுதந்திரமான குடிமக்களாக வாழும் அவர்கள் 2 வயது குழந்தை முதல் முதியோர் வரை பாலியல் வன்முறைக்கு ஆளாகின்றனர். மக்களை பாதுகாக்க வேண்டிய போலீஸ்காரர்கள்தான் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் முக்கிய குற்றவாளிகளாக இருக்கிறார்கள்.  இந்த நிலையில், போலீஸ்காரன் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று சூழலில் சிறப்பு முகாம்களில் வாழும் ஆதரவற்ற அகதிகளின் நிலைமை மிகவும் கொடூரமானதாக உள்ளது.  முகாம்களில் வசிக்கும் பெண்கள் எந்த நேரத்திலும் போலீசால் வேட்டையாடக் கூடிய நிலையில் அடிமைகளைப் போல இருக்கிறார்கள். அகதிகள் முகாமில் வசிப்பவர்கள் போலீசாரின் கொடுமைகளை பார்க்கும் போது சிங்கள இராணுவமே பரவாயில்லை என்று தோன்றுவதாக சொல்கிறார்கள்.”

“ஈழத் தமிழருக்காக உயிரைக் கொடுப்பேன் என்று பேசக் கூடிய தமிழ் இன வாத அமைப்புகள், ‘ஜெயலலிதா ஈழம் வாங்கித் தருவார், இலை மலர்ந்தால் ஈழம் மலரும், ஜெயலலிதா ஈழத் தாய், சட்ட மன்ற தீர்மானம்’ என்று பேசும் தமிழின வாதிகள் யாரும் இந்த பிரச்சனைக்காக ஏன் போராடவில்லை? ஜெயலலிதா ஒரே கையெழுத்தால் அகதி முகாம்களை இழுத்து மூட முடியும். தமிழினவாதிகள் பிழைப்பு வாதிகளாக இருக்கிறார்கள். மகஇக உள்ளிட்ட நக்சல்பாரி புரட்சிகர அமைப்புகள்தான் கடந்த 30 ஆண்டுகளாக ஈழத் தமிழர்களின் அரசியல் சுய நிர்ணய உரிமைக்காக தொடர்ந்து போராடி வருகின்றன.”

“அந்த வகையில் அகதி முகாம்களை இழுத்து மூடி, அவற்றில் அடைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்களை விடுதலை செய்வதற்கு புரட்சிகர அமைப்புகள் சர்வேதேச பாட்டாளி வர்க்கம் என்ற முறையில் எப்போதும் துணை நிற்கும்.”

என்று பேசினார்.

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியைச் சேர்ந்த தோழர் ஓவியா:

“உலகம் முழுவதும் பல நாடுகளில் அகதிகள் இருக்கிறார்கள். ஈழத் தமிழர்களும் பல நாடுகளுக்கு அகதிகளாக போயிருக்கிறார்கள். எந்த நாட்டிலும் அவர்கள் தமிழ்நாட்டில் நடத்தப்படுவதைப் போல நடத்தப்படுவதில்லை. பல நாடுகளில் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் அரசு ஏன் இப்படி நடத்துகிறது என்றால்,  என்றுமே தமிழக அரசும் இந்திய அரசும் ஈழத் தமிழருக்கு எதிரானதுதான். இதே இந்தியாவில் பங்களாதேஷ், பர்மா போன்ற நாடுகளில் இருந்து வந்த அகதிகள் சுதந்திரமாக இருக்கிறார்கள். அவர்கள் இது போல முள்வேலி முகாம்களில் இல்லை.”

“ஈழத் தமிழர்கள் அனைவருமே புலிகள், பயங்கவாதிகள் என்று முத்திரை குத்தி என்று அப்பாவி மக்களை இந்த அரசு சித்திரவதை செய்து கொண்டிருக்கிறது. தொப்புள் கொடி உறவு என்று பல தமிழின வாதிகள் பேசுகிறார்கள். நெடுமாறன், வைகோ, சீமான் போன்றவர்கள் ஈழத் தமிழர்களுக்காகவே பிறப்பெடுத்தது போல பேசுகிறார்கள். நீங்க அமெரிக்காவிடம் போக வேண்டாம், இந்திய அரசிடம் வேண்டாம். தமிழக அரசிடம் ஏன் இப்படி ஒரு கோரிக்கை வைத்து போராட முடியவில்லை. ஜெயலலிதாவால் செய்ய முடிகிற இந்த தீர்வுக்காக ஏன் போராடவில்லை. ”

“இந்த பிரச்சனைக்காக நக்சல்பாரி அமைப்புகளாகிய நாங்கள் தொடர்ந்து போராடுவோம். ஈழத் தமிழ் மக்களுக்கு துணை நிற்போம். சர்வேதேச பாட்டாளி வர்க்கம் என்ற முறையில் ஒடுக்கு முறைகளுக்கு எதிராக ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான போராட்டங்களை தொடர்ந்து நடத்துவோம்.”

என்று பேசினார்.

(படங்களை பெரிதாக பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்)

தைத் தொடர்ந்து மெமோரியல் ஹால் நோக்கி. விண்ணதிரும் முழக்கங்கள் எழுப்பிய படி நூற்றுக்கணக்கான குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள், முதியவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் எல்லா பிரிவினரும் என 5000 பேர் பேரணியாக சென்றனர். இருபுறமும் நின்ற மக்களும் கடைக்காரர்களும் பேரணியின் முன்பு கொண்டு செல்லப்பட்ட அகதிகள் முகாமின் உருவரை மாதிரியினால் கவரப்பட்டார்கள்.

சுமார் 11.30 மணி அளவில் மெமோரியல் ஹால் அருகில் வந்து சேர்ந்த பேரணியை போலீசார் தடுப்பரண் அமைத்து தடுத்து நிறுத்தினார்கள்.

மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் தோழர் மருதையன் கண்டன உரை ஆற்றினார்.

சிறப்பு அகதிகள் முகாம் என்பது எப்படிப்பட்ட சித்திரவதைக் கூடமாக செயல்படுகிறது என்பதை பல சம்பவங்கள் மூலம் விளக்கினார். சிறப்பு அகதி முகாமில் போலீஸ், கியூ பிராஞ்ச் துறைகளை சேர்ந்தவர்களின் கொட்டம், ஆதிக்கம், வெறியாட்டம் இவற்றை அம்பலப்படுத்தினார்.

“பல நூற்றுக்கணக்கான ஈழத் தமிழ் பெண்களை அவர்கள் சீரழித்திருக்கின்றனர். ‘ஒன் பொண்டாட்டிய அனுப்பு’ என்றால் அனுப்பணும். இல்லை என்றால், அவரை புலி என்று முத்திரை குத்தி சிறப்பு முகாமுக்கு அனுப்புகிறார்கள். சிறப்பு முகாமுக்கு போய் விட்டால் அவரது நிலைமை அவ்வளவுதான்.”

“இந்த நிலைமைகளை சகிக்க முடியாமல் பலர் ஆஸ்திரேலியாவுக்கு போக முயற்சிக்கின்றனர். 7,000 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஆஸ்திரேலியாவுக்கு படகில் போக முடியாது, ஆனாலும் போகிறார்கள். ஏன்? இந்த கேள்வியை காவல் துறையைச் சேர்ந்த சைலேந்திர பாபு கேட்டார். ” ‘ஆபத்து என்று தெரியாமலா போகிறோம். ஆனால் எப்படியாவது கியூ பிராஞ்சிடமிருந்தும் போலீசிடமிருந்தும் தப்பி விடத்தான் போகிறோம். இவர்களுக்கு ராஜபக்சேவே பரவாயில்லை’ என்று ஈழத் தமிழர்கள் காரி துப்புகிறார்கள்.”

“1987லிருந்து தமிழ்நாட்டில் ஏற்படுத்தப்பட்ட அகதி முகாம்கள் 8X8 அளவிலான தகரக் கொட்டாய்கள்தான். பகல் நேரத்தில் கரண்ட் கிடையாது. இரவில் ஒரே ஒரு குண்டு பல்புக்கு மட்டும் கரண்ட் கிடைக்கும். 6 மணிக்குள் வந்து அடைந்து விட வேண்டும். வேறு முகாமில் இருக்கும் உறவினர் யாராவது, அப்பா செத்துப் போய் விட்டால் கூட உடனேயே போக முடியாது. ஆர்டிஓ கையெழுத்து வேண்டும். ஆர்டிஓ கையெழுத்து வாங்குவது சாதாரண விஷயம் கிடையாது.”

“ஜெயலலிதா ஆரம்பத்தில் இருந்து ஈழத் தமிழர்களுக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறார். அவரால்  ஒரே கையெழுத்தில் இந்த அகதி முகாம்களை கலைக்க முடியும். 2009ல் கருணாநிதி ஈழ அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்று சொன்ன போது அதை எதிர்த்தவர்தான் ஜெயலலிதா. இவரைத்தான் ஈழத்தாய், ஈழம் வாங்கித் தருவார் என்று தமிழின வாதிகள் சொல்கிறார்கள்.”

“அகதி முகாமிலிருந்து ஒருத்தன் வெளிநாட்டிற்கு போனா உனக்கென்ன? பிடித்து வைக்க என்ன உரிமை இருக்கிறது. ஏன் தடுக்கிறீர்கள்?

“மே நாள் என்பது பாட்டாளி வர்க்கம் தன் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுவதோடு, தன்னைப் போலவே ஒடுக்கப்படுகிற பிற பிரிவினருக்காகவும் போராடும் நாள். அந்த வகையில் அகதி முகாம்களில் ஈழத் தமிழர்கள் விடுதலை, இரட்டை குடியுரிமை என்றும் நம்முடைய கோரிக்கை வைத்திருக்கிறோம்.”

“அகதிகள் தம் நாட்டில் விட்டு வந்த இடங்கள் எல்லாம் ராஜபக்சே அரசால் இந்திய தரகு முதலாளிகளுக்கு கொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்திய அரசு ஈழத் தமிழருக்கு எதிரானது, என்று வலியுறுத்துகிறோம். சுயநிர்ணய உரிமைக்காகவும், ஒடுக்குமுறைக்கு எதிராகவும் இந்தியாவிலுள்ள புரட்சிகர சக்திகளாகிய நாம் தொடர்ந்து போராடுவோம்.”

பேரணி போலீசார் அமைத்திருந்த தடையரணை மீறி முன்னேறி செல்லும் போது போலீசார் தோழர்களை கைது செய்து அழைத்து சென்றனர். கைது செய்யப்பட்ட தோழர்கள் அனைவரும் சென்னை ராயபுரத்தில் உள்ள 5 திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர். அனைத்து மண்டபங்களிலும் கருத்தரங்கம், பொதுக்கூட்டம் போல நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.


(படங்களை பெரிதாக பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்)
தகவல் : மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு