சத்தீஸ்கர் மாவோயிஸ்ட் தாக்குதலை கண்டித்து பல்வேறு கட்சித் தலைவர்கள், பிரதமர், குடியரசுத் தலைவர் என்று பலரும் பேசி வருகின்றனர். அந்த வார்த்தைகளுக்கு என்ன பொருள் என்று அவர்கள் தெரிந்துதான் பேசுகிறார்களா, இல்லை பேசுவதற்கு வேறு வார்த்தைகள் கிடைக்கவில்லையா என்று தெரியவில்லை.

“மாவோயிஸ்ட் தீவிரவாதத்துக்கு அரசு ஒருபோதும் அடிபணியாது” என்றும் “தாக்குதலில் ஈடுபட்டவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள்” என்றும் மன்மோகன் சிங் உறுதிபடத் தெரிவித்திருக்கிறார். இராணுவமும், துணை இராணுவமும், பாதுகாப்புக்கென்று வருடா வருடம் செலவாகும் மக்கள் பணம் பல இலட்சம் கோடி ரூபாய்களும் இருக்கும் போது இந்தியா அரசு ‘தீவிரவாதத்துக்கு’ அடிபணியாது என்பது உண்மைதான். ஆனால் சத்தீஸ்கரில் பன்னாட்டு நிறுவனங்களையும், தரகு முதலாளிகளையும் விட்டுக் கொடுக்க முடியாது என்றுதான் இந்திய அரசு பழங்குடி மக்கள் மீது போர் தொடுத்து வருகிறது. இந்த உண்மையை ஏன் நேரடியாகச் சொல்லவில்லை?
நீதி முன் நிறுத்துவதாக இருந்தால் இந்திரா காந்தி கொல்லப்பட்ட பிறகு தில்லியில் நூற்றுக்கணக்கான சீக்கிய மக்களை கொலை செய்த காங்கிரசு தலைவர்கள் மற்றும் குண்டர்களை நிறுத்தியிருக்க வேண்டும். ஆனால் முப்பது வருடம் ஆகியும் அனைத்து கொலைகாரர்களும் விடுதலைதான் செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆகவே நீதி என்பது காங்கிரசுக்குகாரனுக்கு மட்டும்தான் என்று மன்மோகன் சிங் வெளிப்படையாகவே பேசலாமே?
“இது போன்ற தாக்குதலில் ஈடுபடுபவர்கள் அமைதிக்கும், இப்பகுதியின் வளர்ச்சிக்கும் எதிரானவர்கள்” என்றும் மன்மோகன் சிங் கூறியுள்ளார். சத்தீஸ்கரின் வளர்ச்சியில் ஆதாயம் அடையப்போவது யார்? பழங்குடி மக்களா, இல்லை டாடாவா, ஜிண்டாலா, போஸ்கோவா? சத்தீஸ்கரில் உள்ள நிலக்கரி வயல்களையெல்லாம் முறைகேடாக யாருக்கு ஒதுக்கியிருக்கிறார் மன்மோகன் சிங்? பழங்குடி மக்களுக்கா இல்லை தரகு முதலாளிகளுக்கா? பழங்குடி மக்களின் இடங்களை கைப்பற்றினால்தான் முதலாளிகளின் வளர்ச்சி சாத்தியம் என்பதும் அந்த சாத்தியத்தை தடுக்கக் கூடியவர்கள் மாவோயிஸ்ட்டுகள் என்பதாலும்தான் மன்மோகன் அரசு அவர்கள் மீது போர் தொடுத்திருக்கிறது.

“நாட்டுக்காக தங்கள் உயிரை தியாகம் செய்ததில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பலர் வரலாறு படைத்துள்ளனர்” என்றும் பிரதமர் பேசியுள்ளார். நாட்டுக்காக உயிரை விட்ட, கட்சியில் இல்லாத மக்களது தியாகத்தை அறுவடை செய்ததுதான் காலனிய ஆட்சிக்கு முந்தைய காங்கிரஸ் வரலாறு. பிந்தைய வரலாறு காங்கிரஸ் தலைவர்களது வரலாறு காணாத ஊழல்தான். தங்கபாலு, கிருஷ்ணசாமி, ஞானதேசிகன், வாழப்பாடி ராமமூர்த்தி, மூப்பனார், இவர்கள்தான் தமிழ்நாட்டில் தியாகம் செய்துள்ள காங்கிரஸ் கட்சி தலைவர்கள் என்றால் சத்தியமூர்த்தி பவனின் செங்கல் கூட சத்தம் போட்டுச் சிரிக்கும்.
இளவரசர் ராகுல்காந்தி பேசும்போது, “இதுபோன்ற செயல்களால் காங்கிரஸ் கட்சியை அழித்து விட முடியாது. இத்தாக்குதல் ஜனநாயகத்தின் மீதான தாக்குதலாகும்” என்று கூறியிருக்கிறார். சட்டப்பூர்வமாக சல்வாஜூடும் ஆரம்பித்து பழங்குடி மக்களை அகதிகளாக்குவதுதான் ஜனநாயகம் என்றால் இது ‘ஜனநாயகத்தின்’ மீதான தாக்குதல்தான். மேலும் இத்தகைய ‘ஜனநாயகம்’ இருக்கும் வரையிலும் காங்கிரஸை அழிக்க முடியாது என்பதும் உண்மைதான். என்றைக்கு அந்த பழங்குடி மக்களைப் போன்றவர்களுக்கு ஜனநாயகம் கிடைக்கிறதோ அன்றைக்கு காங்கிரஸ் கட்சி ஒழிக்கப்படும் விதத்தில் அருங்காட்சியகத்தில் மட்டும் இருக்கலாம்.

“காங்கிரஸ் கட்சியின் மீது மாவோயிஸ்ட்டுகள் நடத்திய தாக்குதல் கோழைத்தனமானது” என்று சோனியா காந்தி தெரிவித்திருக்கிறார். எது வீரம் என்பதிலிருந்தே எது கோழைத்தனம் என்பதை புரிந்து கொள்ள முடியும். காஷ்மீரில் அடிக்கொரு சிப்பாயை நிறுத்தி முழு காஷ்மீர் மக்களையும் துப்பாக்கிகளின் நிழலில் வாழச்செய்திருப்பது வீரமா? இல்லை, இலங்கை இராணுவத்திற்கு கருத்திலும், களத்திலும் உதவி செய்து பல ஆயிரம் ஈழத்தமிழ் மக்களை கொன்றது வீரமா? அவையெல்லாம் வீரம் என்றால் இது கோழைத்தனம் என்பதை நாம் மறுக்க வேண்டியதில்லை.
“நமது ஜனநாயக அமைப்பில் வன்முறைக்கு எந்த வடிவிலும் இடம் கிடையாது என்பதை வலியுறுத்திக் கூறுகிறேன். இது போன்ற சம்பவங்களால் நாட்டை எந்த வகையிலும் அச்சுறுத்த முடியாது.” என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்திருக்கிறார். அப்சல் குரு போன்ற அப்பாவிகளை தூக்கிட்டுக் கொன்றதில் தலைமை வகித்தவர், அஹிம்சை குறித்து பேசுகிறார். அமெரிக்க அடிமை அணுசக்தி ஒப்பந்தம், ஸ்பெக்ட்ரம் ஊழல், நிலக்கரி ஊழல், போன்ற ‘சாதனை’களாலேயே இந்நாட்டை அச்சுறுத்த முடியவில்லை எனும் போது சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்டுகள் நடத்திய தாக்குதலா பயமுறுத்தும்? ஊழல் பேர்வழிகளும், பாசிசத்தின் தயவில் வீரம் பேசும் தலைவர்களும் ஜனநாயகம் குறித்தும், தைரியம் குறித்தும் சிரிக்காமல் பேசுவதுதான் நம்மை அச்சுறுத்துகிறது.

“மாவோயிஸ்ட்டுகளின் இந்த செயலானது, இந்திய அரசியல் சாசன சட்டத்துக்கும், நாட்டின் சட்ட ஒழுங்குக்கும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது. நக்சலைட்டுகளின் அச்சுறுத்தலுக்கு எதிராக ஒருங்கிணைந்த உறுதியான நடவடிக்கை வேண்டும்” என்று பாஜக கூறுகிறது. ‘ரெட்டி சகோதரர்களும், எடியூரப்பாவும் அரசியல் சாசன சட்டத்துக்கு உட்பட்டுதான் கனிம ஊழல், வீடு ஒதுக்கீடு ஊழல் செய்தனர். பாபர் மசூதியை இடித்து இந்தியா முழுவதும் முஸ்லீம்களை நரவேட்டையாடியதெல்லாம் சட்ட ஒழுங்கிற்கு வலுவை ஏற்படுத்திய விசயம். சல்வா ஜூடும் எனும் கொடிய அடக்குமுறைக்கு எதிராக பழங்குடி மக்கள் போராடினால் அது மட்டும் அரசியல் சட்டத்திற்கு எதிரானது, சட்ட ஒழுங்கிற்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது’ என்றால் இந்த சட்டமும், ஒழுங்கும் யாருக்குரியவை?
“சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதல் ஜனநாயகத்துக்கு எதிரான தாக்குதல். கட்சி பேதமின்றி அனைவரும் ஓரணியில் நின்று மாவோயிஸத்துக்கு எதிராக போராட வேண்டும்” என்று நரேந்திர மோடி கூறியுள்ளார். என்ன செய்வது சாத்தானெல்லாம் கூட வேதம் ஓதுகிறது. 2002-ல் குஜராத்தில் முசுலீம் மக்கள் மீதான இனப்படுகொலையை எல்லாம் மோடியின் ஜனநாயகம் வாழ்த்தும். ஒரு வேளை மாவோயிஸ்ட்டுகள் அதிகாரத்திற்கு வந்தால் தான் தண்டிக்கப்படுவோம் என்ற பயம் மோடிக்கு வந்திருக்கலாம். அதனால்தான் முந்திக் கொண்டு கட்சி பேதமின்றி ஒன்றிணைந்து மாவோயிஸ்ட்டுகளை ஒழிப்போம் என்கிறார்.
மாவோயிஸ்ட் தாக்குதலை கண்டிக்கும் தலைவர்கள் அனைவரும் ஜனநாயகத்தின் பெயரில்தான் ஒளிந்து கொள்கிறார்கள். அவர்களை இழுத்து வந்து மக்களாட்சி எனும் வெளிச்சத்தில் விசாரித்தால்தான் இந்தியாவை அச்சுறுத்துவது இவர்களது கட்சிகளா இல்லை மாவோயிஸ்ட்டுகளா என்ற உண்மை தெரிய வரும்.